"கலவும் கற்று மற" -இது நம் பூந்தமிழில் வழங்கப் பெறும் பழமொழி.
இப்பழமொழியைப் பற்றிக் காலங்காலமாக நம்மவருள் ஓர் வாதம் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. கல்லளவும் கற்று மற என்றுக் கூறும் ஒருசாராரும் உளர். களவும் கற்று மற என்பது தான் சரி என வாதிடும் ஒரு சாராரும் உளர்.
"கல்லளவும் கற்று மற" -இப்பழமொழி எதனை உணர்த்த விழைகிறது என்பதை முதலில் பார்ப்போம்.
1-கற்றவேண்டியவை எல்லாவற்றையும் கற்றுமுடித்தபின் இனி கற்பதற்கு ஒன்றுமில்லை எனும் நிலை எழும் போழ்து கற்பதையே மறந்துவிடு (விட்டுவிடு) என்கிறதா?
2-கற்க முடிந்தவற்றைக் கற்றபின் நீ கற்றவற்றை மறந்துவிடு என்கிறதா?
3-கற்க வேண்டிய வற்றைக் கற்றபின் எல்லாம் கற்றுவிட்டோம் எனும் செருக்குத் தொன்றுமே அச்செருக்கை மறந்துவிடு என்கிறதா?
4-அச்செருக்கை எப்படி மறப்பது? ஆக எல்லாம் கற்றபின் கற்றவன் என்னும் செருக்குத் தோன்றுமே அச்செருக்குத் தோன்றாமலிருக்கக் கற்றவன் என்பதையே மறந்துவிடு என்கிறதா?
மேற்கூறிய வற்றுள் நான்காவதாகிய “எல்லாம் கற்றானபின் எல்லாம் கற்றுவிட்டோம் என்னும் செருக்குத் தோன்றாதிருக்கக் கற்றவன் என்பதையே மறந்துவிடு. கற்றவன் என்பதையே மறந்துவிடுவாயானால் உன்னுள் செருக்குத் தோன்றாதிருக்கும்” என்னும் கருத்தை இப்பழமொழி வலியுறுத்துமே யாகின் இப்பழமொழி வழங்கப் பெறுவது சரியே.
மற்ற மூன்று கருத்தைத் தாங்கிவருமேயாகில்? (என்ன விடையளிப்பதென்றே தெரியவில்லையே!)
இப்பழமொழி வேறுஏதேனும் கருத்தைத் தாங்கிவருமே யாகில் தோழதோழிகள் பின்னூட்டில் கண்டிப்பாகக் குறிப்பிடவும்.
குறிப்பாக சுப்பு ரத்தின அய்யாவிடமிருந்து அப்பழமொழி உணர்த்தும் செம்பொருளை எதிர்பார்க்கிறேன். ஏன் என்றால்:-
மிஞ்சு மழகால் மிளிரும் மலர்கண்டேன்;
பிஞ்சுமிளங் காயும் பெருமுற்ற -லுங்கண்டேன்;
ஆர்த்தவலை அத்தனையுள் அய்யசுப்பு வின்வலைநான்
பார்த்தவற்றுள் ஞானப் பழம்!
"களவும் கற்று மற" இப்பழமொழி எதனை உணர்த்துகிறது? அதனையும் பார்த்துவிடுவோம்.
ஓர் நாடாளும் மன்னனுக்கு இருக்க வேண்டிய அத்துணைக் குணங்களும் ஓர் திருடனுக்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவனால் பிடி படாமல் திருடமுடியும். ஓர் திருடனுக்கு இருக்கும் அத்தனைக் குணங்களும் நாடாலும் மன்னனுக்கு இருக்க வேண்டும் அப்பொழுது தான் அவனால் நல்லாட்சி செலுத்த முடியும்.
“அதென்ன திருடனுக்கும் நாடாளும் மன்னனுக்கும் இருக்க வேண்டிய குணங்கள்?” என்கிறீர்களா? அதையும் பார்த்துவிடுவோம்.
1-கண்ணோட்டம்:-ஓரிடத்தில் திருடநினைக்கும் திருடன் முதலில் யாரும் அறியாத வாறு அவ்விடத்தைக் கண்ணோட்டம் இடவேண்டும். இது அவன் இரவில் செய்யவிருக்கும் காரியத்தைச் சுலபத்தில் முடித்துக்கொண்டுத் தப்பித்துச் செல்ல ஏதுவாயிருக்கும்.
இக்குணம் நாடாலும் மன்னனுக்கும் இருக்கவேண்டும். தன்செயல் கெடாத வகையில் கண்ணோட்டம் செய்யவல்ல அரசனுக்கு இவ்வுலகம் உரியதாகிறது.
கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு!
2-வலியறிதல்:-தான் திருடவந்த இடத்தில் தன் ஒருவனால் இக்காரியம் முடியுமா என்பதை நன்கறிந்து அச்செயலை எப்படி முடிப்பது என்பதைக் கருத்தூன்றி ஆராய்ந்துச் செயல்படவேண்டும்.
இக்குணமும் நாடாளும் மன்னனுக்கு இருக்க வேண்டும். தம்மால் முடிக்கக் கூடிய செயலையும் அதற்கு அறிய வேண்டிய வற்றையும் அறிந்து அச்செயலின் மீது மனத்தையூன்றிப் பகைமேற்கொள்ள வேண்டும் அரசன்.
ஒவ்வா தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்!
3-காலமறிதல்:-திருடவிழையும் திருடன் இரவாகும் வரைக் காத்திருத்தல் கடன். பிறர் உறங்கிய பின்னும் தான் விழித்திருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் தான் எடுத்த காரியம் கைகூடும்.
மன்னனும் காலமறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின் அவனால் உலகம் முழுவதையும் தானே ஆளக்கருதினாலும் அது நிறைவேறும்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி யிடத்தாற் செயின்!
4-இடமறிதல்:-தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையறியாது தான் திருடவந்த இடத்தில் எத்தனைபேர் உள்ளார்கள் அவர்களின் வலிமையென்ன? என்னும் தொகையறியாது தன்திருட்டைத் துவங்கமாட்டான் திருடன்.
பகைவரை வளைப்பதற்கு ஏற்ற இடம் வாய்ப்பதற்குமுன் அவரிடம் எச்செயலையும் தொடங்காதிருக்க வேண்டும் அரசன். பகைவரின் வலியைச் சிறியதாகக் கருதாது இருத்தலும் வேண்டும்.
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது!
இத்தோடு மட்டுமா?
இருளிலும் கூரிய பார்வை.
ஓசையெழாது தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுந் தன்மை.
தான் வந்த சுவடு தெரியாதவன்னம் தடையங்களை விட்டுச்செல்லாமை.
இப்படித் திருடனுக்கு இன்றியமையாதிருக்க வேண்டிய பலவற்றைக் கூறிக்கொண்டே போகலாம். இக்குணங்களெல்லாம் நாடாளும் மன்னனுங்கும் இருத்தல் அவசியமாகிறது. (அதற்காக மன்னன் திருடனாக இருக்க வேண்டும் என்பதில்லை)
ஓர் திருடனுக்கு இருக்க வேண்டிய அத்துணை அறிவும் யாவருக்கும் இருத்தல் வேண்டும். அவ்வறிவு எத்துறையில் கால்பதிப்பினும் வெற்றியடையச் செய்துவிடும்.
“களவும் கற்று மற” என்ற வரிகளே சரியெனக் கொள்வோமே யானால் களவுத்தொழிலையும் கற்று அதிலுள்ள நுண்ணறிவை எடுத்துக்கொண்டு களவை மறந்துவிடு என்ற பொருளில் இவ்வரிகள் கையாளப் படுமானால் “களவும் கற்று மற” என்பது சரியே!
சரி அதென்ன? பந்திக்கு முந்து படைக்குப் பிந்து? உணர்ந்த பொருளைப் பின்னூட்டிலிடுங்களேன்!
குறிப்பு:-
தோழி கவிநயா தன் வலைப்பக்கத்தில் "ஜிலேபி" (விழியால் உண்ணக்) கொடுத்திருந்தார். சரி நாம அல்வா குடுப்போமே என்று தோன்றியது.
இளவயது ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள். இதையறிந்த பெண்ணின் தந்தை பெண்ணை வீட்டில் சிறை வைத்து விடுகிறான். காதலனுக்கோ காதலியிடம் யாரைத்தூதனுப்புவது என்றே தெரிய வில்லை. இறுதியாக ஓர் சிறு காகிதத்தில் அல்வா என்று மட்டும் எழுதி காதலியின் வீட்டு வாசலில் வீசியெறிந்து விட்டுச் சென்றுவிடுகிறான்.
மாலையில் வீடுதிரும்பிய பெண்ணின் தந்தை அச்சிறு காகிதத்தை எடுத்துப் பார்த்தவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மகளிடம் கொடுத்து உனக்குப் புரிகிறதா? என்கிறான். அவளுக்குப் புரிந்து விட்டது.
