திங்கள், 22 டிசம்பர், 2008

தேரா மன்னன்!

கடந்த சில நாட்களாக சூடான காரசாரமான செய்தியாக இணையத்திலும் தொலைக்காட்சிச் செய்தியிலும் நாளேடுகளிலும் உலாவிக் கொண்டிருப்பது “அமெரிக்க முதற்குடிமகனை ஈராக்கிய செய்தியாளர் செருப்பால் அடிக்க முனைந்த நிகழ்வு”

இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய குற்றமென்று பலரும் எழுதியும் கருத்துரைத்தும் வருகின்றனர்.

சரி. இப்பொழுது நாம் சற்றே இலக்கியத்திற்குள் நுழைவோம். அரசகுடியில் மூத்த மகனாகப் பிறந்தும் மன்னனாவதற்குத் தக்க தகுதிகள் இருந்தும் அப்பன் செய்தளித்த உறுதியால்(ஷத்தியத்தால்) மன்னனாகும் தகுதியிழந்து அந்நாட்டில் ஓர் குடிமகனாக வாழவும் வகையற்றுக் காடுபோந்த இராமன் நாடோடியாகத் தென்னகம் போந்து வாழ்கையில், சுக்கிரீவன் வேண்டுகோளுக்கிணங்கி மன்னன் வாலியை மறைந்திருந்து அம்பெய்திக் கொன்றான்.

இவ்விடத்தில் நாம் சிறு ஆய்வுசெய்வோம். வாலியைக் கொலைபுரிய இராமனுக்கும் வாலிக்கும் நேரடிப் பகையோ அல்லது மறைமுகமாகக் கூட பகையிருப்பதாக காவியத்தில் அறியமுடியவில்லை. ஆயினும் நண்பன் (சுக்ரீவன்) கூறியதால் எதிர் நின்று போர்செய்யாமல் புதர்நின்று போர்செய்தான் இராமன்.

ஏன் வாலியைக் கொன்றான் இராமன்? இராமனுக்குத் தெரியாதா! அரசகுடியில் முற்பிறந்தோனுக்கே மணிமுடியென்பது. அறிந்திருந்தும் சுக்ரீவனுக்கு முற்பிறந்தவனை தென்னகத்தின் மன்னனை ஏன்கொன்றான்? ஏனென்றால், தம்பியின் மனைவியாயினும் அவள் மாற்றான் மனைவி எனக்கருதாமல் தன்னுடைமை ஆக்கிக்கொண்ட அவ்விழிச் செயலே இராமன் வாலியை வதைசெய்யக் கரணியமாக அமைந்தது.

இத்துணைக்கும் இராமன் தென்னவன் அல்லன். தென்னகத்தைப் பொருத்தவரை அவன் ஒரு நாடோடி. ஓர் நாடோடிக்கே அயலகப் பெண்ணுக்கு இழைக்கப்படும் தீங்கை எண்ணிக் கடுஞ்சினம் மூளுமென்றால், அமெரிக்கப் படையால் நாடொறும் ஈராக்கிய பெண்மணிகள் கற்பழிக்கப் படுவதும் கொலைசெய்யப் படுவதும் பார்க்க அந்நாட்டுக் குடிமகனுக்குக் குருதி கொதிக்குமா? கொதிக்காதா?

இராமனிடம் வில்லம்பிருந்தது எய்தான். இன்றைய குமுகாயத்தில் தனிமனிதன் கொலைக்கருவிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம். ஆயினும் செருப்பணிவதற்கு யாதொரு தடையும் இல்லை. இராமனிடம் வில்லம்பிருந்தது அம்பையெய்தான். ஈராக்கிய செய்தியாளரிடம் காலணியிருந்தது ஆக, காலணியை எய்தான்.

இராமன் சரியான பொருளைத்(அம்பு) தவறான முறையில் (மறைவிலிருந்து கொண்டு) செலுத்தினான். ஈராக்கிய செய்தியாளன் தவறான பொருளைச்(செருப்பை) சரியான முறையில் (நேரெதிரில்) விட்டெறிந்திருக்கிறான். இராமனுக்கும் ஈராக்கிய செய்தியாளருக்கும் உள்ள வேற்றுமைகள் இவ்வளவே.

சிலம்பில் பாண்டியன் செய்த அற்றமென்ன? கோவலனைக் கொண்டுவா என்பதற்குப் பதிலாய்க் கோவலனைக் கொன்றுவா என வாய்தவறுதலாக் கூறியது அவ்வளவுபெரிய அற்றமா?

தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறுசெய்த பாண்டியனுக்கு அத்தவறுக்கான பரிசு சாக்காடா? இது தகுமா? சற்றே ஆராயத்தான் வேண்டும்.

“தேரா மன்னா!” எனப் பாண்டியனைப் பார்த்துக் கண்ணகி கேட்டதற்குக் கரணியம் தட்டான் (நகைத்தொழிலாளி) கூறியதை உண்மையென நம்பிக் கோவலனைக் கொன்றுவா எனப்பிழைபட உரைத்தான் என்பதற்காக மட்டுமல்ல.

ஓர் நாட்டில் கொள்ளையர்கள் எப்பொழுது உருவாகிறார்கள் என்றால் அவர்களுக்குப் போதிய உணவு, உடை, உறைவிடம் இல்லாப்போழ்து ஆங்குக் கொலை கொள்ளை போன்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. பொற்கொல்லன் ஒருவன் அரசியாரின் காற்சிலம்பையே களவாடுகிறான் என்றால் அந்நாட்டின் ஆட்சிமுறையில் ஒழுங்கின்மை தெள்ளிது. சிலம்பின் மீது பொற்கொல்லன் பற்றுவைத்ததற்குக் கரணியம் பொய்யுரைப்பினும் அதை மெய்யெனக் கருதி நம்பும் மடமன்னன் இருப்பதால். எது உண்மை எது பொய் எனக் கண்டாயும் காவலர் திறம்படச் செயல்படாமையால் பொற்கொல்லனின் பொய் மெய்யானது. கோவலனின் மெய் பொய்யானது.

நல்ல நாடு எனப்படுவது நல்லரசால் ஆளப்படுகிற நன்மக்களை உடைத்து. நன்மக்கள் நிறைந்தும் நல்லரசமையாவிடின் அந்நாடு பாழ். நல்லரசமைந்து நன்மக்கள் அமையாவிடினும் அந்நாடு பாழ். பொருளைத் தெளிவாகக் காட்டுவது இடக்கண்ணா? வலக்கண்ணா? என்றால் இரண்டுவிழிகளும் தெளிவான பார்வை பெற்றிருத்தல் வேண்டும் என்பதைப் போல நாடு என்பது நன்மக்களாலா? நல்லரசாலா? என்றால் இரண்டும் நன்கமைதல் வேண்டும். இவ்வளவையுங் கண்ணுற்றே கண்ணகி பாண்டியனைத் “தேரா மன்னா!” என இடிந்துரைத்தாள்.

சரி. இங்குத் தவறிழைத்தவர்கள் பாண்டியனும் அரசூழியர்களும் தான். இருப்பினும் ஏன் கண்ணகி மதுரை மாநகரையே தீக்கிரையாக்க வேண்டும்? ஏனென்றால் சரியான மன்னனைத் “தேரா மக்கள்” அம்மதுரைவாழ் மக்கள். மேலும் அயல்நாட்டவன்மீது தவறாக ஆணைபிறப்பிக்கப் பட்டு அவன் கொலையுண்டு வீழ்ந்ததை அறிந்தபின்பும் குடிமக்கள் என்கிறமுறையில் கண்ணகிக்கு நயன் (நீதி) தேடித்தர முன்வராமை. ஆகையால் மதுரை மாநகரமே தீக்கிரையானது.

தனிமனிதன் (கோவலன்) கொலையுண்டதற்கே அந்நாடும் அந்நாட்டரசும் அழிவதும் அழிக்கப்படுவதும் சரியெனில் அணுக்கருவி உற்பத்தி செய்வதாய்க் கூறி அத்துமீறி அந்நாட்டுமீது போர்தொடுத்து அந்நாட்டினரை அக்குமுகத்தைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கும் “புசு” அரசுக்கு செருப்படி என்பது குறைந்த அளவு தண்டனையே.

மேலும், கண்ணகி “தேரா மன்னா” எனக்கூறியதோடு நிறுத்தவில்லை. தன் கணவன் அற்றமற்றவன் எனச் சான்றுரைக்கும் நோக்கோடு தன் மற்றோர் காற்சிலம்பை கழற்றித் தரையில் (பாண்டிய மன்னவனை நோக்கி) வீசியெறிந்தாள். அன்று கண்ணகி விட்டெறிந்ததும் காலணியே (காற்சிலம்பு). இன்று ஈராக்கிய செய்தியாளர் விட்டெறிந்ததும் காலணியே (காற்செருப்பு).

