சனி, 30 ஆகஸ்ட், 2014

குரு!

ஒருமுறை நான் எங்கள் பாட்டி அவ்வை வீட்டிற்குப் போயிருந்தேன். ஓடிவந்து வாரியணைத்த பாட்டி தன்மடியில் கிடத்தி அன்பைப் பொழியலானாள். குழந்தாய்! இப்பொழுது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றாள். படித்துக்கொண்டிருக்கிறேன் பாட்டி என்றேன். நல்லா படிக்கிறாயா? யார் ஆசான்? என்றாள். யாருமில்ல பாட்டி நானாதான் தன்முயற்சியால படிச்சிக்கிட்டிருக்கிறேன் என்றேன்.

பாட்டி சொன்னாள்:-

மாடில்லான் வாழ்வு மதியில்லான் வாணிகம்நல்
நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் -கூடும்
குருவில்லா வித்தை குணமில்லாப் பெண்டு
விருந்தில்லா வீடும் விழல்.

என்ன புரிஞ்சிதா? ஒரு குருவைத் தேர்ந்தெடுத்துக்கோ என்றாள்.
சரி பாட்டி எனச்சொல்லிவிட்டுத் தோட்டப்பக்கமா ஓலையும் கையுமா உக்காந்திருந்த எங்க தாத்தா வள்ளுவர்கிட்ட ஓடினேன்.

அடேடே! வா குழந்தை! பாட்டியோட அப்படி என்ன ரொம்ப நேரமா பேசிக்கிட்டிருந்தே? அப்டின்னார்.

ஒழுங்கா படிக்கிறியான்னு கேட்டாங்க தாத்தா!

இதையா இவ்வளவுநேரம் பேசிக்கிட்டிருந்தீங்க? என்றார்.
ஆமாம் தாத்தா! நல்லா படிச்சிப் பெரியாளா வரணும்னா ஒரு குருவைத் தேர்ந்தெடுத்துக்கோ-ன்னாங்க தாத்தா!

அப்டியா? குருவைத் தேர்ந்தெடுக்கும் போது எப்படிப் பட்ட குருவைத் தேர்ந்தெடுக்கணும் தெரியுமா?:-

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொள் -அத்தோட மட்டுமா?

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியாரைப் பார்த்துத் தெர்ந்துகொள் -என்ன புரிஞ்சிதா? என்றார்.

ஒண்ணுமே புரியல அப்டின்னுட்டு அவர்கன்னத்தில் நல்லா எச்சில்பட ஒரு முத்தம் வெச்சேன்.

அடடா! இப்பத்தான் உண்மை விளங்கிற்று ஒரு பாட்டைத்தப்பா எழுதிட்டேன்னு திருத்தியெழுதத் துவங்கினார்.

பாலொடு தேன்கலந் தற்றே குழந்தாய்!உன்
வாலெயிறு ஊறிய நீர்.

அந்த நேரம் எங்க பெரிய தாத்தா திருமூலர் வந்தாங்க. (அவர்தான் நம்ம குடும்பத்துக்கே மூலம்ன்னு அம்மா சொல்லியிருக்காங்க.)

அடேய்! குழந்தைக்கிட்ட இப்படியா புரியாதமாரி சொல்றது? நான் சொல்றேன் வா குழந்தாய் ன்னு தோளில் வாரியணைத்துக்கொண்டு சொல்லத்துவங்கினார்.

எப்படிப்பட்ட குருவைத்தேர்ந்தெடுக்கணும்ங்கறதுக்கு முன்னால் குருடுன்னா என்னன்னு தெரியுமா? என்னார்.

ஓ! நல்லா தெரியுமே! கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்! புண்ணுடையர்ன்னா குருடர்ன்னுதானே பொருள்? அப்டித்தான் சின்ன தாத்தா சொல்லித்தந்தார். ஹா! ஹா! ஹா! 

ஆமாமாம். ஆனா இன்னுமொரு பெருங்குருடிருக்கிறது. அதத்தான் இப்ப நான் உனக்கு சொல்லப்போறேன்.

குருடினை நீக்கும் குருவினைக் காணார்
குருடினை நீக்காக் குருவினைக் காண்பார்
குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக்
குருடினில் வீழ்வது குருடது வாமே!

ஆங்! புரிஞ்சிது தாத்தா! நம்ம அறிவுக்கண்ணைத் திறப்பவரா பார்த்துத் தேர்ந்தெடுக்கணுங்கறீங்க. அப்படியே செய்கிறேன் தாத்தா!

ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... 

அய்யோ! மணி ஏழாச்சே! விடிஞ்சது கூடத்தெரியாம(ல்) தூங்கிக்கிட்டிருந்திருக்கிறோமே.

கருத்துகள் இல்லை: