சென்ற நமது "கலவும் கற்று மற" என்னும் தலைப்பிலான கட்டுரையைப் பார்த்த அய்யா! சுப்பு ரத்தினம் அவர்கள் "கல்லளவும் கற்று மற" என்பது வலிந்து பொருள்கொள்வதாகும். "களவும் கற்று மற" இதுவே சரியென்றும் அக்களவிற்குக் களவியல் என்றே பொருள்படும் என்றும் அதற்கு மிக உகந்த உயர்கருத்துக்களைப் பின்னூட்டமிட்டிருந்தார்.
படித்து வியந்து போனேன்.
களவு என்பதற்குத் திருட்டு என்னும் பொருள் உள்ளதுபோல களவியலையும் அச்சொல் குறிப்பதால் களவியலைப் பற்றித்தான் அப்பழமொழி எழுந்தது என்று வாதிடுவதும் முறையே.
அய்யா குறிப்பிட்டுவிட்டார் "களவும் கற்று மற" என்பதுதான் சரி. அக்களவும் களவியலையே குறிக்கிறது என்பதற்குச் சான்றுகளையும் அளித்துள்ளார் என்பதற்காய் நாம் நம் கட்டுரையின் தலைப்பான கலவும் கற்று மற என்பதை களவும் கற்று மற என்று மாற்றப் போவதில்லை.
"அப்படியென்றால் மூத்தோர் சொல்லை ஏற்க மாட்டீரா?" என்கிறீர்களா?
அதுதான் இல்லை. அய்யா அவர்களின் கருத்தோடு உடன்படவே விரும்பகிறேன். களவும் (களவியலும்) கற்று மற என்ற வாக்கியத்தோடு உடன்பட மாட்டேன்.
"ஆர்த்தவலை அத்தனையுள் அய்யசுப்பு வின்வலைநான் பார்த்தவற்றுள் ஞானப் பழம்" என்றெல்லாம் ஏற்றிப் பாடிவிட்டு இப்பொழுது அவர்கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அக்கருத்தைத் தாங்கிவரும் களவும் (களவியலும்) கற்று மற என்ற வாக்கியத்தை மட்டும் ஏற்கமாட்டேன் என்றால் இதென்ன முரண்? என்கிறீர்களா?
முரணெல்லாம் ஒன்றுமில்லை. தமிழ் மிக நுட்பமான சில வசதிகளைத் தன்னகத்தே ஒளித்து வைத்துள்ளது. அந்த நுட்பத்தை நான் இங்கு எனக்குச் சாதகமாக்கிக் கொண்டேன் அவ்வளவுதான்.
கலவும் கற்று மற என்பதிலேயே களவியலும் அடங்கியிருக்கிற போது ஏன் தனியாகக் களவும் கற்று மற என்றுவேறு பிரித்தெழுத வேண்டும் என்பதுதான் என்வினா.
"கலவுக்கும் களவுக்கும் உள்ள லள வேறுபாடுகூடவா அறியாதவர் நீர்?" என்கிறீரா?
அறிந்ததன் காரணமாகத் தான் கலவு என்ற ஒற்றைச் சொல்லில் களவியலைக் குறிக்கும் களவும் அடங்கியிருக்கிறது என்கிறேன்.
கலவு என்றால் கலத்தல் என்கிற ஒரு பொருளும் இருக்கிறதல்லவா?
தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இரண்டறக் கலத்தலையல்லவா களவியல் என்கிறோம்!
கண்ணொடு கண்ணினை நோக்கி இதயங்கள் இரண்டும் இடம் மாறிக் கலத்தலே களவியல். ஆகவேதான் வள்ளுவர் "பெரிதாற்றிப் பேட்பக் கலத்தல்" என்கிறார்.
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்!
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு!
போன்ற குறள்களிலும் கலத்தல் நிலையை (களவியல்) தாங்கியே வருகின்றன.
ஆக கலவும் கற்று மற இதில் களவும் ஒளிந்துள்ளதால் கலவும் கற்றுமற என்றே இருக்கட்டுமே!
அய்யா! உடன்படுவீரா?
அவ்வை சொல்லுவார் "கற்றது கைமண் அள"வென்று. அது நூறு விழுக்காடு உண்மையே எனினும் நாம் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் கற்றவற்றையாவது முழுமையாகக் கற்று வைத்துள்ளோமா? என்று.
