திங்கள், 29 டிசம்பர், 2008

புகை!

புதுமைகள் பலநிறைந்த இன்றைய நானிலத்தில், ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைப் பெருமையெனக் கருதிப் புண்பட்ட மனதைப் புகைவிட்டு ஆற்றிக் கொண்டிருகிறார்கள். இன்றையநாளில் புகைக்கும் பழக்கம் சிறியோர், பெரியோர் என்றன்றி எல்லாரிடத்தும் பரவலாகக் காணமுடிகிறது. பத்தகவை நிறையாத பொடியனும் வட்டவட்டமாகப் புகைவிடப் பழகிவைத்திருக்கிறான்.

பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பதின்ம அகவையினர் புகைப்பதென்றால் மறைந்தொளிந்து கொண்டு குடிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் (என் அண்ணனும் அப்படியே). புகைப்போரும் வெகுசிலரே. ஆனால் இன்றைய திரைப்படங்களின் தாக்கத்தால் (குறிப்பாகப் பரட்டைத்தலை நடிகர்) நிறைய இளையர்கள் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

புகைப்பதற்கு ஆண்பெண், பெரியோர், சிறியோர் என்ற வேறுபாடற்று இன்று யாவரும் ஊதும் ஒப்பற்ற பொருளாகத் திகழ்கிறது வெண்சுருட்டு. பெரியோர், சிறியோர் என்ற வேறுபாடற்றதுபோல் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடும் கிடையாது. “பொருளுடையார்க்கு இவ்வுலகம், அருளுடையார்க்கு அவ்வுலகம்” என்பதைப்போல ஏழைக்குப் பீடி, பணம்படைத்தோர்க்கு வெண்சுருட்டு அவ்வளவே.

முதலில் இப்பழக்கம் இளையர்களிடையே “ஸ்டைல்-பாவனை” என்கிற அளவிலேயே தொடங்குகிறது. போகப்போக அப்பழக்கத்திற்கு அவர்களையும் அறியாது அடிமையாகி விடுகின்றனர்.

புதுமைஎன எண்ணிப் புகைப்பார்பிந் நாளில்
அடிமையென ஆவார் அதற்கு!

இப்பழக்கமுடைய பலரிடத்தும் இப்பழக்கத்தை ஏன் தொடர்கிறீர்கள்? என வினவினால், "சும்மா விளையாட்டிற்குத் தொடங்கினேன். பின்பு அதுவே பழகிவிட்டது. விடமுடியவில்லை" என்பர். சிலருக்கு, காலை எழுந்தவுடன் இதைப்பிடித்தால்தான் காலைக்கடன் வரும். இல்லை என்றால் அன்று முழுவதும் மலச்சிக்கல்தான். சிலருக்கோ புகைப்பிடித்தால்தான் சிறப்பாகச் சிந்திக்கமுடிவதாக நினைப்பு. அப்படிப்பார்த்தால் நாட்டில் கோடி அப்துல் கலாம்கள் தோன்றியிருக்க வேண்டும்.

வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை
நம்புகையில் வீழும் நலம்!


புகைப்பதால் உண்டாகும் நோய்கள் பற்றிய போதிய அறிவிருந்தும் அதனை விரும்பிப் பற்றுவது என்பது மனிதனின் பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடாகும். இயற்கையின் படைப்பில் மனித உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒப்பற்றவை. அவற்றைப் பேணுவதை விடுத்து எவ்வழியில் சீரழிக்க ஒண்ணுமோ அவ்வழியிலெல்லாம் முயல்கிறான் மனிதன்.

வாய் என்பது நகைப்பதற்கும், சுவைப்பதற்கும், உரைப்பதற்கும் என்பதை மறந்து புகைத்தவன்னம் உள்ளான். பலருக்கோ வாயானது ஆலையின் புகைக்கூண்டைப் போன்று எந்நேரமும் புகைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இவர்களிடம் புகைவண்டி தோற்றுவிடும்.

என்னைக் கேட்டால்
நகைக்கிடங் கான நறுவாய் நகைபோய்ப்
புகைக்கிடங் காதல் புதிர்!-
எனச்சொல்வேன்.

புகைப்பது இழுக்குள் ஒன்று என்பதையும் அறியாது அதனை பெருமதிப்பாகக் கருதிப் பின்பற்றி வருகிறான். புகைப்பதைத் தடைசெய்ய வேண்டிய அரசும் அத்தொழிலை முடக்கவோ, கட்டுப்படுத்தவோ நெஞ்சுரமற்று நிற்கிறது.

நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காணல்
தகையில்லை; வேண்டும் தடை!

கள்ளைப் பொருத்தவரைக் குடிப்பவனையும் அவன் குடித்தனத்தையும் மட்டுமே பாதிக்கும். ஆனால் புகை குடிப்பவனையும் அவனைச் சுற்றி இருக்கும் அனைவரையும் வறுத்தி அழிக்கிறது. காற்றை மாசுபடுத்துகிறது. அக்காற்றை உண்ணும் யாவரையும் நோயின் பிடியுள் ஆழ்த்துகிறது.

