திங்கள், 30 ஜூன், 2008

கேள்வி!

ஒருவன் எவ்வளவுதான் கல்வியறிவு படைத்தவனாக இருப்பினும் நுட்பமான கேள்வியறிவில்லை யென்றால் அவன் பேச்சு ஆழமுடைத்தாயும் கேட்போர் போற்றும் தன்மையத்தாயும் அமையப்பெறாது.

ஒருவன் ஆயிரம் நூல்களைத் தேடிப் படிப்பதைவிட கற்றோர் உரையைப் கேட்பது சாலச் சிறந்தது. இதை உணர்ந்தவரும் பழமொழி நானூற்றுப் பாடல்:-

உணர்க்கினிய இன்நீர் பிறிதுழியில் என்னும்
கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார் -கணக்கினை
முட்டப் பகலும் முனியா தினிதோதிக்
கற்றலின் கேட்டலே நன்று!

புத்தகப் புழுவாய் இருத்தல் சிறப்பெய்திவிடாது. ஆன்றோரும் சான்றோரும் ஆற்றும் நல்லுரையைச் செவிமடுப்பவனாதல் சிறப்பு எனக்கூறிக் கேள்வி ஞானத்தை ஊக்குவிப்பதாக அப் பாடல் அமைந்துள்ளது.

ஒருவன் தன் வறுமையின் காரணமாகக் கல்வியறிவில்லானாக இருக்க நேரினும் கேள்வி அறிவு படைத்தவனாய் விளங்கவேண்டும். அக்கேள்வி அறிவு அவன் வாழ்வுக் கடலைக் கடக்கக் கலமாய் அமையும். பிறர் ஆற்றும் சொற்பொழிவுகளை அறிவுரைகளைக் கேட்டின்புறாக் காதுகள் கேட்கும் தன்மையுடைத்தாயினும் செவிட்டுத் தன்மையின் நேர் என்கிறார் வள்ளுவர்.

செவிச்சுவையுணராது நாச்சுவைமேல் மாலுற்று வாழ்வோர் இருந்தென்ன? இறந்தென்ன? என்ற வினாதொடுக்கும் வள்ளுவர் உணவுண்ண கால வரையறை யுள்ளது போல் செவிக்கின்பம் ஈந்து வாழ்வைச் செம்மையுடைத்தாய் மாற்றும் நல்லுரைகளைக் கேட்கக் காலவரையறையே கிடையாது.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றிற்கும் ஈயப் படும்! என்றுரைக்கிறார்.

கேள்வியறிவைப் பெறல் நன்று என்றான பிறகு எதைக் கேட்பது எதைவிடுவது என்கிற ஐயம் ஏற்படுவது இயல்பே. கேட்பன வற்றுள் நல்லவையையே கேட்கவேண்டும். தீயவற்றைக்கேட்க நேரின் செவிடாயிருத்தல் சாலும். குறிப்பாய்ப் “பிறர்மறை யின்கண் செவிடாய்” -பிறர் ரகசியங்களைக் கேட்டநேரும்போது செவிடனைப்போல் இருத்தல் நலம் என்கிறார் நாலடியார்.

நல்லவற்றைக் கேட்பது என்றான பிறகு அந் நல்லவற்றுள் சிறிது பெரிது என்றா பாகுபாடில்லை. எத்துணைச் சிறியதாயினும் நல்லவற்றையே கேட்கவேண்டும். அஃது எத்துணைச் சிறிய தாயினும் அதைக் கேட்போனுக்குச் சிறந்த பெருமையையே சேர்க்கும். ஆகவேதான் வள்ளுவர்:-

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்! -என்கிறார்.

கேட்பனவற்றுள் நல்லவற்றைக் கேட்டாகிவிட்டது. இதனால் ஆவதன் பயனென்ன?

மூப்புவந்தக்கால் ஊண்றுகோல் துணை புரிவதைப் பொல் ஒருவனது கேள்வியறிவு அவனக்கு எக்காலும் துணைபுரிகிறது. ஆக நுட்பமாக ஆராய்ந்தறிந்து நிறைந்த கேள்வியை உடையவர் தவறாய் ஒன்றை அறிந்த விடத்தும் அறியாமை பொருந்திய சொல்லைச் சொல்லமாட்டார்.

பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

அகரம்.அமுதா

வியாழன், 26 ஜூன், 2008

கல்வி!

நாம் ஒருவரைப் பார்த்து, "தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டால், “படித்து முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலைசெய்து கொண்டிருக்கிறேன்” என்பார். பொதுவாக இப்படிச் சொல்வதைப் பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை கல்வி பள்ளியில் சென்றுபயில்வது. பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறியபின் எல்லாம் படித்தாகி விட்டது இனி கற்பதற்கு ஒன்றுமில்லை என்கிற நினைப்பு. அதுவே அவர்களின் வாய்மொழியாக வெளிப்படுகிறது.

கல்வியைச் சிறப்பிக்க வந்த வள்ளுவர்:-

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்! -என்கிறார்.

இதனையே வலியுறுத்தவரும் விளம்பி நாகனார் தன் நான்மணிக்கடிகையில்-

“மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மைதான் செல்லும்
திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்
கற்றறிவு இல்லா உடம்பு!”

-எனக்கூறி கற்றறிந்த நிலை இல்லாவிட்டால் தன் உடம்பே (தான் எடுத்த பிறவியே) பாழ் என்கிறார்.

கல்விக்கு வரையறை கிடையாது. அதுஓர் கரைகாணாக் கடல். எவ்வளவு மழைத்தாலும் நிரம்பி வழியாத கடலேபோல எவ்வளவு கற்றாலும் நிரம்பிவழியாத கடலாகவே விளங்குகிறது அறிவு. ஆகையால்தான் அவ்வை:- “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு” என்கிறார்.

கல்வி என்பது வாழ்நாட்கல்வியாக அமையப்பெறுதல் வேண்டும். அது இளமையோடு முடிந்துவிடுகிற ஒன்றல்ல. ஆகவேதான் வள்ளுவர்:-

“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு?” -என்ற வினாவை எழுப்புகிறார்.

கல்வியின் பயனறிந்த அவ்வை:- “ஓதுவ தொழியேல்” என்கிறார். ஓதுதற்கு மூலமாக விளங்கும் “எண்ணெழுத் திகழேல்” என்றும் அறிவுறுத்துகிறார். “எண்ணெழுத் திகழேல்” என்றால் அறிவுக்கண்ணைத் திறக்கும் எண்களையும் எழுத்துக்களையும் இழிந்துப் பேசாதே என்பது மட்டும் பொருளல்ல. எண்ணெழுத்தை ஓதாமல் விடுவதும் எண்ணுக்கும் எழுத்துக்கும் நாம் செய்யும் இகழ்ச்சியே என்கிற பொருளிலும் தான்.

ஓதுவதொழியாது ஓதுவதால் “நீரின் அளவு தன்னை உயர்த்திக்கொண்டு தலைகாட்டுகிற நீராம்பல் போல ஒருவர்க்குத் தான்கற்ற நூலின் அளவே நுண்ணறிவு ஆகும்” என்றும் வலியுறுத்துகின்றார்.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு!”

மேலோட்டமாகக் கற்பது கல்வியல்ல. உணர்ந்து கல்லான் கல்வி உயர்வுதரா. “ஆய்ந்தறிந்து கல்லாதான் கல்வி - நெல்லிருக்கக் கற்கறித்து மண்டின்று காய்த்துக் களத்தடித்த புற்கறித்து வாழ்வதனைப் போன்று” என்கிறது ஓர் பழம் பாடல்.

எதுக்கு எது விளக்கமாகப் பொலியும்? எனக்கூறுகின்ற நான்மணிக்கடிகை:-

“மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர்; -மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதல் புகழ்சால் உணர்வு!”

-என்று கூறிக் கல்விக்கு உணர்ந்து கற்பது விளக்கம் எனப் பெருமைபேசுகிறது.

சிலவே முழுநூல்கள் செம்மையுறக் கற்பின்
பலவே தமிழின் பயன்! ஆதலால் வ.சுப. மாணிக்கனார் மிக அழகாகச் சொல்லுவார்.
வரிவரியாக் கற்பின் மனவுடைமை யாகும்
தெரிவறியா நூல்கள் சில! -என்று.

ஒவ்வொரு வரியையும் உற்றுநோக்கிப் பொருளாய்ந்து கற்றால் மனத்தின்கண் நீக்கமறப் பதிந்துவிடும். ஆழமான பொருள்பொதிந்த நூற்களைக் கூட இத்தகையத் தன்மையால் மனவுடைமையாக்கிவிட முடியும்.

கசடறக் கற்றாகி விட்டது. இப்பொழுது என்ன செய்வது? அக்கல்வி கூறும் அறநெறியின்கண் நிற்பதே சிறப்பு. ஆகவேதான் வள்ளுவர்:-

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!” -என்கிறார்.

உளத்துப் பதித்த உயர்தொடைகள் கொண்டு
களத்து வருபொருளைக் காண்! -என்பார் மாணிக்கனார்.

"கற்று உள்ளத்தில் பதித்துக்கொண்ட பழம்பெரும் நூல்களின் கருத்தையெல்லாம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகலோடு பொருத்திப் பார்க்கவேண்டும்.

கற்றலின் வழி நிற்பவர்களுக்கு யாதும் ஊராகிறது.யாவரும் கேளிராகின்றனர். கல்வி என்னும் குன்றேறி நிற்பவரை அறியாதார் யாரும் இரார். கற்றோர்க்கு ஒப்புவமை சொல்வதற்கும் யாரும் இரார். ஆகவேதான் அவ்வை:-

“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன் -மன்னர்க்குத்
தன்றேசம் அல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு!” என்கிறார்.

ஒருவனுக்குற்ற பிற செல்வங்களெல்லாம் ஏதோ ஓர் வகையில் அழிவைத் தருவதாகவும் இன்னலைத் தருவதாகவும் செருக்கைத் தருவதாகவும் அமைந்து விடுகிறது. குந்தித் தின்றால் குன்றும் கறையும் செல்வமாகவே யிருக்கிறது. பூட்டிவைத்தாலும் எப்பொழுது கலவாடப்படுமோ? என்கிற அச்சத்தை ஏற்படுத்தும் செல்வமாகவே பிற செல்வங்களெல்லாம் அமைந்துவிடுகிறது.

ஆனால் இக்கல்வி என்னும் செல்வம் பிறரால் களவாட முடியாத செல்வமாகவும் நமக்குக் கேடு செய்யாத செல்வமாகவம் பிறருக்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வமாகவும் அமைகிறது. ஆகவேதான் வள்ளுவர் சொல்கிறார்:-

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவர்க்கு
மாடல்ல மற்றை யவை!”

அகரம்.அமுதா

திங்கள், 23 ஜூன், 2008

களவும் அகற்றி மற!

