வியாழன், 26 ஜூன், 2008

கல்வி!

நாம் ஒருவரைப் பார்த்து, "தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டால், “படித்து முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலைசெய்து கொண்டிருக்கிறேன்” என்பார். பொதுவாக இப்படிச் சொல்வதைப் பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை கல்வி பள்ளியில் சென்றுபயில்வது. பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறியபின் எல்லாம் படித்தாகி விட்டது இனி கற்பதற்கு ஒன்றுமில்லை என்கிற நினைப்பு. அதுவே அவர்களின் வாய்மொழியாக வெளிப்படுகிறது.

கல்வியைச் சிறப்பிக்க வந்த வள்ளுவர்:-

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்! -என்கிறார்.

இதனையே வலியுறுத்தவரும் விளம்பி நாகனார் தன் நான்மணிக்கடிகையில்-

“மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மைதான் செல்லும்
திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்
கற்றறிவு இல்லா உடம்பு!”

-எனக்கூறி கற்றறிந்த நிலை இல்லாவிட்டால் தன் உடம்பே (தான் எடுத்த பிறவியே) பாழ் என்கிறார்.

கல்விக்கு வரையறை கிடையாது. அதுஓர் கரைகாணாக் கடல். எவ்வளவு மழைத்தாலும் நிரம்பி வழியாத கடலேபோல எவ்வளவு கற்றாலும் நிரம்பிவழியாத கடலாகவே விளங்குகிறது அறிவு. ஆகையால்தான் அவ்வை:- “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு” என்கிறார்.

கல்வி என்பது வாழ்நாட்கல்வியாக அமையப்பெறுதல் வேண்டும். அது இளமையோடு முடிந்துவிடுகிற ஒன்றல்ல. ஆகவேதான் வள்ளுவர்:-

“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு?” -என்ற வினாவை எழுப்புகிறார்.

கல்வியின் பயனறிந்த அவ்வை:- “ஓதுவ தொழியேல்” என்கிறார். ஓதுதற்கு மூலமாக விளங்கும் “எண்ணெழுத் திகழேல்” என்றும் அறிவுறுத்துகிறார். “எண்ணெழுத் திகழேல்” என்றால் அறிவுக்கண்ணைத் திறக்கும் எண்களையும் எழுத்துக்களையும் இழிந்துப் பேசாதே என்பது மட்டும் பொருளல்ல. எண்ணெழுத்தை ஓதாமல் விடுவதும் எண்ணுக்கும் எழுத்துக்கும் நாம் செய்யும் இகழ்ச்சியே என்கிற பொருளிலும் தான்.

ஓதுவதொழியாது ஓதுவதால் “நீரின் அளவு தன்னை உயர்த்திக்கொண்டு தலைகாட்டுகிற நீராம்பல் போல ஒருவர்க்குத் தான்கற்ற நூலின் அளவே நுண்ணறிவு ஆகும்” என்றும் வலியுறுத்துகின்றார்.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு!”

மேலோட்டமாகக் கற்பது கல்வியல்ல. உணர்ந்து கல்லான் கல்வி உயர்வுதரா. “ஆய்ந்தறிந்து கல்லாதான் கல்வி - நெல்லிருக்கக் கற்கறித்து மண்டின்று காய்த்துக் களத்தடித்த புற்கறித்து வாழ்வதனைப் போன்று” என்கிறது ஓர் பழம் பாடல்.

எதுக்கு எது விளக்கமாகப் பொலியும்? எனக்கூறுகின்ற நான்மணிக்கடிகை:-

“மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர்; -மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதல் புகழ்சால் உணர்வு!”

-என்று கூறிக் கல்விக்கு உணர்ந்து கற்பது விளக்கம் எனப் பெருமைபேசுகிறது.

சிலவே முழுநூல்கள் செம்மையுறக் கற்பின்
பலவே தமிழின் பயன்! ஆதலால் வ.சுப. மாணிக்கனார் மிக அழகாகச் சொல்லுவார்.
வரிவரியாக் கற்பின் மனவுடைமை யாகும்
தெரிவறியா நூல்கள் சில! -என்று.

ஒவ்வொரு வரியையும் உற்றுநோக்கிப் பொருளாய்ந்து கற்றால் மனத்தின்கண் நீக்கமறப் பதிந்துவிடும். ஆழமான பொருள்பொதிந்த நூற்களைக் கூட இத்தகையத் தன்மையால் மனவுடைமையாக்கிவிட முடியும்.

கசடறக் கற்றாகி விட்டது. இப்பொழுது என்ன செய்வது? அக்கல்வி கூறும் அறநெறியின்கண் நிற்பதே சிறப்பு. ஆகவேதான் வள்ளுவர்:-

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!” -என்கிறார்.

உளத்துப் பதித்த உயர்தொடைகள் கொண்டு
களத்து வருபொருளைக் காண்! -என்பார் மாணிக்கனார்.

"கற்று உள்ளத்தில் பதித்துக்கொண்ட பழம்பெரும் நூல்களின் கருத்தையெல்லாம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகலோடு பொருத்திப் பார்க்கவேண்டும்.

