ஞாயிறு, 1 ஜூன், 2008

புல்லாக்கு!

சங்க காலத்திலிருந்து இக்காலப் பெண்கள்வரை மூக்குத்தியை விரும்பாத பெண்கள் இருக்க முடியாது. இந்நூற்றாண்டுப் பெண்களைத் தவிர்த்து சென்ற நூற்றாண்டின் முற்பாதி வரை மூக்குத்தியோடு மட்டுமல்லாமல் புல்லாக்கு என்றொறு அணிகலத்தை மூக்கின் இருதுளைக் கிடையிலான நடுச்சுவரில் அணிந்துகொள்ளும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்துவந்தது.

இப்புல்லாக்கு ஓர் வட்டவடிவிலான தங்கவளையத்தில் முத்தினைப் பதித்து அணியும் அணிகலமாகும்.

இப்பொழுது காட்சிக்கு வருவோம்!

ஒர் அழகிய நங்கை சின்னஇடையாள், அன்னநடையாள், தெங்குமுலையாள், நுங்கனையாள்.ஒடுங்கிடை யொசயப் பொய்கையில் அமர்ந்திருக்கிறாள்.எதிரில் காதலன்.ஏகாந்தப்பொழுது.

காதலனே கவிஞனாகவும் இருந்து விட்டால் கேட்கவே தேவையில்லை. காதலியின் குறுநகையைக் கண்டவன் “உன் பல்போல் முத்திருக்கிறது” என்றுக் கவிதை புனைந்துவிட்டான்.

பொதுவாகப் பெண்களின் பல்லை முத்திற்கு உவமை சொல்வார்கள்.அதாவது முத்துபோன்ற பற்கள் என்று.முத்துப்பற்கள்-முத்துபோன்ற பற்கள் என்றால் அவள்பற்கள் முத்தைப்போல் இருந்தது என்றல்லவா பொருள்.இங்கே முத்தை முதன்மைப் படுத்துவதால் முத்துக்குத் தானே பெருமை.

இதனால் இதுகாறும் இறுமாந்து வந்த முத்திற்கு இக்கவிஞன் தன்காதலியின் பல்லை உயர்த்தியும் முதன்மைப் படுத்தியும் அவள் பல்போல் முத்திருக்கிற தென்று முத்தைத் தாழ்த்தியும் கூறியதால் முத்துக்கு அவமான மேற்பட்டுவிட்டதாம்.

முத்திற்குக் கடுங்கோபம்.அத்தோடு அவமானம் வேறு அதன்மனதை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தது. இதுகாறும் முத்தை உயர்த்தி 'முத்துபோல் பெண்களின் பற்கள்' என்று பாடிய புலவர்கள் மத்தியில் இக்கவிஞன் பற்கள்போல் முத்துக்கள் என்று பாடி தன்னை அவமானப் படுத்திவிட்டானே என்று அவ்வவமானத்தைப் போக்க 'அவள் பற்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தூக்குப்போட்டுக் கொண்டுச் சாகிறேன்பார். என் இறப்பைக் கண்டபிறகாவது காண்போர் சொல்லட்டும் முத்தைப்போல் பற்களா? பற்கள்போல் முத்துக்களா என்று' -என்று முத்து பல் இருக்கும் இடத்திற்கே சென்று தூக்குப் போட்டுக்கொண்டதாம்.

அதுதான் புல்லாக்கு என்ற அணிகலமாம்.

இன்பம் பயக்கும் இக்கற்பனையைப் பாடலாக்கியவர் சிவப்பிரகாச அடிகள்.

இதுதான் பாடல்:-

தன்னை நிந்தைசெய் வெண்நகைமேல் பழிசார
மன்னி அங்கது வாழ்மனை வாய்தன்
முன்னிறந் திடுவேன் எனஞான்று கொள்முறைமை
என்ன வெண்மணி மூக்கணி ஒருத்தி நின்றிட்டாள்.

அகரம்.அமுதா

7 கருத்துகள்:

லதானந்த் சொன்னது…

கவிதை அருமை. அதைவிட அதைக் காட்சியாக்கியது மிகவும் அருமை.
அது சரி. இப்போது மேலை நாட்டுப் பெண்கள் வளையம் அணிவது பற்றித் தெரியுமா?

ஷைலஜா சொன்னது…

புது தகவல், சிறப்பாக உள்ளது அமுதா!

அகரம் அமுதா சொன்னது…

// லதானந்த் said...
கவிதை அருமை. அதைவிட அதைக் காட்சியாக்கியது மிகவும் அருமை.
அது சரி. இப்போது மேலை நாட்டுப் பெண்கள் வளையம் அணிவது பற்றித் தெரியுமா?//

ஏனுங்! என்னுங் இப்டி கேட்டுப்டிங்?

கைவிரல் மோதிரத்தைத் தொப்பூழ் தனிலணிந்துக்
கைவளையைக் காதணிவாள் காண்(ங்)

என்னங் ! புரிஞ்சதுங்ளாங்?

அகரம் அமுதா சொன்னது…

// ஷைலஜா said...
புது தகவல், சிறப்பாக உள்ளது அமுதா!//

ரொம்ப நன்றி ஷைலஜாக்கா! தினமும் வாங்க! நிறை புதுசுபுதுசா தகவல்கள் வெச்சிருக்கேன்.

Athisha சொன்னது…

இப்பல்லாம் யாருங்க புல்லாக்கு போடறா வளையலதான் காதுல போட்டுகிட்டு வராங்க

ராமலக்ஷ்மி சொன்னது…

புல்லாக்கின் கதையும் பாடலும்
நல்லாத்தேன் இருக்குங்க அமுதா.

//இப்பல்லாம் யாருங்க புல்லாக்கு போடறா வளையலதான் காதுல போட்டுகிட்டு வராங்க//

நாட்டிய நங்கையரிடம் மட்டும் இப்போ நாம் காணும் புல்லாக்கு ஜீன்ஸ் மங்கையரின் ஃபேஷனாகும் ஒருநாள். பொறுத்திருந்து பாருங்க அதிஷா.

அகரம் அமுதா சொன்னது…

தோழி அதிஷாவின் கூற்றுக்கு தோழி ராமலெட்சுமி அவர்கள் அழகிய பதிலை எனக்குப்பதிலாக வழங்கியுள்ளார்கள். இருவரையும் அன்போடு வரவேற்கிறேன். நன்றி. அடிக்கடி வாருங்கள்.