இன்று மாலை என்னாசான் பாத்தென்றல் முருகடியானைப் பார்க்க நேர்ந்தபோது பலவும் பற்றிக்கேட்டறிந்த பின் "களவும் கற்று மற" இப்பழமொழி உணர்த்தும் பொருள் யாது? என்ற வினாவை எழுப்பினேன்.

இப்பழமொழி துறவு நிலையடைபவர்க்காக உரைக்கப் பட்டதென்றும் அதற்கான காரணங்களையும் உரைக்கத் துவங்கினார்.

சைவ, வைஷ்னவ மதக்கோட்பாடுகளின் படி ஒருவன் இளமைப்பருவத்தில் துய்க்க வேண்டிய இன்பங்களையெல்லாம் துய்த்துவிட்டு உலகப் பற்றைவிட்டு துறவு பூணும் கால் இல்லாளுடன் கூடிய களவியல் இன்பம் மனதின் ஓரம் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆக உலகப் பற்றோடு சேர்த்து களவும் மற (உம்-தொகா நிலையில் உள்ளதை நன்கு கவனிக்கவும். களவு என்பதோடு நிறுத்தாமல் களவும் எனக்குறிக்கப் படுவதால் முதுமைப்பருவத்தில் தொடரத்தகாத பிறபழக்க வழக்கங்களோடு சேர்த்துக் களவையும் மற என்பதையே உம்-உணர்த்துவதாகக் கூறினார்.)

பிறகு அவரே அவரின் கருத்தை மாற்றி என் நூலறிவிற்கு (சிங்கையில் அவரளவிற்கு மரபிலக்கியங்களைக் கற்றோர் இல்லை) "களவும் கற்று மற" என்னும் பழமொழியே தவறு எனவும் கருதுகிறேன் என்றார். ஏன் என்றேன்.

"நீங்கள் என்னிடம் இலக்கணப்பாடங்களைப் படித்துக்கொண்டீர். இவ்விலக்கணப்பாடத்தை இனி நீங்களே நினைத்தாலும் மறக்க முடியுமா?" என்றார்.

"அதெப்படி முடியும்?" என்றேன்.

"நீங்கள் பால வயதில் பள்ளியில் கற்றுக்கொண்ட கல்வியையே உங்களால் நீங்களே நினைத்தாலும் மறக்க முடியாது என்கிறபோது பருவ வயதில் பள்ளியறையில் கற்ற கலவியை மட்டும் எப்படி மறக்க முடியும்?" என்றார்.

யாம் மௌனமானோம்.

"கல்வி என்பது மனதோடு தொடர்புடையது. கலவி என்பது உடலோடு தொடர்புடையது. உடல்தளரும் கால் உங்கள் மனதைவிட்டு களவியல் தானாகவே அழிந்துவிடும். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தானாய் அழிந்துவிடக்கூடிய களவியலை நீங்கள் வலுவில் மறக்க நினைப்பது இயற்கைக்கு மாறுபட்டதல்லவா?"

ஆகவே "களவும் கற்று மற" திரித்துக் கூறப்படும் மொழியாக இருக்கவேண்டும். மூலம் "களவும் அகற்றி மற" என்பதே சரியாக இருத்தல் வேண்டும் எனக்கருதுகிறது என் நூலறிவு என்றார்.

"ஆதாரம் உளதா?" என்றேன்.

"நீர் அன்றாடம் நல்லதை மட்டுமே பார்க்கவேண்டும். முடியுமா?" என்றார்.

"அதெப்படி? ஒரு காட்சியைப் பாத்த பிறகல்லவா அது நல்ல காட்சியா கெட்க காட்சியா என்பதைத் தீர்மானிக்க முடியும்" என்றேன்.

"நீங்கள் தெருவில் சென்று கொண்டிருக்கிறீர்கள். எதிரில் ஒருவன் இளநீர் அருந்துகிறான். மேலும்செல்கிறீர் ஒருவன் கள்ளருந்திக் கொண்டிருக்கிறான். இக்காட்சிகளில் முன்னது நற்செயல் பின்னது தீச்செயல் இவ்விரண்டு காட்சிகளும் விழியின் வழியாக இதயத்தில் சென்று பதிவாகி இருக்குமல்லவா?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"நீங்கள் அன்றாடம் பார்க்கும் காட்சிகளால் வசீகரிக்கப் படுகிறீர்கள். இளநீர் குடித்தக் காட்சி உங்கள் சிந்தையில் மேலோங்கி நிற்குமானால் நீங்கள் இளநீர் அருந்த விழைவீர்.

கள்ளருந்தும் காட்சி மேலோங்கி நிற்குமானால் கள்ளருந்தவே ஆசை கொள்வீர். இது தீச்செயல். இது வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய செயல். இது மனதை விட்டு அகற்றப்படவேண்டிய செயலல்லவா?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"களவுசெய்வது தீச்செயல்தானே? அதுபோல் சூதாடல் பொல்லாங்குரைத்தல் கொலைபுரிதல் பொய்யுரைத்தல் பிறன்மனை நோக்கல் இவையனைத்தும் தீச்செயல்தானே?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"நீங்கள் அன்றாடம் வாழ்வில் காட்சிகளாகவும் கேள்வி நுகர்வாலும் அறிகின்ற இத் தீச்செயல்கள் உங்கள் மனதில் தங்கினால் அத்தீச்செயலால் வசீகரிக்கப்படுவீர். ஆதலாம் அவற்றைக் கண்டமாத்திரத்தில் மனதைவிட்டு அகற்றி மறந்துவிடுங்கள்" என்பதாம்.

"களவு என்று மட்டும் சொல்லாது களவும் என்று கூறப்படுவதால் திருடுதல் போன்ற தீச்செயல்களாகிய பிறசெயல்களோடு இக்களவு என்னும் தீச்செயலையும் கண்ணால் காணவோ காதால் கேட்கவோ நேர்ந்தால் மனதில் அவற்றைத் தங்க விடாது அகற்றி மற என்பதை உணர்த்துவதாகக் கொள்ளலே சாலும்" என்றார்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு -என்னும் வள்ளுவன் வாக்கிற் கிணங்க என்னாசான் பாத்தென்றலார் சொல்லுள் மெய்பொருள் உள்ள காரணத்தாலும் அய்யா சுப்பு ரத்தினம் அவர்களின் கூற்றிலும் மெய்ப்பொருள் உள்ள காரணத்தாலும் இவ்விருவரின் கருத்தோடும் யாம் உடன்படுகிறோம்.

ஏனெனில் யாமோ தேரா அறிவுடன் இருக்கிறோம். இவ்விரு தெளிந்தார்கண் ஐயுறுதல் தீரா இடும்பை தரும் ஆதலால்,

முன்னோர் உரையின் முடிபுஒருங்கு ஒத்து
பின்னோர் வேண்டும் விகர்ப்பம் கூறி
அழியா மரபைச்செய்தல் எம்கடன் என்பதாலும் இவ்விருவரின் முடிபு ஒருங்கு ஒத்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

அகரம்.அமுதா

சனி, 21 ஜூன், 2008

அறிந்தவற்றுள் அறியாமை!

சென்ற நமது "கலவும் கற்று மற" என்னும் தலைப்பிலான கட்டுரையைப் பார்த்த அய்யா! சுப்பு ரத்தினம் அவர்கள் "கல்லளவும் கற்று மற" என்பது வலிந்து பொருள்கொள்வதாகும். "களவும் கற்று மற" இதுவே சரியென்றும் அக்களவிற்குக் களவியல் என்றே பொருள்படும் என்றும் அதற்கு மிக உகந்த உயர்கருத்துக்களைப் பின்னூட்டமிட்டிருந்தார்.

படித்து வியந்து போனேன்.

களவு என்பதற்குத் திருட்டு என்னும் பொருள் உள்ளதுபோல களவியலையும் அச்சொல் குறிப்பதால் களவியலைப் பற்றித்தான் அப்பழமொழி எழுந்தது என்று வாதிடுவதும் முறையே.

அய்யா குறிப்பிட்டுவிட்டார் "களவும் கற்று மற" என்பதுதான் சரி. அக்களவும் களவியலையே குறிக்கிறது என்பதற்குச் சான்றுகளையும் அளித்துள்ளார் என்பதற்காய் நாம் நம் கட்டுரையின் தலைப்பான கலவும் கற்று மற என்பதை களவும் கற்று மற என்று மாற்றப் போவதில்லை.

"அப்படியென்றால் மூத்தோர் சொல்லை ஏற்க மாட்டீரா?" என்கிறீர்களா?

அதுதான் இல்லை. அய்யா அவர்களின் கருத்தோடு உடன்படவே விரும்பகிறேன். களவும் (களவியலும்) கற்று மற என்ற வாக்கியத்தோடு உடன்பட மாட்டேன்.

"ஆர்த்தவலை அத்தனையுள் அய்யசுப்பு வின்வலைநான் பார்த்தவற்றுள் ஞானப் பழம்" என்றெல்லாம் ஏற்றிப் பாடிவிட்டு இப்பொழுது அவர்கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அக்கருத்தைத் தாங்கிவரும் களவும் (களவியலும்) கற்று மற என்ற வாக்கியத்தை மட்டும் ஏற்கமாட்டேன் என்றால் இதென்ன முரண்? என்கிறீர்களா?

முரணெல்லாம் ஒன்றுமில்லை. தமிழ் மிக நுட்பமான சில வசதிகளைத் தன்னகத்தே ஒளித்து வைத்துள்ளது. அந்த நுட்பத்தை நான் இங்கு எனக்குச் சாதகமாக்கிக் கொண்டேன் அவ்வளவுதான்.

கலவும் கற்று மற என்பதிலேயே களவியலும் அடங்கியிருக்கிற போது ஏன் தனியாகக் களவும் கற்று மற என்றுவேறு பிரித்தெழுத வேண்டும் என்பதுதான் என்வினா.

"கலவுக்கும் களவுக்கும் உள்ள லள வேறுபாடுகூடவா அறியாதவர் நீர்?" என்கிறீரா?

அறிந்ததன் காரணமாகத் தான் கலவு என்ற ஒற்றைச் சொல்லில் களவியலைக் குறிக்கும் களவும் அடங்கியிருக்கிறது என்கிறேன்.

கலவு என்றால் கலத்தல் என்கிற ஒரு பொருளும் இருக்கிறதல்லவா?

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இரண்டறக் கலத்தலையல்லவா களவியல் என்கிறோம்!

கண்ணொடு கண்ணினை நோக்கி இதயங்கள் இரண்டும் இடம் மாறிக் கலத்தலே களவியல். ஆகவேதான் வள்ளுவர் "பெரிதாற்றிப் பேட்பக் கலத்தல்" என்கிறார்.

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்!

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு!

போன்ற குறள்களிலும் கலத்தல் நிலையை (களவியல்) தாங்கியே வருகின்றன.

ஆக கலவும் கற்று மற இதில் களவும் ஒளிந்துள்ளதால் கலவும் கற்றுமற என்றே இருக்கட்டுமே!