காற்றிற்கும் மாசாகும்; கைப்பிடித்தார் வாழ்வடைக்கும்
கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்!

"கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் சாவு" என்பதுபோல புகையை ஏற்ற துணையெனக் கொண்டவனுக்கு அப்புகையே ஓர்நாள் கூற்றாக மாறி அழிகிறது. வெண்சுருட்டு நிறுவனங்கள் தங்கள் சிந்தையெல்லாம் ஒன்றுதிரட்டி எத்தனை வண்ணங்களில் எத்தனை வகைகளில் வெண்சுருள் தயாரிக்க முடியுமோ அத்தனை வகைகளிலும் முயன்றுவருகிறது. மனிதனுக்குப் புகையிலையால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க, பஞ்சுவைத்த வெண்சுருள்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுத்திகழ்கின்றன. நஞ்சினைப் பஞ்சினால் வடிகட்டினால் நஞ்சு அமிழ்தாகி விடுமோ?

பஞ்சுண் டெனினும் பரிந்து புகைக்குங்கால்
நஞ்சுண்டு; சாவாய் நலிந்து!ஓர் செயலைச் செய்வதற்கு முன்பே அச்செயல் தீமை விளைவிக்கும் எனத்தெரிந்தும் அச்செயலைச் செய்து, துன்புறும் அறிவிலிகளாய் மாந்தர் இருத்தலால், உரைப்பதால் உணர்வதைவிட துய்ப்பதால் உணர்வதே சரியான பாடமாக இருக்கமுடியும்.

புகைப்பான் இடன்நாடிப் பூம்பழுதைக் காட்டி
நகைப்பான் எமனும் நயந்து!
–எனத்தெரிந்தும் புகைப்போருக்கு நமனின் வருகையே நல்லதோர் பாடமாக விளங்கமுடியும்.

அகரம்.அமுதா

திங்கள், 22 டிசம்பர், 2008

தேரா மன்னன்!

கடந்த சில நாட்களாக சூடான காரசாரமான செய்தியாக இணையத்திலும் தொலைக்காட்சிச் செய்தியிலும் நாளேடுகளிலும் உலாவிக் கொண்டிருப்பது “அமெரிக்க முதற்குடிமகனை ஈராக்கிய செய்தியாளர் செருப்பால் அடிக்க முனைந்த நிகழ்வு”

இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய குற்றமென்று பலரும் எழுதியும் கருத்துரைத்தும் வருகின்றனர்.

சரி. இப்பொழுது நாம் சற்றே இலக்கியத்திற்குள் நுழைவோம். அரசகுடியில் மூத்த மகனாகப் பிறந்தும் மன்னனாவதற்குத் தக்க தகுதிகள் இருந்தும் அப்பன் செய்தளித்த உறுதியால்(ஷத்தியத்தால்) மன்னனாகும் தகுதியிழந்து அந்நாட்டில் ஓர் குடிமகனாக வாழவும் வகையற்றுக் காடுபோந்த இராமன் நாடோடியாகத் தென்னகம் போந்து வாழ்கையில், சுக்கிரீவன் வேண்டுகோளுக்கிணங்கி மன்னன் வாலியை மறைந்திருந்து அம்பெய்திக் கொன்றான்.

இவ்விடத்தில் நாம் சிறு ஆய்வுசெய்வோம். வாலியைக் கொலைபுரிய இராமனுக்கும் வாலிக்கும் நேரடிப் பகையோ அல்லது மறைமுகமாகக் கூட பகையிருப்பதாக காவியத்தில் அறியமுடியவில்லை. ஆயினும் நண்பன் (சுக்ரீவன்) கூறியதால் எதிர் நின்று போர்செய்யாமல் புதர்நின்று போர்செய்தான் இராமன்.

ஏன் வாலியைக் கொன்றான் இராமன்? இராமனுக்குத் தெரியாதா! அரசகுடியில் முற்பிறந்தோனுக்கே மணிமுடியென்பது. அறிந்திருந்தும் சுக்ரீவனுக்கு முற்பிறந்தவனை தென்னகத்தின் மன்னனை ஏன்கொன்றான்? ஏனென்றால், தம்பியின் மனைவியாயினும் அவள் மாற்றான் மனைவி எனக்கருதாமல் தன்னுடைமை ஆக்கிக்கொண்ட அவ்விழிச் செயலே இராமன் வாலியை வதைசெய்யக் கரணியமாக அமைந்தது.

இத்துணைக்கும் இராமன் தென்னவன் அல்லன். தென்னகத்தைப் பொருத்தவரை அவன் ஒரு நாடோடி. ஓர் நாடோடிக்கே அயலகப் பெண்ணுக்கு இழைக்கப்படும் தீங்கை எண்ணிக் கடுஞ்சினம் மூளுமென்றால், அமெரிக்கப் படையால் நாடொறும் ஈராக்கிய பெண்மணிகள் கற்பழிக்கப் படுவதும் கொலைசெய்யப் படுவதும் பார்க்க அந்நாட்டுக் குடிமகனுக்குக் குருதி கொதிக்குமா? கொதிக்காதா?

