வெள்ளி, 13 ஜூன், 2008

பெண்ணைப் படைத்த பிரம்மன்!

பெண்ணைப் படைக்க எண்ணிய பிரம்மன் தான் படைத்த படைப்புகளை ஓர்முறை பார்வையிடுகிறான். இந்த மலரிலிருந்துப் பெண்ணைப் படைக்கலாமா? வேண்டாம். மாலைவந்தால் மலர் வாடிவிடும். கொடியிலிருந்துப் படைக்கலாமா? வேண்டாம். கொம்பில்லையேல் கொடிகள் நிற்கமுடியாது. நிலவிலிருந்துப் பெண்ணைப் படைத்தாலென்ன? வேண்டாம். வளர்ந்துப் பெருகியும் தேய்ந்துத் தொலைந்தும் போய்விடுவாள்.

தன் இறுதிப் படைப்பைக் கவின் நயத்தோடு படைத்துவிடலாம் என்றால் முடியவில்லையே! என்று கவலைகொண்டவன் முன்னால் ஓர் மின்னல் வெட்டுகிறது.

கணமும் தாமதிக்காத கடவுள் கைகளால் மின்னலைத் தாவிப் பற்றிப் பெண்ணாய்ச் சமைத்துவிடுகிறான். பெண்ணைப் படைத்த பேரிறைவனுக்கு பின்புதான் புத்திவந்தது.

வெட்டி மறைகிற மின்னலைப்போல் பெண்ணும் மறைந்துவிட்டால் என்னசெய்வது. தன் படைப்பு ஆணுக்குப் பயன்படாமலே போய்விடுமே! என்று வருத்தம் கொண்டவன் கண்களில் ஒன்றைப்போல் தோற்றம் கொண்ட இரு மேரு மலைகள் தென்படுகிறது.

பேரானந்தம் கொண்ட பேரிரைவன் இம்மலைகளைப் பெண்ணின் மார்பில் பாரமாக ஏற்றிவிட்டாள் மின்னலைப் பொல் வெட்டி மறையாமல் இருப்பாளல்லவா! -என்று கருதியவன் அப்படியே செய்துவிடுகிறான்.

இப்படியோர் கற்பனை செய்து கவிபாடி அரங்கேற்றம் செய்கிறான் அதிவீர இராம பாண்டியன். (இவன் ஓர் மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது)

குழுமியிருந்த அவைப்புலவர்களெல்லாம் ஆர்ப்பரித்து ஆராவாரம் செய்கிறார்கள். அதிவீர இராம பாண்டியருக்குப் பெரும் மகிழ்ச்சி தன் கற்னையைப் புலவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்களே என்று.

இருகாறும் அமைதியாயிருந்த ஓர் புலவன் எழுந்தான். மன்னா! தாங்கள் இந்நாட்டிற்கே மன்னனாய் இருக்கலாம். தேடிவந்துக் கவிபாடி யாசிக்கும் புலவர்களுக்குக் கைநிறைய வாரிவழங்கும் வள்ளலாக இருக்கலாம். அதற்காக இப்படியா பொருட்பிழையோடு கவிபாடுவது? பெண்ணாகப் படைத்த மின்னலின் மாரில் மலைகளைப் பாரமாக இயன்றினான் என்கிறீர். மின்னல் வெட்டுகிற வேகத்தில் மலைகளைத் தூக்கியெறிந்து விடாதா? மலைகள் தூக்கியெறியப் படாதிருக்கத் துளையிட்டு மரையிட்டிருக்கிறானா? அல்லது ஆணிதான் அடித்திருக்கிறானா? -என்று கேட்டுக் குடைந்தெடுத்துவிட்டான் அப்புலவன்.

அதிவீர இராம பாண்டியருக்கு ஒரே மனக்கவலை. புலவனின் கேள்விகளுக்குத் தன்னால் பதில் கூற இயலவில்லையே என்கின்ற அவமானம் வேறு. அவையைக் கலைத்துவிட்டு அந்தபுர மண்டபத்தில் அமர்ந்திருக்கிறான் மன்னன். அப்பொழுது அவன் மனைவியருள் யவ்வனப் பருவ மங்கையொருத்தி அவன்முன் வருகிறாள்.

