திங்கள், 23 ஜூன், 2008

களவும் அகற்றி மற!

இன்று மாலை என்னாசான் பாத்தென்றல் முருகடியானைப் பார்க்க நேர்ந்தபோது பலவும் பற்றிக்கேட்டறிந்த பின் "களவும் கற்று மற" இப்பழமொழி உணர்த்தும் பொருள் யாது? என்ற வினாவை எழுப்பினேன்.

இப்பழமொழி துறவு நிலையடைபவர்க்காக உரைக்கப் பட்டதென்றும் அதற்கான காரணங்களையும் உரைக்கத் துவங்கினார்.

சைவ, வைஷ்னவ மதக்கோட்பாடுகளின் படி ஒருவன் இளமைப்பருவத்தில் துய்க்க வேண்டிய இன்பங்களையெல்லாம் துய்த்துவிட்டு உலகப் பற்றைவிட்டு துறவு பூணும் கால் இல்லாளுடன் கூடிய களவியல் இன்பம் மனதின் ஓரம் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆக உலகப் பற்றோடு சேர்த்து களவும் மற (உம்-தொகா நிலையில் உள்ளதை நன்கு கவனிக்கவும். களவு என்பதோடு நிறுத்தாமல் களவும் எனக்குறிக்கப் படுவதால் முதுமைப்பருவத்தில் தொடரத்தகாத பிறபழக்க வழக்கங்களோடு சேர்த்துக் களவையும் மற என்பதையே உம்-உணர்த்துவதாகக் கூறினார்.)

பிறகு அவரே அவரின் கருத்தை மாற்றி என் நூலறிவிற்கு (சிங்கையில் அவரளவிற்கு மரபிலக்கியங்களைக் கற்றோர் இல்லை) "களவும் கற்று மற" என்னும் பழமொழியே தவறு எனவும் கருதுகிறேன் என்றார். ஏன் என்றேன்.

"நீங்கள் என்னிடம் இலக்கணப்பாடங்களைப் படித்துக்கொண்டீர். இவ்விலக்கணப்பாடத்தை இனி நீங்களே நினைத்தாலும் மறக்க முடியுமா?" என்றார்.

"அதெப்படி முடியும்?" என்றேன்.

"நீங்கள் பால வயதில் பள்ளியில் கற்றுக்கொண்ட கல்வியையே உங்களால் நீங்களே நினைத்தாலும் மறக்க முடியாது என்கிறபோது பருவ வயதில் பள்ளியறையில் கற்ற கலவியை மட்டும் எப்படி மறக்க முடியும்?" என்றார்.

யாம் மௌனமானோம்.

"கல்வி என்பது மனதோடு தொடர்புடையது. கலவி என்பது உடலோடு தொடர்புடையது. உடல்தளரும் கால் உங்கள் மனதைவிட்டு களவியல் தானாகவே அழிந்துவிடும். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தானாய் அழிந்துவிடக்கூடிய களவியலை நீங்கள் வலுவில் மறக்க நினைப்பது இயற்கைக்கு மாறுபட்டதல்லவா?"

ஆகவே "களவும் கற்று மற" திரித்துக் கூறப்படும் மொழியாக இருக்கவேண்டும். மூலம் "களவும் அகற்றி மற" என்பதே சரியாக இருத்தல் வேண்டும் எனக்கருதுகிறது என் நூலறிவு என்றார்.

"ஆதாரம் உளதா?" என்றேன்.

"நீர் அன்றாடம் நல்லதை மட்டுமே பார்க்கவேண்டும். முடியுமா?" என்றார்.

"அதெப்படி? ஒரு காட்சியைப் பாத்த பிறகல்லவா அது நல்ல காட்சியா கெட்க காட்சியா என்பதைத் தீர்மானிக்க முடியும்" என்றேன்.

"நீங்கள் தெருவில் சென்று கொண்டிருக்கிறீர்கள். எதிரில் ஒருவன் இளநீர் அருந்துகிறான். மேலும்செல்கிறீர் ஒருவன் கள்ளருந்திக் கொண்டிருக்கிறான். இக்காட்சிகளில் முன்னது நற்செயல் பின்னது தீச்செயல் இவ்விரண்டு காட்சிகளும் விழியின் வழியாக இதயத்தில் சென்று பதிவாகி இருக்குமல்லவா?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"நீங்கள் அன்றாடம் பார்க்கும் காட்சிகளால் வசீகரிக்கப் படுகிறீர்கள். இளநீர் குடித்தக் காட்சி உங்கள் சிந்தையில் மேலோங்கி நிற்குமானால் நீங்கள் இளநீர் அருந்த விழைவீர்.