அய்யா! உடன்படுவீரா?

அவ்வை சொல்லுவார் "கற்றது கைமண் அள"வென்று. அது நூறு விழுக்காடு உண்மையே எனினும் நாம் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் கற்றவற்றையாவது முழுமையாகக் கற்று வைத்துள்ளோமா? என்று.

அய்யாவின் பின்னூட்டத்திற்குப் பின் என்னுள் "நாம் இன்னும் கற்கவேண்டியது கிடக்கட்டும். நாம் கற்றவற்றையாவது முழுமையாய்க் கற்றுவைத்திருக்கிறோமா?" என்கிற ஏக்கமே தோன்றியது.

அவ்வேக்கம் ஓர் வெண்பாவாக உருவெடுத்தது. அவ்வெண்பாவை மட்டுமல்ல நான் கற்றவற்றையும் இனிவரும் இடுகைகளில் இடுகிறேன். நான் கற்றவற்றை நீங்களும் கற்றிருப்பீர்கள் அல்லவா நீங்கள் கற்றுணர்ந்ததைத் தாருங்கள் நான் உணர்ந்து கொள்கிறேன் என்பதே என்வேண்டுகோள்!

வெண்பா இதோ:-

அறிந்த அவற்றுள் அறியா தனவும்
இருத்தலும் ஏலுமே என்பதனால் யானும்
அறிந்த தளிக்கின்றேன் யானவற்றுள் யாதும்
அறியாத உண்டேல் அளி!

அகரம்.அமுதா!

புதன், 18 ஜூன், 2008

கலவும் கற்று மற!

"கலவும் கற்று மற" -இது நம் பூந்தமிழில் வழங்கப் பெறும் பழமொழி.

இப்பழமொழியைப் பற்றிக் காலங்காலமாக நம்மவருள் ஓர் வாதம் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. கல்லளவும் கற்று மற என்றுக் கூறும் ஒருசாராரும் உளர். களவும் கற்று மற என்பது தான் சரி என வாதிடும் ஒரு சாராரும் உளர்.

"கல்லளவும் கற்று மற" -இப்பழமொழி எதனை உணர்த்த விழைகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

1-கற்றவேண்டியவை எல்லாவற்றையும் கற்றுமுடித்தபின் இனி கற்பதற்கு ஒன்றுமில்லை எனும் நிலை எழும் போழ்து கற்பதையே மறந்துவிடு (விட்டுவிடு) என்கிறதா?

2-கற்க முடிந்தவற்றைக் கற்றபின் நீ கற்றவற்றை மறந்துவிடு என்கிறதா?

3-கற்க வேண்டிய வற்றைக் கற்றபின் எல்லாம் கற்றுவிட்டோம் எனும் செருக்குத் தொன்றுமே அச்செருக்கை மறந்துவிடு என்கிறதா?

4-அச்செருக்கை எப்படி மறப்பது? ஆக எல்லாம் கற்றபின் கற்றவன் என்னும் செருக்குத் தோன்றுமே அச்செருக்குத் தோன்றாமலிருக்கக் கற்றவன் என்பதையே மறந்துவிடு என்கிறதா?

மேற்கூறிய வற்றுள் நான்காவதாகிய “எல்லாம் கற்றானபின் எல்லாம் கற்றுவிட்டோம் என்னும் செருக்குத் தோன்றாதிருக்கக் கற்றவன் என்பதையே மறந்துவிடு. கற்றவன் என்பதையே மறந்துவிடுவாயானால் உன்னுள் செருக்குத் தோன்றாதிருக்கும்” என்னும் கருத்தை இப்பழமொழி வலியுறுத்துமே யாகின் இப்பழமொழி வழங்கப் பெறுவது சரியே.

மற்ற மூன்று கருத்தைத் தாங்கிவருமேயாகில்? (என்ன விடையளிப்பதென்றே தெரியவில்லையே!)

இப்பழமொழி வேறுஏதேனும் கருத்தைத் தாங்கிவருமே யாகில் தோழதோழிகள் பின்னூட்டில் கண்டிப்பாகக் குறிப்பிடவும்.

குறிப்பாக சுப்பு ரத்தின அய்யாவிடமிருந்து அப்பழமொழி உணர்த்தும் செம்பொருளை எதிர்பார்க்கிறேன். ஏன் என்றால்:-

மிஞ்சு மழகால் மிளிரும் மலர்கண்டேன்;
பிஞ்சுமிளங் காயும் பெருமுற்ற -லுங்கண்டேன்;
ஆர்த்தவலை அத்தனையுள் அய்யசுப்பு வின்வலைநான்
பார்த்தவற்றுள் ஞானப் பழம்!

"களவும் கற்று மற" இப்பழமொழி எதனை உணர்த்துகிறது? அதனையும் பார்த்துவிடுவோம்.

ஓர் நாடாளும் மன்னனுக்கு இருக்க வேண்டிய அத்துணைக் குணங்களும் ஓர் திருடனுக்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவனால் பிடி படாமல் திருடமுடியும். ஓர் திருடனுக்கு இருக்கும் அத்தனைக் குணங்களும் நாடாலும் மன்னனுக்கு இருக்க வேண்டும் அப்பொழுது தான் அவனால் நல்லாட்சி செலுத்த முடியும்.

“அதென்ன திருடனுக்கும் நாடாளும் மன்னனுக்கும் இருக்க வேண்டிய குணங்கள்?” என்கிறீர்களா? அதையும் பார்த்துவிடுவோம்.

1-கண்ணோட்டம்:-ஓரிடத்தில் திருடநினைக்கும் திருடன் முதலில் யாரும் அறியாத வாறு அவ்விடத்தைக் கண்ணோட்டம் இடவேண்டும். இது அவன் இரவில் செய்யவிருக்கும் காரியத்தைச் சுலபத்தில் முடித்துக்கொண்டுத் தப்பித்துச் செல்ல ஏதுவாயிருக்கும்.

இக்குணம் நாடாலும் மன்னனுக்கும் இருக்கவேண்டும். தன்செயல் கெடாத வகையில் கண்ணோட்டம் செய்யவல்ல அரசனுக்கு இவ்வுலகம் உரியதாகிறது.

கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு!

2-வலியறிதல்:-தான் திருடவந்த இடத்தில் தன் ஒருவனால் இக்காரியம் முடியுமா என்பதை நன்கறிந்து அச்செயலை எப்படி முடிப்பது என்பதைக் கருத்தூன்றி ஆராய்ந்துச் செயல்படவேண்டும்.

இக்குணமும் நாடாளும் மன்னனுக்கு இருக்க வேண்டும். தம்மால் முடிக்கக் கூடிய செயலையும் அதற்கு அறிய வேண்டிய வற்றையும் அறிந்து அச்செயலின் மீது மனத்தையூன்றிப் பகைமேற்கொள்ள வேண்டும் அரசன்.

ஒவ்வா தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்!

3-காலமறிதல்:-திருடவிழையும் திருடன் இரவாகும் வரைக் காத்திருத்தல் கடன். பிறர் உறங்கிய பின்னும் தான் விழித்திருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் தான் எடுத்த காரியம் கைகூடும்.

மன்னனும் காலமறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின் அவனால் உலகம் முழுவதையும் தானே ஆளக்கருதினாலும் அது நிறைவேறும்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி யிடத்தாற் செயின்!

4-இடமறிதல்:-தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையறியாது தான் திருடவந்த இடத்தில் எத்தனைபேர் உள்ளார்கள் அவர்களின் வலிமையென்ன? என்னும் தொகையறியாது தன்திருட்டைத் துவங்கமாட்டான் திருடன்.

பகைவரை வளைப்பதற்கு ஏற்ற இடம் வாய்ப்பதற்குமுன் அவரிடம் எச்செயலையும் தொடங்காதிருக்க வேண்டும் அரசன். பகைவரின் வலியைச் சிறியதாகக் கருதாது இருத்தலும் வேண்டும்.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது!

இத்தோடு மட்டுமா?

இருளிலும் கூரிய பார்வை.

ஓசையெழாது தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுந் தன்மை.

தான் வந்த சுவடு தெரியாதவன்னம் தடையங்களை விட்டுச்செல்லாமை.

இப்படித் திருடனுக்கு இன்றியமையாதிருக்க வேண்டிய பலவற்றைக் கூறிக்கொண்டே போகலாம். இக்குணங்களெல்லாம் நாடாளும் மன்னனுங்கும் இருத்தல் அவசியமாகிறது. (அதற்காக மன்னன் திருடனாக இருக்க வேண்டும் என்பதில்லை)

ஓர் திருடனுக்கு இருக்க வேண்டிய அத்துணை அறிவும் யாவருக்கும் இருத்தல் வேண்டும். அவ்வறிவு எத்துறையில் கால்பதிப்பினும் வெற்றியடையச் செய்துவிடும்.

“களவும் கற்று மற” என்ற வரிகளே சரியெனக் கொள்வோமே யானால் களவுத்தொழிலையும் கற்று அதிலுள்ள நுண்ணறிவை எடுத்துக்கொண்டு களவை மறந்துவிடு என்ற பொருளில் இவ்வரிகள் கையாளப் படுமானால் “களவும் கற்று மற” என்பது சரியே!

சரி அதென்ன? பந்திக்கு முந்து படைக்குப் பிந்து? உணர்ந்த பொருளைப் பின்னூட்டிலிடுங்களேன்!

குறிப்பு:-

தோழி கவிநயா தன் வலைப்பக்கத்தில் "ஜிலேபி" (விழியால் உண்ணக்) கொடுத்திருந்தார். சரி நாம அல்வா குடுப்போமே என்று தோன்றியது.

இளவயது ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள். இதையறிந்த பெண்ணின் தந்தை பெண்ணை வீட்டில் சிறை வைத்து விடுகிறான். காதலனுக்கோ காதலியிடம் யாரைத்தூதனுப்புவது என்றே தெரிய வில்லை. இறுதியாக ஓர் சிறு காகிதத்தில் அல்வா என்று மட்டும் எழுதி காதலியின் வீட்டு வாசலில் வீசியெறிந்து விட்டுச் சென்றுவிடுகிறான்.

மாலையில் வீடுதிரும்பிய பெண்ணின் தந்தை அச்சிறு காகிதத்தை எடுத்துப் பார்த்தவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மகளிடம் கொடுத்து உனக்குப் புரிகிறதா? என்கிறான். அவளுக்குப் புரிந்து விட்டது.

இது தன் காதலனின் வேலைதான் எனத்தெரிந்து கொண்டவள் “அப்பா! உங்களுக்கு யாரோ அல்வா கொடுப்பேன் என்று எழுதியிருக்கிறார்கள் அப்பா! பதிலுக்கு நாமும் எதாவது கொடுக்க வேண்டுமல்லவா?” என்றவள் துண்டுக் காகிதமெடுத்து குலோப்சாண் என்று எழுதி கண்டெடுத்தக் காகிதம் கிடந்த இடத்திலேயே இதைப் பொட்டுவிடச் சொல்கிறாள்.

