ஞாயிறு, 8 ஜூன், 2008

மல்லிகையே வெண்சங்காய்!

அது தாமரை குவிய அல்லி மலரும் அந்திப்பொழுது. சோழன் அவை. அவையின் தலைமைப் புலவன் ஒட்டக்கூத்தன் முன்னிலையில் தகைமிகு நளவெண்பா அரங்கேற்றம்.

அரங்கேற்றுபவன் வெண்பாப் புகழ் புகழேந்தி.

அது ஓர் அந்திப்பொழுதல்லவா! புகழேந்திப் புலவனும் அவ்வந்திப் பொழுதைச் சிறப்பித்து ஓர் வெண்பா அரங்கேற்றுகிறான்.

அந்த அந்திப்பொழுதை ஓர் இராச ஊர்வலம் என்று உவமிக்கிறான். அந்த அந்தி எப்படி நடந்து வருகிறதாம்! மல்லிகைப் பூவினையே வெண்சங்காக எண்ணிக்கொண்ட வண்டினங்கள் ஊதிஊதி முழங்குகின்றனவாம். சிறந்த கரும்பாலாகிய வில்லினை உடைய மன்மதன் காம உணர்வைத்தூண்டும் தன் மலர்க்கணைகளைக் கையிலேந்தித் தாக்கிக் காளையர்களுக்கும் மகளிருக்கும் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறானாம். அவ்வேளையில் முல்லை மலர்களால் ஆன மாலை தன் தோளில் அசைந்தாட ஓர் இராச ஊர்வலம் போல் அவ்வந்தி மெல்லமெல்ல நடந்து செல்கிறதாம்.

பாடலையும் பாடலுக்கானப் பொருளையும் அவைமுன் வழங்கிவிட்டு அனைவரின் மறுமொழிக்காகக் காத்திருக்கிறான் புகழேந்தி.

அவைத் தலைமைப் புலவன் ஒட்டக்கூத்தனுக்குக் கடுங்கோபம். நிறுத்தய்யா உம் பிள்ளைக் கவியை! இப்படியா சொற்குற்றம் பொருட்குற்றம் விளங்கக் கவிபாடுவது? -என்றான்.

புகழேந்திக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ஒட்டக் கூத்தன் தலைமைப் புலவன். அவன் புலமையைப் பற்றி ஐயுறுவதற்கில்லை. புகழேந்தியும் புலமையில் தாழ்ந்தவனில்லை. என்றபோதும் அவைத் தலைமைப் புலவன் என்ற வகையில் அவன் குறைகண்டுப்பிடித்துக் கூறிவிட்டால் அதை மறுத்துப்பேசும் அளவிற்கு அங்கு யாருக்கும் தமிழறிவும் புலமைச்செருக்கும் இருந்ததில்லை.

புகழேந்தி சற்றே நடுக்கத்துடன் கேட்டான். யாது குற்றம் கண்டீர்?

“மல்லிகைப் பூவினையே சங்காக எண்ணிக்கொண்டு வண்டினங்கள் அவற்றை ஊதுவதாகப் பாடினீர்கள் அல்லவா? அதில்தான் குற்றம் என்கிறேன்.

மலரின் மேற்புறத்தில் அமர்ந்துதான் வண்டுகள் தேனுண்ணும். அப்படி அமர்ந்துத் தேனுண்ணும் காட்சியையே தாங்கள் வண்டு சங்கைப் பிடித்து ஊதுவதாக உவமிக்கின்றீர். மலரின் முன்புறத்தில் அமர்ந்துகொண்டுத் தேனுண்ணும் வண்டின் காட்சியை சங்கின் பின்புறத்தை வாயில் வைத்து ஊதும் காட்சியோடு எப்படி உம்மால் உவமிக்கமுடிந்தது. இது காட்சிப் பிழையல்லவா? காட்சிப் பிழையோடு கூடிய தங்கள் கவியை இவ்வவையில் அரங்கேற்ற இடம்கிடையாது. தாங்கள் வெளியேறலாம்” என்று ஒட்டக்கூத்தன் கண்டிப்பாகக் கூறிவிட்டான்.

அவையெங்கும் மௌனம். தொண்டையைக் கனைத்துக்கொண்டு புகழேந்தி கூறலுற்றான்.

