சனி, 1 ஆகஸ்ட், 2009

பழமையும் புதுமையும்!

பொதுவாக நம் எல்லார்க்கும், ‘நான் புதுமையாக எழுதுகிறேன்’ என்கிற சிந்தனை இருக்கிறது. அதற்குக் காரணம் நமக்கு முன்னவர் கண்ட கோணத்தில் ஒன்றைநாம் அணுகாமல் மாற்றுவழியில் அணுகுவதும், மாற்றுக் கோணத்தில் வெளிக்கொணர முற்படுவதுமே காரணம்.

புதிதாக எழுதப்புகுவோரில் இருந்து, இருபது முப்பதாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து எழுதுகிறவர் வரை அனைவருக்கும் இவ்வெண்ணம் இருக்கவே செய்கிறது. ஆயினும் ஒன்றை மறந்துவிடுகிறோம். நாம் செய்யப்புகும் எதிலும் புதுமை என்பதே கிடையாது, புதியது என்பதும் கிடையாது. புதிய வீட்டிற்குக் குடிபுகுந்தோம் என்கிறோம். அவ்வீடுகட்டப் பயன்படுத்தப்பட்ட மண், கல், மணல், நீர், மரம், போன்ற யாவும் பழையதே!

நாம் உண்ணுகின்ற மூச்சுக்காற்று நமக்குமுன் இன்னொருவரால் உண்ணப்பட்டதே. நாம் காணும் காட்சிகள் அனைத்தும் முன்பு பலராலும் பார்க்கப்பட்டதே. நம்மளவிற் றோன்றும் புதியவை அனைத்தும் அடுத்தவர்க்குப் பழமையாகத் தோன்றும். நம்மளவிற் றோன்றும் பழமைகள் அனைத்தும் அடுத்தவர்க்குப் புதுமையாகத் தோன்றின் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

அமெரிக்காவைக் கோலம்பஸ் கண்டுபிடித்தபோது அவனளவில் அது புதுமை. அந்த நாட்டிலேயே பிறந்துவாழ்ந்துகொண்டிருந்த பழங்குடியினர்க்கு அது பழமையான ஒன்றே. நிலவில் நீள் ஆம்ஸ்ட்ராங்க்ஸ் தடம் பதித்தது இவ்வுலகத்தினருக்குப் புதுமையினும் புதுமை. ஆனால் நிலவு என்பது பழமைபட்டதே யல்லவா!

தமிழ் இலக்கிய மரபு ஈராயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும், மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும், ஐயாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும் ஆய்வறிஞர்கள் கட்டுரைத்து வருகின்றனர்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட (பழமையான) தொல்காப்பியம் இன்றேல் இன்றுநாம் யாரும் தமிழை இலக்கணமறிந்து பேச, எழுத முடியாது. ஆக இன்றுநாம் புதுமையாகப் பேசவும், எழுதவும் கற்றுத்தருகிற தொல்காப்பியத்தை பழமை என்றால் எப்படி?

ஈறாயிரம் ஆண்டுகள் பழமையானதுதான் திருக்குறள். அதில் வழங்கப்பட்டிருக்கிற கருத்துக்கள் அனைத்தும் இன்றைக்கும் ஒவ்வொருவரது வாழ்விற்கும் பயனுடையதாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறதே. ஆக, இந்நவீன உலகிற்கும் ஏற்புடைய புதுமைக் கருத்துக்களை உள்ளடக்கிய திருக்குறளைப் பழமை எனவுரைத்தல் எவ்வகையிற் சாலும்?!

ஆக, புதுமையில் பழமை உறைந்திருக்கதும் பழைமையுள்ளும் புதுமை புணர்ந்திருக்கவும் காணும்போது இதில் எது பழமை? எது புதுமை?

ரைட் உடன்பிறப்புக்கள் கண்டுபிடித்த போது வானுர்தியைப் புதுமை என இவ்வுலகம் கண்டு வியந்தது. இராவணன் சீதையைப் ‘பூவாலாகிய வானூர்தி’ –யில் (புஷ்பக விமானம்) கடத்திச் சென்றான் என்கிறது மூவாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமைவாய்ந்த இராம காதை. ஆக வானுர்தி புதுமையா? பழமையா?

