திங்கள், 15 டிசம்பர், 2008

அழகு!

'அழகு' - இதனை விரும்பாதாரும் சுவையாதாரும்(ரஷனை) பாரில் இருக்கவே முடியாது. பாரில், அழகு என்பது அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்த நிறைபொருளாய் விளங்குகிறது. ஓடும் ஆற்றிலும், ஊறும் ஊற்றிலும், ஆடும் மரத்திலும், பாடும் அருவியிலும், தோன்றும் கதிரிலும் தேயும் மதியிலும், ஆண், பெண், கல், மண், என்று பாகுபாடில்லாமல் எங்கும் அழகு நிறைந்திருக்கிறது. இயற்கையிலும் செயற்கையிலும் அப்படியே!

பொதுவாக அழகு என்பது "அழகு என்று நாம் போற்றும் பொருளுக்குரியதா? அல்லது அப்பொருளைக் காணும் கண்களுக்குரியதா?" சற்றே சிக்கலான வினாதான்.

அழகு என்பதெது? என விளக்க வந்த பலரும் பொருளிலிருப்பதாயும் அப்பொருளைக் காணும் கண்களில் இருப்பதாயும் உரைப்பர். சிலரோ எனில் கண்டாரால் விரும்பப்படுவதெதுவோ அதுவே அழகு என்பர்.

பின்னவர்கள் கூறியிருப்பதில் உண்மையில்லாமலில்லை. எப்பொருள் நம் கருத்தை மனத்தை ஒருமுகப்படுத்தித் தன்னகத்தே ஈர்த்து வைத்துக் கொள்கிறதோ அப்பொருளை அழகு என்கிறோம். எப்பொருள் நம் மனத்தையும், கருத்தையும் ஒருசேர ஈர்க்கவில்லையோ அப்பொருளை அழகின்மையாகக் கருதுகிறோம்.

தெருமுனையில் மின்கம்பிகளில் அமர்ந்துகொண்டு ஓயாமல் கா...கா... எனக்கரையும் காக்கைகள் நம் கண்களில் பட்டாலும் அதன் கரிய நிறமும் ஒழுங்கற்ற கறைதலும் நம்மை ஈர்ப்பதில்லை. ஆகையால் காக்கையை அழகு என நாம் கருதுவதில்லை. அதற்குக் கரணியம் அவை நம் மனத்தை ஈர்ப்பதில்லை. மாறாக பறவைகளில் அழகுடையது என்றால் கிளி, மயில், அன்னம் பொன்றவை நம் நினைவிற்கு வரும். கரணியம் அவற்றின் தோற்றமும், வண்ணமும் நம்மை ஈர்க்கின்றன.

ஆக, அழகு என்பது கண்களால் காணப்படுகின்ற பொருளில் உள்ளதா? அல்லது அப்பொருளைக் காணும் கண்களில் உள்ளதா? என்றால் இரண்டிலும் இல்லை என்பதே என் கருத்து.

ஆம். அழகு என்பது அழகின்மை என்பது உண்மையில் பொருளுக்கில்லை. எக்காலும் எவ்வேளையிலும் பொருளின் தன்மை ஒன்றே. பொருளுக்கு அழகு அழகின்மை என்கிற பாகுபாடெல்லாம் கிடயாது. என்ன குழப்புகிறேனா? சற்றே விரிவாகக் காண்போம்.

ஒருபொருளைக் காணும் போது நம் மனதுள் எழும் உணர்வுகளிலேயே அழகு பொதிந்து கிடக்கிறது. நம் மனத்தில் தான் அப்பொருளுக்கான அழகு பொதிந்துகிடக்கிறது.

அதெப்படி? நாம் காணும் பொருளில் அழகிருந்தால்தானே நம் எண்ணத்துள் பலவித உணர்வுகளைத் தோற்றுவிக்கும்! ஆக பொருளில் தானே அழகிருக்க முடியும் என்கிறீர்களா?

மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும். சற்றே ஆய்ந்தறிவோம்.
மாலைப் பொழுதை விரும்பாதார் ஆரும் உண்டா? நாளெல்லாம் சுட்டெரித்த சூரியன் மேற்றிசையை அடைந்ததும் தண்ணென்று மாறும் விந்தையை வியக்காதார் ஆரும் உளரா? முகம் சிவந்த சூரியன் முகிலாடையால் முகம் மறைப்பதும், முகிலினூடே சிறைவிரித்துப் பறந்து தன் கூட்டை அடையவிருக்கும் பறவைகளின் அசைவும் விரும்பாதார் ஆரும் உண்டா? முதலிரவன்று கணவன் அறைக்குப் புதுமனையாள் புகும் பாங்கோடு நாணம் மாறாமலும் தாழ்த்திய முகம் நிமிர்த்தாமலும் அலுங்காமல் குலுங்காமல் அசைந்துவரும் நிலவின் வரவுகண்டு இன்புறாதாரும் இருப்பரோ? இங்கே அம்மாலை பற்றி எம் பாவலன் தீட்டும் அழகோவியத்தைப் பாருங்கள்:-

செங்கதிரோன் போய்மறையச் செவ்வான் ஏகத்
---திங்களிளம் பிறைநுதலைத் தெரியக் காட்டிக்
கங்குலெனப் புலவர்சொலும் இரவுப் பெண்ணாள்
---காரிருளாம் குழல்விரித்துக் களிக்கை வீசிப்
பொங்கொளிவிண் மீன்களெனும் முத்துப் பற்கள்
---புறந்தோன்ற வேசிரித்துப் போந்தாள் போத
மங்கையவள் பேரழகில் மயங்கி யிந்த
---வையகமே ஆழ்துயிலில் வைகிற் றம்மா!


இப்படி யாவராலும் விரும்பப்பட்டு விரும்புவோர் மனதை இலகுவாக்கிவிடும் கமுக்கமறிந்த பொன் அந்திமாலை சிலருக்கோ, கொடுங்கூற்றை அழைத்து வரும் ஊர்தியாகவும் மாறிவிடுகிறது. நிலவு வில்போலும் அதிலிருந்து வீசும் கதிர் அம்பு போலும் தோன்றுகிறது. ஓர் இரவு இப்படியும் பிறரைத் துன்புறுத்துமா என்கிறீர்களா? ஆளன் இலா மங்கையரையும், மங்கையில்லாக் காளையரையும் நாள்தோறும் மாலைப் பொழுது இப்படித்தானே துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இதோ குறள் வெண்பாவைப் பாருங்கள்.

வில்போலும் தண்நிலவு; வீசுங் கதிரம்பாம்;
அல்போலும் கூற்றே(து) அறை! -அகரம்.அமுதா


அழகோவியம் பொருந்திய அந்தி, ஆளன் இலா இளையாளுக்கு ஓர் கொளையாளி என்கிறார் மூதாதையார். அப்பாடலையும் பாருங்கள்:-

புல்லுனர் இல்லார் நடுங்கச் சிறுமாலை
கொல்லுனர் போல வரும்!


முன்னம் வழங்கியுள்ள விருத்தத்திற்கும் பின்னம் வழங்கிய குறள்வெண்பாக்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் காணுங்கால் நமக்கு ஓர் உண்மை புரியவரும்.

நாளும் வந்து செல்லும் மாலையும், முகிலும், மதியும், இருளும், விண்மீன்களும் ஒன்றுதான். முந்நாளில் உற்ற துணையுடன் கண்டுகளித்த உள்ளம் பிந்நாளில் உற்றதுணை அற்றபோது அதே மாலையை வெறுக்கத்தக்கதாயும் தன்னைக் கொல்லவந்த கூற்றாகவும் கருதுகிறது. கரணியம் என்னவென்றால் ஒன்று நம் மனம் முழுவதையும் ஆட்கொள்ளுகிறபோது அந்த ஒன்று நம் பார்வைக்கு அழகாய்க் காட்சியளிக்கிறது. அவ்வொன்றினின்று மாறுபட்டு நம்மனம் வேறொன்றின் மீது தாவும் போது முந்தைய பொருள் அழகற்றதாகக் காட்சிதருகிறது.

இதன் வெளிப்பாடாக நான் முன்பொருமுறை ஈற்றடிக்காக எழுதிய வெண்பாவில் இப்படி எழுதியிருப்பேன்:-

தீய்க்குதென்பார் ஆளனிலார்; செக்கர் வரமறைந்து
மாய்க்குதென்பார் ஆளனுலார்; மாய்ப்பதுவும் -தீய்ப்பதுவும்
தண்ணென்று வானில் தவழும் தளிர்நிலவா?
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!


