ஒருமுறை நான் எங்கள் பாட்டி அவ்வை வீட்டிற்குப் போயிருந்தேன். ஓடிவந்து வாரியணைத்த பாட்டி தன்மடியில் கிடத்தி அன்பைப் பொழியலானாள். குழந்தாய்! இப்பொழுது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றாள். படித்துக்கொண்டிருக்கிறேன் பாட்டி என்றேன். நல்லா படிக்கிறாயா? யார் ஆசான்? என்றாள். யாருமில்ல பாட்டி நானாதான் தன்முயற்சியால படிச்சிக்கிட்டிருக்கிறேன் என்றேன்.
பாட்டி சொன்னாள்:-
மாடில்லான் வாழ்வு மதியில்லான் வாணிகம்நல்
நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் -கூடும்
குருவில்லா வித்தை குணமில்லாப் பெண்டு
விருந்தில்லா வீடும் விழல்.
என்ன புரிஞ்சிதா? ஒரு குருவைத் தேர்ந்தெடுத்துக்கோ என்றாள்.
சரி பாட்டி எனச்சொல்லிவிட்டுத் தோட்டப்பக்கமா ஓலையும் கையுமா உக்காந்திருந்த எங்க தாத்தா வள்ளுவர்கிட்ட ஓடினேன்.
அடேடே! வா குழந்தை! பாட்டியோட அப்படி என்ன ரொம்ப நேரமா பேசிக்கிட்டிருந்தே? அப்டின்னார்.
ஒழுங்கா படிக்கிறியான்னு கேட்டாங்க தாத்தா!
இதையா இவ்வளவுநேரம் பேசிக்கிட்டிருந்தீங்க? என்றார்.
ஆமாம் தாத்தா! நல்லா படிச்சிப் பெரியாளா வரணும்னா ஒரு குருவைத் தேர்ந்தெடுத்துக்கோ-ன்னாங்க தாத்தா!
அப்டியா? குருவைத் தேர்ந்தெடுக்கும் போது எப்படிப் பட்ட குருவைத் தேர்ந்தெடுக்கணும் தெரியுமா?:-
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொள் -அத்தோட மட்டுமா?
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியாரைப் பார்த்துத் தெர்ந்துகொள் -என்ன புரிஞ்சிதா? என்றார்.
ஒண்ணுமே புரியல அப்டின்னுட்டு அவர்கன்னத்தில் நல்லா எச்சில்பட ஒரு முத்தம் வெச்சேன்.
அடடா! இப்பத்தான் உண்மை விளங்கிற்று ஒரு பாட்டைத்தப்பா எழுதிட்டேன்னு திருத்தியெழுதத் துவங்கினார்.
பாலொடு தேன்கலந் தற்றே குழந்தாய்!உன்
வாலெயிறு ஊறிய நீர்.
அந்த நேரம் எங்க பெரிய தாத்தா திருமூலர் வந்தாங்க. (அவர்தான் நம்ம குடும்பத்துக்கே மூலம்ன்னு அம்மா சொல்லியிருக்காங்க.)
அடேய்! குழந்தைக்கிட்ட இப்படியா புரியாதமாரி சொல்றது? நான் சொல்றேன் வா குழந்தாய் ன்னு தோளில் வாரியணைத்துக்கொண்டு சொல்லத்துவங்கினார்.
எப்படிப்பட்ட குருவைத்தேர்ந்தெடுக்கணும்ங்கறதுக்கு முன்னால் குருடுன்னா என்னன்னு தெரியுமா? என்னார்.
ஓ! நல்லா தெரியுமே! கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்! புண்ணுடையர்ன்னா குருடர்ன்னுதானே பொருள்? அப்டித்தான் சின்ன தாத்தா சொல்லித்தந்தார். ஹா! ஹா! ஹா!
ஆமாமாம். ஆனா இன்னுமொரு பெருங்குருடிருக்கிறது. அதத்தான் இப்ப நான் உனக்கு சொல்லப்போறேன்.
குருடினை நீக்கும் குருவினைக் காணார்
குருடினை நீக்காக் குருவினைக் காண்பார்
குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக்
குருடினில் வீழ்வது குருடது வாமே!
ஆங்! புரிஞ்சிது தாத்தா! நம்ம அறிவுக்கண்ணைத் திறப்பவரா பார்த்துத் தேர்ந்தெடுக்கணுங்கறீங்க. அப்படியே செய்கிறேன் தாத்தா!
ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...
அய்யோ! மணி ஏழாச்சே! விடிஞ்சது கூடத்தெரியாம(ல்) தூங்கிக்கிட்டிருந்திருக்கிறோமே.
சனி, 30 ஆகஸ்ட், 2014
புதன், 30 ஜூலை, 2014
'இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து' -ஓர் பார்வை!
''இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து! -ஓர் பார்வை'' என்ற தலைப்பில் தொழுதூரில் பாவலர் சித்த மருத்துவர் வரதராஜன் அவர்கள் நடத்தும் சித்தமருத்துவக் கூட்டத்தில் (26/07/2014) அன்று நான் ஆற்றிய உரை வடிவம்!
மருத்துவர் உள்ளிட்ட அவையோரை
வணங்கி,
ஔவை அழகாகச் சொல்லுவாள்…
காணாது வேணதெல்லாம் கத்தலாம்; கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே! –நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி!
கிளியானது கற்றுக்கொடுத்தால் சிறப்பாக, அழகாக,
தெளிவாகப் பேசும். ஆனாலும் அதற்கொர் ஆபத்து என்று வருகின்ற போது அதன் இயல்பு மொழியாகிய
கீச், கீச் என்ற ஒலியையே எழுப்பும். அதுபோல் கல்லாத ஒருவன் கற்றுணர்ந்தவன் போல் பேசித்திரியலாம்.
கற்றறிந்த அறிஞர்முன் அவன் பேச்சு என்பது அந்த கிளியின் மொழி ஒத்ததே என்பதை ஔவை இப்படி
அழகாகச் சொல்வாள்.
நாலடியான் இன்னும் ஒருபடி மேலே போய்…
கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாளர் இடைப்புக்கு –மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே; இராஅ(து)
உரைப்பினும் நாய்குரைத் தற்று!
