திங்கள், 7 ஜூலை, 2008

அடக்கமுடைமை!

கற்கவேண்டிய வற்றை நுட்பமாகக் கற்றாகி விட்டது. ஆய்ந்தறிந்துக் கற்றதனால் சொல்வளம் பெற்றாகி விட்டது. கற்றதாலும் சொல்வளத்தாலும் சிறந்தோர் முற்றிய நிலையை அடைந்து விடுகிறார். அடுத்ததாய் அவர் முற்றல் நிலையிலிருந்துக் கனியின் நிலையடைதல் வேண்டும். அதற்கென்ன வழி? அடக்கம்தான் அதற்கு வழி!

கற்றுச் சிறந்துப் பலரோடும் வாதிடும் வல்லமை பெற்ற நிலையில் நம்மையும் அறியாது ஓர் செருக்குத் தோன்றும். அச்செருக்கு என்னும் களை முளைவிடா வன்னம் களைந்தெடுப்பதே அடக்கமாகும்.

அடக்கமில்லார் கல்வி அக்கற்றோருக்கும் மற்றோருக்கும் எப்பயனும் நல்கா. பயன் செய்யாக் கல்வி நெல்லிடைப் புல்லே போன்றது. அவ்வடக்க மில்லாக் கல்வியைக் கற்றோனை கல்லாதவருள் வைத்துக்காண்பதே சாலும்.

எல்லாமும் கற்றபின்னும் நல்லடக்கம் இல்லாரைக்
கல்லாருள் வைத்தல் கடன்! -அகரம் அமுதா!

நெல்லிடைப் புல்லுக்கே நேராம்; அடக்கமில்லார்
கல்வியாலொன் றாவதில்லை காண்! -அகரம் அமுதா!

கற்றும் அடக்கமின்றிக் கல்லார்போல் தற்புகழ்வோரை அவ்வை:-

வான்குருவி யின்கூடு வல்லரக்கு தொல்கரையான்
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யறிதால் -யான்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது! -எனச் சாடுகிறார்.

பாரதிக்கு நிகழ்ந்த உண்மை நிகழ்வை முன்னெடுத்துச் சென்றால் உங்களுக்கு இலகவாய்ப் புரியும் எனநினைக்கிறேன்.

பாரதிக்கு அப்பொழுது 11 அல்லது 12 வயதிருக்கும். அவரின் கவித்திறத்தைக் கண்ணுற்ற ஆன்றோர்கள் சுப்ரமணியம் என்ற இயற்பெயரால் விளிக்கப் பட்ட அவருக்கு பாரதி என்னும் பட்டத்தை வழங்கினார்கள்.

இது பலசான்றோர்களுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிலருக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக எட்டையபுர அரசவைத் தலைமைப் புலவர் காந்திமதி நாதருக்கு இச்சம்பவம் பாரதிமேல் கடுஞ்சினத்தை ஏற்படுத்திவிட்டது.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த விடத்து! -என்பதைப் போல பாரதிக்கு இழுக்கிழைக்கும் வேளைபார்த்துக் காத்திருந்தார்.
அவ்வேளையும் வந்தது.

இடம்:- எட்டையபுர அரசவை
நேரம்:- ஆன்றோரும் சான்றோரும் குழுமித் தங்கள் கவித்திறத்தை அரங்கேற்றும் பொன்னந்திப் போழ்து.

அரசவைத் தலைமைப் புலவரான காந்திமதி நாதர் பாரதியை அவமானப் படுத்த இதுவே தக்க வேளை எனக்கருதி பாரதியை நோக்கி “உன்னை எல்லோரும் பாரதி (பாரதி-பண்டிதன்) என்றழைக்கிறார்களே! நான் வழங்கும் ஈற்றடிக்கு உன்னால் பாடலியற்ற முடியுமா?” என்கிறார்.

இளமை பயமறியா என்பதைப்போல் பாரதியும் இசைகிறான்.

“பாரதி சின்னப் பயல்!” இதுதான் அவர் அளித்த ஈற்றடி. 5மணித்துளிகளில் பாடலியற்றிவிட வேண்டும்.

அவைக்கண் குழுமிய ஆன்றோர் யாவருக்கும் பேரதிர்ச்சி. பாரதியால் இவ் ஈற்றடிக்கு நிச்சயமாக வெண்பா பாடமுடியாது. அப்படியே பாடிடினும் தன்னைத்தானே சிறுவன் என்று பாடிக்கொள்வதால் காந்திமதி நாதரின் எண்ணமும் நிறைவேறிவிடும். பாரதிக்கும் அதுவே இழுக்காகவும் அமைந்துவிடும்.