கள்ளருந்தும் காட்சி மேலோங்கி நிற்குமானால் கள்ளருந்தவே ஆசை கொள்வீர். இது தீச்செயல். இது வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய செயல். இது மனதை விட்டு அகற்றப்படவேண்டிய செயலல்லவா?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"களவுசெய்வது தீச்செயல்தானே? அதுபோல் சூதாடல் பொல்லாங்குரைத்தல் கொலைபுரிதல் பொய்யுரைத்தல் பிறன்மனை நோக்கல் இவையனைத்தும் தீச்செயல்தானே?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"நீங்கள் அன்றாடம் வாழ்வில் காட்சிகளாகவும் கேள்வி நுகர்வாலும் அறிகின்ற இத் தீச்செயல்கள் உங்கள் மனதில் தங்கினால் அத்தீச்செயலால் வசீகரிக்கப்படுவீர். ஆதலாம் அவற்றைக் கண்டமாத்திரத்தில் மனதைவிட்டு அகற்றி மறந்துவிடுங்கள்" என்பதாம்.

"களவு என்று மட்டும் சொல்லாது களவும் என்று கூறப்படுவதால் திருடுதல் போன்ற தீச்செயல்களாகிய பிறசெயல்களோடு இக்களவு என்னும் தீச்செயலையும் கண்ணால் காணவோ காதால் கேட்கவோ நேர்ந்தால் மனதில் அவற்றைத் தங்க விடாது அகற்றி மற என்பதை உணர்த்துவதாகக் கொள்ளலே சாலும்" என்றார்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு -என்னும் வள்ளுவன் வாக்கிற் கிணங்க என்னாசான் பாத்தென்றலார் சொல்லுள் மெய்பொருள் உள்ள காரணத்தாலும் அய்யா சுப்பு ரத்தினம் அவர்களின் கூற்றிலும் மெய்ப்பொருள் உள்ள காரணத்தாலும் இவ்விருவரின் கருத்தோடும் யாம் உடன்படுகிறோம்.

ஏனெனில் யாமோ தேரா அறிவுடன் இருக்கிறோம். இவ்விரு தெளிந்தார்கண் ஐயுறுதல் தீரா இடும்பை தரும் ஆதலால்,

முன்னோர் உரையின் முடிபுஒருங்கு ஒத்து
பின்னோர் வேண்டும் விகர்ப்பம் கூறி
அழியா மரபைச்செய்தல் எம்கடன் என்பதாலும் இவ்விருவரின் முடிபு ஒருங்கு ஒத்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

அகரம்.அமுதா

10 கருத்துகள்:

sury siva சொன்னது…

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்றார் வள்ளுவர்.

ஆக, தீய என எதை உணர்கிறோமோ அதனை மனதிற்குள்ளே புகாமல் அகற்றிவிடு
என்கிறார் தங்கள் ஆசான்.

//களவு என்பதோடு நிறுத்தாமல் களவும் எனக்குறிக்கப் படுவதால் முதுமைப்பருவத்தில் தொடரத்தகாத பிறபழக்க வழக்கங்களோடு சேர்த்து களவையும் மற என்பதையே உம்-உணர்த்துவதாகக் கூறினார்.)//

அருமை. அற்புதமான விளக்கம்.
just fantastic.

களவு மட்டுமல்ல, கலந்திருக்கும் ( நன்மை, தீமை இரண்டும் கலந்திருக்கும்) அனைத்தையுமே
நீங்குதல் அறன் என எடுத்துச் சொல்கிறார் தங்களது ஆசான். போற்றத்தக்க சொற்கள் கொண்ட‌
அறிவுரை மட்டுமல்ல, இவற்றினை எடுத்துரைத்த தங்களது ஆசானைப் பெருமிதத்துடன்
எண்ணி அவர் காட்டிய வழியில் நடப்பதும் கடமை.

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்றார் வள்ளுவர்.

ஆக, தீய என எதை உணர்கிறோமோ அதனை மனதிற்குள்ளே புகாமல் அகற்றிவிடு
என்கிறார் தங்கள் ஆசான்.

நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் தூற்றும் பழியாகும் - எல்லாம்
உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ
புணரும் ஒருவர்க் கெனின்? 144

முடிவில்,

மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்து அறன்
ஆகுல நீர பிற.

களவோ கலவோ, மனமதில்
மாசு படியாமல் கவனமாக இருத்தல் வேண்டும். அதுவே அறன்.