கற்றறிந்தோர் அவையில் கல்வியறிவு சிறிதும் இல்லா
ஒருவன் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருப்பினும் அது நாய் அமர்ந்திருப்பதற்கு நேரானது.
அவனே பேசப் புகுவானாயின் அந்த நாய் குறைப்பதற்கு நேரானது என்கிறான் நாலடியான்.
இங்கு என் நிலையும் அத்தகையதே! இந்த இக்கட்டான
நிலைக்கு என்னைக் கொண்டு வந்துவிட்டார் மருத்துவர் அவர்கள்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்!
எனும் குறளுக்கிணங்க மருத்துவர் அவர்கள் எம்மை
ஆளாக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார். அது அவர்களின் பெருந்தன்மை. எமக்குத்தான் அத்தகைய
சிறப்புத் தகுதிகள் ஏதும் இல்லை என்கிறபோதும், இச் சிறியோன் செய்பிழையிற் சினங்கொள்ள
மாட்டீர் என்கிற நம்பிக்கையில், துணிவில் இம்மேடையில் தோன்றிவிட்டேன்.
மருத்துவர் அவர்கள், ‘இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து’ எனும் நூலைக் கொடுத்து, இந்நூலின்
பெருமையை, அருமையை, பொருண்மையை எடுத்தியம்புமாறு எனக்குக் கட்டளை இட்டார்.
‘கரும்பு தின்னக் கூலியா?’ என்பதுபோல் நானும்
சிந்திக்காது ஏற்றுக்கொண்டேன். அந்நூல் முழுவதையும் வாசித்த பின்புதான் ஒரு உண்மையை
அறிந்து கோண்டேன்.
இது ஓர் அரிய பணி. இதைச் செய்து முடிக்கும் அறிவோ ஆற்றலோ எனக்கில்லை. இவர் என்னைக்,
கடலைக் குளமாக்கும் வேலைக்குப் பணித்திருக்கிறார்.
இந்நூலின் அருமையை, பெருமையை, ‘ஒரு பத்துப் இருபது நிமிடங்களில் சொல்லிவிட முடியுமா?’
என்றால் முடியாதுதான்.
‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பதைப்போல, ‘உடலின் வளமை நகக்கண்ணிலே தெரியும்’ என்பதைப்போல,
‘இந்நூலின் சிறப்பு என் அறிமுகவுரையிலே தெரியும்’
எனச் சொல்லுவதற்கியலாதுதான். இருப்பினும் மருத்துவர் அவர்கள் எனக்கிட்ட பணியை சீரோடும்
சிறப்போடும் செய்ய முயன்றிருக்கிறேன் என்பதுமட்டும் உண்மை.
-----
மனிதன் பெரும் சோம்பேறி என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு உணவு மேசை. வாய்க்கும்
உணவுத் தட்டுக்கும் இடையில் தூரம் இருக்ககூடாது என்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதோ
என்னவோ இந்த உணவு மேசை. இன்று பலரும் வீடுகளில் கூட அதில் அமர்ந்துதான் உண்ணுகிறார்கள்.
தட்டிலிருந்து அள்ளியவுடன் வாய்க்குச் சென்றுவிடவேண்டும். கைகழுவுவதற்குக் கூட நேரம்
இருப்பதில்லை. ஸ்பூனால் அள்ளி உண்பது நாகரீகம் என்றாகி விட்டது.
‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்ற வாசகத்தை நாமெல்லாம் நன்கறிவோம். எப்படிச்
சாப்பிடுவதென்றே நம்மில் பலருக்குத் தெரியவில்லை. பிறகு எதைச் சாப்பிடுவது என்றுமட்டும்
எப்படித் தெரிந்துவிடப் போகிறது?
நம் முந்தைய தலைமுறை வரை நம்மவர்கள் உணவை உண்ண ஒரு நான்கு விரல்கிடை அளவு உயரம்
கொண்ட பலகைக் கட்டையைப் போட்டு அதல்மேல் அமர்ந்து தரையில் இலைபோட்டு அல்லது தட்டைவைத்து
உணவு பரிமாறிச் சாப்பிடுவார்கள். ஒவ்வொரு முறை உணவை அள்ளி வாயிலிடும் போதும் குனிந்து
நிமிர்வதால் வயிறானது புடைக்க உண்ணும் நிலை தவிர்க்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு
மேல் நாம் உண்ண நினைத்தாலும் உண்ண முடியாமல் வயிறு நிறைந்ததுபோல் ஆகிவிடும். அதனால் மிகையுணவு உண்பது தவிர்க்கப்பட்டு செறிமானச் சிக்கல்கள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது.
இப்படி அமர்ந்துண்பது - அரைவயிறு உணவு, கால்வயிறு காற்று, கால்வயிறு நீர் என்கிற
அளவுகோலை நாம் சரியாகக் கடைப்பிடிக்க ஏற்றதாக இருக்கிறது.
அதுபோல் நீரை நாம் எப்படி அருந்துகிறோமென்றால் தலையை அன்னாந்து பார்ந்தபடி வாயைத்
திறந்து கடகடவென்று குடித்துவிடுகிறோம். அம்முறையில் நீர் அருந்துவது தவறு. விலங்குகள்
அனைத்தையும் பார்த்தோமானால், அனைத்தும் ஒன்றைப்போலவே நீரில் வாயை வைத்து உரிஞ்சியே
பருகுகின்றன. அதன் மூலம் அவை பருகும் நீரில் உமிழ்நீரும் நன்கு கலந்து உட்செல்வதால்
நீரில் ஏதேனும் நோய்த்தொற்றுக்கள் இருந்தால் உமிழ்நீரிலுள்ள நோயெதிர்ப்பு நுண்ணுயிரிகளால்
கொல்லப்பட்டு நன்னீராக உட்செல்கிறது.
விலங்குகளுக்கு இருக்கிற இந்த அறிவுத் தெளிவு கூட ஆறறிவு படைத்த மனிதர்களாகிய
நமக்கில்லை. நாகரீகம் என்கிற பெயரில் நாம் நீரைப் பல்லில் படாமலல்லவா பருகுகிறோம்.
