- - - இன்னும் சிலர் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் புகழ்வர். ஏன் புகழ்கிறோம்? எதற்காகப் புகழ்கிறோம் என்பது, புகழ்பவருக்கும் தெரியாது! புகழப்படுபவர்க்கும் புரியாது!. நாம் யாவருமே பிறரின் ஆற்றலறிந்து, திறமையறிந்து அதற்குத்தக்கவாறு புகழ்கிறோமா என்றால் வினாக்குறிதான் மிஞ்சுகிறது.
- - - நமக்குப் பக்கத்தில் ஒரு திறனாளர் இருந்துவிட்டால் போதும், அவரை எப்படி மட்டந்தட்டி அவரைக்காட்டிலும் நாம் திறமையானவர், அறிவுபடைத்தவர் என்பதை எப்படிக் காட்டிக்கொள்ளலாம் என்பதைப்பற்றியே எண்ணத்தொடங்கி விடுகிறோம்.
- - - சான்றாகக் கம்பனையே எடுத்துக்கொள்ளலாம். வாழும் காலத்தில் சொழநாட்டில் வாழ இடமில்லாது, சோழமன்னனால் விரட்டியடிக்கப்பட ---
- - - மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதுவோ?
- - - உன்னையறிந் தோதமிழை ஓதினோன் – என்னை
- - - விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
- - - குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?
- - - எனப்பொங்கியெழுந்து சாடிவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினான். அவன் இறந்தபின்பு “பாப்பேரரசன்” (கவிச்சக்கரவர்த்தி) எனப்போற்றிப் புகழ்கிறோம். நாம் வாழுங்காலத்தில் வாழ்ந்த பாரதியின் நிலையென்ன? அடுத்தவேளை உணவின்றிப் பட்டினிகிடந்த நாட்கள் பலவல்லவா? அவன் மறைந்தபின்பு “பெரும்பாவலன்” (மகாகவி) எனப் பிதற்றித் திரிகிறோம்.
- - - பொதுவாகவே தமிழைப் படித்தவர்களுக்குப் பொருளீட்டும் திறமையிருப்பதில்லை என்ற எண்ணம் தமிழர்களின் மனங்களில் ஆழப்பதிந்த ஒருசெய்தியாக இருக்கிறது. உலகிலேயே, தன் தாய்மொழியைப் படித்தவரைத் தரக்குறைவாக மதிக்கும் எண்ணம் நம் தமிழினத்தில் மட்டுமே காணமுடிகிற ஒன்றாக இருக்கிறது. குறிப்பாகப் பாவலன் (கவிஞன்) என்றால் சொல்லவே வேண்டாம். உழைக்கத்தெரியாதவன், எக்காலும் ஊர்நயன் (நீதி) பேசித்திரிபவன் என்கிற கூற்று நிலவுகிறது. அதற்கேற்றாற்போல் (ஒருசிலரைத் தவிர) பாத்துறையில் பொருளீட்டி வாழ்வாங்கு வாழ்ந்ததாக நம்மால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியா நிலையே காணப்படுகிறது.
அடகெடுவாய் பலதொழிலும் இருக்கக் கல்வி
- - அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில் லாமல்;
திடமுளமோ கனமாடக் கழைக்கூத் தாடச்
- - செப்படிவித் தைகளாடத் தெரிந்தோம் இல்லை!
தடமுலைவே சையராகப் பிறந்தோம் இல்லை!
- - சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை!
- - என்னசென்மம் எடுத்துலகில் இரக்கின் றோமே!
- - - - என்றோர் புலவன் தன்னை நொந்துகொண்டமையிலிருந்தே புலவர்களின் நிலையை உணரலாம்.
- - - இற்றைநாளில் யாரும் பாக்கள் புனைபவர்களாக இருந்தீங்கன்னா, யாரிடமும் “நான் பாவலன்” (கவிஞன்) எனச்சொல்லிக்கொள்ள வேண்டாம். ஏன்? எனக்கேட்கும் உங்கள் வினாவிற்கு எனது பட்டறிவே தக்க சான்றாக இருக்கும் எனக்கருதுகிறேன்.
