வெள்ளி, 6 ஜூன், 2008

அணி!

தமிழ் இலக்கியத்தில் இரட்டுற மொழிதல் என்றோர் இலக்கண அணி இருக்கிறது. அது பிறமொழி பலவற்றிலும் காணமுடியாத தமிழில் நன்கமைந்த தனிச்சிறப்பாகும்.

தமிழ் மொழியில் வழங்கப்படுகின்ற நகைச்சுவைகளில் 90 விழுக்காட்டிற்குமேல் சிலேடை என்று அழைக்கப்படுகிற இரட்டுற மொழிதலணி நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இது தமிழுக்கு மட்டுமே அமைந்த தனிப்பெரும் சிறப்பாகும்.

அப்படி இருபொருள் தருகின்ற சில சொற்களை நாம் முதலில் பார்ப்போம்.

காவலர் இச்சொல் காவல் காப்பவர் மன்னர் என்கிற பொருள் படும். இச்சொல்லைப் பிரித்தால் கா வலர் என்றாகும். அதாவது காவில் (காட்டில்) அலர்கின்ற மலர் என்ற பொருள்படும்.

மாசம்பத்து -மா சம்பத்து (பெரும்செல்வம்) மாசம் பத்து

உள்ளங்கைத்தேன் -உள்ளம் கைத்தேன் உள்ளங்கையில் உள்ள தேன்

உப்பிட்டான் -உப்பிவிட்டான் உப்பு இட்டான்

அக்காளை -அக் கைளை அக்காவை

அங்குசப்பயல் - அங்கசப் பயல் (அங்குசத்தைக் கையில் ஏந்திய பையன்) அம் குசப்பயல் (சாதியைக் குறிப்பது)

அடிப்பதுமத்தாலே -அடிப் பதுமத்தாலே (பாதத் தாமரையாலே) அடிப்பது மத்தாலே (மத்தாலே-தயிர்கடையப்பயன் படுவது)

என்று எண்ணற்றச் சொற்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். (தங்களுக்கும் தெரிந்த வற்றைப் பின்னூட்டில் குறிப்பிடலாம்).

இவ்விரட்டுற மொழிதல் அணியை வைத்து நம் பழம்புலவர்கள் சொற்சிலம்பமே ஆடிக்காட்டியுள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.

மேற்கோலுக்கு வசைக்கோர் காலமேகத்தின் பாடல்:-

சங்கரற்கும் ஆறுதலை சண்முகற்கும் ஆறுதலை
ஐங்கரற்கும் ஆறுதலை ஆனதே -சங்கைப்
பிடித்தோர்க்கும் ஆறுதலை பித்தாநின் பாதம்
படித்தாற்கும் ஆறுதலைப் பார்!

சங்கரற்கும் ஆறுதலை -என்ன சிவனுக்கு ஆறுதலையா? புலவன் மதுமயக்கத்தில் எழுதியிருப்பான் என்கிறீர்களா? அதுதான் இல்லை. சங்கரன் என்பவன் சிவன் அல்லவா! கங்கை ஆறு சிவனின் தலைமேல் ஓடுகிறதல்லவா! அதைத்தான் புலவர் குறிப்பிடுகிறார்.

சண்முகற்கும் ஆறுதலை –ஆறுமுகக் கடவுளுக்கும் ஆறுதலைகள். சுரி இது புரிகிறது. அதென்ன? ஐங்கரற்கும் ஆறுதலை! பிள்ளையார்க்கு இருப்பது ஒரேஒரு தலையல்லவா என்கிறர்களா! நீங்கள் சொல்வதும் சரியே. ஆயினும் மனித உடலில் விலங்கின் தலை இருப்பது மாறுபட்ட தலையல்லவா! அதைத்தான் புலவர் ஐங்கரற்கு மாறுதலை (மாறுபட்ட தலை) என்றுக் குறிப்பிடுகிறார்.

சங்கைப் பிடித்தோர்க்கும் ஆறுதலை -இதென்ன! பெருமாலுக்கும் ஆறுதலைகள் என்கிறாரே! என்கிறீர்களா? ஸ்ரீரங்கத்தில் காவிரி நதிக்கரையில் தலைவைத்துப் படுத்திருக்கிறான் அல்லவா! அதைத்தான் பெருமாலின் தலைமாட்டில் ஆறு ஒடுகிறது என்கிற பொருளில் கையாண்டுள்ளார்.

அதெல்லாம் இருக்கட்டும். அதென்ன சிவனின் பக்தர்களுக்கும் ஆறுதலை என்கிறார்! என்கிறீர்களா? அதுதான் ஆறுதலைப் என்று ப்-ஐ உடன் சேர்த்திருக்கிறாரே! சிவனின் பாதம் பிடித்தோர்க்கு ஆறுதல் கிட்டும் பார் என்று பொருள்.

ஓர் சொல்லை வைத்துக்கொண்டு மூன்று நான்கு பொருள்களில் சிலம்பம் ஆடியிருக்கிறார்கள் என்றால் நம் தமிழின் சிறப்பை என்னவென்று கூறுவது. (இன்று நாம் படைக்கும் கவிதைகளில் ஒரு சொல்லுக்குக்கூட ஒருபொருளும் இருப்பதில்லை என்பது வேறு செய்தி).

இப்படி தமிழ் இலக்கியத்தில் பற்பல புலவர்களால் கையாளப் பட்ட இவ்விரட்டுற மொழிதல் அணியைக் கம்பன் தன் இராமாயணத்தின் ஓர் பாடலில் பயன்படுத்தி நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறான்.