இது தன் காதலனின் வேலைதான் எனத்தெரிந்து கொண்டவள் “அப்பா! உங்களுக்கு யாரோ அல்வா கொடுப்பேன் என்று எழுதியிருக்கிறார்கள் அப்பா! பதிலுக்கு நாமும் எதாவது கொடுக்க வேண்டுமல்லவா?” என்றவள் துண்டுக் காகிதமெடுத்து குலோப்சாண் என்று எழுதி கண்டெடுத்தக் காகிதம் கிடந்த இடத்திலேயே இதைப் பொட்டுவிடச் சொல்கிறாள்.
காதலன் கொடுத்த அல்வாவிற்குக் காதலியேன் குலோப்சாண் கொடுத்தாள்? யாருக்காவது தெரிந்தால் எழுதுங்களேன்.
அகரம்.அமுதா
புதுச்சேரி வரலாற்றுச் செய்திக் குவியலாக ஒரு நாள்காட்டி
4 ஆண்டுகள் முன்பு
20 கருத்துகள்:
//ஆர்த்தவலை அத்தனையுள் அய்யசுப்பு வின்வலைநான்
பார்த்தவற்றுள் ஞானப் பழம்!//
ஆஹா! :)
"களவும் கற்று மற" தானே சரி?
வரவர எங்க போனாலும் பரீட்சை வக்கிறாங்கப்பா. வந்தமா ரசிச்சமா பின்னூட்டம் போட்டமா போனமான்னு இருக்கலாம்னு பாத்தா இல்லாத மூளைக்கு வேற வேல குடுத்தர்றாங்க :( ஹ்ம்... அப்புறமா(வந்தாலும்) வருவேன்.
அமுதா,
நல்ல பதிவு 'கலவு' பற்றி. இத்தனை நாள் நான் 'களவு' என்று கொண்டிருந்தேன் அந்தப் பழமொழியில். இப்படி குறுங்கவிதை(!) கூட எழுதி வைத்தேன்.
மனதைத் திருடினேனாம்;
காதலென்று பெயர் சொன்னாள்;
அவளை மறந்து போனேன்;
துரோகி என்று சினமுற்றாள்;
களவும் கற்று மறப்பது தவறா என்ன !
அனுஜன்யா
அமுதா,
இப்படியெல்லாம் இருக்குமோ !
அவன் : அல்வா - 'என்ன இழுபறி நிலையா?'
அவள் : குலோப்சாண் - 'ஆம், என் சுற்றம் எனைச் சிறைபிடித்துள்ளது' (ஜீரா நீர்)
அவன் : அல்வா - 'என்ன, வீட்டுக்குள் ஒட்டிக்கொண்டாயா?
அவள் : குலோப்சாண் - 'ஒரு மாதிரி துயரத்தில் மிதக்கிறேன்'
அவன் : அல்வா - 'அந்தியில் வா'
அவள் : குலோப்சாண் - 'குலோ, (குலோத்துங்கன்) ப்ச், சான்சே இல்ல'
இந்த அளவு மொழியறிவில் வெண்பா ? எல்லாரும் மறுபரிசீலனை செய்யவும்.
அனுஜன்யா
அனுஜன்யாவிற்கு என் வாழ்த்துக்கள். கவிதை அருமை.
அனுஜன்யா! கவிநயா! நான் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு யாருமே பதில் சொல்லவில்லையே!
அனு! (இப்படியே அழைக்கலாமா உங்களை?) அல்வா -அந்தியில் வா! நெருங்கிட்டிங்க! முயற்சி பண்ணுங்க! வாழ்த்துக்கள்.
கண்ணகியின் தீர்ப்பு கேட்ட பாண்டிய மன்னன் ," யானோ அரசன் யானே கள்வன் "என்று பதறியதை, தற்கால சிந்தனையாளர் ஒருவர் "யான் NO அரசன் யான் A கள்வன்"என்று பிரித்துப் போட்டது, தங்கள் "அரசர் கள்வன்" இடுகையை பார்த்ததும் நினைவுக்கு வந்தது
ஆமா நான் தெரியாமல்தான் கேட்கிறேன்,
இலக்கிய சாகரத்தில் முத்துக் குளிக்கும் நீங்களா என் கிளிக் கூண்டுக்குள் வந்து, என்னை அப்படிப் புரட்டி புரட்டி எடுத்தீர்கள்.?