இராமனிடம் வில்லம்பிருந்தது எய்தான். இன்றைய குமுகாயத்தில் தனிமனிதன் கொலைக்கருவிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம். ஆயினும் செருப்பணிவதற்கு யாதொரு தடையும் இல்லை. இராமனிடம் வில்லம்பிருந்தது அம்பையெய்தான். ஈராக்கிய செய்தியாளரிடம் காலணியிருந்தது ஆக, காலணியை எய்தான்.

இராமன் சரியான பொருளைத்(அம்பு) தவறான முறையில் (மறைவிலிருந்து கொண்டு) செலுத்தினான். ஈராக்கிய செய்தியாளன் தவறான பொருளைச்(செருப்பை) சரியான முறையில் (நேரெதிரில்) விட்டெறிந்திருக்கிறான். இராமனுக்கும் ஈராக்கிய செய்தியாளருக்கும் உள்ள வேற்றுமைகள் இவ்வளவே.

சிலம்பில் பாண்டியன் செய்த அற்றமென்ன? கோவலனைக் கொண்டுவா என்பதற்குப் பதிலாய்க் கோவலனைக் கொன்றுவா என வாய்தவறுதலாக் கூறியது அவ்வளவுபெரிய அற்றமா?

தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறுசெய்த பாண்டியனுக்கு அத்தவறுக்கான பரிசு சாக்காடா? இது தகுமா? சற்றே ஆராயத்தான் வேண்டும்.

“தேரா மன்னா!” எனப் பாண்டியனைப் பார்த்துக் கண்ணகி கேட்டதற்குக் கரணியம் தட்டான் (நகைத்தொழிலாளி) கூறியதை உண்மையென நம்பிக் கோவலனைக் கொன்றுவா எனப்பிழைபட உரைத்தான் என்பதற்காக மட்டுமல்ல.

ஓர் நாட்டில் கொள்ளையர்கள் எப்பொழுது உருவாகிறார்கள் என்றால் அவர்களுக்குப் போதிய உணவு, உடை, உறைவிடம் இல்லாப்போழ்து ஆங்குக் கொலை கொள்ளை போன்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. பொற்கொல்லன் ஒருவன் அரசியாரின் காற்சிலம்பையே களவாடுகிறான் என்றால் அந்நாட்டின் ஆட்சிமுறையில் ஒழுங்கின்மை தெள்ளிது. சிலம்பின் மீது பொற்கொல்லன் பற்றுவைத்ததற்குக் கரணியம் பொய்யுரைப்பினும் அதை மெய்யெனக் கருதி நம்பும் மடமன்னன் இருப்பதால். எது உண்மை எது பொய் எனக் கண்டாயும் காவலர் திறம்படச் செயல்படாமையால் பொற்கொல்லனின் பொய் மெய்யானது. கோவலனின் மெய் பொய்யானது.

நல்ல நாடு எனப்படுவது நல்லரசால் ஆளப்படுகிற நன்மக்களை உடைத்து. நன்மக்கள் நிறைந்தும் நல்லரசமையாவிடின் அந்நாடு பாழ். நல்லரசமைந்து நன்மக்கள் அமையாவிடினும் அந்நாடு பாழ். பொருளைத் தெளிவாகக் காட்டுவது இடக்கண்ணா? வலக்கண்ணா? என்றால் இரண்டுவிழிகளும் தெளிவான பார்வை பெற்றிருத்தல் வேண்டும் என்பதைப் போல நாடு என்பது நன்மக்களாலா? நல்லரசாலா? என்றால் இரண்டும் நன்கமைதல் வேண்டும். இவ்வளவையுங் கண்ணுற்றே கண்ணகி பாண்டியனைத் “தேரா மன்னா!” என இடிந்துரைத்தாள்.

சரி. இங்குத் தவறிழைத்தவர்கள் பாண்டியனும் அரசூழியர்களும் தான். இருப்பினும் ஏன் கண்ணகி மதுரை மாநகரையே தீக்கிரையாக்க வேண்டும்? ஏனென்றால் சரியான மன்னனைத் “தேரா மக்கள்” அம்மதுரைவாழ் மக்கள். மேலும் அயல்நாட்டவன்மீது தவறாக ஆணைபிறப்பிக்கப் பட்டு அவன் கொலையுண்டு வீழ்ந்ததை அறிந்தபின்பும் குடிமக்கள் என்கிறமுறையில் கண்ணகிக்கு நயன் (நீதி) தேடித்தர முன்வராமை. ஆகையால் மதுரை மாநகரமே தீக்கிரையானது.

தனிமனிதன் (கோவலன்) கொலையுண்டதற்கே அந்நாடும் அந்நாட்டரசும் அழிவதும் அழிக்கப்படுவதும் சரியெனில் அணுக்கருவி உற்பத்தி செய்வதாய்க் கூறி அத்துமீறி அந்நாட்டுமீது போர்தொடுத்து அந்நாட்டினரை அக்குமுகத்தைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கும் “புசு” அரசுக்கு செருப்படி என்பது குறைந்த அளவு தண்டனையே.

