ஞாயிறு, 1 ஜூன், 2008

கம்ப ரஷம்!

கம்பரஷம் கம்பரஷம் என்கிறார்களே! அதென்ன புளிரஷம் மிளகுரஷம் போன்றதுவா? அல்லது அதனினும் வேறுபட்டதுவா? எப்படியும் இன்று அந்த ரஷத்தைப் பருகியே பார்த்து விடுவது என்று நானும் கிளம்பிவிட்டேன். சரி நீங்களும் வாங்களேன். சேர்ந்தே பருகுவோம்.

இதுஒரு கிளுகிளுப்பான காட்சி.

கம்பனுக்குத் தான் விவஸ்தையில்லை. உமக்குமா? என்று என்னை யாரும் கேட்டுவிடாதீர்கள். சற்றே ரஷிப்போமே!

ராம காதையில் ஓர் அற்புதமான காட்சி. புன்னை வனத்தில் ஓர் பொன்னந்திப் பொழுதில் தலைவன். அவனருகில் தலைவி. காதல் உணர்வு, காமத்திணவு.

தொடுவதா? விடுவதா?- இது தலைவன்.
கொடுப்பதா? தடுப்பதா?- இது தலைவி.

இறுதியில் கேட்டேவிடுகிறான். (என்ன? எதையென்றாக் கேட்கின்றீர்? அதைநான் சொல்ல மாட்டேனே!).

அவளுக்கோ இருமனது. காரணம் அவள் விழியின் இமைகள் மேலும் கீழும் அசைந்து ஆம்ஆம் என்கிறது. அதாவது தனக்கு அதில் ‘சம்மதம்’ என்கிறது. (நாம் ஒருவர் கூற்றை ஒத்துக்கொள்வதற்கு மேலும்கீழும் தலையசைக்கிறோம் அல்லவா?)

ஆனால் இடைக்கதில் சம்மதம் இல்லைபோலும். அவள் அவனை நோக்கி ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் (இடவலமாக அசைந்து) தனக்கதில் ‘சம்மதமில்லை’ ‘சம்மதமில்லை’ என்கிறது. (நாம் ஒருவர் கேட்கின்ற கேள்விக்கு இல்லை என்னும் பதிலுக்காய் இடம்வலமாகத் தலையை அசைக்கிறோம் அல்லவா?)

இப்படி அவள் விழி சம்மதித்தும் இடை சம்மதிக்காத போது அவள் இருமனதாக இல்லாமல் என்னசெய்வாள்?

ஆஹா! கடைசியில் அது நடக்கவே இல்லையா என்கிறீரா? அதுதானே இல்லை. கடைசியில் அது நடந்தே விட்டது. தலைவனும் தலைவியும் கூடிக் களிக்கிறார்கள்.

அது ஒரு அழகிய மற்போர். இப்போரில் மட்டுந்தான் போரில் ஈடுபடுகிற இருவருக்கும் வெற்றி கிடைக்கிறது. இப்போர் புரிவதற்கு ஆயுதங்கள் தேவையில்லை. இப்போர் முன்யாமத்தில் தொடங்கிப் பின்யாமத்தில் முடிக்கப்பட வேண்டும். பகல்நேரம் இதற்குத் தடை. இதன் மர்மம் கேட்டால் என்னிடம் ஏது விடை.

யார் வென்றார் யார் தோற்றார் என்று அறுதியிட்டுக் கூற முடியாத அப்போர் ஒருவழியாக நிறைவு பெற்றுவிடுகிறது. தலைவன் தலைவியின் மேல் அயர்வுற்றுச் சரிந்துக் கிடக்கிறான். அந்த ஆசையில் தலைவனின் முதுகைத் தடவுகிறாள் மனைவி.

இங்குதான் கம்பன் கற்பனை செய்கிறான்.

தலைவி தலைவனின் முதுகைத் தடிவுவது எப்படியிருக்கிறதாம்? அவளுடைய தனங்கள் அவனுடைய மார்பில் குத்திப் பின் பக்கமாக வந்துவிட்டனவோ என்றுத் தேடுவது போலிருக்கிறதாம்.

இத்தனைநேரம் தன்னோடு மற்போர் புரிந்தவன் இப்போது மூர்ச்சையற்றுக் கிடக்கிறானே! அவன் புரிந்த போரைத் தடுத்தாடினேனே ஒழிய எதிர்த்தாட வில்லையே! பின்பெப்படி இவனுக்கு இந்நிலை ஏற்பட்டது?

ஆஹா இப்பொழுது புரிந்து விட்டது. இத்துனை நாட்களாகக் குளித்து மஞ்சல் பூசுகையில், தான் குடிகொண்டிருக்கும் உடலின் ஒரு பாகம் தானே இக்கைகள் என்றுகூடப் பாராமல் என்உள்ளங்கைளையே கிழித்த முலைக் காம்புகளல்லவா இவைகள்?

அப்பொழுதே அவைகளை வெட்டியெரிந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டது எவ்வளவு பெரியத் தவறாகிவிட்டது.கோலை பாதகத்திற்கும் அஞ்சாத இந்த தனங்கள் போர்முனை கண்டதனால் தோளில் வடுக்கள் கண்ட என்தலைவனின் மார்பைக் குத்திக் கிழித்திருக்குமோ?

அதனால் தானோ மூர்ச்சையற்றுக்கிடக்கிறான்? குத்திய தனங்கள் சிறுகாயத்தோடு விட்டிருக்குமோ? அல்லது இப்புறம் குத்தி அப்புறம் வெளிவந்திருக்குமோ? என்று முதுகைத் தடிவினாளாம்.

எப்படி இருக்கிறது கற்பனை?

இந்த அழகியக் கற்பனைச் செறிவு மிகுந்த
கம்பனின் பாடலைக் காண்போமா?

கொலையுரு வமைத்தெனக் கொடிய நாட்டத்தோர்
கலையுரு வல்குலாள் கணவற் புல்குவாள்
சிலையுரு வழிதரச் செறிந்த மார்பிற்றன்
முலையுரு வினவென முதுகை நோக்கினாள்.

அகரம்.அமுதா

3 கருத்துகள்:

Nanda Nachimuthu சொன்னது…

அமுதா இது ஒரு விதமாக அமைந்து விட்டது.
இந்த மாதிரி யாராவது இவைகளை பதிவு செய்ய மாட்டார்களா என்று நினைத்ததுண்டு.
மிக்க நன்றிகளும் பாராட்டுகளும்.

Nanda Nachimuthu சொன்னது…

//இறுதியில் கேட்டேவிடுகிறான். (என்ன? எதையென்றாக் கேட்கின்றீர்? அதைநான் சொல்ல மாட்டேனே!).

நல்ல இலக்கியவாதிகளுக்கு மட்டுமே வரும் சூப்பர் நக்கல்ஸ்......;-D

அகரம் அமுதா சொன்னது…

/// Nanda said...
இந்த மாதிரி யாராவது இவைகளை பதிவு செய்ய மாட்டார்களா என்று நினைத்ததுண்டு.
மிக்க நன்றிகளும் பாராட்டுகளும்.///


வாங்க நந்து! இதுபோல இன்னும் கைவசம் நிறைய வச்சிருக்கேன். எதிர்பார்போட இருங்க!