திங்கள், 30 ஜூன், 2008

கேள்வி!

ஒருவன் எவ்வளவுதான் கல்வியறிவு படைத்தவனாக இருப்பினும் நுட்பமான கேள்வியறிவில்லை யென்றால் அவன் பேச்சு ஆழமுடைத்தாயும் கேட்போர் போற்றும் தன்மையத்தாயும் அமையப்பெறாது.

ஒருவன் ஆயிரம் நூல்களைத் தேடிப் படிப்பதைவிட கற்றோர் உரையைப் கேட்பது சாலச் சிறந்தது. இதை உணர்ந்தவரும் பழமொழி நானூற்றுப் பாடல்:-

உணர்க்கினிய இன்நீர் பிறிதுழியில் என்னும்
கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார் -கணக்கினை
முட்டப் பகலும் முனியா தினிதோதிக்
கற்றலின் கேட்டலே நன்று!

புத்தகப் புழுவாய் இருத்தல் சிறப்பெய்திவிடாது. ஆன்றோரும் சான்றோரும் ஆற்றும் நல்லுரையைச் செவிமடுப்பவனாதல் சிறப்பு எனக்கூறிக் கேள்வி ஞானத்தை ஊக்குவிப்பதாக அப் பாடல் அமைந்துள்ளது.

ஒருவன் தன் வறுமையின் காரணமாகக் கல்வியறிவில்லானாக இருக்க நேரினும் கேள்வி அறிவு படைத்தவனாய் விளங்கவேண்டும். அக்கேள்வி அறிவு அவன் வாழ்வுக் கடலைக் கடக்கக் கலமாய் அமையும். பிறர் ஆற்றும் சொற்பொழிவுகளை அறிவுரைகளைக் கேட்டின்புறாக் காதுகள் கேட்கும் தன்மையுடைத்தாயினும் செவிட்டுத் தன்மையின் நேர் என்கிறார் வள்ளுவர்.

செவிச்சுவையுணராது நாச்சுவைமேல் மாலுற்று வாழ்வோர் இருந்தென்ன? இறந்தென்ன? என்ற வினாதொடுக்கும் வள்ளுவர் உணவுண்ண கால வரையறை யுள்ளது போல் செவிக்கின்பம் ஈந்து வாழ்வைச் செம்மையுடைத்தாய் மாற்றும் நல்லுரைகளைக் கேட்கக் காலவரையறையே கிடையாது.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றிற்கும் ஈயப் படும்! என்றுரைக்கிறார்.

கேள்வியறிவைப் பெறல் நன்று என்றான பிறகு எதைக் கேட்பது எதைவிடுவது என்கிற ஐயம் ஏற்படுவது இயல்பே. கேட்பன வற்றுள் நல்லவையையே கேட்கவேண்டும். தீயவற்றைக்கேட்க நேரின் செவிடாயிருத்தல் சாலும். குறிப்பாய்ப் “பிறர்மறை யின்கண் செவிடாய்” -பிறர் ரகசியங்களைக் கேட்டநேரும்போது செவிடனைப்போல் இருத்தல் நலம் என்கிறார் நாலடியார்.

நல்லவற்றைக் கேட்பது என்றான பிறகு அந் நல்லவற்றுள் சிறிது பெரிது என்றா பாகுபாடில்லை. எத்துணைச் சிறியதாயினும் நல்லவற்றையே கேட்கவேண்டும். அஃது எத்துணைச் சிறிய தாயினும் அதைக் கேட்போனுக்குச் சிறந்த பெருமையையே சேர்க்கும். ஆகவேதான் வள்ளுவர்:-

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்! -என்கிறார்.

கேட்பனவற்றுள் நல்லவற்றைக் கேட்டாகிவிட்டது. இதனால் ஆவதன் பயனென்ன?

மூப்புவந்தக்கால் ஊண்றுகோல் துணை புரிவதைப் பொல் ஒருவனது கேள்வியறிவு அவனக்கு எக்காலும் துணைபுரிகிறது. ஆக நுட்பமாக ஆராய்ந்தறிந்து நிறைந்த கேள்வியை உடையவர் தவறாய் ஒன்றை அறிந்த விடத்தும் அறியாமை பொருந்திய சொல்லைச் சொல்லமாட்டார்.

பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

அகரம்.அமுதா

18 கருத்துகள்:

sury siva சொன்னது…

// கேட்பன வற்றுள் நல்லவையையே கேட்கவேண்டும். தீயவற்றைக்கேட்க
நேரின் செவிடாயிருத்தல் சாலும். //

துல்லியமாகச் சொல்லி விட்டீர்கள். எனத்தானும் நல்லவை கேட்க என்று
வள்ளுவன் உறுதியாகவும் இறுதியாகவும் சொல்லிவிட்டார். நான் மறைகளில்
முதல் மறையான ரிக் வேதமும்
இதுவே சொல்கிறது.

ஆ நோ பத்ராஹா ருதவ; யந்து விஷ்வதோ !
( Let Noble thoughts come to us from every source )

நிற்க.

கேட்பன என்பது இருபொருள் படும். ஒன்று ask
இன்னொன்று listen

கல்வி கற்றவன், தாம் கற்றவற்றில் எழும் ஐயங்க‌ளை யாரிடம் எப்போது
கேட்டறியவேண்டும் ? கேட்டபின், அவர் பதில் உரைக்கும்போது,
எத்துணை உன்னிப்புடனும், கவனத்துடனும், திறந்த மனத்துடனும்
அவர் சொல்வதைக் கேட்கவேண்டும் ? இவை இரண்டுமே கேள்வியின்
அங்கங்கள் தான். கேள்வி ஒரு வேள்வி எனவே சொல்லலாம்.

கற்றவன் தான் கற்றதை கேள்வி எனும் உரைகல்லில் உரைத்துப்பார்த்தபின்
தான் கற்றதன் மதிப்பை உணர இயலும்.

எத்தனையோ கேட்கிறோம். அத்தனையும் மனதில் உள் வாங்கிக்கொள்கிறோமா? தெரியவில்லை. கண்கள் மூடி மூடித் திறக்கின்றன. ஆனால்,
செவிகளோ திறந்தே உள்ளன.
கண்களை நன்கு மூடிக்கொண்டால் ஒன்றும் தெரியாது.
காதுகளை மூடிக்கொண்டாலும், கேட்பதைத் தவிர்க்க இயலாது.
கண்களைப் பயன்படுத்துவது நமது decision.
காதுகளைப் பயன்படுத்துவதில் நமது sense of discrimination .
இதனால் தான்,
செவி பெற்றதன் பயன் என்ன என விளக்குவார் முனைப்பாடியார்.

பண் அமை யாழ்குழல் கீதமென் (று) இன்னவை
நண்ணி நயப்ப செவியல்ல‍ = திண்ணிதின்
வெட்டெனச் சொல்னீக்கி விண் இன்பம் வீட்டொடு
கட்டுரை கேட்ப செவி.

( யாழும் குழலும் விரும்பிக் கேட்பன செவி அல்ல.
வானுலகமும் வீடும் பயக்கும் உறுதிபடச் சொல்லும்
சொற்களைக் கேட்பனவே செவியாம். )

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

அகரம் அமுதா சொன்னது…

மிக்க மகிழ்ச்சி அய்யா! அழகிய செய்திகளைத் தொகுத்தளித்தமையோடு இறுதியில் முத்தாய்ப்பாய் வெண்பாவும் விளக்கமும் அளித்திருப்பது அருமை! இன்று ஓர் அழகிய வெண்பாவைத் தங்களால் தெரிந்துக்கொண்டேன். நன்றி!