பாடிடினும் இழுக்கு. பாடாவிடினும் இழுக்கு. என்ன செய்யப் போகிறான் பாரதி என்று அனைவரும் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர்.

சற்றும் சலைக்காத பாரதி பாடிமுடித்தான். பாடலைக்கேட்டவுடன் அவைத் தலைமைப் புலவர் பெரும் கல்வியாளர் காந்திமதி நாதர் தன் தலையைக் கவிழ்த்துக்கொண்டார்.

பாரதி சின்னப் பயல்! என்று வெண்பா பாடினால் இவருக்கென்ன இழுக்கு என்கிறீரா? இழுக்கு நேர்ந்துதானே விட்டது.

அப்பாடலைப் பார்ப்போமா?

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் -மாண்பற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்!

தன்னைச் சிறுவனாக்கிவிட நினைத்த காந்திமதி நாதனையே சிறுவனாக்கப் பரிகசித்துவிட்டான் பாரதி.

அடக்கமொழுகாத, சொல்லும் சொல்லை ஓர்ந்துரைக்காத, கல்வியாளனுக்கு அவனினும் சிறியோரால் இழுக்கு நேரிடும். இதனை அறநெறிச்சாரம் படம்பிடித்துக்காட்டுகிறது.

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையுங் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் -பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்!

அகரம்.அமுதா

புதன், 2 ஜூலை, 2008

பேச்சுக்கலை!

பொதுவாக உயிர்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். ஒன்று உயர்திணை மற்றொன்று அஃறிணை.

உயர்திணை அஃறிணை என்ற இரு பகுதியின் பாகுபாடு யாது? வாய்திறந்து பேசுகிற உயிர்கள் உயர்திணை. வாய் பேச இயலாதவை அஃறிணை.
வாய் திறந்து பேசுகிற ஆற்றலை மனிதன் பெற்றதால்தான் அவன் உயர்திணை.

மனிதனை உயர்திணையாக்கிய இப்பேச்சை (சொல்லை) நாம் எப்படிப் பயன் படுத்துகிறோம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பேசுவதெல்லாம் பேச்சல்ல. அது ஓர்கலை. சொல்லைப் பொதுவாக நாம் செல்வம் போல்தான் பார்க்கிறோம். ஆகையால்தான் சொல்வல்லாரைச் சொல்லின் செல்வர் என்கிறோம்.

சொல்லுக்குள்ள ஆற்றல் வில்லுக்கும் கிடையாது. ஆகையால் தான் வள்ளுவர்:-

“வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை”- என்கிறார்.

காற்றினும் கடிய வேகமுடையது சொல். ஆகையால்தான் கம்பர்:- “சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்” என்கிறார்.

மணிக்கணக்காய்ப் பெசிக்கொண்டிருப்பது பேச்சல்ல. ஆகையால்தான் நன்னூலார் “சுருங்கச் சொல்” என்கிறார்.


சொல் வல்லாரால் சாதிக்க முடியாத தொன்றில்லை. அடக்குமுறையால் சாதிக்க முடியாததையும் அன்பான சொல்லால் சாதித்து விடலாம். ஆகையால்தான் அவ்வை:-

“வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்திற்
பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது -நெட்டிரும்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்” -என்கிறார்.

என்னலத்திலும் உயர்ந்தது சொன்னலம். இச்சொன்னலம் பன்னலமும் பயக்கும்.ஆகையால்தான் வள்ளுவர் சொல்வன்மை என்னும் அதிகாரத்தில் சொன்னலத்தை முதலில் வைக்கிறார்.

“நாநலம் என்னும் நலமுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று” என்கிறார்.

பயிருக்கு முள் வேலி. உயிருக்கு உண்மை வேலி. சொல் உண்மையுடைத்தாக இருக்கவேண்டும். கொடுத்த வாக்கை உண்மையாகக் காப்பாற்றியதால் உயிரை இழந்தான் தயரதன். உண்மையாய் அச்சொல்லைக் காப்பாற்றியதால் தான் இன்றும் அவன் புகழ்நிற்கிறது. காணா முடியைக் கண்டேன் என்ற பிரம்மனுக்கு ஆலயம் இல்லாத குறை ஏற்பட்டது.

