தாழையாம் பூமுடிந்து
தடம்பார்த்து நடைநடந்து
வாழையிலை போலவந்த செல்லம்மா!
என்வாசலுக்கு வாங்கிவந்தது என்னம்மா?
கவியரசன் கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள் இவை.
'வாழையிலை போலவந்த செல்லம்மா!' என்ற வரிகளில் புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை ஏன் 'வாழையிலை' என்று வருணித்தான் கண்ணதாசன் என்ற விவாதம் எங்கள் நண்பர்களுக்குள் எழுந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். நண்பர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் சிந்தனையைத் தூண்டுவதாகவே இருந்தது. எங்களின் வாதத்தில் இடம்பெற்ற சில விளக்கங்களை இக்கட்டுரையில் பதிவு செய்கிறேன்.
"வாழைக் கன்றைப் பிடுங்கி அதன் தலையைச் சீவிவிட்டுக் கிழங்கோடு கூடிய தண்டுப் பாகத்தை மட்டுமே நடுவது வழக்கம். அப்படி நட்டவுடன் அதன் தண்டுப் பகுதியிருந்து முதல் இலை குருத்துவிட்டுக்கொண்டு எழுந்து வரும். எப்படி வந்தால் வாழைக்கன்று பிழைத்துக்கொண்டது என்று பொருள். அந்த முதல் இலைபோல தான் புகுந்த வீட்டைத் தழைக்கச் செய்ய அவள் வருகின்றக் காரணத்தால் அங்கே வாழையிலை என்ற வருணனையைக் கண்ணதாசன் பயன் படுத்தினார்" என்றார் ஒரு நண்பர்.
"அத்தோடு மட்டுமா? வாழை தழைப்பதற்காக வந்த அந்த முதல்இலை பின் வரும் இலைகள் வளர்ந்துத் தழைப்பதற்காகத் தான் நாருநாராகக் கிழிந்துத் தன்னை மாய்த்துக்கொள்ளவும் செய்கிறதே! அதுபோல் புகுந்த வீட்டில் கணவனுக்காக மாமனார் மாமியாருக்காக பிள்ளைகளுக்காகத் தன் இன்பதுன்பங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களுக்காக உழைத்துழைத்து உடல் மெலிந்து நூலாய்த்தேய்கிறாளே! அதனாலும் வாழையிலை என்று அவளை வருணித்தார்" என்றார் இன்னொரு நண்பர்.
ஒருவன் உடல்முழுதும் தீக்காயம் ஏற்பட்டுவிட்டால் அவன் உடலைத் துணிகொண்டு மூட முடியாது. துணி தீக்காயங்களில் ஒட்டிக்கொண்டு மேலும் வேதனையை ஏற்படுத்தும் என்பதால் வாழையிலையைக் கொண்டு மூடி அவன் மானத்தைக் காப்பார்கள். வாழையிலை புண்ணோடு ஒட்டாமலும் அவனுக்கு மென்மேலும் வேதனையை ஏற்படுத்தாமலும் அவன் மானத்தைக் காப்பதாகவும் இருக்கும். அதுபோல் புகுந்த வீட்டில் தான் அடியெடுத்து வைப்பதற்குமுன் எத்தனைக் குழப்பங்களும் சிக்கல்களும் இருப்பினும் அதனைப் பெரிதுபடுத்தாது யார்யாரிடம் அப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற பகுத்தறிவோடு புகுந்த வீட்டின் மானத்தைக் காப்பவளாகவும் இருப்பதால் வாழையிலை என்றான் கண்ணதாசன்" என்றார் மூன்றாமவர்.
நான்காமவர் வினோதமான ஆணாதிக்கம் மிகுந்த ஓர் கருத்தைக்கூறினார். அதாவது விழாக்களிலும் இல்லங்களில் நடக்கும் ஏனைய நிகழ்ச்சிகளிலும் வாழையிலையில் உணவு பரிமாறுவது வழக்கம். அப்படிப் பரிமாறப்படும் இலை ஒருவருக்குமேல் பரிமாறப் படுவதில்லை. அதுபோல் பெண்ணும் ஒருவனோடு உறவாடி இன்புற்று வாழவேண்டியவள் என்பதால் சாப்பாட்டு இலையோடு ஒப்பிட்டே கண்ணதாசன் வாழையிலை போலவந்த செல்லம்மா! என்று எழுதினான் என்றார்.