காதலன் கொடுத்த அல்வாவிற்குக் காதலியேன் குலோப்சாண் கொடுத்தாள்? யாருக்காவது தெரிந்தால் எழுதுங்களேன்.

அகரம்.அமுதா

சனி, 14 ஜூன், 2008

வஞ்சப் புகழ்ச்சி!

தமிழில் வஞ்சப் புகழ்ச்சி, வஞ்சப் புகழ்ச்சி அப்டின்னு (ரெண்டணி இல்லீங்க) ஒரு அணியிருக்கிறது. அது என்னான்னா மற்றவரைப் புகழ்வது போல் இகழ்ந்தும் இகழ்வதுபோல் புகழ்ந்தும் பாடுவது.

இம்முறையில் பாடப்படும் பாடல்கள் வஞ்சப் புகழ்ச்சியணி வகையைச் சார்ந்தவை.

பொதுவாக இம்முறையை மாந்தர்கள் மேலேற்றிப் பாடுவது வழக்கம். ஆனால் ஓர் குறும்புக்காரப் புலவன் இவ்வணியைக் கடவுள் மேலேற்றிப் பாடுகிறான்.

கடவுளைப் புகழ்ந்துப் பாடலாம். இகழ்வதுபோல் புகழ்ந்தும் புகழ்வதுபோல் இகழ்ந்தும் பாடுவதா? என்கிறீர்களா?

நாம், "அப்பனே! முருகா!" என விளித்து முருகனை வழிபடுகிறோம். இதில் அப்பனே! எனுஞ்சொல்லின் பொருளென்ன? தந்தையைத்தானே அப்பா என்றழைப்போம். இதில், "அப்ப" என்று முருகனைத் தந்தையாக உயர்த்தியும் னே-என்று ஏகாரமிட்டு சகத் தோழனைப் போல ஒருமையிட்டுத் தாழ்த்தியுமல்லவா அழைக்கிறோம்.

இப்படி நாம் உயர்த்தியும் ஒருமையில் தாழ்த்தியும் அழைப்பதன் காரணமென்ன? கடவுளின் மீது நாம்கொண்டுள்ள ஈடுபாடு, பற்று, இரண்டறக் கலந்த நிலை இதுவே கடவுளை நம்மை ஒருமையிட்டு அழைக்க வைக்கிறது.

அதே ஈடுபாட்டோடும் கடவுள் மீதுள்ள உரிமையிலும் தான் அப்புலவனும் வஞ்சப் புகழ்ச்சி செய்துவிட்டான். அப்படிப் பாடிய பக்தனைக் கடவுளே கோபித்துக்கொள்ள வில்லை. நாம் கோபித்துக் கொள்வானேன்? சற்றே பொருட்சுவையைத் துய்ப்போமே!

ஓர்நாள் அந்திப்போழ்தில் தன்வீட்டுத் திண்ணையில் அமந்திருந்த புலவனைப் பார்த்த அவ்வூரார் புலவனைக் கவிதை பாடச்சொல்லிக் கேட்டுமகிழலாம் எனநினைத்து அவனைச் சூழ்துகொள்கின்றனர்.

புலவனும் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்று அமரச்செய்து என்ன பாடுவது? யாரைப் பாடுவது? நீங்களே சொல்லுங்கள் என்று அவர்கள் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறான்.

கூட்டத்திலிருதோர் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு இறைவனை வழிபடுபவர்களாதலால் சிலர் "என் தெய்வமாகிய திருமாலைப் பாடுங்கள்!" "இல்லை, இல்லை எங்கள் தெய்வம் ஈசனைப் பாடுங்கள்!" ,"அதெல்லாம் முடியாது. எமது தெய்வம் கணபதியைப் பாடுங்கள்!" என்று அவரவர் விருப்பத்தை வெளியிடுகின்றனர்.

புலவன் பார்த்தான், "உங்கள் அனைவரின் விருப்பத்தையும் ஒரு பாடலிலேயே நிறைவேற்றுகிறேன்!" எனக்கூறிப் பாடலுற்றான்.

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்கப்பெண் டாயினாள் -கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானை யும்பெற்றாள்
கட்டிமணி சிற்றிடைச்சி காண்!

எனப் பாடி நிறுத்தினான் புலவன் கவி காலமேகம்.

குழுமியிருந்தோர், "அய்யா! நீவிர் பெரும் கல்விமானாக இருக்கலாம். நாடுபோற்றும் பெரும் புலவராயிருக்கலாம். அதற்காய் எங்கள் கடவுள்களை இப்படியா தரக்குறைவாகப் பாடுவது?" எனக் கொந்தளித்து விட்டனர்.

"நானெங்கே உங்கள் கடவுள்களைப் பழித்துப் பாடினேன்?" புகழ்ந்தல்லவா பாடியிருக்கிறேன் என்றான் புலவன்.

"ஏனய்யா பொய் கூறுகிறீர் நீர் எம் பானை வயிற்றோனை ஈற்ற மதுரை மீனாட்சியாகிய பார்வதியை பசுவின் கன்றுகளையும் ஆட்டுக்கடாக்களையும் மறித்து மேய்க்க கோட்டானைப் பெற்றாள் எனப்பாடி எம் கணபதியையும் அவன் தாயையும் பழிக்கவில்லையா?"

"நான் எப்பொழுதய்யா அப்படிப்பாடினேன்? நீங்கள் கணபதிக் கோயிலுக்குச் சென்று அவனை வணங்குகையில் இரு கைகளையும் பெருக்கல் குறிபோல் மறித்துத் தலையில் குட்டிக்கொள்கிறீர்கள் அல்லவா? அதைத்தானய்யா குட்டி மறித்து என்று கூறினேன்"

"அதிருக்கட்டுமையா கோட்டான் என்று இழிந்துப் பாடினீர்களா? இல்லையா? முதலில் அதற்கு விளக்கம் சொல்லும்"

"ஆமாம் சொன்னேன். நீங்களெல்லாம் குட்டி மறிக்க ஒரு கோட்டு ஆனை (ஒரு தந்தத்தை உடைய யானை) யைப் பெற்றாள் என்றல்லவா பாடினேன்"

"அதிருக்கட்டும். முதலில் நீர் எமக்கு விளக்கம் சொல்லும். எம்பெருமானை நீர் எப்படி மாடுமேய்ப்பவன் என்று பாடலாம்?"

"ஆமாம் சொன்னேன். உங்கள் பெருமாள் கண்ணன் அவதாரம் எடுத்து மாட்டிடையர்களோடு சேர்ந்துகொண்டு மாடுகளை மேய்ந்து ஆவுடையான் எனப் பெயரெடுக்கவில்லையா? அதைத்தான் மாடுகளின் அரசன் என்று கூறினேன்"

இப்பொழுது சிவ பக்தகோடிகள் எழுந்து "ஆம்! ஆம்! தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. மாட்டிடையன் தானே கண்ணன். ஆனால் எங்கள் இறைவன் எந்த ஆடுகளை மேய்த்தார்? அவரை எப்படி நீங்கள் ஆட்டிடையன் என்று சொல்லலாம்?" என்று பிடித்துக் கொண்டனர்.

"சிவபக்தர்களே! ஆட்டிடையன் என்றால் ஆடுகளை மேய்ப்பவன் என்பது மட்டும்தான் பொருளா? உங்கள் சிவன் தில்லையில் ஒற்றைக் காலைத்தூக்கிக் கொண்டு முக்காலமும் ஆடிக்கொண்டேயிருக்கிறானே! முத்திரை பிடிப்பவனுக்கு (அபினயம்) ஆட்டன் என்றல்லவா பெயர்.
அதனால்தான் ஆடும் இடையை உடையவன் என்று சொன்னேன்"

இத்துணை நேரம் கோபத்தணலில் வெந்துகொண்டிருந்த மக்கள் இப்பொழுது சற்றே தணிந்து எமது கடவுள்களையெல்லாம் தன் புலமைத்திறத்தால் ஒரே பாடலில் ஒன்றிணைத்துப் பாடிய புலவர் நாவுக்கரசர் "வாழ்க! வாழ்க!" என ஆராவாரம் எழுப்பிக்கொண்டே தங்கள் வீடுகளை நோக்கிச் செல்லத் துவங்கினர்.

பின்குறிப்பு:-

அய்யா சுப்பு ரத்தினம் அவர்களின் குரல் வளத்தைப் பாராட்டிக் குறள் வெண்பாப்பாடி அவரது வலையின் பின்னூட்டில் இட்டிருந்தேன்.

பாடல் இதுதான்:-

வேய்ங்குழலோ? கிள்ளை மொழிதானோ? சேய்றன்
குரலோ? விதுயாழோ? கூறு!

பல்லில்லாக் கிழவனை நீர் இப்படியா வஞ்சப் புகழ்ச்சி செய்வது? என்று மனிதர் பொங்கியெழுந்து விட்டார்.

இல்லையய்யா! உண்மையாகத்தான் வியந்துப் பாடினேன் என்றேன்.

அப்படியா? வஞ்சப் புகழ்ச்சி அணியைப் பற்றி என்போன்ற எளியோரும் அறியும் வன்னம் வெண்பாவில் தாரும் என்றார்.

சுப்பய்யா கேட்டமையால் வஞ்சப் புகழ்ச்சி என்றால் என்ன என்பது பற்றி நான் வடித்த வெண்பாக்கள்.

காணப் பொருளொன்றும் கண்ணுற் றுணருங்கால்
பேணுபொருள் வேறாப் பிறங்கிவரக் -காணுவதாய்
உள்ளொன்று வைத்துப் புறமொன் றுணர்த்துவதை
நல்வஞ்சம் என்பேன் நயந்து!

அஞ்சுவ தஞ்சிமற் றஞ்சாத வஞ்சாது
நெஞ்சிலெழும் செம்பொருளை நேர்நிறுத்திச் செய்கவியுள்
மிஞ்சும் இகழுமித மிஞ்சும் புகழ்மொழியும்
வஞ்சப் புகழுள் வரும்!

அகரம்.அமுதா

வெள்ளி, 13 ஜூன், 2008

பெண்ணைப் படைத்த பிரம்மன்!

பெண்ணைப் படைக்க எண்ணிய பிரம்மன் தான் படைத்த படைப்புகளை ஓர்முறை பார்வையிடுகிறான். இந்த மலரிலிருந்துப் பெண்ணைப் படைக்கலாமா? வேண்டாம். மாலைவந்தால் மலர் வாடிவிடும். கொடியிலிருந்துப் படைக்கலாமா? வேண்டாம். கொம்பில்லையேல் கொடிகள் நிற்கமுடியாது. நிலவிலிருந்துப் பெண்ணைப் படைத்தாலென்ன? வேண்டாம். வளர்ந்துப் பெருகியும் தேய்ந்துத் தொலைந்தும் போய்விடுவாள்.