எத்தனைதான் உண்மை பேசினும் அப்பேச்சு நன்மை பயக்கவேண்டும். நன்மையில்லா உண்மையால் (பொய்யைப் போல்) எப்பயனும் இல்லை.

ஒருவன் இன்னொருவன் மீது கடுஞ்சினங்கொண்டு அரிவாளால் வெட்டவருகிறான். வெட்டுப்பட விருப்பவன் நம்வீட்டில் வந்து ஒளிந்து கொள்கிறான். சினங்கொண்டவன் வந்து நம்மிடம் முன்னவனைப் பார்த்தீர்களா என்றால் அவ்விடத்தில் உண்மைபேசுவதால் எப்பயனும் இல்லை. மாறாக இல்லை என்ற பொய் சொல்வதால் அங்கு ஓர் கொலை தடுக்கப் படுகிறது. ஆகையால்தான் வள்ளுவர்:-

“வாய்மை எனப்படுவ (தி)யாதெனில் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்” என்கிறார்.

உண்மையுடையதாகவும் நன்மையுடையதாகவும் சொல்லும் சொல்லில் இயல்பாக அன்பும் குடிகொண்டிருக்கும். அன்பு கலவாத கனிவில்லாத பேச்சால் நன்மை விளைந்துவிடாது.யாரிடமும் அன்புகலந்து இனிமையாகப் பேசவேண்டும். அன்புகலந்த பேச்சு செவியைக் குளிர்விக்கும். சிந்தையைக் குளிர்விக்கும். ஊன் உடல் உணர்வு உயிர் வரைக் குளிர்விக்கும். ஆகையால்தான்

“இன்சொலால் ஈரம்அளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்”
என்கிறார்.

அன்புகலந்த சொல் நிதானமுடைத்தாகவும் அமையும். மெல்ல நிதானமாகப் பேசி கேட்பார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிதல் வேண்டும். இதனையே நாவடக்கம் என்கிறார் வள்ளுவர்.

"எல்லாம் உணர்ந்தும் வியாதன் விளம்பியவச்
சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா! -வல்லமையால்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு!"

நிதானத்துடன் கூடிய பேச்சு இனிமை பொருந்தியதாகவும் இருப்பது வழக்கம். பேச்சுக்கு உயிர்நாடி இனிமை. ஆகையால்தான் இனியவை கூறல் என்ற அதிகாரத்தைப் படைத்தார் வள்ளுவர்.

இனிமை பொருந்திய சொல் பணிவுடையதாகவும் ஆகிவிடுகிறது. இதுபோல் சிறந்த ஆபரணம் வேறில்லை என்கிறார் வள்ளுவர்.

“பண்புடையான் இன்சொலன் ஆதல் ஒருவர்க்
கணியல்ல மற்றப் பிற” என்கிறார்.

அன்பும் இனிமையும் கலந்த பேச்சு எப்பொழுதும் ஆழமுடைத்தாதலைக் காணலாம். ஆழமுடையதாக அமையும் பேச்சு சமயமறிந்து பேசும் பேச்சாகவும் விளங்கும். சமயமறிந்து சொல்லாத சொல் சினத்தை மூட்டுவதாகவும் அமைந்து விடும்.

இப்பேச்சிலெல்லாம் முற்றிய நிலை முழுமைபெற்ற நிலை அவையறிந்து பேசுதல். கற்றோர் கூடிய அவையுள் இதைப் பேசல்வேண்டும் இதைப்பேசல் கூடா என்கிற சிந்தனையோடு பெசவேண்டும். இதைத்தான் வள்ளுவர்:-

“அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்து தூய்மை யவர்” என்கிறார்.

அவையறிந்து பேசுதல் மட்டும் போதுமா? என்றால் அதுதான் இல்லை. அவையோர்தம் முகக் குறிப்பறிந்து பேசவேண்டும். குறிப்பறியாமற் பேசுபவனை மரம் என்கிறார் அவ்வை.

"கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் -சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவனன் மரம்.
"

சொல்வல்லார் அவையுள் சொல்லாடுவார் சொல்வல்லாராக இருத்தல் வேண்டும். சொல்லில்லார் அவைநடுவில் சொல்லாடுவதை முந்திரிக் கொட்டை என்கிறார் தா.ம.வெள்ளை வாரணம்.