மேலும், கண்ணகி “தேரா மன்னா” எனக்கூறியதோடு நிறுத்தவில்லை. தன் கணவன் அற்றமற்றவன் எனச் சான்றுரைக்கும் நோக்கோடு தன் மற்றோர் காற்சிலம்பை கழற்றித் தரையில் (பாண்டிய மன்னவனை நோக்கி) வீசியெறிந்தாள். அன்று கண்ணகி விட்டெறிந்ததும் காலணியே (காற்சிலம்பு). இன்று ஈராக்கிய செய்தியாளர் விட்டெறிந்ததும் காலணியே (காற்செருப்பு).

அகரம்.அமுதா

திங்கள், 15 டிசம்பர், 2008

அழகு!

'அழகு' - இதனை விரும்பாதாரும் சுவையாதாரும்(ரஷனை) பாரில் இருக்கவே முடியாது. பாரில், அழகு என்பது அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்த நிறைபொருளாய் விளங்குகிறது. ஓடும் ஆற்றிலும், ஊறும் ஊற்றிலும், ஆடும் மரத்திலும், பாடும் அருவியிலும், தோன்றும் கதிரிலும் தேயும் மதியிலும், ஆண், பெண், கல், மண், என்று பாகுபாடில்லாமல் எங்கும் அழகு நிறைந்திருக்கிறது. இயற்கையிலும் செயற்கையிலும் அப்படியே!

பொதுவாக அழகு என்பது "அழகு என்று நாம் போற்றும் பொருளுக்குரியதா? அல்லது அப்பொருளைக் காணும் கண்களுக்குரியதா?" சற்றே சிக்கலான வினாதான்.

அழகு என்பதெது? என விளக்க வந்த பலரும் பொருளிலிருப்பதாயும் அப்பொருளைக் காணும் கண்களில் இருப்பதாயும் உரைப்பர். சிலரோ எனில் கண்டாரால் விரும்பப்படுவதெதுவோ அதுவே அழகு என்பர்.

பின்னவர்கள் கூறியிருப்பதில் உண்மையில்லாமலில்லை. எப்பொருள் நம் கருத்தை மனத்தை ஒருமுகப்படுத்தித் தன்னகத்தே ஈர்த்து வைத்துக் கொள்கிறதோ அப்பொருளை அழகு என்கிறோம். எப்பொருள் நம் மனத்தையும், கருத்தையும் ஒருசேர ஈர்க்கவில்லையோ அப்பொருளை அழகின்மையாகக் கருதுகிறோம்.

தெருமுனையில் மின்கம்பிகளில் அமர்ந்துகொண்டு ஓயாமல் கா...கா... எனக்கரையும் காக்கைகள் நம் கண்களில் பட்டாலும் அதன் கரிய நிறமும் ஒழுங்கற்ற கறைதலும் நம்மை ஈர்ப்பதில்லை. ஆகையால் காக்கையை அழகு என நாம் கருதுவதில்லை. அதற்குக் கரணியம் அவை நம் மனத்தை ஈர்ப்பதில்லை. மாறாக பறவைகளில் அழகுடையது என்றால் கிளி, மயில், அன்னம் பொன்றவை நம் நினைவிற்கு வரும். கரணியம் அவற்றின் தோற்றமும், வண்ணமும் நம்மை ஈர்க்கின்றன.

ஆக, அழகு என்பது கண்களால் காணப்படுகின்ற பொருளில் உள்ளதா? அல்லது அப்பொருளைக் காணும் கண்களில் உள்ளதா? என்றால் இரண்டிலும் இல்லை என்பதே என் கருத்து.

ஆம். அழகு என்பது அழகின்மை என்பது உண்மையில் பொருளுக்கில்லை. எக்காலும் எவ்வேளையிலும் பொருளின் தன்மை ஒன்றே. பொருளுக்கு அழகு அழகின்மை என்கிற பாகுபாடெல்லாம் கிடயாது. என்ன குழப்புகிறேனா? சற்றே விரிவாகக் காண்போம்.

ஒருபொருளைக் காணும் போது நம் மனதுள் எழும் உணர்வுகளிலேயே அழகு பொதிந்து கிடக்கிறது. நம் மனத்தில் தான் அப்பொருளுக்கான அழகு பொதிந்துகிடக்கிறது.

அதெப்படி? நாம் காணும் பொருளில் அழகிருந்தால்தானே நம் எண்ணத்துள் பலவித உணர்வுகளைத் தோற்றுவிக்கும்! ஆக பொருளில் தானே அழகிருக்க முடியும் என்கிறீர்களா?

மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும். சற்றே ஆய்ந்தறிவோம்.
மாலைப் பொழுதை விரும்பாதார் ஆரும் உண்டா? நாளெல்லாம் சுட்டெரித்த சூரியன் மேற்றிசையை அடைந்ததும் தண்ணென்று மாறும் விந்தையை வியக்காதார் ஆரும் உளரா? முகம் சிவந்த சூரியன் முகிலாடையால் முகம் மறைப்பதும், முகிலினூடே சிறைவிரித்துப் பறந்து தன் கூட்டை அடையவிருக்கும் பறவைகளின் அசைவும் விரும்பாதார் ஆரும் உண்டா? முதலிரவன்று கணவன் அறைக்குப் புதுமனையாள் புகும் பாங்கோடு நாணம் மாறாமலும் தாழ்த்திய முகம் நிமிர்த்தாமலும் அலுங்காமல் குலுங்காமல் அசைந்துவரும் நிலவின் வரவுகண்டு இன்புறாதாரும் இருப்பரோ? இங்கே அம்மாலை பற்றி எம் பாவலன் தீட்டும் அழகோவியத்தைப் பாருங்கள்:-

செங்கதிரோன் போய்மறையச் செவ்வான் ஏகத்
---திங்களிளம் பிறைநுதலைத் தெரியக் காட்டிக்
கங்குலெனப் புலவர்சொலும் இரவுப் பெண்ணாள்
---காரிருளாம் குழல்விரித்துக் களிக்கை வீசிப்
பொங்கொளிவிண் மீன்களெனும் முத்துப் பற்கள்
---புறந்தோன்ற வேசிரித்துப் போந்தாள் போத
மங்கையவள் பேரழகில் மயங்கி யிந்த
---வையகமே ஆழ்துயிலில் வைகிற் றம்மா!


இப்படி யாவராலும் விரும்பப்பட்டு விரும்புவோர் மனதை இலகுவாக்கிவிடும் கமுக்கமறிந்த பொன் அந்திமாலை சிலருக்கோ, கொடுங்கூற்றை அழைத்து வரும் ஊர்தியாகவும் மாறிவிடுகிறது. நிலவு வில்போலும் அதிலிருந்து வீசும் கதிர் அம்பு போலும் தோன்றுகிறது. ஓர் இரவு இப்படியும் பிறரைத் துன்புறுத்துமா என்கிறீர்களா? ஆளன் இலா மங்கையரையும், மங்கையில்லாக் காளையரையும் நாள்தோறும் மாலைப் பொழுது இப்படித்தானே துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இதோ குறள் வெண்பாவைப் பாருங்கள்.

வில்போலும் தண்நிலவு; வீசுங் கதிரம்பாம்;
அல்போலும் கூற்றே(து) அறை! -அகரம்.அமுதா


அழகோவியம் பொருந்திய அந்தி, ஆளன் இலா இளையாளுக்கு ஓர் கொளையாளி என்கிறார் மூதாதையார். அப்பாடலையும் பாருங்கள்:-

புல்லுனர் இல்லார் நடுங்கச் சிறுமாலை
கொல்லுனர் போல வரும்!


முன்னம் வழங்கியுள்ள விருத்தத்திற்கும் பின்னம் வழங்கிய குறள்வெண்பாக்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் காணுங்கால் நமக்கு ஓர் உண்மை புரியவரும்.

நாளும் வந்து செல்லும் மாலையும், முகிலும், மதியும், இருளும், விண்மீன்களும் ஒன்றுதான். முந்நாளில் உற்ற துணையுடன் கண்டுகளித்த உள்ளம் பிந்நாளில் உற்றதுணை அற்றபோது அதே மாலையை வெறுக்கத்தக்கதாயும் தன்னைக் கொல்லவந்த கூற்றாகவும் கருதுகிறது. கரணியம் என்னவென்றால் ஒன்று நம் மனம் முழுவதையும் ஆட்கொள்ளுகிறபோது அந்த ஒன்று நம் பார்வைக்கு அழகாய்க் காட்சியளிக்கிறது. அவ்வொன்றினின்று மாறுபட்டு நம்மனம் வேறொன்றின் மீது தாவும் போது முந்தைய பொருள் அழகற்றதாகக் காட்சிதருகிறது.

இதன் வெளிப்பாடாக நான் முன்பொருமுறை ஈற்றடிக்காக எழுதிய வெண்பாவில் இப்படி எழுதியிருப்பேன்:-

தீய்க்குதென்பார் ஆளனிலார்; செக்கர் வரமறைந்து
மாய்க்குதென்பார் ஆளனுலார்; மாய்ப்பதுவும் -தீய்ப்பதுவும்
தண்ணென்று வானில் தவழும் தளிர்நிலவா?
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!


நிலவு எப்பொழுதும் போலத்தான் தோன்றுகிறது. ஒளிசிந்துகிறது. மறைகிறது. நம்முள்ளம் மகிழ்வாயிருக்குங்கால் அழகாகத் தெரியும் நிலவு மகிழ்வற்றுவிடுங்கால் அழகற்றதாய்க் காட்சிதருகிறது.(அதாவது அதுநம்மைத் துன்புறுத்துவதாகப் படுகிறது.)