19 ஆம் நூற்றாண்டில் எழுந்த நீதிநூல் ஓர் அழகிய கருத்தை நமக்கெல்லாம் உணர்த்திச் சென்றிருக்கிறது. நாம் என்னதான் புதுமையாகப் பேசியும், எழுதியும் வந்தாலும் நமக்கு முன்பே கோடிக்கணக்கான பேர்கள் பேசியும் எழுதியும் வந்ததையே நாம் மீண்டும் மீண்டும் எழுதியும், பேசியும் வருகிறோம்.

இதோ பாடலைப்பாருங்கள்:-

என்ன நீவருந் திக்கவி படிப்பினும்
எடுத்தகற் பனைமுன்னோர்
சொன்ன தேயலால் நூதன மொன்றிலை;
தொன்மைநூல் பலவாகும்!
முன்னந் நூலெலாந் தந்தவன் நீழலை
முற்றுணர்ந் தனையில்லை
உன்னின் மிக்கவர் பலருளர் கல்வியில்
உள்ளமே! செருக்கன்றே!
---நீதிநூல்---


அகரம் அமுதா

11 கருத்துகள்:

உமா சொன்னது…

அருமை அமுதா. வாழ்த்துக்கள்.

Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன் சொன்னது…

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட (பழமையான) தொல்காப்பியம் இன்றேல் இன்றுநாம் யாரும் தமிழை இலக்கணமறிந்து பேச, எழுத முடியாது. ஆக இன்றுநாம் புதுமையாகப் பேசவும், எழுதவும் கற்றுத்தருகிற தொல்காப்பியத்தை பழமை என்றால் எப்படி?//

அருமை..அருமை!

ஈறாயிரம் ஆண்டுகள் பழமையானதுதான் திருக்குறள். அதில் வழங்கப்பட்டிருக்கிற கருத்துக்கள் அனைத்தும் இன்றைக்கும் ஒவ்வொருவரது வாழ்விற்கும் பயனுடையதாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறதே. ஆக, இந்நவீன உலகிற்கும் ஏற்புடைய புதுமைக் கருத்துக்களை உள்ளடக்கிய திருக்குறளைப் பழமை எனவுரைத்தல் எவ்வகையிற் சாலும்?!

மறுக்க இயலாத செய்தி...

நல்ல பதிப்பு. தொடர்ந்து எழுதுங்கள்.

அகரம் அமுதா சொன்னது…

மிக்க நன்றிகள் உமா மற்றும் விக்கினேசு கிருட்டிணன் அவர்களே!

கோவி.மதிவரன் சொன்னது…

வணக்கம் வாழ்க வளத்துடன்

"புதுமை, பழமை தொடர்பான சிறப்பான கருத்துகளை வழ்ங்கியுள்ளீர்கள் ஈறாயிரம் ஆண்டுகள் பழமையானதுதான் திருக்குறள். அதில் வழங்கப்பட்டிருக்கிற கருத்துக்கள் அனைத்தும் இன்றைக்கும் ஒவ்வொருவரது வாழ்விற்கும் பயனுடையதாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறதே. ஆக, இந்நவீன உலகிற்கும் ஏற்புடைய புதுமைக் கருத்துக்களை உள்ளடக்கிய திருக்குறளைப் பழமை எனவுரைத்தல் எவ்வகையிற் சாலும்?!"

அருமையான கருத்துகள்

தொடர்ந்து எழுதுங்கள்

தமிழால் ஒன்றுபடுவோம்.வளர்க உங்கள் பணி

அகரம் அமுதா சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் கோவி.மதிவரன் அவர்களே! தங்கள் வருகை என்னை மகிழ்வடையச் செய்கிறது.

Admin சொன்னது…

உங்கள் பதிவுகள் அருமை. இது என் முதல் வருகை.

தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துக்கள்...

அகரம் அமுதா சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சந்ரு!

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

வணக்கம் அகரம் அமுதா.

அடிக்கடி உங்கள் பதிவுகளைக் காணமுடிவதில்லையே..?

சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.. இந்தப் பதிவைப் பாராட்ட..!

உங்கள் தமிழழகு தனி அழகு ஐயா!

அகரம் அமுதா சொன்னது…

மிக்க நன்றிகள் அய்யா சுப. நற்குணன் அவர்களே! இப்பொழுதெல்லாம் அடிக்கடி எழுத முடிவதில்லை. அடிக்கடி எழுத முயல்கிறேன். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் அய்யா!

Kavinaya சொன்னது…

வெகு நாள் கழித்து அழகான உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி :)

"அணுகுதல்" மட்டும் சரி செய்து விடுங்கள்.

அகரம் அமுதா சொன்னது…

mikka nanrigal kavinaya