- - - ஒருமுறை, நெடுநாட்களாகப் பார்க்கமுடியாத பழைய நண்பரைப் பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் இருவரும் நலம் உசாவிக்கொண்டும், அன்பொழுக உரைசெய்துகொண்டும் இருந்தோம். நண்பர் தன்னைப் பற்றிச் சொன்னார். நான் என்னைப் பற்றிச் சொன்னேன். இடையில் நான் பாவலனாக்கும் (கவிஞன்) என ஒருசொல் கூறிவிட்டேன். நண்பர் என்னை உற்றுநோக்கி, "இதுவரை எத்தனைப் பெண்களைக் கற்பழித்திருப்பாய்?" என்றார். எனக்கோ தூக்கிவாரிப்போட்டது. நான் பாவலன் எனச்சொல்லப் போக, நண்பர் தொடர்பற்ற ஒரு வினாத் தொடுக்கிறாரே! என எண்ணிக்கொண்டு, ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? என்றேன்.
- - - நண்பர் சொன்னார். அதொன்றுமில்லை. பெண்களைப் பற்றிப் பாவரியில் கற்பனை செய்கிறேன் என்ற பெயரில் பிறந்தமேனியாக்கி, வருணனை என்ற பெயரில் சுவைத்துமுடித்துவிடுபவர்களல்லவா பாவலர்களாகிய நீங்களெல்லாம், ஆகவேதான் அப்படி வினவினேன் என்றார். அப்படிப்பார்த்தால் இற்றைநாளின் நம் திரைப்படப் பாடலாசிரியர்கள் நாளொன்றிற்குப் பத்துப்பதினைந்து பெண்களையாவது கற்பனை என்ற பெயரில் கற்பழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
- - - அந்தநிகழ்விற்குப் பின் நான் இன்றுவரை என்வாய்திறந்து “ நான் பாவலன்” என யாரிடமும் சொல்லிக்கொண்டதில்லை. பிறர் என்னைப் பிறரிடம் அறிமுகம் செய்துவைக்கும்போது “இவர் பாவலர்” எனச்சொன்னால்கூட, “இல்லையில்லை, நான் எந்தபெண்ணையும் கற்பழிக்கவில்லை” என மனதளவில் சொல்லிக்கொள்வேன்.
- - - ஒருமுறை எனது கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அனுப்பியவர் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஒரு நண்பரே ஆவார். குறுஞ்செய்தியைப் படித்து அதிர்ந்துபோனேன். குறுஞ்செய்தியின் உள்ளடக்கம் இதுதான்:- “Hallo... நீங்க இராவணன் தானே?”. என்னுள் ஆயிரமாயிரம் நினைவுகள் தோன்றிமறைந்தன. மாற்றானின் மனைவியை மட்டுமல்ல, இதுவரைநான் எந்தபெண்ணையும் கடத்தியவனோ, கட்டாயப் படுத்தியவனோ இல்லை. இருந்தும் நண்பர் ஏன் நம்மை இப்படி வினவுகிறார்?. என்னுள் தோன்றிய அதிர்ச்சி ஒரு மணித்துளியே (நிமிடம்) நீடித்தது. இயல்புநிலைக்குத் திரும்பிய நான் அழகான, மென்மையான, அதேவேளையில் ஆழமான ஒர் பதிலை வழங்கினேன்.
- - - எனது பதில் இதுதான்:- “ஆம். நான் இராவணன்தான். அதன்பொருள், “இரா + வண்ணன் = இராவண்ணன் > இராவணன்” அதாவது இரவின் நிறத்தை உடையோன் என்றுபொருள். ஆக நீங்கள் உரைத்ததுபோல் நான் இராவணன்தான், எனப் பதில் குறுஞ்செய்தி அனுப்பினேன்.
இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை:-
- - - “சொல்லுக சொல்லைப் பிறிதொர்சொல் அச்சொல்லை
- - - வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!” --- என்கின்றாரோ?
அகரம் அமுதா