ஆக எப்பொருளும் அழகுடையது அழகற்றது என்ற பாகுபாடுடையதில்லை. அதனைக் காணும் சுவைஞர் மனங்களின் உணர்வுகளிலேயே அழகு அழகின்மை என்ற பாகுபாடுகள் பொதிந்துகிடக்கின்றன. இளமைத்துடிப்பிருக்கும் வரையில் இச்சை தன் மனமெங்கும் பரவிபடந்துகிடக்கும் வரையில், "ஓர்கையில் மதுவும் ஓர்கையில் மாதும் இருக்கின்ற வேளையிலென் உயிர்பிரிதல் வேண்டும். இல்லை என்றால் ஏன்பிறந்தாய் என்றென்னை இறைவன் கேட்பான்" என்றே புலம்பத்தோன்றும். அதே மனதைவிட்டு இச்சை புறம்சென்று அமைதியும் அன்பும் குடிகொள்கின்ற போது சிற்றின்பத்தை ஒதுக்கிப் பேரின்பத்தையே மனம் அழகுடைத்து, ஆழமுடைத்து, இன்பமுடைத்து எனக் கூத்தாடவும் செய்கிறது.ஒன்றை நாம் காணும் பொது அது நம் மனதில் எவ்விதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ, எவ்விதமான உணர்வுகளைத் தோற்றுவிக்கிறதோ, அதனைப் பொருத்தே அதன் அழகை நாம் அளவுகொள்கிறோம். ஆக, பொருளின் அழகு போருளுக்கு உரிமையல்ல. அதை உற்றுணரும் உள்ளத்திற்கு உரிமையுடைத்து. (மாற்றுக் கருத்திருப்பின் மொழியலாம்.)

அகரம்.அமுதா

திங்கள், 8 டிசம்பர், 2008

கற்பு!

பெண்ணுக்கு இலக்கணம் கூறுமிடத்து அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகியவற்றைக் கூறுவர்.

அதென்ன அச்சமட நாணம் பயிர்ப்பு?

அச்சம் - புதியவரை புதியவற்றைக் காணும் போதும் கேட்கும் போதும் அஞ்சுதல்.

மடம் -அதிகம் தெரிந்திருந்தும் தெரியாதது போலிருத்தல்.

நாணம் - ஆடவரைக் கண்டால் இயற்கையாக ஏற்படும் வெட்கம்.

பயிர்ப்பு - அன்னிய ஆடவரின் உடலோ உடையோ தன்மீது பட்டவுடன் அருவருத்தல்.

ஆக நாற்குணங்களும் நாற்படையாக விளங்கும் ஓர் பெண் தன்னை மணந்து கொண்ட கணவனுக்கு இல்லாளாகி அவன் இல்லை ஆட்சி செய்பவளாகப் புகுகிறாள். அவள் ஆட்சியின் கீழ் அம்மனை விளங்கப் பெறுகையில் அவளுக்கு மனைவி என்ற பதவியுயர்வு கிடைக்கிறது. விளங்கிய மனையின் நாயகனாக வீற்றிருக்கும் கணவனின் இன்ப துன்பங்களில் துணைநின்று காக்குங்கால் அவள் துணைவியாகிறாள்.

நல் மனைவியாய், நற்றாயாய், மாமியார் மெச்சும் மருமகளாய் விளங்கும் பெண்ணைக் கற்புடையால் எனலாம். ஓர்பெண் இல்லாளாகி மனைவி நிலைக்கு உயர்ந்து துணைவி என்னும் உச்ச நிலையை அடைய கற்பை உயிரினும் ஓம்பவேண்டியிருக்கிறது.

ஆக கற்பு என்பதென்ன? அது உடலில் எவ்விடத்தில் உள்ளது? சிறுகுடலிலா? பெருகுடலிலா? கல்லீரலிலா?கற்பு என்பதற்கு நாம் தற்காலத்தில் எண்ணிக்கொண்டிருக்கும் பொருளில் காண்போமானால் இதுபோன்ற வினாக்கள் எழத்தான் செய்கிறது.

உண்மையில் கற்பு என்பதென்ன?

ஓர் பெண் தான் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் நின்று வழுவாமை கற்பாகும். ஆக கற்பு எனபதன் பொருள் ஒழுக்கமாகும். பிறகேன் நாம் கற்பொழுக்கம் (கற்பு ஒழுக்கம்) என வழங்கிவருகிறோம்? கரணியம் யாதெனில் கற்பு என்பதற்கு நாம் தவறான பொருள் கொண்டதனால்தான் பிற்காலத்தில் கற்பு என்ற ஒழுக்கத்தின் பின் மீண்டும் ஓர் ஒழுக்கம் ஒட்டிக்கொண்டு விட்டது எனக்கருதுகிறேன்.

மேலும் கற்பிக்கப் படுவது கற்பாம். தாய் தந்தையால் ஆசானால் மாமன் மாமியால் கணவனால் ஓர் பெண் இப்படி இருக்கவேண்டும் நடக்கவேண்டும் எனக்கற்றுக்கொடுத்தல் கற்பாகும்.

ஒருவனுக்கு எத்துணை செல்வங்கள் அமையப்பெறினும் நற்குணம் நல்லடக்கம் இல்லாள் இல்லாக அமையப்பெறாவிடின் அவ்வில் இல்லாயிராது.

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்!


ஆக ஒழுக்கம் என்பது இன்றியமையாததாகிறது.

கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை என விளங்கும் கொழுநன் உண்டபின் தானுண்ணுதல் அவன் துயின்றபின் தான்துயிலுதல் அவன் எழுமுன்எழுதல் போன்றவை ஒழுக்கத்திற் சிறந்த நங்கையரின் செய்கைகள் என்கிறது காசி காண்டம்:-

கொழுந னுண்டபின் தானுகர் கொள்கையும்
விழிதுயின்றபின் துஞ்சலு மென்றுயி
லெழுதன் முன்ன மெழுதலு மேயன்றோ
பழுதிற் கற்புடைப் பாவையர் செய்கையே!

ஒழுக்கத்திற் சிறந்த மங்கை என்பவள் கொண்டவனுக்குத் தாயாயும் ஆண்டானுக்கு அடிமையாயும் புவியின் பொறுமையோடும் இரவில் கணவன் இன்புற்று மகிழ வேசையர் போலும் நாட்டை வழிநடத்தும் மன்னனுக்கு மதியுரை நல்கும் மந்திரிபோலும் இருத்தல் வேண்டும்.

அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் -வன்னமுலை
வேசி துயிலும் விறன்மந் திரிமதியும்
பேசி லிவையுடையாள் பெண்!

கற்படைய மாதரார் பற்றிக் கூறுகையில் என்னாசான் பாத்தென்றலார் கற்புடையவள் என்பவள் மாற்றானை மனதாலும் தீண்டாதவள் அல்ல. மாற்றான் ஒருவன் மோகிக்கும் வன்னம் தன்னை அழகுபடுத்திக் கொள்ளாமலும் பேச்சில் செயலில் அவ்வன்னம் நடவாதிருத்தலுமே ஆகும் என்பார்.

ஆக கற்புடையாள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் பல உண்டென உணர்த்தும் பழம்பாடல்கள் பல உண்டெனினும் தற்காலத்திற்கு உகந்ததாயில்லாக் கரணியத்தால் அவற்றைக் கூறாது தவிர்த்திருக்கிறேன்.

அகரம்.அமுதா

வெள்ளி, 5 டிசம்பர், 2008

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!

தீவிர வாதிகள் இந்தியத் தாயின் இதயப் பகுதியுள் ஊடுருவி தன்வலி காட்டி இந்தியர் யாவரையும் திகைப்புக் குள்ளாக்கிய பிறகே கண்ணோட்டம் இல்லாத காங்கிரசு கண்விழித்துக் கொண்டுள்ளது.

மக்களாலும், எதிர்க்கழகத்தாராலும், 'உளவுப்படையும், உள்துறை அமைச்சும் சரிவரச் செயல்படவில்லை எனக் குற்றம்சாற்றப் பட்டும் மெத்தனமாய் இருந்த அரசு விழிகெட்ட பின்பு வைகறை வணக்கம் புரியத்தொடங்கியுள்ளது.

அண்டை நாடுகளோடு நண்பு பாராட்டத்தான் வேண்டும். அதற்காய் வெளுத்ததெல்லாம் பால் எனக்கருதி அவரை உளவுகொள்ளாமல் இருப்பதென்பது வேந்தர் தொழிலுக்கு ஏற்புடையதன்றே.

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்
-என்கிறார் எம் பொய்யாமொழிப் புலவர்.
ஆயின் நம் நாட்டிலோ ஒற்றுத்துறை வெறும் வெற்றுத்துறை என்ற அளவிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒற்றறிதல் என்பதே ஒப்புக்கு என்றானபின் ஒற்றீந்த செய்தியை வேறோர் ஒற்றைக் கொண்டு மெய்காண்பதென்பதும் ஆமோ?

எல்லை தாண்டிய அச்சுறுத்தலைப் பாகிசுதான் தீவிரவாதம் என்னும் முகமூடியை அணிந்துகொண்டு ஆற்றிவருவதை ஐம்பதாண்டுகால வரலாற்றில் அகிலமறிந்த உண்மை. இம்முறையும் பாகிசுதான் அதைத்தான் அரங்கேற்றியுள்ளது.

நேற்று இன்று என்றல்லாது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்திய நாட்டிற்குள் குண்டுகள் வெடிப்பதும் தீவிரவாதிகளின் துமுக்கிகளுக்கு மக்கள் இரையாவதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மக்களால் ஓர்அரசு அமைக்கப்படுவது என்பது முதலில் அமைதியான சூழலை ஏற்பத்துதற்கும் உயிர்ப்பயம் இன்றி வாழவகை செய்வதற்குமே. இரண்டாம் கட்டமாகவே நாட்டின் வளர்ச்சிநலன்கள்.

இன்றைய இந்திய அரசு வளந்துவரும் பொருளியல் மீது செலுத்துங் கருத்தை சற்றேனும் நாட்டின் காவல்மீது காட்டாதது நகைப்புக்குறியதே.

