ஞாயிறு, 11 மார்ச், 2012

தேசியத் தலைவரை சூரியக் கடவுளாக சித்தரித்து அகரம் அமுதனினால் பாடப்பட்ட பிரபாகரன் அந்தாதி

ஈழம்5 (eelam5.com) -ல் கரிகாலன் ஈற்றெடுப்புப் பற்றிய செய்திக்கட்டுரை

தேசியத் தலைவரை சூரியக் கடவுளாக சித்தரித்து அகரம் அமுதனினால் பாடப்பட்ட பிரபாகரன் அந்தாதி
Thursday, 08.03.2012, 11:29pm (GMT)பொதுவாக கடவுளர்களின் அருள் கடாட்சங்களை விதந்து புலவர்கள் அந்தாதி பாடுகின்றமை வழக்கம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், தமிழீழ தேசியத் தலைவருமான திரு.மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் சரியான முறையில் புரிந்துகொண்ட இனமான உணர்வாளரான தமிழகத்தை சேர்ந்த கவிஞர் அகரம் அமுதன் அவர்கள் "பிரபாகரன் அந்தாதி" என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நுலை காலத்தின் தேவை கருதி எமக்குத் தந்துள்ளார்.
இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ள தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் உருவ மாதிரி அனைத்தும் கைகளால் வரையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழீழ தேசியத் தலைவரை சூரியனின் அவதாரமாக சித்திரித்து. "பிரபாகரன் அந்தாதி" யை பாடியுள்ளார். அகரம் அமுதனினால் பாடப்பட்ட இந்த அந்தாதி பத்து பாகங்கள் கொண்டது. ஒவ்வெரு பாகுதியும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல என்பதையும் அவர் ஒரு அவதாரம் என்பதையும் எடுத்தியம்பி நிற்கின்றது. அவதாரங்கள் பிறப்பெடுப்பது ஒரு இலச்சியத்திர்க்காகவே! அந்த இலச்சியம் நிறைவேறாமல் அவதாரங்கள் அழிவதில்லை என்பது வரலாற்று உண்மை.
"பிரபாகரன் அந்தாதி" யில் இருந்து ஒரு சில பகுதிகளை இங்கு இணைக்கின்றோம் இன் நுல் தற்போது பிரித்தானியாவில் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியா தமிழர் ஒன்றியத்துடன் தொடர்புகொண்டு அல்லது மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
முதல் பாகத்தை படித்து பாருங்கள்.
காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்!(1)

சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து!(2)

யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கதிர்க்கையா! –ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து!(3)

தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி
வாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்த்தாய் எழுந்து!(4)

எழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்
உழுவக் கொடியிற்(கு) உரியோய்! – அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு!(5)

ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! – ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில் தமிழை
அகழப் புகுந்தேன் அணைந்து!(6)

அணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்
துணையாக் குறித்துத் தொழுதோம் – இணையாய்
இருந்தீழ மக்களின் இன்னல் களையும்
மருந்தானாய்; சொல்வேனுன் மாண்பு!(7)

மாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்
காணார்போற் கண்டிருந்தார் காசினியில் – பேணார்*
திருவிற் செயலைத் திருப்பி அடித்தே
கருவிற் கலைத்தாய்க் களத்து!(8)

களத்துப் புகுந்த கதிர்க்கையா! எங்கள்
உளத்துள் ஆடும் உணர்வே! – இளைத்த
தமிழர்க்(கு) அரணாந் தருவே உனையிங்(கு)
உமையாள் கொடுத்தாள் உணர்ந்து!(9)

உணர்ந்துந்தை வேலு உவந்துலகிற் கீந்த
மணந்தங்கு வண்ண மலரே! – புணரிசார்
வல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
பல்மெட்டில் பாடேனோ பார்த்து!(10)