அய்யாவின் பின்னூட்டத்திற்குப் பின் என்னுள் "நாம் இன்னும் கற்கவேண்டியது கிடக்கட்டும். நாம் கற்றவற்றையாவது முழுமையாய்க் கற்றுவைத்திருக்கிறோமா?" என்கிற ஏக்கமே தோன்றியது.
அவ்வேக்கம் ஓர் வெண்பாவாக உருவெடுத்தது. அவ்வெண்பாவை மட்டுமல்ல நான் கற்றவற்றையும் இனிவரும் இடுகைகளில் இடுகிறேன். நான் கற்றவற்றை நீங்களும் கற்றிருப்பீர்கள் அல்லவா நீங்கள் கற்றுணர்ந்ததைத் தாருங்கள் நான் உணர்ந்து கொள்கிறேன் என்பதே என்வேண்டுகோள்!
வெண்பா இதோ:-
அறிந்த அவற்றுள் அறியா தனவும்
இருத்தலும் ஏலுமே என்பதனால் யானும்
அறிந்த தளிக்கின்றேன் யானவற்றுள் யாதும்
அறியாத உண்டேல் அளி!
அகரம்.அமுதா!
புதுச்சேரி வரலாற்றுச் செய்திக் குவியலாக ஒரு நாள்காட்டி
4 ஆண்டுகள் முன்பு
6 கருத்துகள்:
அறியாதன அறிவோம் எனச்சொல்லியபின்
அறியாதனவற்றை அறிவது தானே அறன் ?
கலவும் கற்று மற எனும் முதுமொழி நான் படித்ததில்லை.
எனினும் "வலிந்து" பொருள் கூற இயலும் என்றுதானே சொல்லியிருந்தேன் !
கலவும் என்ற சொல்லிலே களவும் கலந்துள்ளது என்கிறீர்கள்.
இருக்கட்டும். எனக்கு ஆட்சேபம் இல்லை.
எனக்கு அவ்வளவாகத் தமிழ் தெரியாது. எனினும் சில நினைவில் உள்ளது.
களவு என்றால் என்ன ? தொல்காப்பியம் சொல்லும்:
"வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல்
ஆக்கம் செப்பல், நாணுவரை யிறத்தல்
நோக்குவ வெல்லாம் அவையே போறல்
மறத்தல், மயக்கம் சாக்காடு என்று அச்
சிறப்புடை மரபின் அவை களவென மொழிப "
கலவு என்ற சொல்லுக்கும் கல் ( learn )
என்ற வினைச்சொல்லுக்கும்தான் தொடர்பு உள்ளதா எனப்பார்த்தேன்.
கலவு என்ற சொல்லுக்கு அகராதியில் ( நானல்ல )
பொருள்:
இலக்கியத்தில் இரு இடங்களில் இருப்பதாகத் தெரிகின்றது.
கலவு² [ kalavu² ] n kalavu . < கலவு-. Joint of the body; உடலின் மூட்டுவாய். கலவுக்கழி கடுமுடை (அகநா. 3).
கலவு¹-தல் [ kalavu¹-tal ] 5 v. tr. & intr kalavu. < கல-. To mix; கலத்தல். கனியின் றிரளுங் கலவி (சூளா. சீய. 23).
ஆக, கலவு என்ற சொல் கலத்தல் என்ற சொல்லுடனும் ஒரு உடலின் அங்கத்துடனும் தான் தொடர்பு உடையதாகச் சொல்லப்படுகிறது. கல் எனும் வினைச்சொல்லுடன் ஏதேனும் விகுதியைச் சேர்த்து கலவு எனும் சொல் வருகிறதா என என்க்குத் தெரியவில்லை. இருப்பினும், தங்கள் தூண்டுதலால் இன்னும் சில இடங்களில் கலவு எனும் சொல் வருவதைக்கண்டேன்.
ஒன்று. கலிங்கத்துப் பரணி இராச பாரம்பரியம்
202 களிறு கங்கைநீ ருண்ண மண்ணையிற் காய்சி னத்தொடே கலவு செம்பியன்
குளிறு தெண்டிரைக் குரைக டாரமுங் கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும். 25
முதலாம் இராசாதிராசன்
இரண்டாவது இடம்:
திருமுறை 10
பதிகம் : 812 எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள்
கலவு - கலப்பு. ஆணவத்தோடு மட்டும் இருந்த ஆன்மா மாயாகருவிகளோடு கலத்தல்
கேவலந் தன்னில் கலவு சகலத்தின்
மேவும் செலவு விடாவிருள் நீக்கத்துப்
பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே
இவ்விரண்டு இடங்களிலும் கலவு என்ற சொல் கலத்தல் எனும் பொருளில்தான்
வருகிறது ! நீங்கள் சொல்லவேண்டும். So,in my limited understanding, the word KALAVU does not derive from the root word KAL (to learn )
இத்தனையும் நிற்க.