தன் இறுதிப் படைப்பைக் கவின் நயத்தோடு படைத்துவிடலாம் என்றால் முடியவில்லையே! என்று கவலைகொண்டவன் முன்னால் ஓர் மின்னல் வெட்டுகிறது.

கணமும் தாமதிக்காத கடவுள் கைகளால் மின்னலைத் தாவிப் பற்றிப் பெண்ணாய்ச் சமைத்துவிடுகிறான். பெண்ணைப் படைத்த பேரிறைவனுக்கு பின்புதான் புத்திவந்தது.

வெட்டி மறைகிற மின்னலைப்போல் பெண்ணும் மறைந்துவிட்டால் என்னசெய்வது. தன் படைப்பு ஆணுக்குப் பயன்படாமலே போய்விடுமே! என்று வருத்தம் கொண்டவன் கண்களில் ஒன்றைப்போல் தோற்றம் கொண்ட இரு மேரு மலைகள் தென்படுகிறது.

பேரானந்தம் கொண்ட பேரிரைவன் இம்மலைகளைப் பெண்ணின் மார்பில் பாரமாக ஏற்றிவிட்டாள் மின்னலைப் பொல் வெட்டி மறையாமல் இருப்பாளல்லவா! -என்று கருதியவன் அப்படியே செய்துவிடுகிறான்.

இப்படியோர் கற்பனை செய்து கவிபாடி அரங்கேற்றம் செய்கிறான் அதிவீர இராம பாண்டியன். (இவன் ஓர் மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது)

குழுமியிருந்த அவைப்புலவர்களெல்லாம் ஆர்ப்பரித்து ஆராவாரம் செய்கிறார்கள். அதிவீர இராம பாண்டியருக்குப் பெரும் மகிழ்ச்சி தன் கற்னையைப் புலவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்களே என்று.

இருகாறும் அமைதியாயிருந்த ஓர் புலவன் எழுந்தான். மன்னா! தாங்கள் இந்நாட்டிற்கே மன்னனாய் இருக்கலாம். தேடிவந்துக் கவிபாடி யாசிக்கும் புலவர்களுக்குக் கைநிறைய வாரிவழங்கும் வள்ளலாக இருக்கலாம். அதற்காக இப்படியா பொருட்பிழையோடு கவிபாடுவது? பெண்ணாகப் படைத்த மின்னலின் மாரில் மலைகளைப் பாரமாக இயன்றினான் என்கிறீர். மின்னல் வெட்டுகிற வேகத்தில் மலைகளைத் தூக்கியெறிந்து விடாதா? மலைகள் தூக்கியெறியப் படாதிருக்கத் துளையிட்டு மரையிட்டிருக்கிறானா? அல்லது ஆணிதான் அடித்திருக்கிறானா? -என்று கேட்டுக் குடைந்தெடுத்துவிட்டான் அப்புலவன்.

அதிவீர இராம பாண்டியருக்கு ஒரே மனக்கவலை. புலவனின் கேள்விகளுக்குத் தன்னால் பதில் கூற இயலவில்லையே என்கின்ற அவமானம் வேறு. அவையைக் கலைத்துவிட்டு அந்தபுர மண்டபத்தில் அமர்ந்திருக்கிறான் மன்னன். அப்பொழுது அவன் மனைவியருள் யவ்வனப் பருவ மங்கையொருத்தி அவன்முன் வருகிறாள்.

மன்னா! ஏன் கவலையுடன் காட்சி தருகிறீர்? என்னிடம் சொல்லலாகாதா? என்கிறாள் தேவி.

அவையில் நடந்ததை அவளிடம் கூறி அமைதி கொள்கிறான் மன்னன்.

தங்களுக்குத் தெரியாத தொன்றுண்டா? தங்களால் கூடவா அப்புலவனின் கேள்விக்குப் பதில் கூற இயலவில்லை?

தங்களுக்குத் தெரியாத தொன்றுண்டா என்றால் உனக்குத் தெரியும் என்றல்லவா பொருள். இதன் பொருள் உனக்கத் தெரியுமா? உடனே சொல் என்கண்ணே! என்கிறான் மன்னன்.

சொன்னால் மட்டும் போதுமா? காட்சியாகவே காட்டிவிடவா? என்ற தேவி மார்க் கச்சையை அவிழ்த்துக் காட்டுகிறாள். இப்பொழுது புரிகிறதா? மலைகளைப் பாரமாக இயற்றிய இறைவன் துளையிட்டு மறையிட்டு ஆணிகளையும் அடித்திருக்கிறான் என்பது! மாரோடு மலைகளை இரண்டற இருத்தும் ஆணிகளின் கொண்டைகளன்றோ இவ்விரு முலைக்காம்புகளும்! என்கிறாள்.

இத்துனைப் பொருட்செறிவு மிகந்த அதிவீர இராம பாண்டியனின் அப்பாடலைப் பார்ப்போமா?

வாய்ந்த மின்னை மடந்தைய ராக்கிவின்
போந்தி டாமலன் றோமலர்ப் புங்கவன்
சாந்த ணிந்த அம்மணிக் குன்றென
ஏந்து வெம்முலைப் பாரம் இயற்றினான்!

அகரம்.அமுதா

செவ்வாய், 10 ஜூன், 2008

வாழையிலை போலவந்த செல்லம்மா!

தாழையாம் பூமுடிந்து
தடம்பார்த்து நடைநடந்து
வாழையிலை போலவந்த செல்லம்மா!
என்வாசலுக்கு வாங்கிவந்தது என்னம்மா?

கவியரசன் கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள் இவை.

'வாழையிலை போலவந்த செல்லம்மா!' என்ற வரிகளில் புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை ஏன் 'வாழையிலை' என்று வருணித்தான் கண்ணதாசன் என்ற விவாதம் எங்கள் நண்பர்களுக்குள் எழுந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். நண்பர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் சிந்தனையைத் தூண்டுவதாகவே இருந்தது. எங்களின் வாதத்தில் இடம்பெற்ற சில விளக்கங்களை இக்கட்டுரையில் பதிவு செய்கிறேன்.

"வாழைக் கன்றைப் பிடுங்கி அதன் தலையைச் சீவிவிட்டுக் கிழங்கோடு கூடிய தண்டுப் பாகத்தை மட்டுமே நடுவது வழக்கம். அப்படி நட்டவுடன் அதன் தண்டுப் பகுதியிருந்து முதல் இலை குருத்துவிட்டுக்கொண்டு எழுந்து வரும். எப்படி வந்தால் வாழைக்கன்று பிழைத்துக்கொண்டது என்று பொருள். அந்த முதல் இலைபோல தான் புகுந்த வீட்டைத் தழைக்கச் செய்ய அவள் வருகின்றக் காரணத்தால் அங்கே வாழையிலை என்ற வருணனையைக் கண்ணதாசன் பயன் படுத்தினார்" என்றார் ஒரு நண்பர்.

"அத்தோடு மட்டுமா? வாழை தழைப்பதற்காக வந்த அந்த முதல்இலை பின் வரும் இலைகள் வளர்ந்துத் தழைப்பதற்காகத் தான் நாருநாராகக் கிழிந்துத் தன்னை மாய்த்துக்கொள்ளவும் செய்கிறதே! அதுபோல் புகுந்த வீட்டில் கணவனுக்காக மாமனார் மாமியாருக்காக பிள்ளைகளுக்காகத் தன் இன்பதுன்பங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களுக்காக உழைத்துழைத்து உடல் மெலிந்து நூலாய்த்தேய்கிறாளே! அதனாலும் வாழையிலை என்று அவளை வருணித்தார்" என்றார் இன்னொரு நண்பர்.

ஒருவன் உடல்முழுதும் தீக்காயம் ஏற்பட்டுவிட்டால் அவன் உடலைத் துணிகொண்டு மூட முடியாது. துணி தீக்காயங்களில் ஒட்டிக்கொண்டு மேலும் வேதனையை ஏற்படுத்தும் என்பதால் வாழையிலையைக் கொண்டு மூடி அவன் மானத்தைக் காப்பார்கள். வாழையிலை புண்ணோடு ஒட்டாமலும் அவனுக்கு மென்மேலும் வேதனையை ஏற்படுத்தாமலும் அவன் மானத்தைக் காப்பதாகவும் இருக்கும். அதுபோல் புகுந்த வீட்டில் தான் அடியெடுத்து வைப்பதற்குமுன் எத்தனைக் குழப்பங்களும் சிக்கல்களும் இருப்பினும் அதனைப் பெரிதுபடுத்தாது யார்யாரிடம் அப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற பகுத்தறிவோடு புகுந்த வீட்டின் மானத்தைக் காப்பவளாகவும் இருப்பதால் வாழையிலை என்றான் கண்ணதாசன்" என்றார் மூன்றாமவர்.

நான்காமவர் வினோதமான ஆணாதிக்கம் மிகுந்த ஓர் கருத்தைக்கூறினார். அதாவது விழாக்களிலும் இல்லங்களில் நடக்கும் ஏனைய நிகழ்ச்சிகளிலும் வாழையிலையில் உணவு பரிமாறுவது வழக்கம். அப்படிப் பரிமாறப்படும் இலை ஒருவருக்குமேல் பரிமாறப் படுவதில்லை. அதுபோல் பெண்ணும் ஒருவனோடு உறவாடி இன்புற்று வாழவேண்டியவள் என்பதால் சாப்பாட்டு இலையோடு ஒப்பிட்டே கண்ணதாசன் வாழையிலை போலவந்த செல்லம்மா! என்று எழுதினான் என்றார்.

இதுவரை பேசாதிருந்த நான் பொறுமையிழுந்து விட்டேன். "அய்யா! தங்களின் ஆணாதிக்கச் சிந்தனையைக் கொஞ்சம் நிறுத்தும். நீங்கள் கூறுவதுபோல் சாப்பாட்டு வாழையிலையோடு பெண்ணை உவமித்து அந்த வரிகளைக் கண்ணதாசன் எழுதியிருக்கவே மாட்டான். பந்தியில் இடப்படுகின்ற வாழையிலை சுத்தமானதா? மற்றவர்கள் யாரும் அமர்ந்து உண்ணாத புதிய இலையா? என்றெல்லாம் பார்க்கிறோம். ஆனால் பந்தியில் அமர்ந்து உண்ணுபவர் இதற்குமுன் வேறு இலையில் உணவுண்டவரா? சுத்தமானவரா? என்று பார்ப்பதில்லை. இவ்விடத்தில் சாப்பாட்டு இலையோடு பெண்ணைத் தாங்கள் ஒப்பிடுவீரே யானால் ஆணுக்குக் கற்புநிலை தேவையில்லை என்பது போலல்லவா இருக்கிறது!. பந்தியில் இடப்படும் முன் வாழையிலை (அல்லது) சாப்பாட்டு இலை என்ற பேர்கொண்டு அழைக்கப் படும் இலையைப் பந்திகண்டபின் எச்சிலை என்கிறோம். மணம்புரிந்து முதலிரவு கண்ட பெண்ணும் எச்சிலாகிவிடுகிறாளா என்ன? அவளை எச்சில்பெண் என்றா அழைக்கிறோம்? இல்லையே! மாறாக திருமதி என்று உயர்வாக அல்லவா அழைக்கிறோம்!