மன்னா! ஏன் கவலையுடன் காட்சி தருகிறீர்? என்னிடம் சொல்லலாகாதா? என்கிறாள் தேவி.

அவையில் நடந்ததை அவளிடம் கூறி அமைதி கொள்கிறான் மன்னன்.

தங்களுக்குத் தெரியாத தொன்றுண்டா? தங்களால் கூடவா அப்புலவனின் கேள்விக்குப் பதில் கூற இயலவில்லை?

தங்களுக்குத் தெரியாத தொன்றுண்டா என்றால் உனக்குத் தெரியும் என்றல்லவா பொருள். இதன் பொருள் உனக்கத் தெரியுமா? உடனே சொல் என்கண்ணே! என்கிறான் மன்னன்.

சொன்னால் மட்டும் போதுமா? காட்சியாகவே காட்டிவிடவா? என்ற தேவி மார்க் கச்சையை அவிழ்த்துக் காட்டுகிறாள். இப்பொழுது புரிகிறதா? மலைகளைப் பாரமாக இயற்றிய இறைவன் துளையிட்டு மறையிட்டு ஆணிகளையும் அடித்திருக்கிறான் என்பது! மாரோடு மலைகளை இரண்டற இருத்தும் ஆணிகளின் கொண்டைகளன்றோ இவ்விரு முலைக்காம்புகளும்! என்கிறாள்.

இத்துனைப் பொருட்செறிவு மிகந்த அதிவீர இராம பாண்டியனின் அப்பாடலைப் பார்ப்போமா?

வாய்ந்த மின்னை மடந்தைய ராக்கிவின்
போந்தி டாமலன் றோமலர்ப் புங்கவன்
சாந்த ணிந்த அம்மணிக் குன்றென
ஏந்து வெம்முலைப் பாரம் இயற்றினான்!

அகரம்.அமுதா

6 கருத்துகள்:

ஒளியவன் சொன்னது…

பாடலைப் படைத்த பாண்டியனுக்கு மனைவி சொல்லித்தான் இந்த விடை தெரிய வேண்டியிருந்திருக்கிறது!!!

அழகு.

அகரம் அமுதா சொன்னது…

வாங்க ஒளியன்! சும்மா இதெல்லாம் கற்பனைதானே!

லேகா சொன்னது…

அருமையான தமிழ் இலக்கியம் குறித்த கட்டுரைகள்..வலைத்தளங்களில் தமிழ் இலக்கியம் குறித்த பதிவுகள் மிக குறை..உங்கள் பதிவுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது.வாழ்த்துக்கள்

பிரியமுடன்
லேகா
http://yalisai.blogspot.com/

அகரம் அமுதா சொன்னது…

தங்களின் பாராட்டுக்களுக்கென் நன்றிகள் திரு லேகா அவர்களே! தங்களின் பாராட்டு எனக்கு ஊக்கமளிக்கிறது. அடிக்கடி இவ்வலைப்பக்கம் வருமாறு வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

குமரன் (Kumaran) சொன்னது…

நல்ல கற்பனை. அறிமுகத்திற்கு நன்றி அகரம்.அமுதா. பாடலுடன் கூட வரும் கதையும் சுவையாக இருக்கிறது. 'மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து மேகத்தில் துடைத்துப் பெண்ணென படைத்து...' பாடலை இன்று தான் கேட்டுக் கொண்டிருந்தேன். பாடலை எழுதியவருக்கும் இந்தச் சிருங்காரச் சுவையுடன் கூடிய செய்யுள் தெரிந்திருக்கும் போலிருக்கிறது. :-)

அகரம் அமுதா சொன்னது…

நன்றி திரு குமரன் அவர்களே! என் வெண்பா எழுதலாம் வாங்க தளத்திலும் வந்து ஈற்றடிக்கு வெண்பா எழுத வேண்டுகிறேன்.