இம்முறையால் நீர் உமிழ்நீருடம் கலக்காமல் நேரடியாக வயிற்றுக்குச் செல்வதால் நாம் பல
தொல்லைகளுக்கு ஆளாக நேரிடுகிறது!
சிலருக்கு வெளியூர் எங்கேனும் சென்றால் கூடவே பாட்டிலில் நீரெடுத்துச் செல்வது
வழக்கம். ஏனென்று கேட்டால் எனக்கு வெளியூர் தண்ணீர் ஒத்துக்கொள்ளாது. நீர்வினை பிடித்துக்கொள்ளும்,
தலைவலி, காய்ச்சல் போன்றவை வந்துவிடும் என்பார்கள்.
நீருடன் உமிழ்நீர் கலந்து வயிற்றுக்குச் செல்லாததால் ஏற்படுகின்ற தொல்லைகள்
தான் இவை. மாறாக வெளியூர் தண்ணீர் ஒத்துக்கொள்ளாது என்பவர்கள் கூட பொறுமையாக நிதானமாக
நீரை சிறிது சிறிதாக வாயில் ஊற்றி நன்கு உமிழ் நீர் கலக்குமாறு கொப்பளித்துப் பருகினால்
இப்படிப்பட்ட தொல்லைகள் ஏற்படாது.
ஆக நீரைப் பருகுவதற்கும், உணவைச் சாப்பிடுவதற்கும் அறிந்திராத மனிதன் எத்தகைய
உணவைச் சாப்பிடவேண்டும் என்கிற அறிவுத் தெளிவை மட்டும் அடைந்திருப்பான் என்று சொல்லிவிடமுடியாது.
எப்படிச் சாப்பிடுவது என்பதறியாதவனுக்கு எதைச் சாப்பிடுவது என்கிற அறிவு எங்கிருந்து
வந்துவிடப்போகிறது?
நாம் இன்றைக்கு – தூய உணவா? என்று பார்த்து, நல்ல நீரில் தயாரிக்கப் பட்டதா?
என்றுபார்த்து, அண்மையில் தயாரிக்கப்பட்டதா? என்று பார்த்து, இப்படிப் பார்த்துப் பார்த்து
உணவு உண்கிறோம்.
இவைகள் உண்ணத் தகுந்த உணவா? அதற்கும்
மேலாக இவைகள் உணவா? என்கின்ற கேள்வியை எழுப்பி, வேறு எவைதான் உணவு? என்பதற்கான
விடையைமும் நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தருகிறது இயற்கை உணவு ஆய்வாளர் மூ. ஆ. அப்பன்
அவர்கள் எழுதிய ‘இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து’ என்ற அரிய நூல்.
இந்த நூலின் தலைப்பே நமக்கு வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறது, சமைத்த செயற்கை
உணவு உணவே அல்ல. இயற்கை உணவே சிறந்த உணவு என்பதை.
அதென்ன இயற்கை உணவு?
ஒரு செடியிலிருந்தோ, கொடியிலிருந்தோ, மரத்திலிருந்தோ பறிக்கப் படுகிற காய்களை,
கனிகளை, கொட்டைகளை, கிழங்குகளை சமைக்காமல் அல்லது வேறு எந்த மடைமாற்றத்திற்கும் உட்படுத்தாமல்
உண்ணத் தகுந்த காய்கள் கனிகள் கொட்டைகளை அப்படியே உண்பது இயற்கை உணவு.
இந்நூலின் தலைப்பு இன்னொரு கேள்வியையும் நம்முள் எழுப்புகிறது. இயற்கை உணவே
நோய்தீர்க்கும் மருந்தா?
இந்நூலாசிரியரே இக்கேள்விக்கு விடையாக விளங்குகின்றார். இவர் செயற்கை உணவாகிய
சமைத்த ஒவ்வா உணவு முறையிலிருந்து இயற்கை உணவு என்கிற மடைமாற்றத்திற்குத் தன்னை உட்படுத்தா
முன்பு இவருக்கு முற்றிய நிலையில் தொழுநோய் இருந்திருக்கிறது.
வேண்டாத தெய்வங்களில்லை. காட்டாத மருத்துவர்களில்லை. உண்ணாத மருந்துகளில்லை.
அவையெல்லாம் இவரின் நோயை ஊதிப் பெரிதுபடுத்தினவே யொழிய நலம்பெற நனியுதவவில்லை.
பிறகு எப்படியோ இவருக்கு இயற்கை உணவு பற்றிய தெளிவு ‘மனித உணவின் விளக்கம்’
நூலாசிரியர், இயற்கை வாழ்வியல் மேதை மூ. இராமகிருஷ்ணன் அவர்களின் மூலம் கிடைக்கிறது.
அதன்படி சமைக்கா உணவை உண்டு வந்ததால் ஒரே மாதத்தில் உடலில் நல்ல மாற்றங்கள்
ஏற்பட்டு, அடுத்த ஆறு மாதத்தில் முழுமுற்றாக தொழுநோயிலிருந்து விடுதலை பெற்று நல்ல
உடல்நலத்துடன் விளங்குவதாக தனது முன்னுரையிலேயே வாக்குமூலம் அளிக்கிறார்.
அவர் மட்டுமா? அவரைப்போல் இயற்கை உணவு மூலம் பயனடைந்த பற்பலரின் அனுபவ மடல்களை
அடுத்தடுத்துத் தந்து இயற்கை உணவின் மேன்மையை நாம் நன்குணரச் செய்கிறார்.
விலங்குகளாகட்டும் பறவைகளாகட்டும் உலகிற்றோன்றிய எவ்வுயிரும் தனக்கான உணவான
தாவர உணவையோ ஊண் உணவையோ அப்படியே சாப்பிடுகின்றன. நோய்நொடி எதுவுமின்றி நீண்ட காலங்கள்
வாழ்ந்து மடிகின்றன.
வாழுங்காலங்களில் மனிதனைப்போல் வேறெந்த உயிரும் காலங்கள் பலவற்றை நோயிற் கழிப்பதில்லை.
மனிதன் சமையல் உணவைத் தொட்டான் அதனால் கெட்டான்.