பந்தியில் அமர்ந்து உண்டவர் எழுந்து சென்றவுடன் அவர் அமர்ந்து உண்ட இலையை எடுத்துக் குப்பைத்தொட்டியில் வீசிவிடுகிறார்கள். பெண்ணை மணந்த கணவன் அகால மரணமடைந்து விட்டால் அவ்வெச்சில் இலையைப் போல் அவளும் வீட்டின் மூளையில் அமர்த்தப் படவேண்டியவளா? மறுமணம் செய்து வைத்து அழகுபார்க்கப் படவேண்டியவளல்லவா அவள்?

இப்படியானால் இவ்விடத்தில் பெண்ணைத் தட்டோடல்லவா ஒப்பிடவேண்டும். ஏனென்றால் தட்டையல்லவா நாம் ஒவ்வொரு முறையும் கழுவிச்சுத்தம் செய்து உணவிட்டு உண்ணுகிறோம். கழுவியத் தட்டு சுத்தமானது என்று நாம் கருதுவதைப்போல் ஒழுக்க நெறி தவறாத பெண்ணும் சுத்தமானவள் என்று கருதுவதுதானே சாலச்சிறந்தது! என்றேன்.

மேலும் வாழையிலை போலவந்த செல்லம்மா! என்ற வரியை இலக்கியப் பாடல் வரிகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது மிக அவசியமாகிறது.

கம்பன் ஓர் அழகிய வெண்பா வடித்தருளியிருக்கிறான்.
பாடல் இதுதான்:-

அவனி முழுதுண்டும் அயிரா வதத்துன்
பவனி தொழுவார் படுத்தும் -புவனி
உருத்திரா! உன்னுடைய ஓரங்கல் நாட்டிற்
குருத்திரா வாழைக் குழாம்!

-என்பதே அவ்வெண்பா!

பாடல்விளக்கம்:-

இந்திரனின் அயிராவத்திற்கு நிகரான தன் யானையில் ஏறி ஓரங்கல் நாட்டையாளும் உருத்திரம் என்னும் மன்னன் ஊர்வளம் வருவது கண்டு அவன் அழகில் மயங்கிய இளம்பெண்களைக் காமவெக்கை நோய் பீடித்துக்கொள்கிறது.கலங்கிய பெற்றோர்கள் அவ்வெக்கை நோயைப் போக்க வாழையின் குருத்திலையைப் பரித்து வந்து அதில் தம் பெண்மக்களைப் படுக்கவைக்கின்றனர். இது அன்றாடம் தொடர்கதையாவதால் அந்நாட்டில் உள்ள வாழைகளுக்கு எதற்குமே குருத்திருப்பதில்லை. குருத்துவிடக் குருத்துவிட அதைப் பரித்துக்கொண்டு போய் தம்பெண்மக்களை அதில் கிடத்திவிடுகிறார்கள் என்பதே அதன் பொருள். (இதன்மூலம் வாழையிலைக்கு உடல் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் இருக்கிறது என்பது புலப்படுகிறது)


உடல்சூட்டைத் தணிக்கும் அவ்வாழையிலை போல கொண்டவனின் காம இச்சையைத் தணிப்பதற்காக அவள் வருவதாலும் அங்கே வாழையிலை என்று ஒப்பிட்டான் என்றேன்.

அகரம்.அமுதா

ஞாயிறு, 8 ஜூன், 2008

மல்லிகையே வெண்சங்காய்!

அது தாமரை குவிய அல்லி மலரும் அந்திப்பொழுது. சோழன் அவை. அவையின் தலைமைப் புலவன் ஒட்டக்கூத்தன் முன்னிலையில் தகைமிகு நளவெண்பா அரங்கேற்றம்.

அரங்கேற்றுபவன் வெண்பாப் புகழ் புகழேந்தி.

அது ஓர் அந்திப்பொழுதல்லவா! புகழேந்திப் புலவனும் அவ்வந்திப் பொழுதைச் சிறப்பித்து ஓர் வெண்பா அரங்கேற்றுகிறான்.

அந்த அந்திப்பொழுதை ஓர் இராச ஊர்வலம் என்று உவமிக்கிறான். அந்த அந்தி எப்படி நடந்து வருகிறதாம்! மல்லிகைப் பூவினையே வெண்சங்காக எண்ணிக்கொண்ட வண்டினங்கள் ஊதிஊதி முழங்குகின்றனவாம். சிறந்த கரும்பாலாகிய வில்லினை உடைய மன்மதன் காம உணர்வைத்தூண்டும் தன் மலர்க்கணைகளைக் கையிலேந்தித் தாக்கிக் காளையர்களுக்கும் மகளிருக்கும் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறானாம். அவ்வேளையில் முல்லை மலர்களால் ஆன மாலை தன் தோளில் அசைந்தாட ஓர் இராச ஊர்வலம் போல் அவ்வந்தி மெல்லமெல்ல நடந்து செல்கிறதாம்.

பாடலையும் பாடலுக்கானப் பொருளையும் அவைமுன் வழங்கிவிட்டு அனைவரின் மறுமொழிக்காகக் காத்திருக்கிறான் புகழேந்தி.

அவைத் தலைமைப் புலவன் ஒட்டக்கூத்தனுக்குக் கடுங்கோபம். நிறுத்தய்யா உம் பிள்ளைக் கவியை! இப்படியா சொற்குற்றம் பொருட்குற்றம் விளங்கக் கவிபாடுவது? -என்றான்.

புகழேந்திக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ஒட்டக் கூத்தன் தலைமைப் புலவன். அவன் புலமையைப் பற்றி ஐயுறுவதற்கில்லை. புகழேந்தியும் புலமையில் தாழ்ந்தவனில்லை. என்றபோதும் அவைத் தலைமைப் புலவன் என்ற வகையில் அவன் குறைகண்டுப்பிடித்துக் கூறிவிட்டால் அதை மறுத்துப்பேசும் அளவிற்கு அங்கு யாருக்கும் தமிழறிவும் புலமைச்செருக்கும் இருந்ததில்லை.

புகழேந்தி சற்றே நடுக்கத்துடன் கேட்டான். யாது குற்றம் கண்டீர்?

“மல்லிகைப் பூவினையே சங்காக எண்ணிக்கொண்டு வண்டினங்கள் அவற்றை ஊதுவதாகப் பாடினீர்கள் அல்லவா? அதில்தான் குற்றம் என்கிறேன்.

மலரின் மேற்புறத்தில் அமர்ந்துதான் வண்டுகள் தேனுண்ணும். அப்படி அமர்ந்துத் தேனுண்ணும் காட்சியையே தாங்கள் வண்டு சங்கைப் பிடித்து ஊதுவதாக உவமிக்கின்றீர். மலரின் முன்புறத்தில் அமர்ந்துகொண்டுத் தேனுண்ணும் வண்டின் காட்சியை சங்கின் பின்புறத்தை வாயில் வைத்து ஊதும் காட்சியோடு எப்படி உம்மால் உவமிக்கமுடிந்தது. இது காட்சிப் பிழையல்லவா? காட்சிப் பிழையோடு கூடிய தங்கள் கவியை இவ்வவையில் அரங்கேற்ற இடம்கிடையாது. தாங்கள் வெளியேறலாம்” என்று ஒட்டக்கூத்தன் கண்டிப்பாகக் கூறிவிட்டான்.

அவையெங்கும் மௌனம். தொண்டையைக் கனைத்துக்கொண்டு புகழேந்தி கூறலுற்றான்.

அய்யா! கள் அருந்தியவனின் நிலையென்ன? கள் மயக்கத்தில் தான் என்னசெய்கிறோம் என்னபேசுகிறோம் என்பதுதான் அவனுக்குத்தெரியுமா? இரண்டு கால்கள் இருந்த போதும் அவனால் நிற்கக்கூட முடிவதில்லையே!

அதுபோல்தான் அதிகமாய் மலர்த்தேனை உண்ட மயக்கத்தில் தான் மலர்என்ற வெண்சங்கின் முன்புறத்தைப் பிடித்து ஊதுகிறோமா பின்புறத்தைப் பிடித்து ஊதுகிறோமா என்கின்ற சுயநினைவின்றி வண்டு ஊதிக்கொண்டிருந்திருக்கலாம் அல்லவா? -என்றான் புகழேந்தி.

இப்பொழுது அவையில் இருந்த மற்ற பெரும் புலவர்கள் எல்லாம் புகழேந்தியைப் பாராட்டத்துவங்கிவிட்டார்கள்.

சட்டென்றுத் தாவியெழுந்தான் ஒட்டக்கூத்தன். ஓடிவந்து புகழேந்தியை ஆரத்தழுவிக் கொண்டான். இப்பொழுது புரிகிறதா புகழேந்தி நான் ஏன் உன்கவியில் குற்றம் கூறினேன் என்று? நான் குற்றம் கூறாது விட்டிருந்தால் இப்படியும் ஓர் பொருள் இருப்பது உலகிற்குத் தெரியாமலே போய்விடுமே! ஆதலால்தான் இப்படியோர் நாடகத்தை ஆடினேன் என்றுகூறி மீண்டும் ஆரத் தழுவிக்கொண்டான்.

இத்தனைக் கலவரத்தை ஏற்படுத்திய அப்பாடலைப் பார்ப்போமா?

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கரும்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப -முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது!

அகரம்.அமுதா

வெள்ளி, 6 ஜூன், 2008

அணி!

தமிழ் இலக்கியத்தில் இரட்டுற மொழிதல் என்றோர் இலக்கண அணி இருக்கிறது. அது பிறமொழி பலவற்றிலும் காணமுடியாத தமிழில் நன்கமைந்த தனிச்சிறப்பாகும்.

தமிழ் மொழியில் வழங்கப்படுகின்ற நகைச்சுவைகளில் 90 விழுக்காட்டிற்குமேல் சிலேடை என்று அழைக்கப்படுகிற இரட்டுற மொழிதலணி நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இது தமிழுக்கு மட்டுமே அமைந்த தனிப்பெரும் சிறப்பாகும்.

அப்படி இருபொருள் தருகின்ற சில சொற்களை நாம் முதலில் பார்ப்போம்.

காவலர் இச்சொல் காவல் காப்பவர் மன்னர் என்கிற பொருள் படும். இச்சொல்லைப் பிரித்தால் கா வலர் என்றாகும். அதாவது காவில் (காட்டில்) அலர்கின்ற மலர் என்ற பொருள்படும்.