“எந்தப் பழத்திற்கும் ஏன்வைத்தான் உள்விதையை
முந்திரிக்கு மாத்திரம் முன்வைத்து? -சிந்திக்கின்
நல்லவையுள் கற்றோர்தாம் நாவடக்கி வீற்றிருக்கச்
சொல்லுதலால் பேதைநாச் சோர்ந்து!” என்கிறார்.

எனவே உண்மையாகவும் நன்மையாகவும் அன்பாகவும் நிதானமாகவும் இனிமையாகவும் ஆழமாகவும் சமயமறிந்த பேச்சாகவும் அமைதல் வேண்டும். இல்லையேல் பேசாதிருத்தல் நலம். இதைத்தான் வள்ளுவர்:-

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று" என்கிறார்.

இச்சொல்வன்மை அமையப்பெற்றோர்க்கே வினைத்தூய்மை அமையும். ஆகையால்தான் சொல்வன்மை அதிகாரத்தை முதலில் வைத்து வினைத்தூய்மையை அடுத்து வைத்தார் வள்ளுவர்.

அகரம்.அமுதா

திங்கள், 30 ஜூன், 2008

கேள்வி!

ஒருவன் எவ்வளவுதான் கல்வியறிவு படைத்தவனாக இருப்பினும் நுட்பமான கேள்வியறிவில்லை யென்றால் அவன் பேச்சு ஆழமுடைத்தாயும் கேட்போர் போற்றும் தன்மையத்தாயும் அமையப்பெறாது.

ஒருவன் ஆயிரம் நூல்களைத் தேடிப் படிப்பதைவிட கற்றோர் உரையைப் கேட்பது சாலச் சிறந்தது. இதை உணர்ந்தவரும் பழமொழி நானூற்றுப் பாடல்:-

உணர்க்கினிய இன்நீர் பிறிதுழியில் என்னும்
கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார் -கணக்கினை
முட்டப் பகலும் முனியா தினிதோதிக்
கற்றலின் கேட்டலே நன்று!

புத்தகப் புழுவாய் இருத்தல் சிறப்பெய்திவிடாது. ஆன்றோரும் சான்றோரும் ஆற்றும் நல்லுரையைச் செவிமடுப்பவனாதல் சிறப்பு எனக்கூறிக் கேள்வி ஞானத்தை ஊக்குவிப்பதாக அப் பாடல் அமைந்துள்ளது.

ஒருவன் தன் வறுமையின் காரணமாகக் கல்வியறிவில்லானாக இருக்க நேரினும் கேள்வி அறிவு படைத்தவனாய் விளங்கவேண்டும். அக்கேள்வி அறிவு அவன் வாழ்வுக் கடலைக் கடக்கக் கலமாய் அமையும். பிறர் ஆற்றும் சொற்பொழிவுகளை அறிவுரைகளைக் கேட்டின்புறாக் காதுகள் கேட்கும் தன்மையுடைத்தாயினும் செவிட்டுத் தன்மையின் நேர் என்கிறார் வள்ளுவர்.

செவிச்சுவையுணராது நாச்சுவைமேல் மாலுற்று வாழ்வோர் இருந்தென்ன? இறந்தென்ன? என்ற வினாதொடுக்கும் வள்ளுவர் உணவுண்ண கால வரையறை யுள்ளது போல் செவிக்கின்பம் ஈந்து வாழ்வைச் செம்மையுடைத்தாய் மாற்றும் நல்லுரைகளைக் கேட்கக் காலவரையறையே கிடையாது.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றிற்கும் ஈயப் படும்! என்றுரைக்கிறார்.

கேள்வியறிவைப் பெறல் நன்று என்றான பிறகு எதைக் கேட்பது எதைவிடுவது என்கிற ஐயம் ஏற்படுவது இயல்பே. கேட்பன வற்றுள் நல்லவையையே கேட்கவேண்டும். தீயவற்றைக்கேட்க நேரின் செவிடாயிருத்தல் சாலும். குறிப்பாய்ப் “பிறர்மறை யின்கண் செவிடாய்” -பிறர் ரகசியங்களைக் கேட்டநேரும்போது செவிடனைப்போல் இருத்தல் நலம் என்கிறார் நாலடியார்.