அகரம்.அமுதா

8 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நுணுக்கமான பார்வை ஐயா... மிகச் சிறப்பு... சுக்கிரிவனின் மனைவியை வாலி இட்டுக் கொண்டான் என சொல்கிறீர்கள் அதற்காக சுக்கிரிவன் அல்லவா சண்டையிட்டிருக்க வேண்டும்... அது போக, பலம் குன்றிய சுக்கிரிவனால் போரிட முடியாதென்றால் ராமன் வாலியின் முன் நின்றல்லவா போரிட்டிருக்க வேண்டும்...

அகரம் அமுதா சொன்னது…

வாலியுடன் இராமன் நேர்நின்று பொருதுவானாயின், இராமனின் மொய்ம்பில் பகுதி வாலிக்குச் சென்றுவிடுமே. ஆதலால் இராமன் தோற்க நேருமே! ஆதாலல்தான் மறைந்திருந்து தாக்கினான்.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

அண்மைய நிகழ்வொன்றை அன்றைய இலக்கியச் சான்றுகளோடும் நடுவுநிலையோடும் தொடர்புபடுத்தி எழுதியிருக்கும் தங்கள் புலமைக்கு தலைதாழ்த்தி வணக்கம் மொழிகின்றேன்.

ஈராக்கியன் 'செருப்படியை' தங்களைப் போலவே நானும் ஒப்புகின்றேன். மனத்துள் பொங்கித் தேங்கிருக்கும் சிற்றமானது என்றேனும் ஒருநாள் இவ்வகையில் வெளிபட்டே தீரும்.

இராமாயணக் கதையையும் சொல்லி அது தமிழர் கதையன்று என்று சொல்லாமல் சொல்லியுள்ள பாங்கும் மனதை கவர்ந்தன ஐயா!

கண்ணகியின் சீற்றம் தேரா மன்னனான பாண்டியனைப் பலிகொண்டது பற்றியும் கோர்வையாக எழுதியது உண்மையிலேயே.. இலக்கிய இன்பம் ஐயா!

பலே!!!!!!!!!!!!!!!!!!!!!

அகரம் அமுதா சொன்னது…

வருக சுப. நற்குணம் அய்யா அவர்களே! தங்கள் மதிப்பீட்டிற்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

உமா சொன்னது…

//அண்மைய நிகழ்வொன்றை அன்றைய இலக்கியச் சான்றுகளோடும் நடுவுநிலையோடும் தொடர்புபடுத்தி எழுதியிருக்கும் தங்கள் புலமைக்கு தலைதாழ்த்தி வணக்கம் மொழிகின்றேன்.//

நானும் வழிமொழிகிறேன். மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். மீண்டும் இவ்வழகான் கட்டுரைளைத் தொடரவும்.

அகரம் அமுதா சொன்னது…

வருக, வணக்கம் உமா அவர்களே! தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

/////மீண்டும் இவ்வழகான் கட்டுரைளைத் தொடரவும்.////

கட்டுரைகள் எழுதுவதில் அவ்வளவாக விருப்பமில்லை. இருப்பினும் அவ்வப்போழ்து எழுத முயல்கிறேன். நன்றிகள்.

ARIVUMANI, LISBON சொன்னது…

மிக நுணுக்கமானப் பார்வை ஐயா.
மிகச் சிறப்பு !!

'தேரா' என்பதுக்கு விளக்கம் சொல்லவும்.

மேலும் 'நயன்' எனது 'நீதி என்பதன் தூய அத்தமிழ் சொல்லா ? வேறேனும் தூய தமிழ் சொல் உள்ளனவா எனவும் விளக்கவும் ஐயா.

agaramamuthan சொன்னது…

வணக்கம். வருக! அறிவுமணி அவர்களே!

தேரா -என்ற சொல்லுக்கு இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருள் விரியும்! அதற்குச் சான்றாக நான் முன்பு எழுதிய ஒரு பாடலையே வழங்குகின்றேன்.

தேராதே நம்காதல் தேராதே என்றுமட்டும்
தேராதே ஓர்முடிவும் தேராதே -தேராதே
தேராதே என்பாயேல் தேராதே என்நெஞ்சம்
தேராதே ராதேரா தே!

மேலுள்ள பாவில் வருகின்ற தேராதே என்கின்ற சொல் ஒன்பது இடங்களில் வருகின்றது. ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பொருளை வழங்குவதைத் தாங்களே அறியலாம்.

நீதி -என்கிற வட சொல்லுக்கு நயன், நயன்மை என்ற சொற்களே தூயதமிழ்ச்சொற்கள். வேறு இருக்கின்றனவா என்பது பற்றித் தெரியவில்லை.