எல்லை தாண்டிய தீவிரவாதம் என்பது நிலப்போக்குவரத்தின் வழியாக மட்டுமே அரங்கேறுவதன்று. அதை கடல்வழியாகவும் வான்;வழியாகவும் அரங்கேற்றலாம் எனச் சாதித்துக் காட்டியிருக்கின்றது தீவிரவாதம் என்னும் பொர்வையில் பாகிசுதான் அரசு.

தேன்கூட்டில் கைவைத்தால் என்னவாகும் எனத்தெரிந்திருந்தும் பாகிசுதான் தீவிரவாத இயக்கங்கள் இத்துணிவுமிகு செயலைச் செய்துமுடித்திருக்கிறது என்றால் அவற்றின் பின்புலன்களை பின்ஊக்கிகளை நாம் ஆய்தறிய வேண்டும்.

மெலியார் வலிய விரவலரை அஞ்சார்
வலியார் தமைத்தான் மருவில் -பலிஏல்
கடவுள் அவிர்சடைமேல் கட்செவிஅஞ் சாதே
படர்சிறைஅப் புள்ளரசைப் பார்த்து!


(பருந்தின் பார்வை பட்டாலே அச்சத்தில் சாக்காடெய்தும் கட்செவியானது ஈசனின் கழுத்தில் மாலையாக் கிடக்குங்கால் புள்ளரசின் நலங்கேட்டு நகைக்கும். அதுபோல ஆற்றலிற் சிறியோன் தன்னைவிட ஆற்றலிற் பண்மடங்கு மேலோனை எப்பொழுது எதிர்ப்பானென்றால் அவ்வாற்றல்வல்லானுக்கு நேரான ஆற்றல் வல்லானைத் துணையாக் கொண்டுள்ள போது.)

ஆயிரம் ஈராயிரம் உறுப்பினரைக் கொண்ட சிற்றியக்கங்கள் நேர்வழி நடவும் துணிவற்ற கீழ்மைக் குழுக்கள் ஓர் நாட்டின் பேரரசை அணுவாற்றல் கண்ட வல்லரசை வம்பிற்கழைக்குமென்றால் அவ்வியக்கங்களை இயக்கும் பேராற்றல்கள் எவை என்பதை உன்னித்தெளிய வேண்டும்.

சோற்றிலே கல்கிடந்தால் சுவைக்குமோ உண்டி? நெல்லின்
நாற்றிலே புல்வளர்ந்தால் நன்மையோ? பெருகியோடும்
ஊற்றிலே நஞ்சிருந்தால் உண்ணுதற்காமோ? நம்மில்
கூற்றெனக் கலந்துபட்ட கொடியரைக் களையவேண்டும்.


அதே வேளையில் உள்நாட்டின் சில புல்லறிவாளர்களின் துணைகொண்டே இவ்வன்செயல்கள் அரங்கேறியிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. அவர்கள் யாவர் என்பதை நம் உள்துறை விழியில் விளக்குநெய் ஊற்றிக்கொண்டு கண்டறிந்து துடைத்தொழிக்க வேண்டும். எரியைப் பிடிக்கினாலொழிய கொதியங்காதென்பதை அரசுணர வேண்டும்.

பாகிசுதானைப் பொருத்தவரை எண்ணித்துணிந்திருக்கிறார்கள். இந்திய அரசு எவ்வகை நடவடிக்கையில் இறங்கினும் கவலையோ பயமோ கொள்ளப் போவதில்லை. பாகிசுதான் மற்றும் அவர்களால் வளர்க்கப்படும் தீவிரவாத இயக்கங்களைப் பொருத்தவரை கானமுயல் தைத்த அம்பினும் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது என்னும் கொள்கையுடையவர்கள்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான்வலியும் துணைவலியும் தேர்ந்துகொண்டு இத்துணை வன்செயல்களுக்கும் முழுமுதற் கரணியமாய்த் திகழும் பாகிசுதான் அரசுக்குப் பாடம்புகட்ட இதுவே தக்க வேளை என்பதை உற்றுணவேண்டும். ஓடுமீன் ஓட வாடியிருந்த கொக்கு உருமீனைக் கண்டவுடன் கொத்துவதைப் போல இதுநாள்வரை அரங்கேறிய வன்செயல்களுக்கும் சேர்த்து இவ்வேளையை நன்குப் பயன்படுத்திப் படைத்தீர்வே உற்றதீர்வென்பதைப் பகுத்துணரவேண்டும்.

பகையென்னும் பண்பில் அதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றற்று!


பகையென்று சொல்லப்படுகின்ற பண்பற்ற தீமையை ஒருவன் நகைத்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகக் கூட கருதக்கூடாது என்பதனை பாகிசுதானுக்குத் தெ ள்ளத்தெளிவாக உணர்த்துவதொன்றே இந்திய நாட்டுள் தீவிரவாத தீஞ்செயல்கள் முற்றழிய உற்ற முடிபாக இருக்கமுடியும்.

அகரம்.அமுதா