ஒருசொல்லை வைத்துக்கொண்டு அதையும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பயன்படுத்தி ஏறக்குறைய ஏழெட்டுப் பொருள்விளங்கப் பாட கம்பன் ஒருவனால் மட்டுமே முடிந்திருக்கிறது.

இராமாயணத்தில் ஓர் காட்சி. இராமன் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு ஆட்சியைக் கொடுத்தான். எனவே சுக்ரீவன் சீதையை கண்டுபிடித்துத் தருவதாக வாக்களிக்கிறான். ஆனால் சொன்ன சொல்லை மறந்து இன்ப வாழ்க்கையில் திளைக்கிறான். சொன்ன காலம் கடந்து விட்டது. சுக்ரீவனின் செயல் இராமனுக்கு கோபமூட்டுகிறது. இராமன் தன் தம்பி இரக்குவனை அழைத்து நெஞ்சில் வஞ்சமுடைய சொன்னசொல்லைக் காப்பாற்றாத மன்னனைக் கொன்றால் அது குற்றம் ஆகாது. மனு தர்மமே என்பதால் அவனைக் கொன்றுவா என்று ஏவுவதாக ஓர் காட்சி.

இவ்விடத்தில் தான் கம்பர் தன் கவித்திறத்தைக் காட்டுகிறார்.

பாடல் இதோ:-

நஞ்ச மன்னவ ரைநலிந் தாலது
வஞ்ச மன்றும னுவழக் காதலில்
அஞ்சி லம்பதில் ஒன்றறி யாதவன்
நெஞ்சி நின்னுநி லாவ நிறுத்துவாய்.

1-அஞ்சில்xஅம்பதில்xஒன்றறியாதவன் -ஐந்து வயதிலும் சரி ஐம்பது வயதிலும் சரி ஒன்றும் அறியாத மூடன் சுக்ரீவன்.

2-அம்xசிலம்பதில்xஒன்றறியாதவன் -அழகிய (கிட்கிந்தை) மலையில் வீற்றிருக்கிற உலகில் ஒன்றும் அறியாத சுக்ரீவன்.

3-அஞ்சிலம்xபதில்xஒன்றறியாதவன் -எமக்கு பதில் வந்து கூற அறியாத சுக்ரீவன்

4-அம்xசில்xஅம்புxஅதில்xஒன்றறியாதவன் -எம்மிடம் உள்ள அழகிய சில அம்புகளில் ஒன்றின் வலிமையைக் கூட இன்னும் அறியாத சுக்ரீவன்.

5-அஞ்சுxஇல்xஅம்புxஅதில்xஒன்றறியாதவன் - (நீஎன் தமையன் அம்புகளுக்கு) அஞ்ச வில்லையாயின் அவன் அம்புகளில் ஒன்றை (வாலியைப்போல்) ஏற்றுக்கொள்.

6-அஞ்சுஇல்xஅம்பதுஇல் ஒன்றறியாதவன் -இவன் அறிவதற்கு ஐந்து அம்போ ஐம்பது அம்புகளோ தேவையில்லை. ஒரு அம்பே போதுமானது எதனை அறிய மாட்டான் சுக்ரீவன்

7-அஞ்சில்xஅம்பதில்xஒன்றுxஅறியாதவன் - அஞ்சில் அம்பதில் ஒன்று என்பது ஐம்பத்தாறு. (5+50+1=56) அதாவது 56-வது வருடம் துந்துபிவருடம். துந்துபி என்ற பெயருடைய அசுரனைக் கொன்று வாலியைக் கொன்றவன் இந்த இராமன் என்பதை அறியாத சுக்ரீவன்.

8-அஞ்சுxஇல்xஅம்பதில்xஒன்றறியாதவன் -தமிழ் எண் ஐந்து ரு ஆகும். பத்து ய ஆகும். ஐம்பது ருய ஆகும். ருய-ல் ஐந்து இல்லாதபோது (அதாவது ரு இல்லாதபோது) ய-மட்டும் மிஞ்சும் அல்லவா? அதாவது பத்து அவதாரத்தில் உருவன் நான் என்பதை அறியாதவன் சுக்ரீவன்.

அகரம்.அமுதா

6 கருத்துகள்:

jeevagv சொன்னது…

இரட்டை அணியைச் சுவைத்தேன், சுவை தேன்!
கம்பருக்கு பிடித்த எண் ஐந்து போலும், நிறைய இடங்களில் அந்த ஐந்து எண் விளையாட்டு விளையாடுகிறார் - 'அஞ்சிலே ஒன்று பெற்றான்...'

அகரம் அமுதா சொன்னது…

ஆம் ஜீவா அவர்களே!

அப்பாடல் இதுதான்:-

அஞ்சிலே ஒன்றுபெற்றான்
அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக்
கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்
எம்மை அளித்துக் காப்பான்.

அனுமன் வணக்கமாக அமைந்த பாடல் இது!

anujanya சொன்னது…

அமுதா,

நீங்கள் ஆசிரியர். நாங்கள் - ஆ ! சிறியர் ! தொடரட்டும் உங்கள் விளையாட்டு !

அகரம் அமுதா சொன்னது…

அனுஜன்யா! என்ன இப்படிக் கூறி விட்டீர்கள்? தங்களின் குறுங் கவிதையைப் பார்த்து நான் மிரண்டுபோயிருக்கிறேன். அருமையாக எழுதுகிறீர்கள்.

கவிநயா சொன்னது…

செந்தமிழ்ப் பாவைப் பற்றி, இந்தத் தமிழ்ப் பாவை உங்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்! அருமை!

அகரம் அமுதா சொன்னது…

அப்படியே குறுங்கவிதை எழுதுவது எப்படி என்பதை எனக்குக் கற்றுக்கொடுப்பீர்களா?