தேங்காய், வாழைப்பழம் வைத்து இறைவனுக்குப் படைக்கிறோமே எதனால்? காய்களில் தேங்காயும்,
கனிகளில் வாழையும் மிகுந்த பயனுடையவை, சத்துக்கள் நிறைந்தவை ஆதலாம் அவற்றை முதன்மையாகக்
கடவுளுக்குப் படைக்கிறோம். சிதறுதேங்காய் உடைப்பதன் பொருள்கூட வசதியற்ற ஏழைகளும் அவற்றைப்
எடுதுண்டு உடல் வலிமைபெற வேண்டும் என்பதால் தானே!
‘மாறுபாடில்லா உண்டி’ என்றானே வள்ளுவன்.
அதன்பொருள் உடலுக்கு மாறில்லாத என்பது மட்டுமா? உள்ளத்திற்கும் மாறுபாடில்லாத என்ற
பொருளிலும் தான்.
‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன்.
அதன்பொருள் உள்ளத்திற்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? உயிருக்கும் (ஆன்மாவுக்கும்)
மாறுபாடில்லாத என்ற பொருளிலும் தான்.
‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன்.
அதன்பொருள் உயிருக்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? இயற்கைக்கும் மாறில்லாத என்ற பொருளிலும்
தான்.
‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன்.
அதன்பொருள் இயற்கைக்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? சூழலுக்கும் மாறுபாடில்லாத என்ற
பொருளிலும் தான்.
‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன்.
அதன்பொருள் சூழலுக்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? திணைப்புலத்திற்கும் மாறுபாடில்லாத
என்ற பொருளிலும் தான்.
‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன்.
அதன்பொருள் திணைப்புலத்திற்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? பருவ நிலைக்கும் மாறுபாடில்லாத
என்ற பொருளிலும்தான்.
உடலுக்கு ஏற்பில்லாத, மாறுபட்ட உணவை உண்பதனால் நாம் அடைந்து வரும் தீமைகளைப்
பட்டியலிட்டால் எண்ணிலடங்காதனவாக அல்லவா நீள்கின்றன. இயற்கை உணவை உண்ணும் விலங்குகள்
குட்டி ஈனும்போது சிசுக்கொலை நிகழ்வதில்லை. உடற்குறையுடன் பிறப்பதில்லை. விரைவாக உடற்பலம்
பெற்று எழுந்து நடக்க, ஓடச் செய்கின்றன. மேலும் அன்று பிறந்த குட்டிகளால் கூட வெய்யிலோ,
மழையோ, கடுங்குளிரோ எதையும் தாங்கும் வல்லமையுடன் திகழ்கின்றன. மேலும் நோய்கள் அவற்றைத்
தாக்குவதில்லை. தாகுதலுக்குட்பட்டாலும் விரைவில் குணமடைந்து விடுகின்றன.
இவற்றில் ஏதாவது ஒரு சிறப்பையாவது மனிதன் பெற்றிருக்கிறானா என்றால் இல்லை என்பதுதானே
விடையாக இருக்கிறது. செம்மையான வாழ்வை வாழப் படைக்கப் பட்டவை விலங்குகளும் பறவைகளும்
மட்டுந்தானா? மனிதனுக்கு அந்தத் தகுதி இல்லையா? என்றால், விலங்குகள், பறவைகளைக் காட்டிலும்
மிகச் செம்மையான, செறிவான வாழ்வை வாழப் படைக்கப் பட்டவன்தான் மனிதன்.
உணவில் மடைமாற்றத்திற்கு அவன் உட்பட்டதன்
விளைவு நோயுடைய, குறையுடைய வாழ்வை வாழும் நிலைக்குத் தாழ்ந்து போனான்.
நல்ல காற்று வேண்டுமானால் நாம் வனங்களையும் சோலைகளையும் நாடுகிறோம். அதுபோல்
நல்ல உணவு வேண்டின் அத்தகைய வனங்களையும் சோலைகளையுமே நாடவேண்டுமே யொழிய அடுப்படியையும்,
நோய்களின் மொத்தக் குத்தகைக் கிடங்கான உணவு விடுதிகளையும் அல்ல என்பதைத் தன் அனுபத்தால்
அறிந்ததை தக்க சான்றுகளுடன் இந்நூலில் அழகுற நிறுவுகிறார் நூலாசிரியர் ‘அப்பன்’ அவர்கள்.
வாழைப் பழத்தைச் சிற்றூர்களில் வாழப்பழம் என்று பேச்சுவழக்காகச் சொல்லுவார்கள்.
அதிலோர் நுட்பம் அடங்கியிருப்பதை நாம் உற்று நோக்க வேண்டும். மனிதன் நோயற்ற வாழ்வை
வாழப் பழம் சாப்பிட வேண்டும். என்கிற கமுக்கம் அந்த ஒற்றைப் பேச்சு மொழியின் வழியாக
நாம் அறியமுடியும்.
நாம் அனைவரும் அறிந்த கதையொன்று உண்டு. பைபிலில் ஆதாம் ஏவாளுக்கு ஆப்பில் பறித்து
கொடுத்ததாக. இந்த ஒற்றைச் செய்தி நமக்குச் சுட்டவரும் உண்மை என்ன? மனிதனின் முதல் உணவே
இயற்கை உணவுதான். அதிலும் குறிப்பாக கனியுணவு. ஆக மனிதன் வாழப் பழம் சாப்பிட வேண்டும்
என்பதை ஆதாம் ஏவாளுக்குப் பறித்துக் கொடுத்த ஆப்பிலின் வழி நாம் நன்கறிந்து கொள்ளலாம்.
மனிதன் பசிக்குச் சாப்பிட்டவரை பாதகமில்லை.
ருசிக்குச் சாப்பிட்டான். நசிந்து நோய்ப்பட்டான்.
சமைக்காத உணவை உண்ணும் விலங்குகள் வன்புணர்வில் ஈடுபடுவதில்லை. சமைத்துண்ணும்
மனிதன் சமையாத சிறுமிகளைக் கூட விட்டுவைப்பதில்லையே! இத்தனைக் கீழ்நிலைக்கு அவனைக்
கொண்டு போனது ஏது? எண்ணிப் பார்க்கவேண்டும்.