இந்த பிளாகிலே இதெல்லாம் சகஜமப்பா
கோமா! தாங்கள் யான் NO அரசன் யான் A அரசன் என்கிற சொல் விளையாட்டைச் சொன்ன உடன் எனக்கொன்று நினைவுக்கு வருகிறது. இன்றைய இளம்பெண்கள் தங்களின் காதலனை ஏன் தெரியுமா டா போட்டு அழைக்கிறார்களாம். டா என்றால் டார்லிங்-கின் சுருக்கமாம். அதுபோல் காதலர்கள் காதலியை டி என்றழைப்பது டியர் என்கிற பொருளிலாம். பார்த்தீர்களா உலகம் எப்படி சுருங்கிவிட்டது!
///ஆமா நான் தெரியாமல்தான் கேட்கிறேன்,
இலக்கிய சாகரத்தில் முத்துக் குளிக்கும் நீங்களா என் கிளிக் கூண்டுக்குள் வந்து, என்னை அப்படிப் புரட்டி புரட்டி எடுத்தீர்கள்.?///
இப்டில்லாம் என்னைப் புகழாதீங்க! எனக்குக் கூச்சம் கூச்சமா வருது!
இன்னைக்குத்தான் உஙக பதிவு பாத்தேன். எல்லா இடுகையையும் படிச்சிட்டேன். அருமையா இருக்குது. அப்படியே உங்க பேர சொல்லி கொஞ்சம் கத்துக்க வேண்டியதுதான் :)))
ஏங்க நீங்க களவும் கற்று மற ல இவ்வளோ விசயம் இருக்கா.....
ஸ்ஸப்பா
இதுக்கே கண்ண கட்டுதே
வாங்க! ஜி! அதிஷா! இருவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன். அதிஷா! இப்பவே கண்ணைக் கட்டினா எப்படி? இன்னும் நிரைய இருக்கு! ஜி-க்கு என் ஸ்பெஷல் தாங்க்ஸ். (எல்லா இடுகைகளையும் படிச்சதற்காக)
கலவும் கற்று மற என நான் படித்ததில்லை. ஆயினும் வலிந்து பொருள் கூற இயலும். பிறகு அதைப்பார்க்கலாம்.
களவும் கற்று மற என்பதே முதுமொழி. களவு என்பதற்கு ஒரு பொருள் திருடுதல்.
ஒருவரது பொருளை அவர் காணாதவாறு இன்னொருவர் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்வதாம் களவு.
களவு் எனும் சொல்லுக்கு திருடுதல் எனும் பொருள் கொள்தல் இயற்கையே. திருடரின்
மன இயலையும், செய்முறைகளையும் காவலோர் அறிய வேண்டியது முறையே.
இருப்பினும், களவும் கற்று மற எனும் முதுமொழி பகரும் நீதி என்னவாக இருக்கும் ? அது வெறும்
திருட்டுத்தொழிலினை மற்றவரும் கற்கவேண்டும், அப்பொழுதுதான் திருடனைப் பிடிக்க தோதாக
முடியும் என்று சொல்வது தானா ? கற்றவுடன் நீ செய்யாதே மறந்து விடு என்று சொல்வதா இது ?
( It is an axiom that vigilance should always be a step ahead of the crime, for unless it is so, it will never be possible to ensure that no crime is ever committed. So it is but necessary to know in detail how theft or burglary is committed )
களவும் கற்று மற எனச் சொல்வது இதுவாக இருக்கலாம். எனக்கு மறுப்பில்லை. இருப்பினும் இம்முதுமொழிக்குமோர் உயர்பொருள் உளது.
காமத்துப்பால் குறிப்பிடுவது, அசை போடுவது, ஆய்வது எல்லாமே களவியல் பற்றியே. களவு + இயல் = களவியல்.
வானளாவிய சேனை பலம் உள்ளவனும் நெஞ்சுறுதி உள்ளவனும் (ளும்) தன்னையறியாமல் களவாடப்படுகின்றனர். கள்வன் வரும் நேரம் என்ன ஆகிறது ?
நோக்கினான், நோக்குஎதிர் நோக்குதல், தாக்கு அணங்கு
தானைக்கொண் டனது உடைத்து. என்பார் வள்ளுவர்.
இப்போரில் செயித்தவர் இன்புற, தோற்றவரும் இன்புறுகிறார் என்பது வெள்ளிடைமலை.
எனினும், இப்போரிலே காலமெல்லாம் ஒரு மன்னவன் கழித்திடலாமோ ? அவன் தனது மற்ற கடமைகளைக்
கவனிக்க வேண்டாவோ ?
களவியல் ஆகவே கல்.