மாசம்பத்து -மா சம்பத்து (பெரும்செல்வம்) மாசம் பத்து

உள்ளங்கைத்தேன் -உள்ளம் கைத்தேன் உள்ளங்கையில் உள்ள தேன்

உப்பிட்டான் -உப்பிவிட்டான் உப்பு இட்டான்

அக்காளை -அக் கைளை அக்காவை

அங்குசப்பயல் - அங்கசப் பயல் (அங்குசத்தைக் கையில் ஏந்திய பையன்) அம் குசப்பயல் (சாதியைக் குறிப்பது)

அடிப்பதுமத்தாலே -அடிப் பதுமத்தாலே (பாதத் தாமரையாலே) அடிப்பது மத்தாலே (மத்தாலே-தயிர்கடையப்பயன் படுவது)

என்று எண்ணற்றச் சொற்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். (தங்களுக்கும் தெரிந்த வற்றைப் பின்னூட்டில் குறிப்பிடலாம்).

இவ்விரட்டுற மொழிதல் அணியை வைத்து நம் பழம்புலவர்கள் சொற்சிலம்பமே ஆடிக்காட்டியுள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.

மேற்கோலுக்கு வசைக்கோர் காலமேகத்தின் பாடல்:-

சங்கரற்கும் ஆறுதலை சண்முகற்கும் ஆறுதலை
ஐங்கரற்கும் ஆறுதலை ஆனதே -சங்கைப்
பிடித்தோர்க்கும் ஆறுதலை பித்தாநின் பாதம்
படித்தாற்கும் ஆறுதலைப் பார்!

சங்கரற்கும் ஆறுதலை -என்ன சிவனுக்கு ஆறுதலையா? புலவன் மதுமயக்கத்தில் எழுதியிருப்பான் என்கிறீர்களா? அதுதான் இல்லை. சங்கரன் என்பவன் சிவன் அல்லவா! கங்கை ஆறு சிவனின் தலைமேல் ஓடுகிறதல்லவா! அதைத்தான் புலவர் குறிப்பிடுகிறார்.

சண்முகற்கும் ஆறுதலை –ஆறுமுகக் கடவுளுக்கும் ஆறுதலைகள். சுரி இது புரிகிறது. அதென்ன? ஐங்கரற்கும் ஆறுதலை! பிள்ளையார்க்கு இருப்பது ஒரேஒரு தலையல்லவா என்கிறர்களா! நீங்கள் சொல்வதும் சரியே. ஆயினும் மனித உடலில் விலங்கின் தலை இருப்பது மாறுபட்ட தலையல்லவா! அதைத்தான் புலவர் ஐங்கரற்கு மாறுதலை (மாறுபட்ட தலை) என்றுக் குறிப்பிடுகிறார்.

சங்கைப் பிடித்தோர்க்கும் ஆறுதலை -இதென்ன! பெருமாலுக்கும் ஆறுதலைகள் என்கிறாரே! என்கிறீர்களா? ஸ்ரீரங்கத்தில் காவிரி நதிக்கரையில் தலைவைத்துப் படுத்திருக்கிறான் அல்லவா! அதைத்தான் பெருமாலின் தலைமாட்டில் ஆறு ஒடுகிறது என்கிற பொருளில் கையாண்டுள்ளார்.

அதெல்லாம் இருக்கட்டும். அதென்ன சிவனின் பக்தர்களுக்கும் ஆறுதலை என்கிறார்! என்கிறீர்களா? அதுதான் ஆறுதலைப் என்று ப்-ஐ உடன் சேர்த்திருக்கிறாரே! சிவனின் பாதம் பிடித்தோர்க்கு ஆறுதல் கிட்டும் பார் என்று பொருள்.

ஓர் சொல்லை வைத்துக்கொண்டு மூன்று நான்கு பொருள்களில் சிலம்பம் ஆடியிருக்கிறார்கள் என்றால் நம் தமிழின் சிறப்பை என்னவென்று கூறுவது. (இன்று நாம் படைக்கும் கவிதைகளில் ஒரு சொல்லுக்குக்கூட ஒருபொருளும் இருப்பதில்லை என்பது வேறு செய்தி).

இப்படி தமிழ் இலக்கியத்தில் பற்பல புலவர்களால் கையாளப் பட்ட இவ்விரட்டுற மொழிதல் அணியைக் கம்பன் தன் இராமாயணத்தின் ஓர் பாடலில் பயன்படுத்தி நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறான்.

ஒருசொல்லை வைத்துக்கொண்டு அதையும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பயன்படுத்தி ஏறக்குறைய ஏழெட்டுப் பொருள்விளங்கப் பாட கம்பன் ஒருவனால் மட்டுமே முடிந்திருக்கிறது.

இராமாயணத்தில் ஓர் காட்சி. இராமன் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு ஆட்சியைக் கொடுத்தான். எனவே சுக்ரீவன் சீதையை கண்டுபிடித்துத் தருவதாக வாக்களிக்கிறான். ஆனால் சொன்ன சொல்லை மறந்து இன்ப வாழ்க்கையில் திளைக்கிறான். சொன்ன காலம் கடந்து விட்டது. சுக்ரீவனின் செயல் இராமனுக்கு கோபமூட்டுகிறது. இராமன் தன் தம்பி இரக்குவனை அழைத்து நெஞ்சில் வஞ்சமுடைய சொன்னசொல்லைக் காப்பாற்றாத மன்னனைக் கொன்றால் அது குற்றம் ஆகாது. மனு தர்மமே என்பதால் அவனைக் கொன்றுவா என்று ஏவுவதாக ஓர் காட்சி.

இவ்விடத்தில் தான் கம்பர் தன் கவித்திறத்தைக் காட்டுகிறார்.

பாடல் இதோ:-

நஞ்ச மன்னவ ரைநலிந் தாலது
வஞ்ச மன்றும னுவழக் காதலில்
அஞ்சி லம்பதில் ஒன்றறி யாதவன்
நெஞ்சி நின்னுநி லாவ நிறுத்துவாய்.

1-அஞ்சில்xஅம்பதில்xஒன்றறியாதவன் -ஐந்து வயதிலும் சரி ஐம்பது வயதிலும் சரி ஒன்றும் அறியாத மூடன் சுக்ரீவன்.

2-அம்xசிலம்பதில்xஒன்றறியாதவன் -அழகிய (கிட்கிந்தை) மலையில் வீற்றிருக்கிற உலகில் ஒன்றும் அறியாத சுக்ரீவன்.

3-அஞ்சிலம்xபதில்xஒன்றறியாதவன் -எமக்கு பதில் வந்து கூற அறியாத சுக்ரீவன்

4-அம்xசில்xஅம்புxஅதில்xஒன்றறியாதவன் -எம்மிடம் உள்ள அழகிய சில அம்புகளில் ஒன்றின் வலிமையைக் கூட இன்னும் அறியாத சுக்ரீவன்.

5-அஞ்சுxஇல்xஅம்புxஅதில்xஒன்றறியாதவன் - (நீஎன் தமையன் அம்புகளுக்கு) அஞ்ச வில்லையாயின் அவன் அம்புகளில் ஒன்றை (வாலியைப்போல்) ஏற்றுக்கொள்.

6-அஞ்சுஇல்xஅம்பதுஇல் ஒன்றறியாதவன் -இவன் அறிவதற்கு ஐந்து அம்போ ஐம்பது அம்புகளோ தேவையில்லை. ஒரு அம்பே போதுமானது எதனை அறிய மாட்டான் சுக்ரீவன்

7-அஞ்சில்xஅம்பதில்xஒன்றுxஅறியாதவன் - அஞ்சில் அம்பதில் ஒன்று என்பது ஐம்பத்தாறு. (5+50+1=56) அதாவது 56-வது வருடம் துந்துபிவருடம். துந்துபி என்ற பெயருடைய அசுரனைக் கொன்று வாலியைக் கொன்றவன் இந்த இராமன் என்பதை அறியாத சுக்ரீவன்.

8-அஞ்சுxஇல்xஅம்பதில்xஒன்றறியாதவன் -தமிழ் எண் ஐந்து ரு ஆகும். பத்து ய ஆகும். ஐம்பது ருய ஆகும். ருய-ல் ஐந்து இல்லாதபோது (அதாவது ரு இல்லாதபோது) ய-மட்டும் மிஞ்சும் அல்லவா? அதாவது பத்து அவதாரத்தில் உருவன் நான் என்பதை அறியாதவன் சுக்ரீவன்.

அகரம்.அமுதா

புதன், 4 ஜூன், 2008

தாமரை!

அதுஓர் அழகிய ஊருணி. அன்றாடம் ஆண்களும் பெண்களும் நீராடி மகிழ்வது வழக்கம். ஊருணியென்றால் திறந்த வெளியாகவல்லவா இருக்கும்? ஆகையில் ஆண்கள் முதலிலும் ஆண்கள் குளித்துவிட்டு போனதும் பிறகுவந்து பெண்கள் குளிப்பதும் வழக்கம்.

அன்றும் அப்படியே ஆண்கள் முதலில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அவ்வாண்களின் கண்களுக்கு ஓர் வினோதமான எண்ணம் எழுகிறது.

மஞ்சலறைத்து மஞ்சலறைத்துத் தேய்ந்துப் போயிருக்குமிந்தப் படித்துறையே இத்தனை அழகென்றால் மஞ்சலுறைத்துப் பூசப்பட்ட பெண்களின் மார்பகங்கள் எத்தனை அழகாக இருக்கும்!

நாமும் எப்படியாவது அம்மார்பகங்களைப் பார்த்துவிடலாம் என்றிருந்தாலும் இத்தனை நாட்களாக முடியவில்லை.
இன்று எப்படியாவது பார்த்துவிடுவது என்று அங்கு குளித்துக்கொண்டிருந்த ஆண்களின் கண்களெல்லாம் அவர்கள் குளித்துக் கரையேறுகையில் அவர்களுக்குத் தெரியாமலேயே சட்டென்றுக் குதித்துத் தண்ணீரில் மீன்களாய் மாறி மறைந்து கொண்டனவாம்.

ஆண்கள் கரையேறியபின் ஆங்கே பெண்கள் குளிக்கத் துறையொதுங்குகின்றனர். குளிக்கும் பெண்களுக்கோ ஆண்களின் கண்கள் செய்த சூழ்ச்சி தெரியாது. ஆகையால் எப்பொழுதும் போல் சிரித்து மகிழ்ந்துக் குளத்திலிறங்கிக் குளிக்கின்றனர்.

அப்பொழுது அம் மங்கையர்களின் கொங்கைகளுக்கு ஏனோ சந்தேகம் நீருக்குள் என்றுமில்லாத நிசப்தம் நிலவுவதாக. என்ன சூழ்ச்சியாக இருப்பினும் எப்படியும் கண்டுபிடித்து விடுவதென கொங்கைகளும் கங்கணம் கட்டிக்கொள்கின்றன.