‘எண்ணம்போல் வாழ்வு’ என்கிறோம். அந்த எண்ணம் நல்வழியில் அமைய மாறுபாடில்லாத
இயற்கை உணவாலேயே சாத்தியமாகும். ஆக ‘உணவைப்போல் எண்ணம். எண்ணம்போல் வாழ்வு’ என்பதே
சரியாகும்.
இந்நூலாசிரியர் நமக்கு இயற்கையாகக் கிடைக்கக் கூடிய காய்கள், கனிகள், கொட்டைகள்,
கிழங்குகள், தண்டுகள், கீரைகள், இலைகள் எனப் பலவற்றையும் அறிமுகப்படுத்தி அவற்றை எந்தெந்த
வகையிலெல்லாம் உணவாக்கிக் கொள்ளலாம் என்பதை அறிவு ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் நமக்கு
வழங்குகிறார்.
அதைப் பின்பற்றும் எவரும் எத்தனைக் கொடிய நோயினின்றும் நீங்கி நலம்பெறலாம்.
நோயற்றவர்களும் அவற்றைக் கடைபிடிக்குங்கால், ‘வருமுன் காப்போம்’ என்ற அடிப்படையில்
தங்கள் உடலை நலம் மிக்கதாக, பலம் மிக்கதாக ஆக்கிக் கொள்ளலாம் என்கிற போது அத்தகைய நன்மை
பயக்கும் வழியை நாமும் ஏன் பின்பற்றக் கூடாது என்கிற கேள்வி இயல்பாகவே மனதில் எழுகிறது.
செயற்கை உணவிலிருந்து விரைவாக நாம் இயற்கை உணவுக்கு மாற முடியாதுதான். அதற்கும்
இந்நூலாசிரியர் ஓர் தக்க வழியை நமக்குக் காட்டுகிறார். நாம் உண்ணும் மூன்றுவேளை உணவில்
ஒருவேளை உணவையாவது செயற்கை உணவைத் தவிர்த்து இயற்கை உணவுக்கு முதலில் மாற முற்படலாம்
என்கிறார். அப்படியே படிப்படியாக இருவேளையாக எடுத்துக்கொண்டு பிறகு மூன்று வேளை உணவாக
இயற்கை உணவை எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்.
எந்த உணவை உண்டால் ஒருவனது வாயும் பல்லும் வேர்வையும் மலமும் சிறுநீரும் கெட்ட
வாடையின்றி விளங்குகின்றனவோ அந்த உணவே சிறந்த உணவு என்பதை இந்நூல் நமக்கு எடுத்தியம்புகிறது.
அகரம் அமுதன்.
திங்கள், 14 ஜூலை, 2014
மெய்ப்பொருள் காண்ப தறிவு!
ஒரு கூட்டத்திற் பேசிய தமிழறிஞர்
பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்னோய்க்குத் தேனே மருந்து!
என்ற குறளுக்கு விளக்கங்கூற வந்தவர், ‘பிணி வேறு, நோய் வேறு. ஏனெனில் பிணிக்கு
மருந்தாவது பிறவே அன்றி அப்பிணியை ஏற்படுத்திய பொருளே மருந்தாவதில்லை. நோய் என்பது
அப்படி அல்ல, எது நோயை ஏற்படுத்தியதோ அதுவே மருந்தாகவும் இருந்து குணப்படுத்தி விடுகிறது
எனக்கூறி, பிணி உடலுக்குள் உண்டாவது. நோய் உள்ளத்திற்குள் உண்டாவது’ என்பதாகப் பொருள்
சொன்னார்.
பிணி என்பதும் நோய் என்பதும் சொல்லளவில் வேறுவேறே யன்றிப் பொருளளவில் வேறில்லை.
ஒரு சொல்லுக்குப் பல பொருள் குறிப்பதும், ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருப்பதும் தமிழின்
சிறப்பு, தமிழின் இயல்பு. பிணி, நோய் என்ற இரு சொற்களையும் அந்த அடிப்படையில்தான் நாம்
அனுகவேண்டி உள்ளது. அகர முதலியைப் புரட்டினோமாயின் அது விளங்கும்.
பிணி என்பதற்குப் பொருளாக – நோய், கட்டுகை, பற்று, பின்னல், துன்பம் எனப்பொருள்
விரிகிறது.
நோய் என்பதற்குப் பொருளாக – துன்பம், வருத்தம், குற்றம், அச்சம் எனப்பொருள் விரிகிறது.
நோயும் பிணியும் ஒரு பொருள் உணர்த்தும் சொற்களே என்பதற்கு வேறெங்கும் சான்றுகள்
தேடி அலையத்தேவையில்லை. திருக்குறளில் மருந்து என்ற தலைப்பிலான அதிகாரத்தில் அவ்விரு
சொற்களையும் அடுத்தடுத்த குறள்களில் பயன்படுத்தி, இரு சொற்களும் வெவ்வேறு பொருள் குறிப்பனவல்ல
என்பதைச் சொல்லாமல் சொல்லியிருப்பார் வள்ளுவர். அவையாவன…
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்!
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்!
இவ்விரு குறள்களையும் நன்கு உற்றுநோக்கினால் இரு சொற்களுக்குமான பொருள் ஒன்றே
என்பது விளங்கிவிடும்.
இப்பொழுது இயல்பாகவே நமக்கொரு கேள்வி எழலாம். இவ்விரு சொற்களுக்கும் பொருள்
ஒன்றென்றால் பின்பேன் திருவள்ளுவர்…
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து!
எனப் பிணியென்று ஓரிடத்திலும் நோயென்று ஓரிடத்திலும் வேறுபடுத்திக் காட்டுகிறார்?
‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்பிணிக்குத் தானே மருந்து’ என்றே எழுதி இருக்கலாமே?
எனக்கேட்கலாம்.