கவிநயா சொன்னது…

கேள்வி குறித்து தாங்களும் சுப்பு ஐயாவும் நன்றாக அலசி விட்டீர்கள். மூன்று குரங்குகளில் ஒன்று சொல்வதும் அதுதானே. நல்லவற்றையே கேட்டு நலம் பெறுவோம். நன்றி அகரம்.அமுதா.

அகரம் அமுதா சொன்னது…

நன்றி கவிநயா அவர்களே! இனிவரும் கட்டுரைகளைப் படிக்கும் போது அக்கட்டுரைக்குத் தொடர்புடைய இலக்கியப்பாடல்கள் தங்களுக்குத் தெரிந்திருப்பின் பின்னூட்டத்தில் குறிப்பிடவும். நன்றி!

கவிநயா சொன்னது…

அகரம்.அமுதா. நீங்க வேற. தெரிஞ்சா சொல்ல மாட்டேனா :) எனக்கு அந்த அறிவெல்லாம் இல்ல. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாச்சும் படிக்கிறேன்.. :)

sury siva சொன்னது…

கவி நயா கூறுகிறார்:

// மூன்று குரங்குகளில் ஒன்று சொல்வதும் அதுதானே//

இங்கேயும் மூன்று பேர்தானே இருக்கிறோம் !
wonderful ! அது சரி ! உங்கள் ஞாபக சக்தி அபாரம் !
அது எப்படி நான் சென்ற பிறவியில் என்ன சொன்னேன் என்று exact
நினைவு வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.!

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. "

குரங்கு என்று சொன்ன உடன் தான் நினைவு
வருகிறது. குரங்குக் கதை ஒன்று சில நாட்களுக்கு முன் படித்தேன். நீங்களும்
இதை ஒன்று, இரண்டு, என்று பத்து சொல்வதற்குள்
படித்து முடியுங்கள். ஆமாம். ஃபாஸ்டா படிக்கவும்.
http://www.composetamil.com/tamil/content.aspx?typeid=7&Contentid=23

நீங்கள் பத்து எண்ணி அந்தக் கதையைப் படிப்பதற்கு முன்
அகரம் அவர்கள் அக்கதையின் உட்பொருள் பற்றி ஒரு
வெண்பா எழுதியிருப்பார்கள்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

அகரம் அமுதா சொன்னது…

தாங்கள் அளித்துள்ள சுட்டியில் சென்று பார்த்தேன். தாங்கள் குறிப்பிட்டுள்ள கதையை என்னால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கதையின் தலைப்பைக் குறிப்பாய்த் தெரியப்படுத்தினால் உதவியாயிருக்கும்.

அப்படியே வெண்பா எழுதலாம் வாங்க பகுதியில் 12ம் பாடத்தின் பின்னூட்டில் நண்பார் ஜீவா அவர்கள் ஓர் வினாயெழுப்பியுள்ளார். இசையுடன் தொடர்புடையது என்பதால் தாங்கள் பதிலுரைத்தால் நன்றாயிருக்கும். நன்றி!

///////கவி நயா கூறுகிறார்:

//மூன்று குரங்குகளில் ஒன்று சொல்வதும் அதுதானே//

இங்கேயும் மூன்று பேர்தானே இருக்கிறோம் ! அது சரி ! உங்கள் ஞாபக சக்தி அபாரம் !
அது எப்படி நான் சென்ற பிறவியில் என்ன சொன்னேன் என்று
நினைவு வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.!//////

நம்மால் அய்யா சுட்டிய கதைக்கு இக்கால் வெண்பா புனைய முடியவில்லை எனினும் அய்யாவினுடைய இந்த பின்னூட்டத்தைப் படித்ததும் கவிநயா பதைத்து மறுமொழி உரைப்பார்களே! அதையே வெண்பாவில் அவர்கள் எழுதினால் எப்படி இருக்கும்?

நனையுரை நல்கி நலமருள் மூத்தோர்
தனைநான் கவியெனச் சாற்ற -முனையேன்;
நனயம் உணர்ந்து நகைக்கவோ இஃது
நனிபொருள் கண்டீர் நயந்து?