இதுவரை பேசாதிருந்த நான் பொறுமையிழுந்து விட்டேன். "அய்யா! தங்களின் ஆணாதிக்கச் சிந்தனையைக் கொஞ்சம் நிறுத்தும். நீங்கள் கூறுவதுபோல் சாப்பாட்டு வாழையிலையோடு பெண்ணை உவமித்து அந்த வரிகளைக் கண்ணதாசன் எழுதியிருக்கவே மாட்டான். பந்தியில் இடப்படுகின்ற வாழையிலை சுத்தமானதா? மற்றவர்கள் யாரும் அமர்ந்து உண்ணாத புதிய இலையா? என்றெல்லாம் பார்க்கிறோம். ஆனால் பந்தியில் அமர்ந்து உண்ணுபவர் இதற்குமுன் வேறு இலையில் உணவுண்டவரா? சுத்தமானவரா? என்று பார்ப்பதில்லை. இவ்விடத்தில் சாப்பாட்டு இலையோடு பெண்ணைத் தாங்கள் ஒப்பிடுவீரே யானால் ஆணுக்குக் கற்புநிலை தேவையில்லை என்பது போலல்லவா இருக்கிறது!. பந்தியில் இடப்படும் முன் வாழையிலை (அல்லது) சாப்பாட்டு இலை என்ற பேர்கொண்டு அழைக்கப் படும் இலையைப் பந்திகண்டபின் எச்சிலை என்கிறோம். மணம்புரிந்து முதலிரவு கண்ட பெண்ணும் எச்சிலாகிவிடுகிறாளா என்ன? அவளை எச்சில்பெண் என்றா அழைக்கிறோம்? இல்லையே! மாறாக திருமதி என்று உயர்வாக அல்லவா அழைக்கிறோம்!
பந்தியில் அமர்ந்து உண்டவர் எழுந்து சென்றவுடன் அவர் அமர்ந்து உண்ட இலையை எடுத்துக் குப்பைத்தொட்டியில் வீசிவிடுகிறார்கள். பெண்ணை மணந்த கணவன் அகால மரணமடைந்து விட்டால் அவ்வெச்சில் இலையைப் போல் அவளும் வீட்டின் மூளையில் அமர்த்தப் படவேண்டியவளா? மறுமணம் செய்து வைத்து அழகுபார்க்கப் படவேண்டியவளல்லவா அவள்?
இப்படியானால் இவ்விடத்தில் பெண்ணைத் தட்டோடல்லவா ஒப்பிடவேண்டும். ஏனென்றால் தட்டையல்லவா நாம் ஒவ்வொரு முறையும் கழுவிச்சுத்தம் செய்து உணவிட்டு உண்ணுகிறோம். கழுவியத் தட்டு சுத்தமானது என்று நாம் கருதுவதைப்போல் ஒழுக்க நெறி தவறாத பெண்ணும் சுத்தமானவள் என்று கருதுவதுதானே சாலச்சிறந்தது! என்றேன்.
மேலும் வாழையிலை போலவந்த செல்லம்மா! என்ற வரியை இலக்கியப் பாடல் வரிகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது மிக அவசியமாகிறது.
கம்பன் ஓர் அழகிய வெண்பா வடித்தருளியிருக்கிறான்.
பாடல் இதுதான்:-
அவனி முழுதுண்டும் அயிரா வதத்துன்
பவனி தொழுவார் படுத்தும் -புவனி
உருத்திரா! உன்னுடைய ஓரங்கல் நாட்டிற்
குருத்திரா வாழைக் குழாம்!
-என்பதே அவ்வெண்பா!