கற்றவன் தான் கற்றேன் எனும் செருக்கினை அறுக்கவேண்டும். களையவேண்டும்
என்கிறீர்கள். செருக்கினை களையா ஒருவன் கற்றவன் எங்ஙனம் ஆவான் ?
கற்றவன் எவனும் தன்னைக் கற்றவன் என நினைப்பின், அது அறியாமை ஆகும்.
கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பது உலகமறிந்த உண்மை அல்லவோ/
கற்றவனுக்கு எவ்வாறு அது தெரியாமற் போகும் ?
ஆகவே அது வார்த்தை முரண்பாடு.
ஆங்கிலத்தில் சொல்ல அது illogical statement and linguistic inconsistency.
At Best, it is a fallacy.
குமரகுருபரர் கூறுவார்:
முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூம்
கற்றனம் என்று களியற்க == சிற்றுளியால்
கல்லும் தகரும் தகரா கனங்குழாய்
கொல் உலைக் கூடத்தினால்.
மேலும், வள்ளுவப்பெருந்தகை:
கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
வாலறிவன் எனும் சொல் இறைவனையும் இறைவழிப்பட்ட தூய அறிஞரையுமே குறிப்பிடும். ஒருவன் அறிஞன் என வையம் சொல்லவேண்டுமெனின்,
அவன், " தன் உயிர், தான், அறப் பெற்றானை, ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும். "
எனும் நிலை பெற்றிருத்தல் வேண்டும்.
ஆகவே செருக்கற்றவனே அறிஞனாகிறான். அறிந்தவனாகிறான். அவன் கற்றவன். நீங்கள் சொல்கிற கலவையில் கற்றவன், கல்லாதவன், கற்றவனாகத் தனக்குத்தானே நினைத்துக் கொண்டு இறுமாப்புடன் இருப்பவன் எல்லாம் அடங்கும்.
ஒரு வேளை," நாம் எல்லோரும் கலந்து கலந்து ஏதேதையோ தெளிவின்றி
முழுமையின்றி கற்றுக் கொள்கிறோம். அந்தக் கலவைதனை (தெளிவில்லாத
குப்பையை) ஏதோ அன்றாட காலட்சேபத்திற்கு கற்கவேண்டியது தான்.
ஆனால் அதை மறந்து விடுங்கள் " என்று சொல்கிறீர்களோ ?
அப்படியானால் ஒரு சபாஷ் !!
அகரம் சிகரமல்லவா ! இல்லையா பின்னே ( து.டீ.)
நீங்கள் எழுதிய வெண்பா சாலச்சிறந்தது.
அறிந்த அவற்றுள் அறியா தனவும்
இருத்தலும் ஏலுமே என்பதனால் யானும்
அறிந்த தளிக்கின்றேன் யானவற்றுள் யாதும்
அறியாத உண்டேல் அளி!
. அதற்கு மறுப்புண்டோ !!!
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com
நீங்களும், சுப்புரத்தினம் ஐயாவும் சேர்த்து எங்கேயோ போயிட்டீங்க!
படித்து பயன் பெற்றேன்!
ஜீ! களவும் கற்று மற பிரச்சினை முடியாது போல. நாளையும் ஒரு கட்டுரை இதைப்பற்றி வெளியிடுகிறேன். பார்க்க!
முன்னோர் மொழிபொருளே அன்றியவர் மொழியும்
பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கும் முன்னோரின்
வேறுநூல் செய்துமெனும் மேற்கோளில் என்பதற்கும்
கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்!
என்னும் நன்னூற் பாக்கிணங்க தங்களின் கருத்தோடு உடன்பட்டேன் யான்
கலவும் கற்று மற - இன்று பொருள் உணர்ந்தேன் அமுதா. நன்றி.
வாங்க குமரன்! இக்கட்டுரைக்கு அடுத்தக் கட்டுரையையும் படியுங்கள். அதில் முழுமையாகப் பொருள் காண முனைந்துள்ளேன்.
கருத்துரையிடுக