எவன் ஒருவன் அறத்தினைப் பாதுகாக்கின்றானோ, அவனை
அறம் பாதுகாக்கும் என்கிறது மறை.

எது அறம் என போதிப்பவர் ஆசான். குரு எனும் சொல்வர்.
கு என்பது இருள். ரு என்பதற்கு அதனை நீக்குபவர் எனும் பொருளாம்.
இருள் மட்டுமல்ல, மருளை அழிப்பவரும் ஆசானே.
தக்க ஒரு ஆசான் கிடைத்துவிடின்
தகாத மாசுகள் வந்திடுமோ ?

தங்கள் ஆசான் அவர்கட்கு எனது பணிவான
வணக்கத்தைச் சொல்லிடவும்.
நன்றி

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com

பின் குறிப்பு. : இதை முன் குறிப்பாகக்கூட கொள்ளலாம். மிகவும் அழகாக, துல்லியமாக‌
வெண்பா எழுதும் நீங்கள் தங்கள் ஆசான் அவர்களையும் தமிழையும் மையப்பொருளாக‌
வைத்து பாமாலை ஒன்று ( ஒரு நூறு வெண்பாக்கள் மட்டுமே ) எழுதத் துவங்கக்கூடாது !
அட்வான்ஸ் கங்க்ராட்ஸ்.

அகரம் அமுதா சொன்னது…

////பின் குறிப்பு. : இதை முன் குறிப்பாகக்கூட கொள்ளலாம். மிகவும் அழகாக, துல்லியமாக‌
வெண்பா எழுதும் நீங்கள் தங்கள் ஆசான் அவர்களையும் தமிழையும் மையப்பொருளாக‌
வைத்து பாமாலை ஒன்று ( ஒரு நூறு வெண்பாக்கள் மட்டுமே ) எழுதத் துவங்கக்கூடாது !
அட்வான்ஸ் கங்க்ராட்ஸ்.////

கண்டிப்பாக அப்படி ஓர் ஆசை என்னுள் இருந்ததும் இருப்பதும் உண்மை. அம் மலைக்குப் பாமாலை கட்டிச் சூடுகிறன்ற ஆற்றல் இம்மடுவிற்கு இன்னும் வரவில்லை. ஆயினும் அப்பணியைப் பன்வரும் காலங்களில் நிறைவேற்றுவேன். அப்பணியைச் செய்யுமாறு என்னை வேண்டிய அய்யா சுப்பு ரத்தினம் அவர்களுக்கு என் பணிவு கலந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

கவிநயா சொன்னது…

உதாரணத்துடன் விளக்கியிருப்பது நன்று, அகரம்.அமுதா. சுப்புரத்தினம் ஐயாவும் மிக விளக்கமாகவும் அழகாகவும் எழுதி விட்டார்.

தங்கள் ஆசானுக்கும், ஐயாவிற்கும் வணக்கங்களும், நன்றிகளும்!

அகரம் அமுதா சொன்னது…

நன்றி கவிநயா! தங்களின் வணக்கங்களை அவர்களிடம் தெரிவித்து விடுகிறேன்.

jeevagv சொன்னது…

தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால் பாலௌ மட்டும் பருகுமாமே அன்னப்பறவை - அதுபோல, அல்லவை நீக்கி நல்லவை மட்டும் போற்ற இயன்றால் நல்லதுதான்.

அகரம் அமுதா சொன்னது…

ஆம் ஜீவா!

குமரன் (Kumaran) சொன்னது…

தங்கள் ஆசானின் விளக்கம் நன்றாக இருக்கின்றது அமுதா.

கூதாடல் என்றால் என்ன?

அகரம் அமுதா சொன்னது…

கழுகு பார்வை அய்யா உமக்கு! பிழையைச் சுட்டியமைக்கு என் நன்றிகள். அடிக்கடி வாருங்கள்...

குமரன் (Kumaran) சொன்னது…

அடடா. அது எழுத்துப்பிழையா? தெரிந்திருந்தால் சொல்லியிருக்க மாட்டேனே. :-)

கூதாடல் என்று புதிதாக ஒரு சொல் இருக்கிறதே என்று கேட்டேன். அவ்வளவு தான்.

அகரம் அமுதா சொன்னது…

குமரன் பிழைகளைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். அதுதானே வளர்ச்சிக்கு வழிவகுக்கும்? ஆதலால் பிழையிருப்பின் நிச்சயமாகச் சொல்லவும் நன்றி