நல்லவற்றைக் கேட்பது என்றான பிறகு அந் நல்லவற்றுள் சிறிது பெரிது என்றா பாகுபாடில்லை. எத்துணைச் சிறியதாயினும் நல்லவற்றையே கேட்கவேண்டும். அஃது எத்துணைச் சிறிய தாயினும் அதைக் கேட்போனுக்குச் சிறந்த பெருமையையே சேர்க்கும். ஆகவேதான் வள்ளுவர்:-

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்! -என்கிறார்.

கேட்பனவற்றுள் நல்லவற்றைக் கேட்டாகிவிட்டது. இதனால் ஆவதன் பயனென்ன?

மூப்புவந்தக்கால் ஊண்றுகோல் துணை புரிவதைப் பொல் ஒருவனது கேள்வியறிவு அவனக்கு எக்காலும் துணைபுரிகிறது. ஆக நுட்பமாக ஆராய்ந்தறிந்து நிறைந்த கேள்வியை உடையவர் தவறாய் ஒன்றை அறிந்த விடத்தும் அறியாமை பொருந்திய சொல்லைச் சொல்லமாட்டார்.

பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

அகரம்.அமுதா

வியாழன், 26 ஜூன், 2008

கல்வி!

நாம் ஒருவரைப் பார்த்து, "தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டால், “படித்து முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலைசெய்து கொண்டிருக்கிறேன்” என்பார். பொதுவாக இப்படிச் சொல்வதைப் பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை கல்வி பள்ளியில் சென்றுபயில்வது. பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறியபின் எல்லாம் படித்தாகி விட்டது இனி கற்பதற்கு ஒன்றுமில்லை என்கிற நினைப்பு. அதுவே அவர்களின் வாய்மொழியாக வெளிப்படுகிறது.

கல்வியைச் சிறப்பிக்க வந்த வள்ளுவர்:-

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்! -என்கிறார்.

இதனையே வலியுறுத்தவரும் விளம்பி நாகனார் தன் நான்மணிக்கடிகையில்-

“மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மைதான் செல்லும்
திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்
கற்றறிவு இல்லா உடம்பு!”

-எனக்கூறி கற்றறிந்த நிலை இல்லாவிட்டால் தன் உடம்பே (தான் எடுத்த பிறவியே) பாழ் என்கிறார்.

கல்விக்கு வரையறை கிடையாது. அதுஓர் கரைகாணாக் கடல். எவ்வளவு மழைத்தாலும் நிரம்பி வழியாத கடலேபோல எவ்வளவு கற்றாலும் நிரம்பிவழியாத கடலாகவே விளங்குகிறது அறிவு. ஆகையால்தான் அவ்வை:- “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு” என்கிறார்.

கல்வி என்பது வாழ்நாட்கல்வியாக அமையப்பெறுதல் வேண்டும். அது இளமையோடு முடிந்துவிடுகிற ஒன்றல்ல. ஆகவேதான் வள்ளுவர்:-

“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு?” -என்ற வினாவை எழுப்புகிறார்.

கல்வியின் பயனறிந்த அவ்வை:- “ஓதுவ தொழியேல்” என்கிறார். ஓதுதற்கு மூலமாக விளங்கும் “எண்ணெழுத் திகழேல்” என்றும் அறிவுறுத்துகிறார். “எண்ணெழுத் திகழேல்” என்றால் அறிவுக்கண்ணைத் திறக்கும் எண்களையும் எழுத்துக்களையும் இழிந்துப் பேசாதே என்பது மட்டும் பொருளல்ல. எண்ணெழுத்தை ஓதாமல் விடுவதும் எண்ணுக்கும் எழுத்துக்கும் நாம் செய்யும் இகழ்ச்சியே என்கிற பொருளிலும் தான்.

ஓதுவதொழியாது ஓதுவதால் “நீரின் அளவு தன்னை உயர்த்திக்கொண்டு தலைகாட்டுகிற நீராம்பல் போல ஒருவர்க்குத் தான்கற்ற நூலின் அளவே நுண்ணறிவு ஆகும்” என்றும் வலியுறுத்துகின்றார்.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு!”

மேலோட்டமாகக் கற்பது கல்வியல்ல. உணர்ந்து கல்லான் கல்வி உயர்வுதரா. “ஆய்ந்தறிந்து கல்லாதான் கல்வி - நெல்லிருக்கக் கற்கறித்து மண்டின்று காய்த்துக் களத்தடித்த புற்கறித்து வாழ்வதனைப் போன்று” என்கிறது ஓர் பழம் பாடல்.