நீரலையால் நேரிழையாரின் நனைந்த ஆடைகள் நகருகையில் கன்னியர்களின் கொங்கைகளைக் கண்டு விடுவதென மீன்களாக மாறிய கண்கள் அங்கும் இங்கும் நீந்திக்கொண்டிருப்பது கண்ட கொங்கைகள் கண்களின் மீது கணிவுற்றுத் தன்னை முழுவதாகவும் நிரந்தர மாகவும் அக் கண்கள் கண்டுவிட்டுத்தான் போகட்டுமே! என்று அக்கொங்கைகளும் குளத்தில் குதித்துத் தாமரைகளாகப் பூத்தெழுந்தனவாம்.

இப்படியும் ஓர்கற்பனை. கவிதைக்குச் சொந்தக்காரர் ஆகாசம் பட்டு சேஷாச்சலம்.

கவிதை இதுதான்:-

ஆண்குளிச்சிப் போக அவங்ககண் எல்லாந்தான்
மீனாக் கொளத்துல நீந்துதாம் -நாணுற
பொண்குளிச்சிப் போக அவங்கமார் எல்லாந்தான்
அண்ணாச்சி தாமரைமொக் காம்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 1 ஜூன், 2008

கம்ப ரஷம்!

கம்பரஷம் கம்பரஷம் என்கிறார்களே! அதென்ன புளிரஷம் மிளகுரஷம் போன்றதுவா? அல்லது அதனினும் வேறுபட்டதுவா? எப்படியும் இன்று அந்த ரஷத்தைப் பருகியே பார்த்து விடுவது என்று நானும் கிளம்பிவிட்டேன். சரி நீங்களும் வாங்களேன். சேர்ந்தே பருகுவோம்.

இதுஒரு கிளுகிளுப்பான காட்சி.

கம்பனுக்குத் தான் விவஸ்தையில்லை. உமக்குமா? என்று என்னை யாரும் கேட்டுவிடாதீர்கள். சற்றே ரஷிப்போமே!

ராம காதையில் ஓர் அற்புதமான காட்சி. புன்னை வனத்தில் ஓர் பொன்னந்திப் பொழுதில் தலைவன். அவனருகில் தலைவி. காதல் உணர்வு, காமத்திணவு.

தொடுவதா? விடுவதா?- இது தலைவன்.
கொடுப்பதா? தடுப்பதா?- இது தலைவி.

இறுதியில் கேட்டேவிடுகிறான். (என்ன? எதையென்றாக் கேட்கின்றீர்? அதைநான் சொல்ல மாட்டேனே!).

அவளுக்கோ இருமனது. காரணம் அவள் விழியின் இமைகள் மேலும் கீழும் அசைந்து ஆம்ஆம் என்கிறது. அதாவது தனக்கு அதில் ‘சம்மதம்’ என்கிறது. (நாம் ஒருவர் கூற்றை ஒத்துக்கொள்வதற்கு மேலும்கீழும் தலையசைக்கிறோம் அல்லவா?)

ஆனால் இடைக்கதில் சம்மதம் இல்லைபோலும். அவள் அவனை நோக்கி ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் (இடவலமாக அசைந்து) தனக்கதில் ‘சம்மதமில்லை’ ‘சம்மதமில்லை’ என்கிறது. (நாம் ஒருவர் கேட்கின்ற கேள்விக்கு இல்லை என்னும் பதிலுக்காய் இடம்வலமாகத் தலையை அசைக்கிறோம் அல்லவா?)

இப்படி அவள் விழி சம்மதித்தும் இடை சம்மதிக்காத போது அவள் இருமனதாக இல்லாமல் என்னசெய்வாள்?

ஆஹா! கடைசியில் அது நடக்கவே இல்லையா என்கிறீரா? அதுதானே இல்லை. கடைசியில் அது நடந்தே விட்டது. தலைவனும் தலைவியும் கூடிக் களிக்கிறார்கள்.

அது ஒரு அழகிய மற்போர். இப்போரில் மட்டுந்தான் போரில் ஈடுபடுகிற இருவருக்கும் வெற்றி கிடைக்கிறது. இப்போர் புரிவதற்கு ஆயுதங்கள் தேவையில்லை. இப்போர் முன்யாமத்தில் தொடங்கிப் பின்யாமத்தில் முடிக்கப்பட வேண்டும். பகல்நேரம் இதற்குத் தடை. இதன் மர்மம் கேட்டால் என்னிடம் ஏது விடை.

யார் வென்றார் யார் தோற்றார் என்று அறுதியிட்டுக் கூற முடியாத அப்போர் ஒருவழியாக நிறைவு பெற்றுவிடுகிறது. தலைவன் தலைவியின் மேல் அயர்வுற்றுச் சரிந்துக் கிடக்கிறான். அந்த ஆசையில் தலைவனின் முதுகைத் தடவுகிறாள் மனைவி.

இங்குதான் கம்பன் கற்பனை செய்கிறான்.

தலைவி தலைவனின் முதுகைத் தடிவுவது எப்படியிருக்கிறதாம்? அவளுடைய தனங்கள் அவனுடைய மார்பில் குத்திப் பின் பக்கமாக வந்துவிட்டனவோ என்றுத் தேடுவது போலிருக்கிறதாம்.

இத்தனைநேரம் தன்னோடு மற்போர் புரிந்தவன் இப்போது மூர்ச்சையற்றுக் கிடக்கிறானே! அவன் புரிந்த போரைத் தடுத்தாடினேனே ஒழிய எதிர்த்தாட வில்லையே! பின்பெப்படி இவனுக்கு இந்நிலை ஏற்பட்டது?

ஆஹா இப்பொழுது புரிந்து விட்டது. இத்துனை நாட்களாகக் குளித்து மஞ்சல் பூசுகையில், தான் குடிகொண்டிருக்கும் உடலின் ஒரு பாகம் தானே இக்கைகள் என்றுகூடப் பாராமல் என்உள்ளங்கைளையே கிழித்த முலைக் காம்புகளல்லவா இவைகள்?

அப்பொழுதே அவைகளை வெட்டியெரிந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டது எவ்வளவு பெரியத் தவறாகிவிட்டது.கோலை பாதகத்திற்கும் அஞ்சாத இந்த தனங்கள் போர்முனை கண்டதனால் தோளில் வடுக்கள் கண்ட என்தலைவனின் மார்பைக் குத்திக் கிழித்திருக்குமோ?

அதனால் தானோ மூர்ச்சையற்றுக்கிடக்கிறான்? குத்திய தனங்கள் சிறுகாயத்தோடு விட்டிருக்குமோ? அல்லது இப்புறம் குத்தி அப்புறம் வெளிவந்திருக்குமோ? என்று முதுகைத் தடிவினாளாம்.

எப்படி இருக்கிறது கற்பனை?

இந்த அழகியக் கற்பனைச் செறிவு மிகுந்த
கம்பனின் பாடலைக் காண்போமா?

கொலையுரு வமைத்தெனக் கொடிய நாட்டத்தோர்
கலையுரு வல்குலாள் கணவற் புல்குவாள்
சிலையுரு வழிதரச் செறிந்த மார்பிற்றன்
முலையுரு வினவென முதுகை நோக்கினாள்.

அகரம்.அமுதா

புல்லாக்கு!

சங்க காலத்திலிருந்து இக்காலப் பெண்கள்வரை மூக்குத்தியை விரும்பாத பெண்கள் இருக்க முடியாது. இந்நூற்றாண்டுப் பெண்களைத் தவிர்த்து சென்ற நூற்றாண்டின் முற்பாதி வரை மூக்குத்தியோடு மட்டுமல்லாமல் புல்லாக்கு என்றொறு அணிகலத்தை மூக்கின் இருதுளைக் கிடையிலான நடுச்சுவரில் அணிந்துகொள்ளும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்துவந்தது.

இப்புல்லாக்கு ஓர் வட்டவடிவிலான தங்கவளையத்தில் முத்தினைப் பதித்து அணியும் அணிகலமாகும்.

இப்பொழுது காட்சிக்கு வருவோம்!

ஒர் அழகிய நங்கை சின்னஇடையாள், அன்னநடையாள், தெங்குமுலையாள், நுங்கனையாள்.ஒடுங்கிடை யொசயப் பொய்கையில் அமர்ந்திருக்கிறாள்.எதிரில் காதலன்.ஏகாந்தப்பொழுது.

காதலனே கவிஞனாகவும் இருந்து விட்டால் கேட்கவே தேவையில்லை. காதலியின் குறுநகையைக் கண்டவன் “உன் பல்போல் முத்திருக்கிறது” என்றுக் கவிதை புனைந்துவிட்டான்.

பொதுவாகப் பெண்களின் பல்லை முத்திற்கு உவமை சொல்வார்கள்.அதாவது முத்துபோன்ற பற்கள் என்று.முத்துப்பற்கள்-முத்துபோன்ற பற்கள் என்றால் அவள்பற்கள் முத்தைப்போல் இருந்தது என்றல்லவா பொருள்.இங்கே முத்தை முதன்மைப் படுத்துவதால் முத்துக்குத் தானே பெருமை.

இதனால் இதுகாறும் இறுமாந்து வந்த முத்திற்கு இக்கவிஞன் தன்காதலியின் பல்லை உயர்த்தியும் முதன்மைப் படுத்தியும் அவள் பல்போல் முத்திருக்கிற தென்று முத்தைத் தாழ்த்தியும் கூறியதால் முத்துக்கு அவமான மேற்பட்டுவிட்டதாம்.

முத்திற்குக் கடுங்கோபம்.அத்தோடு அவமானம் வேறு அதன்மனதை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தது. இதுகாறும் முத்தை உயர்த்தி 'முத்துபோல் பெண்களின் பற்கள்' என்று பாடிய புலவர்கள் மத்தியில் இக்கவிஞன் பற்கள்போல் முத்துக்கள் என்று பாடி தன்னை அவமானப் படுத்திவிட்டானே என்று அவ்வவமானத்தைப் போக்க 'அவள் பற்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தூக்குப்போட்டுக் கொண்டுச் சாகிறேன்பார். என் இறப்பைக் கண்டபிறகாவது காண்போர் சொல்லட்டும் முத்தைப்போல் பற்களா? பற்கள்போல் முத்துக்களா என்று' -என்று முத்து பல் இருக்கும் இடத்திற்கே சென்று தூக்குப் போட்டுக்கொண்டதாம்.

அதுதான் புல்லாக்கு என்ற அணிகலமாம்.

இன்பம் பயக்கும் இக்கற்பனையைப் பாடலாக்கியவர் சிவப்பிரகாச அடிகள்.

இதுதான் பாடல்:-

தன்னை நிந்தைசெய் வெண்நகைமேல் பழிசார
மன்னி அங்கது வாழ்மனை வாய்தன்
முன்னிறந் திடுவேன் எனஞான்று கொள்முறைமை
என்ன வெண்மணி மூக்கணி ஒருத்தி நின்றிட்டாள்.

அகரம்.அமுதா