அய்யா! கள் அருந்தியவனின் நிலையென்ன? கள் மயக்கத்தில் தான் என்னசெய்கிறோம் என்னபேசுகிறோம் என்பதுதான் அவனுக்குத்தெரியுமா? இரண்டு கால்கள் இருந்த போதும் அவனால் நிற்கக்கூட முடிவதில்லையே!

அதுபோல்தான் அதிகமாய் மலர்த்தேனை உண்ட மயக்கத்தில் தான் மலர்என்ற வெண்சங்கின் முன்புறத்தைப் பிடித்து ஊதுகிறோமா பின்புறத்தைப் பிடித்து ஊதுகிறோமா என்கின்ற சுயநினைவின்றி வண்டு ஊதிக்கொண்டிருந்திருக்கலாம் அல்லவா? -என்றான் புகழேந்தி.

இப்பொழுது அவையில் இருந்த மற்ற பெரும் புலவர்கள் எல்லாம் புகழேந்தியைப் பாராட்டத்துவங்கிவிட்டார்கள்.

சட்டென்றுத் தாவியெழுந்தான் ஒட்டக்கூத்தன். ஓடிவந்து புகழேந்தியை ஆரத்தழுவிக் கொண்டான். இப்பொழுது புரிகிறதா புகழேந்தி நான் ஏன் உன்கவியில் குற்றம் கூறினேன் என்று? நான் குற்றம் கூறாது விட்டிருந்தால் இப்படியும் ஓர் பொருள் இருப்பது உலகிற்குத் தெரியாமலே போய்விடுமே! ஆதலால்தான் இப்படியோர் நாடகத்தை ஆடினேன் என்றுகூறி மீண்டும் ஆரத் தழுவிக்கொண்டான்.

இத்தனைக் கலவரத்தை ஏற்படுத்திய அப்பாடலைப் பார்ப்போமா?

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கரும்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப -முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது!

அகரம்.அமுதா

9 கருத்துகள்:

anujanya சொன்னது…

அமுதா,

உங்களிடமிருந்துதான் நான் சிறுகச் சிறுகத் தமிழ் கற்கலாம் எனக் கொள்கிறேன். மிக அழகான ஒரு பின்புலம் இந்தப் பாடலுக்கு.

அகரம் அமுதா சொன்னது…

அய்யய்யோ! அந்த அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை! ஏதோ தெரிந்ததை எழுதுகிறேன். அவ்வளவே!

Kavinaya சொன்னது…

அகரம்.அமுதா! வெகு அருமையாய் இலக்கிய இன்பத்தை அனுபவிக்க தருகிறீர்கள்! உங்கள் பணி தொடரட்டும்!

kandanursasi சொன்னது…

periya aaaaaaaaal than

அகரம் அமுதா சொன்னது…

நன்றி கவிநயா அவர்களே!

அகரம் அமுதா சொன்னது…

வாங்க சசி! தங்கள் வருகை என்னை இன்பத்தில் ஆழ்த்தியது. நன்றி

குமரன் (Kumaran) சொன்னது…

மிக அழகான உவமைநயம் கொண்ட பாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் அமுதா. எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாத சுவை கொண்டவை இந்தப் பாடல்கள்.

புலமையால் போர் நடக்கும் என்பதால் புலமைச்செறுக்கு என்று சொன்னீர்களோ? நான் அது புலமைச் செருக்கோ என்று எண்ணினேன். :-)

இவன் கீரனார் பரம்பரையோ என்று நினைக்காதீர்கள். உங்களைப் போன்ற தமிழார்வலர்கள் எழுத்துப்பிழை விடுவது தகாது. அதனால் தான் அதனையும் குறிப்பாகச் சொல்கிறேன். அறம் பாடிவிடாதீர்கள். :-)

அகரம் அமுதா சொன்னது…

மன்னிக்க வேண்டும் குமரன்! எத்துணைக் கவனமாக இருப்பினும் பிழை நேர்ந்து விடுகிறது. இனி கவனமாயிருக்கிறேன். நன்றி. மீண்டும் வருக!

ந.தமிழ்வாணன் சொன்னது…

என்ன ஓர் அற்புதமான கற்பனை!
வாழ்த்துகள்.

ந.தமிழ்வாணன்
www.persatuangurutamilsekmenjohor.blogspot.com