கற்றலின் வழி நிற்பவர்களுக்கு யாதும் ஊராகிறது.யாவரும் கேளிராகின்றனர். கல்வி என்னும் குன்றேறி நிற்பவரை அறியாதார் யாரும் இரார். கற்றோர்க்கு ஒப்புவமை சொல்வதற்கும் யாரும் இரார். ஆகவேதான் அவ்வை:-

“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன் -மன்னர்க்குத்
தன்றேசம் அல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு!” என்கிறார்.

ஒருவனுக்குற்ற பிற செல்வங்களெல்லாம் ஏதோ ஓர் வகையில் அழிவைத் தருவதாகவும் இன்னலைத் தருவதாகவும் செருக்கைத் தருவதாகவும் அமைந்து விடுகிறது. குந்தித் தின்றால் குன்றும் கறையும் செல்வமாகவே யிருக்கிறது. பூட்டிவைத்தாலும் எப்பொழுது கலவாடப்படுமோ? என்கிற அச்சத்தை ஏற்படுத்தும் செல்வமாகவே பிற செல்வங்களெல்லாம் அமைந்துவிடுகிறது.

ஆனால் இக்கல்வி என்னும் செல்வம் பிறரால் களவாட முடியாத செல்வமாகவும் நமக்குக் கேடு செய்யாத செல்வமாகவம் பிறருக்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வமாகவும் அமைகிறது. ஆகவேதான் வள்ளுவர் சொல்கிறார்:-

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவர்க்கு
மாடல்ல மற்றை யவை!”

அகரம்.அமுதா

20 கருத்துகள்:

sury siva சொன்னது…

கலவியில் துவங்கிக்
களவியலிலோர்
கணமிருந்தபின்னே
கல்விக்கு வந்த
காலை இது.

கல்வி புகட்டுவதென் ?
கடமையா கண்ணியமா
கட்டுப்பாடா எனும்
காலம் காலமாய்க் கேட்டிடும்
கேள்விக்கொரு பதிலே ! இவ்
வேள்விகளுக்குப் பயனாயமையும்
விநயம். அடக்கமெனவும் சொல்வார்.

வித்யா ததாதி வி நயம் என்போர் வடமொழி வல்லுனர்.
கல்வியின் சிறப்பே அது புகட்டும் அடக்கமே.

உயிரில்
"அ" முத‌ல் எழுத்து அது அன்பே
அடக்கமும் அதுவே . மெய்யில்
" க" முதலெழுத்து
கல் எனும் வினைச்சொல் என்பார்.
உயிர் மெய்யுடன் கலந்தால்
ரம் (இ)க்காமல் எப்படி இருக்கும் ?
( ரமிப்பது = ஈர்ப்பது )
பதிவு பூரிப்படையச்செய்கிறது.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

அகரம் அமுதா சொன்னது…

மிக்க நன்றி அய்யா!

கவிநயா சொன்னது…

எந்த நேரமும் நாம் ஏதாவது புதிதாகக் கற்றுக் கொண்டேயிருக்கிறோம் என்பது உண்மைதானே.

கல்வியின் சிறப்பை சிறப்பாகத் தந்தமைக்கு நன்றி, அகரம்.அமுதா!

அகரம் அமுதா சொன்னது…

வாருங்கள் கவிநயா! மிக்க நன்றி!

ராமலக்ஷ்மி சொன்னது…

//கல்வி என்பது வாழ்நாட்கல்வியாக அமையப்பெறுதல் வேண்டும். //

இந்த உண்மையை சான்றோரின் அறிவுரைகளுடன் வலியுறுத்தியிருப்பது ஆழமான அழகு.

முகவை மைந்தன் சொன்னது…

பள்ளிப் பருவத்தை கண்முன் நிறுத்தியது கட்டுரை. கற்றலின் சிறப்பையும், தேவையையும் அருமையாக முன் வைத்தீர்கள்.

எத்தனை, எத்தனை பொருத்தமான மேற்கோள்கள். எழுதிய கட்டுரையின் வழி நிற்பவர் என்பதற்கு இந்த மேற்கோள்களே சான்று.

நல்லதோர் கட்டுரை தந்தமைக்கு நன்றி.

அகரம் அமுதா சொன்னது…

மிக்க நன்றி ராமலெட்சுமி அவர்களே!

anujanya சொன்னது…

கல்வி என்று சொன்னால் பள்ளி செல்ல அஞ்சும் சிறுவர்போல எங்களை மனதில் கொண்டு கொஞ்சம் இனிப்பாக களவு, கலவி எல்லாம் காண்பித்து மெல்ல கல்வியிடம் கூட்டி வந்து விட்டீர்கள். இதையே சுப்பு ஐயா அழகாக எழுதுகிறார்.

அனைத்திலும் முக்கியம் அடக்கம். நான், செல்வம் செருக்கு தருவது போல் கல்விச் செருக்குடனும் பலர் திரிகிறார்களே (பெரிய எழுத்தாளர்களும் கூட) என்று கேட்கலாம் என்றிருந்தேன். ஐயா அவர்களே தீர்த்து விட்டார் 'கல்வியின் சிறப்பே அது புகட்டும் அடக்கம்'. அப்படி கல்விச் செருக்குடன் திரிபவர் 'கூத்தாடும் குறைகுடம்' என்றே கொள்ள வேண்டும். மிக்க நன்றி அமுதா மற்றும் ஐயா.