எதுக்கு எது விளக்கமாகப் பொலியும்? எனக்கூறுகின்ற நான்மணிக்கடிகை:-

“மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர்; -மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதல் புகழ்சால் உணர்வு!”

-என்று கூறிக் கல்விக்கு உணர்ந்து கற்பது விளக்கம் எனப் பெருமைபேசுகிறது.

சிலவே முழுநூல்கள் செம்மையுறக் கற்பின்
பலவே தமிழின் பயன்! ஆதலால் வ.சுப. மாணிக்கனார் மிக அழகாகச் சொல்லுவார்.
வரிவரியாக் கற்பின் மனவுடைமை யாகும்
தெரிவறியா நூல்கள் சில! -என்று.

ஒவ்வொரு வரியையும் உற்றுநோக்கிப் பொருளாய்ந்து கற்றால் மனத்தின்கண் நீக்கமறப் பதிந்துவிடும். ஆழமான பொருள்பொதிந்த நூற்களைக் கூட இத்தகையத் தன்மையால் மனவுடைமையாக்கிவிட முடியும்.

கசடறக் கற்றாகி விட்டது. இப்பொழுது என்ன செய்வது? அக்கல்வி கூறும் அறநெறியின்கண் நிற்பதே சிறப்பு. ஆகவேதான் வள்ளுவர்:-

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!” -என்கிறார்.

உளத்துப் பதித்த உயர்தொடைகள் கொண்டு
களத்து வருபொருளைக் காண்! -என்பார் மாணிக்கனார்.

"கற்று உள்ளத்தில் பதித்துக்கொண்ட பழம்பெரும் நூல்களின் கருத்தையெல்லாம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகலோடு பொருத்திப் பார்க்கவேண்டும்.

கற்றலின் வழி நிற்பவர்களுக்கு யாதும் ஊராகிறது.யாவரும் கேளிராகின்றனர். கல்வி என்னும் குன்றேறி நிற்பவரை அறியாதார் யாரும் இரார். கற்றோர்க்கு ஒப்புவமை சொல்வதற்கும் யாரும் இரார். ஆகவேதான் அவ்வை:-

“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன் -மன்னர்க்குத்
தன்றேசம் அல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு!” என்கிறார்.

ஒருவனுக்குற்ற பிற செல்வங்களெல்லாம் ஏதோ ஓர் வகையில் அழிவைத் தருவதாகவும் இன்னலைத் தருவதாகவும் செருக்கைத் தருவதாகவும் அமைந்து விடுகிறது. குந்தித் தின்றால் குன்றும் கறையும் செல்வமாகவே யிருக்கிறது. பூட்டிவைத்தாலும் எப்பொழுது கலவாடப்படுமோ? என்கிற அச்சத்தை ஏற்படுத்தும் செல்வமாகவே பிற செல்வங்களெல்லாம் அமைந்துவிடுகிறது.

ஆனால் இக்கல்வி என்னும் செல்வம் பிறரால் களவாட முடியாத செல்வமாகவும் நமக்குக் கேடு செய்யாத செல்வமாகவம் பிறருக்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வமாகவும் அமைகிறது. ஆகவேதான் வள்ளுவர் சொல்கிறார்:-

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவர்க்கு
மாடல்ல மற்றை யவை!”

அகரம்.அமுதா

திங்கள், 23 ஜூன், 2008

களவும் அகற்றி மற!

இன்று மாலை என்னாசான் பாத்தென்றல் முருகடியானைப் பார்க்க நேர்ந்தபோது பலவும் பற்றிக்கேட்டறிந்த பின் "களவும் கற்று மற" இப்பழமொழி உணர்த்தும் பொருள் யாது? என்ற வினாவை எழுப்பினேன்.

இப்பழமொழி துறவு நிலையடைபவர்க்காக உரைக்கப் பட்டதென்றும் அதற்கான காரணங்களையும் உரைக்கத் துவங்கினார்.

சைவ, வைஷ்னவ மதக்கோட்பாடுகளின் படி ஒருவன் இளமைப்பருவத்தில் துய்க்க வேண்டிய இன்பங்களையெல்லாம் துய்த்துவிட்டு உலகப் பற்றைவிட்டு துறவு பூணும் கால் இல்லாளுடன் கூடிய களவியல் இன்பம் மனதின் ஓரம் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆக உலகப் பற்றோடு சேர்த்து களவும் மற (உம்-தொகா நிலையில் உள்ளதை நன்கு கவனிக்கவும். களவு என்பதோடு நிறுத்தாமல் களவும் எனக்குறிக்கப் படுவதால் முதுமைப்பருவத்தில் தொடரத்தகாத பிறபழக்க வழக்கங்களோடு சேர்த்துக் களவையும் மற என்பதையே உம்-உணர்த்துவதாகக் கூறினார்.)