நனை -தேன்
கவி -குரங்கு
நனயம் -நன்னயம்
நனி -மிகுதியான

என்னகவிநயா நான் எழுதியது சரிதானே?

sury siva சொன்னது…

http://www.composetamil.com/tamil/content.aspx?typeid=7&Contentid=23
-----------------------------------------------------------------------------


கொம்பேறித் தாவும்குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது பரிணாம வளர்ச்சி என்று பேசப்படுகின்றது.

மத்தியப் பிரதேசத்தில் சின்கோனா மரங்கள் அடர்ந்த ஒரு காட்டினில் உடான் உறாங் குரங்குகள் பெருவாரியாக வாழ்ந்துவந்தன. அந்த மரங்களின் மீது சாடித் தாக்கிய பெருவண்டுக் கூட்டத்தின் தொல்லை சின்கோனா மரங்களை அழித்துவிடுமொ என்று கருதி அரசு தக்க பாதுகாப்பு நடவைக்கை மேற்கொண்டது.

சின்கோனா பூச்சி மருந்து தெளிக்கும் பிரிவில் பணியாற்றும் சந்தோஷ் ஒரு நடுநிலையாளன், உயிர்களின் மீது அன்பு கொண்டவன். பொங்கல் அன்று பூச்சி மருந்து தெளிக்கும் டஸ்டர் ஸ்ப்ரேயர் கூர் அம்புகள் ஆகியவற்றை தயார் நிலையில் எடுத்துக்கொண்டு அவன் தன்னுடை இலக்கை நோக்கிப் புறப்பட்டான்.

அவன் துணைவி மதியத்திற்கும், மாலைப் பொழுதுக்கும் சேர்த்து உணவு சமைத்து பொட்டலம் கட்டி ஒரு பையினில் வைத்து ஒரு குவளையில் நீரும் கொடுத்து அனுப்பியிருந்தாள். அதிகாலையில் ஐந்து மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பியவன் ஏழு மணியளவில் வனப்பகுதியின் மையத்தை அடைந்தான்.

கொண்டு சென்றிருந்த பூச்சி கொல்லி மருந்தினையும் இதர தளவாடங்களையும் தன்னுடைய அருகே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில் குரங்குக் கூட்டம் தொந்தரவு செய்து விரட்டத்துவங்கும். கிளையில் இடையில் தரையிலிருந்து எடுக்கும் உயரத்தில் இருந்த பொந்திடை மருந்துகளையும் மற்றொரு பொருந்திடை உணவினையும் நீரினையும் வைத்துவிட்டுப் பணியினைத் துவங்கினான்.

நண்பகல் பன்னீரண்டு மணி வரை ஓயாது தொடர்ந்து மருந்தினைத் தெளித்துக்கொண்டே வேறு ஒரு மைதானம் போன்ற வெளி கொண்ட மரக்கூட்டத்திடை நின்றான். அங்கிருந்து பார்த்தால் ஒரு வினோதமான்ன விரோதமான செயற்பாடு நிகழ்ந்திருக்கின்றது என்பதை உணார்ந்தான்.

அவன் உணவுப்பை வைத்திருந்த மரத்தின் அடியில் ஒரு உறான் உறாங் குரங்குக் குட்டி வாயில் நுரை தள்ளிக் கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததைப் பார்த்தான். ஒருவாறு சூழ்நிலை என்னவென்பதைப் புரிந்து கொண்டு வெகு வேகமாக ஓடி அந்தக் குரங்குக் குட்டியின் அருகே சென்று அதனைப் பார்க்கவெண்ணி கால்கள் நிலத்தில் பாவாமல் ஓடிவந்தான்.

பூச்சி கொல்லி மருந்தினை எடுத்து ருசி பார்த்த அந்த குரங்குக் குழந்தையின் வாயினில் இருந்து வந்த நெடி அது உண்டு சில நிமிடங்கள் ஆகிவிட்டன என்பதை அவனுக்கு விளக்கியது. சிவப்புக் குப்பியினில் உரிய விஷ எதிர்ப்பு மருந்து இருப்பதை எடுத்து குட்டியிடம் நீரில் குழைத்துத் தந்தால் பிழைத்துக் கொள்ளும்.