நிலவு எப்பொழுதும் போலத்தான் தோன்றுகிறது. ஒளிசிந்துகிறது. மறைகிறது. நம்முள்ளம் மகிழ்வாயிருக்குங்கால் அழகாகத் தெரியும் நிலவு மகிழ்வற்றுவிடுங்கால் அழகற்றதாய்க் காட்சிதருகிறது.(அதாவது அதுநம்மைத் துன்புறுத்துவதாகப் படுகிறது.)

ஆக எப்பொருளும் அழகுடையது அழகற்றது என்ற பாகுபாடுடையதில்லை. அதனைக் காணும் சுவைஞர் மனங்களின் உணர்வுகளிலேயே அழகு அழகின்மை என்ற பாகுபாடுகள் பொதிந்துகிடக்கின்றன. இளமைத்துடிப்பிருக்கும் வரையில் இச்சை தன் மனமெங்கும் பரவிபடந்துகிடக்கும் வரையில், "ஓர்கையில் மதுவும் ஓர்கையில் மாதும் இருக்கின்ற வேளையிலென் உயிர்பிரிதல் வேண்டும். இல்லை என்றால் ஏன்பிறந்தாய் என்றென்னை இறைவன் கேட்பான்" என்றே புலம்பத்தோன்றும். அதே மனதைவிட்டு இச்சை புறம்சென்று அமைதியும் அன்பும் குடிகொள்கின்ற போது சிற்றின்பத்தை ஒதுக்கிப் பேரின்பத்தையே மனம் அழகுடைத்து, ஆழமுடைத்து, இன்பமுடைத்து எனக் கூத்தாடவும் செய்கிறது.ஒன்றை நாம் காணும் பொது அது நம் மனதில் எவ்விதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ, எவ்விதமான உணர்வுகளைத் தோற்றுவிக்கிறதோ, அதனைப் பொருத்தே அதன் அழகை நாம் அளவுகொள்கிறோம். ஆக, பொருளின் அழகு போருளுக்கு உரிமையல்ல. அதை உற்றுணரும் உள்ளத்திற்கு உரிமையுடைத்து. (மாற்றுக் கருத்திருப்பின் மொழியலாம்.)

அகரம்.அமுதா

11 கருத்துகள்:

கே.பழனிசாமி, அன்னூர் சொன்னது…

அழகிய கட்டுரை.
K.Palaniswamy Annur

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//பொங்கொளிவிண் //

இதற்கு என்ன அர்த்தம்... இந்த முறை கட்டுரையை இரு முறை வாசித்தேன்... என் சிற்றறிவுக்கு கொஞ்சம் கடினமாக இருப்பதை போன்ற உணர்வு....

அகரம் அமுதா சொன்னது…

மிக்க நன்றிகள் திரு. அன்னூர் பழனிச்சாமி அவர்களே! தங்கள் வருகைகண்டு மட்டட்ற மகிழ்வெய்துகிறேன். நன்றி.

அகரம் அமுதா சொன்னது…

பொங்கொளிவிண் மீன்கள் -பொங்குகின்ற ஒளிபொருந்திய விண்மீண்கள் அதாவது மிகுந்தஒளிபொருந்திய விண்மீன்கள் எனப்பொருள்படும். அடுத்தடுத்தக் கட்டுரைகளில் முடிந்தவரை தெளிவாகப் புரியுமாறு எழுதுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் விக்னேஸ்வரன் அவர்களே!

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

.// பாரில் அழகு என்பது //

//(ரஷனை) //


அண்ணா........

Kavinaya சொன்னது…

அழகு காண்பவர் கண்களிலும் உணர்விலும்தான் இருக்கிறது என்பதை அழகாகச் சொன்னீர்கள் :)

கறைதல் == கரைதல் ?

அகரம் அமுதா சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிநயா அவர்களே! கரைதல் என்பதே சரி. தவறுதலாகத் தட்டச்சியிருக்கிறேன். திருத்திவிட்டேன். சுட்டியமைக்கு நன்றிகள்.

அகரம்.அமுதா

Subha சொன்னது…

Arumayaana tamizh.
Vaazhtthukkal.

அகரம் அமுதா சொன்னது…

நன்றிகள் சபாஷினி அவர்களே!

குமரன் (Kumaran) சொன்னது…

மிக அழகாக அழகு எங்கிருக்கிறது என்று சொன்னீர்கள் அகரம் அமுதா.

அகரம் அமுதா சொன்னது…

மிக்க நன்றிகள் திரு குமரன் அவர்களே!