ஆயினும் களவியல் தரும் இன்பம் நிலைத்திருப்பதில்லை என்பதையும் உரிய தருணத்தில் உணரவேண்டுமா இல்லையா ? இந்த இன்பத்தில் திளைத்து உற்றமும் சுற்றமும் வேண்டும் எதிர்பார்க்கும் மற்ற கருமங்களை விடவும் கூடுமோ ? களவியல் ஐம்புலன்களுக்குத் தரும் இன்பம். நிலையாதது. நிலைத்திருக்கும் இன்பம் ஒன்றுள்ளது எனும் அறிவு வரும்போது களவினை மறக்க வேண்டாமோ ?
இந்த அறிவுரைதனையும் வள்ளுவரே சொல்வார்:
கள்வார்க்குத் தள்ளும் உயிர் நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு
(களவு செய்வோர் இவ்வுலகில் இன்பம் வரும் ஆயினும் தவறும். களவு செய்யாதோர்க்கு இவ்வுலகிலும்
தேவர் உலகிலும் இன்பம் உண்டு.)
ஆகவே தான் களவும் கல் . ஆனால் அதில் நிலைத்து நில்லாது, மறந்து விடு.
எது நிலையான இன்பமோ அதில் நிலையாயிரு.
இப்போது இதை முதுமொழியை இன்னொரு தரம் நோக்கவும்.
களவும் கற்று மற. என்ன தெரிகிறது ?
இந்தக்கிழவனை ஏனடா பேசவிட்டோம் என்றா !!!!
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா ? அதனால்
ஃபுல் ஸ்டாப் வைத்து விடுகிறேன்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com
அய்யா! படிக்கப் படிக்க இன்பமாயுள்ளது. "களவும் கற்று மற" பற்றி இன்னும் வேறு பொருளிருக்குமானால் நிச்சயம் பின்னூட்டமிடுங்க!
//துண்டுக் காகிதமெடுத்து குலோப்சாண் என்று எழுதி கண்டெடுத்தக் காகிதம் கிடந்த இடத்திலேயே இதைப் பொட்டுவிடச் சொல்கிறாள்.
காதலன் கொடுத்த அல்வாவிற்குக் காதலியேன் குலோப்சாண் கொடுத்தாள்? யாருக்காவது தெரிந்தால் எழுதுங்களேன்//
ஹலோ.. இந்த குலோப்சாண் விடுகதைக்கு விடையைச் சொல்லிடுங்களேன்..
அல்வா அல்வா அதாவது இரவில் வா நாமிருவரும் வீட்டைவிட்டு ஓடிவிடுவோம் என்று அழைக்கிறான். அதனைப் புரிந்துகொண்ட அவள் குலோப்சாண் என்று கிறாள். அதாவது குலோப் சாண். குலோப் என்றால் ஆங்கிலத்தில் உலகம் என்று பொருள். அதாவது உன்னோடு ஓடிவருவதென்றால் இந்த உலகமே எனக்கு ஒருசாண் ஒரே தாவாகத் தாவிவந்து விடுகிறேன் என்பதாகப் பொருள். என்ன புரிந்ததா சீமாச்சு?
அமுதா, இரவு இந்தப் பின்னூட்டம் போட்டி விட்டு காலையில் எழுந்தவுடன் தேடியது உங்கள் பதிலைத்தான்..
எனக்கும் காலையில் ஒரு பொருள் புரிந்த மாதிரி இருந்தது.. அது வேறு மாதிரியான அர்த்தம்.. "அல்வா" முன்பே தெரிந்ததுதான்.. இந்த குலோப்ஜாமூன் தான் கொஞ்சம் படுத்திவிட்டது..
நன்றி..
அன்புடன்
சீமாச்சு
'களவும் கற்று மற' என்றே இந்தப் பழமொழியை அறிந்திருந்தேன். 'கல்லளவும் கற்று மற' என்ற பாடத்தையும் அதற்குரிய விளக்கங்களையும் இன்றே அறிந்தேன். 'களவும் கற்று மற' என்ற சொற்றொடரின் கீழ் திருடருக்கும் (இவ்வளவு குணங்களும் இருப்பவரை மரியாதையின்றி திருடன் எனலாமா?) தலைவருக்கும் இருக்கும் ஒற்றுமைகள் அருமை. 'கலவும் கற்று மற' என்றால் என்ன என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?
திரு குமரன் அவர்களே! இக்கட்டுரைக்கு அடுத்தக் கட்டுரையையும் காண்க. உயர்திரு சுப்புரத்தினம் அய்யா அவர்களுக்கும் எனக்கும் பெரு விவாதமே நடந்து அடங்கியிருக்கிறது. நன்றி
கருத்துரையிடுக