அந்த குப்பியினை எடுக்க பொந்திடை செல்ல எத்தனித்த சந்தோஷ் தான் எப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தான். துடித்துக் கொண்டு தலை சோர்ந்து தொங்கி கால்கள் பரப்பி தரையில் கிடக்கும் குட்டியினை வைத்த கண் வாங்காமல் ஆயிரம் குரங்குகள் மரத்திலிருந்து- இவனுடைய ஒவ்வோரு செய்கையினையும் பார்த்துக் கொண்டிருந்தன. உருட்டி விழிக்கும் அக்கூட்டத்தின் கடுமையான விழிகள் எப்பவும் அவனைச் சுட்டெரிக்கும் என்பது அவனுக்குப் புலனாயிற்று.

பசலையாகப் படர்ந்து தரையோடு வெண் நுரை கக்கிய குழந்தையின் அருகே அவன் ஒரு அடி எடுத்துவைத்தால், மரங்களிலிருந்து பெருங்கூட்டம் ஒரு அடி தரையினை நோக்கி இறங்கியது.

சிவப்புக் குப்ப்யினைக் கையில் எடுத்துக்கொண்டு அதன் வெண்மயான கரைசலை எடுத்துக் கையில் தேய்த்துக்கொண்டு," ஏ குரங்குகளே! உங்கள் சேய் தவறுதலாக விஷம் உண்டுவிட்டது. அதனைக் காப்பாற்றவேண்டுமாயின் இந்த மருந்தினை அக்குட்டி அருந்த வேண்டும். உடனேயே அருந்த வேண்டும். என்னை அனுமதியுங்கள். மறுத்தால் அது இறந்துவிடும். ஒத்துழையுங்கள்" என்று வாய்விட்டுக் கதறிக் கொண்டே குட்டியை நெருங்க நெருங்க குரங்குக் கூட்டமும் வட்டத்தைச் சுருக்கிக் கொண்டே குட்டியின் உடல் கிடக்கும் இடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது.

கையில் உள்ள தடுப்பு மருந்தினை நான்கு திசைகளிலும் வழுக்கி இறங்கிக் கொண்டிருக்கும் குரங்குக் கூட்டத்திடம் காட்டியவாறு கண்ணில் இரக்கமும் கருணையும் தேக்கி பரபரப்புடன் முகத்தில் வியர்வை மேலிட அங்குலம் அங்குலமாக குட்டியினை நெருங்க நெருங்க குரங்கு வளையமும் வட்டத்தின் மையப்பகுதியை நோக்கி நெருக்க ஆரம்பித்தது.

ஒரு குரங்கு தன் மீது விழுமானால், ஆயிரம் குரங்கினங்களும் ஒரு சேரத் தாக்கித் தன்னைக் கொன்றுவிடும் என்பதை அவன் உணர்ந்தான். கடைசி முயற்சியையும் செய்துவிடுவது என்று துணிந்து கையினில் வைத்திருந்த விஷ முறிவின் துளியினை எடுத்துத் தன் வாயின் மேல் உதட்டில் வைத்துக்காட்டி இதனை இவ்வாறு இக்குட்டி உண்டால் பிழைத்துவிடும் என்று சொல்லிக் கொண்டே குட்டியின் அருகே அமர்ந்து அதனை எடுத்து தன் மடி மீது கிடத்தி வாயினில் மருந்தை விரலால் திணித்து கையில் வைத்திருந்த நீர்புட்டியை குழந்தையின் வாயினில் ஊற்றினான்.