பாடல்விளக்கம்:-
இந்திரனின் அயிராவத்திற்கு நிகரான தன் யானையில் ஏறி ஓரங்கல் நாட்டையாளும் உருத்திரம் என்னும் மன்னன் ஊர்வளம் வருவது கண்டு அவன் அழகில் மயங்கிய இளம்பெண்களைக் காமவெக்கை நோய் பீடித்துக்கொள்கிறது.கலங்கிய பெற்றோர்கள் அவ்வெக்கை நோயைப் போக்க வாழையின் குருத்திலையைப் பரித்து வந்து அதில் தம் பெண்மக்களைப் படுக்கவைக்கின்றனர். இது அன்றாடம் தொடர்கதையாவதால் அந்நாட்டில் உள்ள வாழைகளுக்கு எதற்குமே குருத்திருப்பதில்லை. குருத்துவிடக் குருத்துவிட அதைப் பரித்துக்கொண்டு போய் தம்பெண்மக்களை அதில் கிடத்திவிடுகிறார்கள் என்பதே அதன் பொருள். (இதன்மூலம் வாழையிலைக்கு உடல் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் இருக்கிறது என்பது புலப்படுகிறது)
உடல்சூட்டைத் தணிக்கும் அவ்வாழையிலை போல கொண்டவனின் காம இச்சையைத் தணிப்பதற்காக அவள் வருவதாலும் அங்கே வாழையிலை என்று ஒப்பிட்டான் என்றேன்.
அகரம்.அமுதா
புதுச்சேரி வரலாற்றுச் செய்திக் குவியலாக ஒரு நாள்காட்டி
4 ஆண்டுகள் முன்பு
19 கருத்துகள்:
வாழையின் சிறப்புகளெல்லாமே பெண்களுக்கு ஒப்பிட உகந்ததாய் இருக்கின்றன! நல்ல அலசல்!
சுவையாக இருந்தது விவாதம், தாழைக்கு எதுகையாகத்தான் வாழையை போட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்! அதற்கு பொருள்கூட்டிப் பார்ப்பதே இலக்கிய இன்பம்!
நன்றி! நன்றி! நன்றி!
///சுவையாக இருந்தது விவாதம், தாழைக்கு எதுகையாகத்தான் வாழையை போட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்!///
தாங்கள் கூறியதும் சரிதான் ஜீவா அவர்களே! ஆயினும் தாழை என்கிற சொல்லை அப்பாடலில் ஏன் பயன் படுத்தினான் என்று தெரியுமா? (குறிப்பு:- இதைப்பற்றியும் எங்கள் நண்பர்களுக்குள் ஓர் விவாதம் எழுந்ததே!)
அப்பல்லாம் கூந்தல்ல பூ வச்சு தைச்சு அலங்கரிக்கும்போது தாழம்பூ வச்சுதான் தைப்பாங்க. அதுக்கப்புறம்தான் செவ்வந்திப்பூ, மல்லிகைப்பூ, அதெல்லாம் வச்சுத் தைக்க ஆரம்பிச்சாங்க. அதனாலதான் தாழையாம்பூ முடிச்சுன்னு எழுதினாரோ என்னவோ.
கவிநயா! தாங்கள் கூறியதும் ஓர் வகையில் சரிதான்.
பூவகைகளிலேயே தாழம்பூவின் வாசத்திற்குத்தான் பாம்பு மயங்கும். மிகுதியான மணம் காரணமாக பாம்புக்குட்டிகள் தாழையின் மலரில் சென்று தங்கிக்கொள்ளும்.
ஆகையால்தான் குழந்தைகளை தாழை இருக்கும் பக்கம் போக அனுமதிக்க மாட்டார்கள்.
இளவட்ட ஆண்களுக்கு சற்றே சினம் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட ஆடவரை "அவனைப் பார்! கொம்பேறி மூக்கனைப்போல் சீறுகிறான்" என்பார்கள். "அட அதெல்லாம் இல்லப்பா! அவன் அப்படித்தான் சீறுவான். ஆனால் கடிக்கமாட்டான். அவன் தண்ணிப்பாம்பப்பா!" என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.
பாம்பு தாழைக்கல்லவா மயங்கும்! சீற்றம்கொண்ட ஆடவன் என்னும் கொம்பேறி மூக்கனையும் மயக்கித் தன்வயப் படுத்தவே அவள் தாழை அணிந்துகொண்டு வருகிறாலாம்.