பிறகு அவரே அவரின் கருத்தை மாற்றி என் நூலறிவிற்கு (சிங்கையில் அவரளவிற்கு மரபிலக்கியங்களைக் கற்றோர் இல்லை) "களவும் கற்று மற" என்னும் பழமொழியே தவறு எனவும் கருதுகிறேன் என்றார். ஏன் என்றேன்.

"நீங்கள் என்னிடம் இலக்கணப்பாடங்களைப் படித்துக்கொண்டீர். இவ்விலக்கணப்பாடத்தை இனி நீங்களே நினைத்தாலும் மறக்க முடியுமா?" என்றார்.

"அதெப்படி முடியும்?" என்றேன்.

"நீங்கள் பால வயதில் பள்ளியில் கற்றுக்கொண்ட கல்வியையே உங்களால் நீங்களே நினைத்தாலும் மறக்க முடியாது என்கிறபோது பருவ வயதில் பள்ளியறையில் கற்ற கலவியை மட்டும் எப்படி மறக்க முடியும்?" என்றார்.

யாம் மௌனமானோம்.

"கல்வி என்பது மனதோடு தொடர்புடையது. கலவி என்பது உடலோடு தொடர்புடையது. உடல்தளரும் கால் உங்கள் மனதைவிட்டு களவியல் தானாகவே அழிந்துவிடும். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தானாய் அழிந்துவிடக்கூடிய களவியலை நீங்கள் வலுவில் மறக்க நினைப்பது இயற்கைக்கு மாறுபட்டதல்லவா?"

ஆகவே "களவும் கற்று மற" திரித்துக் கூறப்படும் மொழியாக இருக்கவேண்டும். மூலம் "களவும் அகற்றி மற" என்பதே சரியாக இருத்தல் வேண்டும் எனக்கருதுகிறது என் நூலறிவு என்றார்.

"ஆதாரம் உளதா?" என்றேன்.

"நீர் அன்றாடம் நல்லதை மட்டுமே பார்க்கவேண்டும். முடியுமா?" என்றார்.

"அதெப்படி? ஒரு காட்சியைப் பாத்த பிறகல்லவா அது நல்ல காட்சியா கெட்க காட்சியா என்பதைத் தீர்மானிக்க முடியும்" என்றேன்.

"நீங்கள் தெருவில் சென்று கொண்டிருக்கிறீர்கள். எதிரில் ஒருவன் இளநீர் அருந்துகிறான். மேலும்செல்கிறீர் ஒருவன் கள்ளருந்திக் கொண்டிருக்கிறான். இக்காட்சிகளில் முன்னது நற்செயல் பின்னது தீச்செயல் இவ்விரண்டு காட்சிகளும் விழியின் வழியாக இதயத்தில் சென்று பதிவாகி இருக்குமல்லவா?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"நீங்கள் அன்றாடம் பார்க்கும் காட்சிகளால் வசீகரிக்கப் படுகிறீர்கள். இளநீர் குடித்தக் காட்சி உங்கள் சிந்தையில் மேலோங்கி நிற்குமானால் நீங்கள் இளநீர் அருந்த விழைவீர்.

கள்ளருந்தும் காட்சி மேலோங்கி நிற்குமானால் கள்ளருந்தவே ஆசை கொள்வீர். இது தீச்செயல். இது வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய செயல். இது மனதை விட்டு அகற்றப்படவேண்டிய செயலல்லவா?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"களவுசெய்வது தீச்செயல்தானே? அதுபோல் சூதாடல் பொல்லாங்குரைத்தல் கொலைபுரிதல் பொய்யுரைத்தல் பிறன்மனை நோக்கல் இவையனைத்தும் தீச்செயல்தானே?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"நீங்கள் அன்றாடம் வாழ்வில் காட்சிகளாகவும் கேள்வி நுகர்வாலும் அறிகின்ற இத் தீச்செயல்கள் உங்கள் மனதில் தங்கினால் அத்தீச்செயலால் வசீகரிக்கப்படுவீர். ஆதலாம் அவற்றைக் கண்டமாத்திரத்தில் மனதைவிட்டு அகற்றி மறந்துவிடுங்கள்" என்பதாம்.