பெருஞ்சத்தம் கேட்டது. ஏதோ ஒரு பெருங்குரங்கு ஆர்ப்பாட்டத்துடன் தன் தலை மீது பாய்வதைப் போன்று உணர்ந்தான். பின் நிகழ்வுகளும் என்னவாக இருக்கும் என்பதை நினைக்க ஆரம்பித்தான். தன் வாழ்நாள் இக்குரங்குக் கூட்டத்தால் அழிந்துபடப்போகின்றது என்பதையும் , மரண வாயிலில் அடியெடுத்து வைத்துள்ளதையும் உணர்ந்தான்.

ஒரே ஒரு நிமிடம் அவனுக்கு வாழ்வு கிடைத்தால் போதும். இறக்கவிருக்கும் குட்டிக் குரங்கின் பிழைப்பொலியினைக் கேட்டுவிட்டால் தன் உயிரே, போனாலும் ஒரு உயிரை, தன்னுடைய கவனக் குறைவால் இழக்கவிருந்த ஒரு உயிரை மீட்டுக்கொண்டுவந்த ஆத்ம திருப்தி கிடைத்துவிடும்.

இதுவரை ஏதும் அசம்பாவிதம் நிகழவில்லை. அது நிகழ்வதற்குள் குட்டியின் நாடியைப் பார்க்கவிழைந்தான். மெதுவாக அதன் கையினைத் தொட்டான். துவண்டு கிடந்த கைகள் பரபரப்பு அடையத் துவங்கின. கண்மணி பளபளத்தது. வாயினில் வழிந்த மாறுபட்ட நீரோட்டம் வயிற்றினுள் செரிந்த விஷத்தை முறித்துவிட்டது என்பதைக் காட்டியது. தலையை அசைத்து உருட்டி விழித்தது குட்டி.

பாய்ந்து வந்த ஒரு பெட்டைக் குரங்கு தன்னை அழிக்கவல்லது என்பதை உணர்ந்த அத்தருணத்தை அவன் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த குட்டியைப் பறித்துக்கொண்டு அப்பெட்டைக் குரங்கு ஓடி மரத்தில் ஏறியது.

வெட்டவெளியில் வளையமாய் நின்று கொண்டிருந்த குழு வெளியின் வட்டத்தினைப் பெரிதாக்கிவிட்டு இருந்த இடம் தெரியாமல் கலைந்து மரத்தின் மீது ஏறி மீண்டும் அவனையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை அவன் உணர்வு கூறியது. ஒருமுறை படுத்து பூமி மாதாவின் மீது தன்னுடைய பாரம் முழுவதையும் இறக்கி வைத்துவிட்டு கண்ணீர் சிந்தினான்.

There cannot be a better story to depict the axiom LOVE ALL, WHEREVER THEY ARE WHATEVER THEY ARE.

SUBBU RATHINAM.
THANJAI.

அகரம் அமுதா சொன்னது…

அய்யா! தங்களின் எனக்கனுப்பியிருந்த மின்மடல் கண்டேன். தாங்கள் கருதுவதுபோல் ஒன்றுமில்லை. நான் சற்றே நகைச்சுவைக்காகத்தான் அப்படி எழுதினேன். அவ்வெண்பாவின் பொருள் என்னவென்றால்:-

நனையுரை நல்கி நலமருள் மூத்தோர்
தனைநான் கவியெனச் சாற்ற -முனையேன்;
நனயம் உணர்ந்து நகைக்கவோ இஃது
நனிபொருள் கண்டீர் நயந்து?

(அதாவது கவிநயா குரங்கென்று கூறிபதைத் தாங்கள் தங்கள் மேல் ஏற்றிக் கூறினீர்கள் அல்லவா? அதை கவிநயா மறுத்து மறுப்புத் தெரிவித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதையே கற்பனை செய்து எழுதினேன். பொருள் பின்வருமாறு:-)

உண்டால் இனிக்கும் தேன்போன்று உணர்ந்துகொண்டால் நலம்பயக்கும் எல்லோர்க்கும் எப்போதும் நல்லவற்றைச் சொல்லி நலம்சேர்க்கும் மூத்தோராகிய தங்களைக் குரங்கென்றும் நான் உரைப்பேனோ?

தங்களின் உரையின் நற்பொருளை உணர்ந்து பிறர் சிரித்து மகிழவேண்டும் என்றோ (காமெடியாக) யான் கூறியதை சற்றே மிகைப்படுத்திப் பொருள் கண்டீர்!

என்பதே அதன்பொருள். அப்படிக்கருதித்தான் நான் அவ்வெண்பாவை எழுதினேன். ஒருவேளை நான் கூறவந்த பொருளை அவ்வெண்பா நன்கு உணர்த்தாமல் விட்டிருக்குமானால் அது என்தமிழறிவின் குறையேயன்றி நான் ஒருக்காலும் தங்கள் மனம் புண்படும்படியாக எழுத வேண்டும் என்ற மூகாந்திரமெல்லாம் கிடையாது.

என் பின்னூட்டத்தால் தங்கள் மனம் புண்பட்டதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

கவிநயா சொன்னது…

ஐயா நான் சொன்னதைத் தன்மேல் ஏற்றிக் கொண்டு பேசியது போல எனக்கு தெரியவில்லை. அதனால்தான் ஒன்றும் சொல்லவில்லை. ஒருவேளை எனக்குத்தான் புரியவில்லை போலும். ஆனால் ஐயா சொன்ன அன்புக் கதையை மிகவும் ரசித்தேன். தங்கள் வெண்பாவையும்.

வேளராசி சொன்னது…

இப்பொழுதுதான் முதல் முறையாக வருகிறேன்.பதிவுகளை பாராட்டுகிறேன்.

அகரம் அமுதா சொன்னது…

மிக்க நன்றி திரு வேளராசி அவர்களே! மீண்டும் வருக!

ஒளியவன் சொன்னது…

கேள்வியறிவுக்குத் தகுதியானவனுக்கும், அறிய விரும்புபவனுக்கும் அறிவைச் சொல்வதில் தவறில்லை. அப்படி இல்லாமல், ஏனோதானோ என்பவனிடம் நாம் அறிவுரைக் கூறி நேரத்தையும், அறிவையும் வீணடித்தல் தவறு. அது செவிடன் காதில் ஊதிய சங்காகிவிடும். கேள்வியறிவு மிக அவசியம். அதனினும் அவசியம் கேள்விப் பட்டதை உண்மையாவென ஆராய்ந்து பார்த்தல்.

அருமையான விளக்கம் நண்பா அமுதா.

அகரம் அமுதா சொன்னது…

நன்றி திரு ஒளியவன் அவர்களே!

குமரன் (Kumaran) சொன்னது…

முதல் செய்யுளுக்கு மட்டும் பொருள் புரியவில்லை அகரம் அமுதா அண்ணா/அக்கா (தளை தட்டிய வெண்பாவைப் படித்ததிலிருந்து இந்தக் குழப்பம்).

ஐயா சொன்ன கதை அருமை.

அகரம் அமுதா சொன்னது…

அதாவது குமரன் கிணற்றில் உறையும் தவளை இக்கிணற்று நீரினும் இனிய நீர் வேறிடத்தில் இல்லை எனக்கருதுமாம். அத்தவளைபோல் அறிவுசால் நூல்களை மட்டுமே படித்துக்கொண்டிராமல் அறிவார்ந்த பிறரின் பேச்சுக்களையும் கேட்டு கேள்விச்செல்வத்தையும் வளர்த்துக் கொள்ளல் நன்று என்கிறது அப்பாடல்.

குமரன் (Kumaran) சொன்னது…

பொருள் சொன்னதற்கு மிக்க நன்றி அமுதா. பொருள் சொன்ன பின்னர் படிக்கும் போது நன்கு புரிகிறது.

பெயரில்லா சொன்னது…

Hi all visitors) who becomes the champion of England's football?
[url=http://medsonlinenoprescription.net/category/birth-control-pills]birth control pills[/url]