எழுதி இருக்கலாம்தான். ‘தன்பிணிக்கு’ என எழுதியிருந்தாலும் தளைகொள்ளுகிறவிடத்து
எந்த சிக்கலும் இல்லைதான். தளை சரியாகவே உள்ளது. செய்யுளில் சொற்பொருட்
பின்வரு நிலையணி என்றொன்றுண்டு. அதாவது ஒரு சொல் ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட
விடத்து வருகிறபோது அச்செய்யுள் சொற்பொருட் பின்வரு நிலையணியின் பாற்பட்டதாகி விடுகிறது.
அந்த வகையிற்பார்த்தாலும் ‘தன்பிணிக்கு’ என்றெழுதியிருப்பின் பொருந்திப் போகும்தான்.
இருப்பினும் கவிதைக்கு, கவிஞனுக்கு அழகு என்பது முடிந்தவரை வெவ்வேறு சொற்களை அழகுற
அடுக்கிப் பொருள் சிதையாமற் சொல்லும் நுட்பம்
கைவரப்பெறுவது. அத்திறமை வள்ளுவருக்கு மிகவே உண்டு.
மேலும்,
இக்கூட்டத்திற்கு வந்திருந்த சித்த மருத்துவர் ஒருவரிடம் நான், ‘பேச்சாளர் இச்சொற்களுக்குத்
தவறான பொருளுரைக்கிறாரே!’ என வினவிய போது, அவர் இன்னும் கொஞ்சம் மேலேபோய் அதீத கற்பனைக்குரிய
பொருளுரைத்தார்.
அதாவது பிணி எனுஞ்சொல் பிணித்தல் எனும் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியது. அதுபோல்
நோய் எனுஞ்சொல் நொய்து, நொய்தல் என்பதிலிருந்து கிளைத்தது என்றார். அவர் கூற்று முற்றும்
சரியே. அதற்குப் பிறகு அவர் கொடுத்த விளக்கம் இருக்கிறதே அதுதான் அதீத கற்பனை எனச்
சொல்லத் தூண்டுகிறது.
அதாவது…
பரம்பரை பரம்பரையாக, நாட்பட்ட, தீரா வியாதியையே பிணி எனச்சொல்லுதல் வேண்டும்.
அது வந்தால் போகாதது. கட்டுப்படுத்த முடியுமே யொழிய குணப்படுத்த இயலாதது. நோய் அப்படி
அல்ல. வரும், போகும். எளிதாகக் குணப்படுத்தி விடலாம் என்றார்.
மேலும் சிலப்பதிகாரத்திலிருந்தும் ஓர் விளக்கத்தை எடுத்துரைத்தார்…
‘ஊழ்வினை உறுத்துவந் தூட்டும்’ எனும் வரியைக் காட்டி முற்பிறப்பிற் செய்த தீமைகளுக்கும்
பாவங்களுக்கும் தண்டனையாக இப்பிறப்பில் அனுபவிப்பதே பிணி. அது வந்தால் தீர்க்க முடியாதது.
கட்டுப்படுத்த மட்டுமே மருந்து வழங்கலாமேயொழிய தீர்க்கவியலாதது என்றார்.
இவர் கூற்றுப் படி இக்கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள குறளுக்குப் பொருள் காண்போமாயின்
குறளும் பொருளும் முற்றாகச் சிதைந்துபோகும்.
திருக்குறளோ, ‘பிணிக்கு மருந்து பிறமன்’ என்கிறது. மருந்து பிறவிடத்தில் இருக்கிறது
என்றால் என்ன பொருள்? அம்மருந்தை உண்டால் பிணி நீங்கிவிடும் என்றுதானே பொருள்.! மாறாக,
பிணியைக் கட்டுப்படுத்தும் என்று பொருளாகாதே!
மேலும்
இம்மருத்துவர் கூற்றுப்படி பரம்பரை பரம்பரையாக, நாட்பட்ட, தீராத பிணியுடையவனிடம்
கேட்டீர்களாயின் வாழவே ஆசைப்படுவதாக உரைப்பானன்றி மாள விரும்புவதாக உரைக்க மாட்டான்.
எத்தனை கொடிய நோயிருந்தபோதும் அவன் விருப்பம் அதுவாகத்தான் இருக்கும். ஆனால் காதலில்
தோற்றவன் அல்லது காதலியால் கைவிடப்பட்டவனிடம் சென்று கேளுங்கள். தான் சாகவிரும்புவதாகவே
சூலுரைப்பானேயன்றி வாழ விரும்புவதாக உரைக்கமாட்டான்.
இம்மருத்துவர் சொற்படி அவ்வப்பொது வந்து போகக்கூடியது, மருந்து கொடுத்தால் நீங்கிவிடக்கூடியது
நோய் என்றால் ‘ அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து’ என்றானே வள்ளுவன்! அவளால் ஏற்பட்ட
நோய்க்கு அவளே மருந்தாக அமையாதபோது அவளால் காதல் நோய்ப்பட்டவன் (இம்மருத்துவர் கூற்றுப்படி
நோய் குணப்படுத்திவிடக் கூடியதாக இருந்தும்) வாழ விரும்புவதைக் காட்டிலும் சாகவே விரும்புகிறானே!
ஆக இம்மருத்துவர் கூற்றுப் படியும் பிணி, நோய் இவ்விரு சொற்களுக்குமான பொருள்
தவறானவையே யாதலாலும், பிணி என்பதும் நோய் என்பதும் ஒருபொருள் குறித்த இருசொல்லே எனக்கொள்ளுதலே
சாலும்.
ஞாயிறு, 13 ஜூலை, 2014
மரப்பாச்சிப் பொம்மைகள் தரம்மாறா உண்மைகள்!
கவிதையைப் பற்றிய என் புரிதல் அல்லது நான் வகுத்துக்கொண்ட இலக்கணம் மிக எளிமையானது.
வெகு சிலரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகிறதே!, அவர்களோடு நட்பாட வேண்டுமென்று எண்ணுகிறோமே!
அப்படி கவிதையைப் படித்தவுடன் உள்ளத்தைக் கவர வேண்டும். சில நாட்களாவது மனதைச் சுற்றி
வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு நல்ல நண்பன் நம் துன்பங்களைப் பகுதியாக்கி, இன்பங்களை இரட்டிப்பாக்குவதைப்
போல கவிதை நம்மைப் பேச வேண்டும். நமக்காகப் பேச வேண்டும். ஒருவன் நேர்ச்சியுறுங்கால்
முதலுதவியாக, தேர்ச்சியுறுங்கால் ஒழுகவேண்டிய பணிவாக வாய்க்கவேண்டும் என்பது நான் வரித்துக்
கொண்ட எளிமையான இலக்கணம்.