அமுதா,
கம்பன் காலத்தில் பெண்களுக்கு வந்த காமவெக்கை நோய் கண்ணதாசன் காலத்திலிருந்து ஆண்களைத் தொற்றிவிட்டது போலும்! ம், நடக்கட்டும் !
பதிவின் பெயருக்கேற்ப அருமையான இடுகைகளாக இட்டிருக்கிறீர்கள் அகரம்.அமுதா. எத்தனையோ முறை இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இது வரை 'தாழையாம் பூ முடித்து'விற்கும் 'வாழையிலை போல் வந்தவளுக்கும்' பொருள் எண்ணிப் பார்த்ததில்லை. விளக்கங்கள் அருமை. நன்றி.
வாங்க திரு குமரன் அவர்களே! தங்களின் வலையில் பல பாடல்களையும் வரிவடிவிலும் வழங்கிவருதல் கண்டிருக்கிறேன். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்நிலவே! என்ற கண்ணதாசனின் பாடல் கிடைத்தால் அதை வரிவடிவில் எனக்கு அனுப்ப முடியுமா? அபௌட் மீயில் என் மின்மடல் முகவரி உள்ளது.
அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்)
ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்)
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே நீ சிரித்தாயோ
கோதை எனைக் காயாதே கொற்றவரங்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
(அத்திக்காய்)
வாருங்கள் திரு திண்டுக்கல் சர்தார் அவர்களே! திரு குமரனிடம் கேட்டிருந்தேன். தாங்களாக முன்வந்து அளித்தமைக்கென் மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். மீண்டும் வருக!
சாப்பிட்டதும் எச்சில் இலை என்று வீசியெறியப்படும் வாழையிலைக்கு
இவ்வளவு விளக்கமா? கவிஞர்கள் எடுத்தாளும் வார்த்தைகளுக்கு நல்ல விளக்கம் கூறி உள்ளீர்கள்.
ஆனாலும் ,அகரம் அமுதா....அது..
"வாழையிலை போல வந்த பொன்னம்மா!" செல்லம்மா இல்லை.
எழுதும் போது எந்த ஒரு ஆசிரியரும் என்ன காரணம் என்று தானாக உரை எழுதாதவரையில் நாமாக எல்லாம் பொருத்திப்பார்க்கலாம்.. நீங்கள் விதவிதமாக விவாதம் செய்திருக்கிறீர்கள்.. :) நன்றாகத்தன் விவாதம் செய்திருக்கிறீர்கள்..
என்னம்பா இது? அது பொன்னம்மாவா இருந்தால் என்ன? கண்ணம்மாவா இருந்தால் என்ன? நாம் பார்ப்பது வழையிலையைத்தானே!
வாங்க நானானி! வாழ்த்துக்கள். அதென்ன நானானி?
வாருங்கள் கயல்விழி அவர்களே! இப்பொழுதுதான் இலக்கிய இன்பத்திற்காக ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். அதில் எழுதிய சில வரிகளையே உங்களுக்கு விடையாகக் கொடுத்து விடுகிறேன்.
////ஒரு கவிஞனுக்கு ஏற்படக் கூடாத துன்பமும் அவன் வாழ்நாளில் நடக்கக் கூடாத நிகழ்வும் என்ன தெரியுமா?
ஒரு கவிஞன் எழுதிய கவிதை வரிகளுக்கு அவனே பொருள் சொல்லி விளக்குவது போல் துன்பம் தருவது வேறொன்றில்லை. அதுவே அவன் வாழ்வில் நிகழக் கூடாததுமாகும்.////
அவனே பொருள் சொல்லவேண்டுமென்றால் பிறகு நாமெதற்கு?
நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்
நன்றி திரு இம்சை அவர்களே!
இலக்கியத்தையும், தமிழையும் அகழ்ந்து பார்ப்பதில் இன்பம் உண்டு. இன்று யாழ்க்களத்தில் இந்தப்பதிவை நுணாவிலான் என்பவர் இணைத்திருந்தார். மிகவும் சுவைத்தேன் தமிழ்த்தேன்.
மிக்க நன்றிகள் வல்வை சகாறா அவர்களே!
கருத்துரையிடுக