அனுஜன்யா

அகரம் அமுதா சொன்னது…

வாங்க அனு! தங்கள் வாழ்த்துக்களுக்கென் நன்றிகள். அடக்கம் பற்றியும் ஓர் விரிவான கட்டுரை இருக்கிறது. பின்வரும் நாட்களில் காண்போம். நன்றி!

அகரம் அமுதா சொன்னது…

மிக்க நன்றி ஜீ அவர்களே! தங்கள் பின்னூட்டத்தை நான் கவனிக்கவில்லை. ஆகையால்தான் தாமதம். மன்னிக்கவும்.

ஜி சொன்னது…

//அகரம்.அமுதா said...
மிக்க நன்றி ஜீ அவர்களே! தங்கள் பின்னூட்டத்தை நான் கவனிக்கவில்லை. ஆகையால்தான் தாமதம். மன்னிக்கவும்.
//

நான் இன்னும் பின்னூட்டமே போடலையே... இது வேற ஜி யா?? :)))

கல்வியைப் பற்றியதோர் தமிழ் இலக்கியப் பாடல்களின் தொகுப்பும் அதன் விளக்கமும் அருமை. மென்மேலும் தமிழ் இலக்கியங்களில் பொதிந்து புதைந்து கிடக்கும் விடயங்களை எங்களைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு அறியத் தாருங்கள்.... :))

சீமாச்சு.. சொன்னது…

தமிழ்ப் பதிவுலகில் இது போன்ற பதிவுகள் நிறைய வருதல் வேண்டும..

ஆரோக்கியமான.. மிகவும் தேவையான பதிவு..

நல்ல காரியம்.. தொடர்ந்து செய்யுங்கள்..

அன்புடன்
சீமாச்சு

சீமாச்சு.. சொன்னது…

அன்பு அமுதா..
செய்யுள் எழுதும் போது கூடவே.. கொஞ்சம் பொழிப்புரையும் எழுதுங்களேன்.. சிலது புரிஞ்ச மாதிரி இருக்கு.. சிலது புரியலை..

//“மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மைதான் செல்லும்
திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்
கற்றறிவு இல்லா உடம்பு!”
//

நட்டோரை இன்மை - அப்படீன்னா என்ன? காலண்டர்ல எல்லாம் போட்டிருப்பாங்களே.. தென் திசையில் ஹோரை என்று.. அதுவா..?

கொஞ்சம் பொழிப்புரையும் எழுதுங்களேண்..

//சாந்துணையும் கல்லாதவாறு// -ன்னா என்ன அர்த்தம்..

கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்தப் பதிவில் பொழிப்புரை எழுதினால்.. எனக்குச் சொல்லுங்களேன்..

அன்புடன்
சீமாச்சு

அகரம் அமுதா சொன்னது…

வாங்க சீமாச்சு! முதலில் தங்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன். கட்டுரையெழுதும் போது பொழிப்புரை விரித்துக் கொண்டிருந்தால் கட்டுரையின் வேகம் தடைப்படும். இருப்பினும் பின்வரும் இடுகைகளில் தங்களின் வேண்டுகோள்களைப் பூர்த்திசெய்கிறேன்.

நட்டார் என்றால் நண்பர் என்றுபொருள்.

சாந்துணையும் கல்லாத வாறு -சாகும் வரையும் கல்லாத வாறு

பின்வருவனவற்றுள் நிச்சயம் அனைவருக்கும் புரியும் படியாக எழுதுகிறேன். நன்றி!

அகரம் அமுதா சொன்னது…

வாங்க ஜி! நன்றாகக் கவனித்தீரா? அவர் ஜீ. நீங்க ஜி. அது நெடில். இது குறில். நிச்சயம் பின்வரும் நாட்களில் நிறைய இலக்கியக் கட்டுரைகள் எழுத முயல்கிறேன். நன்றி!

குமரன் (Kumaran) சொன்னது…

கல்வியைப் பற்றிய இலக்கியக் கட்டுரை நன்றாக இருக்கிறது அமுதா.

அகரம் அமுதா சொன்னது…

நன்றி குமரன் அவர்களே!

ஒளியவன் சொன்னது…

அன்பின் அமுதா, அருமையான பதிவு இது. அதுவும் திருக்குறளை உவமையெனக் கொண்டு நீ பேசியது மிக அருமை. வாழ்த்துகள். இது போன்று பல விசயங்களைப் பகிர்ந்து கொள்.

அகரம் அமுதா சொன்னது…

நன்றி திரு ஒளியவன் அவர்களே!

S.Lankeswaran சொன்னது…

நான் ஆசிரியத்துவம் குறித்து எனது புதிய வலைப்பதிவில் எழுதுவோம் என்று சற்று வலையில் தேடிய போது தங்களின் கல்வி என்ற சொல்லிற்குரிய கட்டுரை கி்டைத்தது மிக்க உதவியாய் இருந்தது.