இந்த இலக்கணச் சட்டையை, நான் கேட்கும், படிக்கும் - கவிதை, கவிதைத் தொகுப்புக்கு
அணிவித்துப் பார்ப்பதுண்டு. நண்பர், கவிஞர் தியாக. ரமேஷ் அவர்களின் மரப்பாச்சிப் பொம்மைகளுக்கு
இந்தச் சட்டையை அணிவித்துப் பார்க்கிறேன். பெரிதும் பொருந்திப் போகிறது. இவர் தேர்ந்தெடுக்கும்
சொற்கள் மென் மலராகவும், இழையோடிய கருத்துக்கள் அம்மலரில் ஊறும் மதுவாகவும் விளங்குவதால்
கவிதைகள் அறுவைக்கு அடம் பிடிக்காமல் அதுவாகப் பிறந்திருக்கிறது.
எனது கருத்தெல்லாம் கவிதையை முக்கிப் பெற்றாலும் முக்கியமறிந்து பெற்றெடுக்க
வேண்டும் என்பது. இவர் முக்கிப் பெற்றாரா? என்பதை நான்றியேன். ஆனால் முக்கியமறிந்து
பெற்றிருக்கிறார் என்றுமட்டும் துணிந்து முன்மொழிவேன்.
‘மரப்பாச்சிப் பொம்மைகள்’. தொகுப்பின் தலைப்பே
நம்மை சொக்க வைக்கிறது.
பாடப் புத்தகங்களையும் மரப்பாச்சிப் பொம்மைகளையும்
குழந்தைகளின் முன் வைத்தால் குழந்தைகள் முதலும் முடிவுமாகத் தேர்ந்தெடுப்பது மரப்பாச்சிப்
பொம்மைகளாகத்தான் இருக்கும். பாடப் புத்தகங்களைப் போல் மரப்பாச்சிப் பொம்மைகள் குழந்தைகளுக்குக்
கற்றுத்தர முனைவதில்லை. பாடப் புத்தகங்களைப் போல் பாடாய்ப் படுத்துவதும் இல்லை. ஆதலால்தான்
குழந்தைகளுக்கு மரப்பாச்சிப் பொம்மைகளையும், மரப்பாச்சிப் பொம்மைகளுக்குக் குழந்தைகளையும்
பிடித்திருக்கிறது.
குழந்தைகள், நாம் கிழித்த கோட்டைத் தாண்டலாம்.
குழந்தைகள் கிழித்த கோட்டைத் தாண்டுவதே இல்லை மரப்பாச்சிப் பொம்மைகள். குழந்தைகள் உறங்க
– உறங்கி, குழந்தைகள் விழிக்க – விழித்து, குழந்தைகளோடு இரண்டறக் கலந்திருக்கும் மரப்பாச்சிப்
பொம்மைகளின் இடத்தை, புத்தகங்களால் பிடிக்க முடியாது என்பதுதான் உண்மை.
மரப்பாச்சிப் பொம்மைகள் குழந்தைகளுக்குச் சரி.
வாலிபர்களுக்கும் வயோதிகர்களுக்கும் அவற்றை வழங்கியிருக்கிறார் கவிஞர் தியாக. ரமேஷ்.
அது சாலப் பொருத்தமே.
குழந்தையாக இருந்தவறையில் வாழ்க்கை உளியாகச்
செதுக்கிறது. வாலிபத்தை எட்டியவுடன் கத்திமுனையாய்க் குத்திக் கிழிக்கிறது. அது ஏற்படுத்தும்
காயங்களைக் கடக்க, வலிகளை மறக்க நாமும் குழந்தைகளாவதைத் தவிர வேறு வழியில்லை. அப்போது
விளையாட இந்த மரப்பாச்சிப் பொம்மைகள் தேவைப்படும்.
தலைப்புக்குத் தலைவணங்கி உள்ளே கொஞ்சம் உலாப்போகிறேன்.
கண்ணிரைத்தான் கவிதையாக்கி இருக்கிறார். இருப்பினும்
இன்னும் கொஞ்சம் எனக் கேட்கத் தூண்டுகிறது ‘இன்னும் கொஞ்சம்’ கவிதை. நான் முன்பு தைத்த
இலக்கணச் சட்டைக்குள் சரியாகப் பொருந்தும் கவிதைகளுள் தலையாய கவிதை ‘இன்னும் கொஞ்சம்’.
‘இன்னும் கொஞ்சம்’ என்னை வெகுவாகக் கவர்ந்ததற்கு முன்பு கொஞ்ச காலம் நான் வெளிநாடுகளில்
வாழ்ந்தது காரணமாக இருக்கலாம்.
அகிம்சை முகம்
கிம்சை விழி
அவளுக்கு…!
முன்பொருமுறை ஒருத்தியைப் பற்றி நான் உதிர்த்ததாக
நினைவு. கவிதைக்கும் இது பொருந்தும். சொற்கள் கனமற்றிருப்பதுபோல் தோன்றும். ஆனால் கருத்திருக்கிறதே
அதன் கனம் சுமக்கமுடியாததாக இருக்கும்.
வாய்மூடிக் கிடப்பதன்று
மனம்மூடிக் கிடப்பதே
மௌனம்…!
= = =
உள்ளே இருக்கும் வார்த்தை நமதாகும்
வெளியே வந்த வார்த்தை எதுவுமாகும்!
இவை அம்பின் பணியைப் பண்ணும் ஈர்க்குகள். முள்ளின்
வேலையை முடிக்கும் மொட்டுக்கள்.
தோழி மனைவியானால் வாழ்க்கை இதம்
மனைவி தோழியானால் வாழ்க்கை சங்கீதம்
இவை வானவில் வரிகள். இயைபை இப்படி மாற்றலாம்.
தோழி மனைவியானால் வாழ்க்கை சாரீரம்
மனைவி தோழியானால் வாழ்க்கை சங்கீதம்
இயைபை இப்படியும் மாற்றலாம் இதம், ரிதம் என்று.
ரிதம் வேற்றுமொழி ஆயிற்றே என்கிறீர்களா? சங்கீதம் என்பதும் நாம் புறக்கணிக்கத் துணியாத
வேற்றுமொழி தானே!
‘தங்கத் தட்டில்’ ஓர் உயர்வான உவமை.
நாம்
நம்மாழ்வாராக இருந்தால்
மண் வளமாகும்..
நாம்
நம்மை ஆள்பவராக இருந்தால்
மனம் வளமாகும்..
மண் வளமாவதும், மனம் வளமாவதும் இன்றையக் கட்டத்தில் இன்றியமையாதது. உயர்ந்த
ஒன்றைச் சுட்ட உயர்ந்த ஒன்றை உவமையாக்குவதே தமிழ் மரபு. வாணாள் முழுதும் இயற்கை வேளாண்மைக்கு
வித்திட்டவர் நம்மாழ்வார். ‘வானகம்’ அமைப்பைத் தொடங்கி மண்ணகம் காத்தவர். இயற்கை அரணாக
விளங்கிய ஈடிணையற்ற நம்மாழ்வாரை உவமையாக்கிய வகையில் என் மனதில் உயர்ந்து நிற்கிறார்
கவிஞர் தியாக. ரமேஷ் அவர்கள்.
‘அண்ணாவின் ஆட்சி’ என்றோர் கவிதை. அது ‘தம்பியின் ஆட்சி’ என்றிருக்க வேண்டும்.
உலகத் தமிழர்க்கெல்லாம் வீரம் ஊட்டிய அந்த ஒப்பற்ற தலைவனை, தமிழனை எல்லோரும் ‘தம்பி’
என்றழைப்பதே வரலாறு. நாமும் அப்படியே அழைப்பதுதான் சரியாகும். ‘அப்பனே! முருகா!’ என்று
கடவுளைக் கூட நாம் ஒருமையில்தான் அழைக்கிறோம். நாம் ஒருமையில் அழைக்கும் அளவிற்கு அவனென்ன
சின்னவனா? ஆயினும் அழைக்கிறோம். அப்படி ‘தம்பி’ என்பதில் தப்பில்லை.
அல்லது ‘அண்ணனின் ஆட்சி’ என்றாவது இட்டிருக்கலாம். ஏனெனில் இங்கு எந்த ‘அண்ணாவின்
ஆட்சி’யும் அருந்தமிழுக்கு அரியணை தரவில்லை. ஆங்கிலத்திற்கே அந்த இடத்தை அளித்துச்
சென்றிருக்கிறது என்பதை நாம் மறக்கலாகாது. (ஒருவேளை செந்தமிழ் செருப்பாகப் பிறந்திருந்தால்
என்றோ அரியணை கிட்டியிருக்கும் போலும்).
‘ஒருவழிப் பயணம்’ கொஞ்சம் உருக்கமானது. அதனாலேயே என் நெஞ்சிற்கு நெருக்கமானது.
விண்ணைத் தொடும் விழைவோடு மரம் கிளை விரிப்பினும் வேர் என்னவோ மண்ணை அல்லவா பிண்ணிக்
கிடக்கிறது! தான் எங்கிருப்பினும் எண்ணம் இங்கேயே வட்டமிடும் என்பதை அழகுறச் சொல்லியிருக்கிறார்.
ஈழம் மலரும் என்று
நாம் மட்டுமல்ல
சிட்டுக்களும் மொட்டுக்களும்
நம்பிக்கையோடு காத்திருக்கிறதே! -என்கிறார்.
அந்த அச்சம் சிங்களனுக்குக் கூட உண்டு. ஆகையால்தான் 2009 –ல் விழுதுகளை வீழ்த்தி
வேர்களையே வீழ்த்தி வித்ததாக விளம்பி இருமாந்து கொண்டிருக்கிறான் இழிபிறப்புச் சிங்களன்.
அதே கவிதையின் இறுதியில்,
என் பயணம் ஒருவழிப் பாதையல்ல
இருவழிப் பாதை –என்கிறார்.
இரைதேடப் பறவை எத்தனை உயரம் சென்றாலும் இறுதியில் இளைப்பார மண்ணகமன்றோ மடி கொடுக்கிறது!
இவரது தாய்போல் எத்தனை எத்தனை தாய்கள்? இவரது தாய்க்குப் போல் எத்தனைப்பேர் நம்பிக்கைச்
சொற்களை நடுகிறார்கள்.
‘கன்னத்தில் முத்தமிட்டால்…’ கவிதையில்
மகளுக்கோ மகனுக்கோ
தரும் முத்தம்
கன்னத்தில் விழுவதில்லை
காதில்…
எத்தனை அடர்த்தியான உருக்க வரிகள். சிறு கல்லை அமைதியான குளத்தில் போட, அக்கல்லினும்
ஆயிரம் மடங்கு பெரிதாய் விரியும் நீர் வட்டங்கள் போல் என்னுள் ஆயிரம் ஆயிரம் சலனங்கள்.
‘நான் தரும் முத்தம் என் மகளின் கன்னத்தில் விழுகிற அந்த ஒற்றை மகிழ்ச்சி போதும் எனக்கு’
என்று அறைகூவத் தோன்றுகிறது.
மரபை நான் மணந்து கொண்டவன். புதுக்கவிதை, நான் கைகழுவிய காதலி அல்ல. என் கை
நழுவிய காதலி. அந்தப் பழைய காதல் உணர்வோடு மரப்பாச்சிப் பொம்மைகளைக் கண்ணுற்ற போது
என் எண்ணுற்றவற்றை இயம்பினேன்.
இறுதியாக இவருக்கு இயம்புவதற்கு ஒன்றுண்டு. கவிதை முத்தத்தைப்போல் சட்டென்று
முடிந்து போகட்டும். அதுதரும் ஈரமும் சுவையுமே நீண்டுகொண்டிருக்கட்டும்.
தோழமையுடன்
அகரம் அமுதன்.
06.06.2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)