"களவு என்று மட்டும் சொல்லாது களவும் என்று கூறப்படுவதால் திருடுதல் போன்ற தீச்செயல்களாகிய பிறசெயல்களோடு இக்களவு என்னும் தீச்செயலையும் கண்ணால் காணவோ காதால் கேட்கவோ நேர்ந்தால் மனதில் அவற்றைத் தங்க விடாது அகற்றி மற என்பதை உணர்த்துவதாகக் கொள்ளலே சாலும்" என்றார்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு -என்னும் வள்ளுவன் வாக்கிற் கிணங்க என்னாசான் பாத்தென்றலார் சொல்லுள் மெய்பொருள் உள்ள காரணத்தாலும் அய்யா சுப்பு ரத்தினம் அவர்களின் கூற்றிலும் மெய்ப்பொருள் உள்ள காரணத்தாலும் இவ்விருவரின் கருத்தோடும் யாம் உடன்படுகிறோம்.

ஏனெனில் யாமோ தேரா அறிவுடன் இருக்கிறோம். இவ்விரு தெளிந்தார்கண் ஐயுறுதல் தீரா இடும்பை தரும் ஆதலால்,

முன்னோர் உரையின் முடிபுஒருங்கு ஒத்து
பின்னோர் வேண்டும் விகர்ப்பம் கூறி
அழியா மரபைச்செய்தல் எம்கடன் என்பதாலும் இவ்விருவரின் முடிபு ஒருங்கு ஒத்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

அகரம்.அமுதா

சனி, 21 ஜூன், 2008

அறிந்தவற்றுள் அறியாமை!

சென்ற நமது "கலவும் கற்று மற" என்னும் தலைப்பிலான கட்டுரையைப் பார்த்த அய்யா! சுப்பு ரத்தினம் அவர்கள் "கல்லளவும் கற்று மற" என்பது வலிந்து பொருள்கொள்வதாகும். "களவும் கற்று மற" இதுவே சரியென்றும் அக்களவிற்குக் களவியல் என்றே பொருள்படும் என்றும் அதற்கு மிக உகந்த உயர்கருத்துக்களைப் பின்னூட்டமிட்டிருந்தார்.

படித்து வியந்து போனேன்.

களவு என்பதற்குத் திருட்டு என்னும் பொருள் உள்ளதுபோல களவியலையும் அச்சொல் குறிப்பதால் களவியலைப் பற்றித்தான் அப்பழமொழி எழுந்தது என்று வாதிடுவதும் முறையே.

அய்யா குறிப்பிட்டுவிட்டார் "களவும் கற்று மற" என்பதுதான் சரி. அக்களவும் களவியலையே குறிக்கிறது என்பதற்குச் சான்றுகளையும் அளித்துள்ளார் என்பதற்காய் நாம் நம் கட்டுரையின் தலைப்பான கலவும் கற்று மற என்பதை களவும் கற்று மற என்று மாற்றப் போவதில்லை.

"அப்படியென்றால் மூத்தோர் சொல்லை ஏற்க மாட்டீரா?" என்கிறீர்களா?

அதுதான் இல்லை. அய்யா அவர்களின் கருத்தோடு உடன்படவே விரும்பகிறேன். களவும் (களவியலும்) கற்று மற என்ற வாக்கியத்தோடு உடன்பட மாட்டேன்.

"ஆர்த்தவலை அத்தனையுள் அய்யசுப்பு வின்வலைநான் பார்த்தவற்றுள் ஞானப் பழம்" என்றெல்லாம் ஏற்றிப் பாடிவிட்டு இப்பொழுது அவர்கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அக்கருத்தைத் தாங்கிவரும் களவும் (களவியலும்) கற்று மற என்ற வாக்கியத்தை மட்டும் ஏற்கமாட்டேன் என்றால் இதென்ன முரண்? என்கிறீர்களா?

முரணெல்லாம் ஒன்றுமில்லை. தமிழ் மிக நுட்பமான சில வசதிகளைத் தன்னகத்தே ஒளித்து வைத்துள்ளது. அந்த நுட்பத்தை நான் இங்கு எனக்குச் சாதகமாக்கிக் கொண்டேன் அவ்வளவுதான்.

கலவும் கற்று மற என்பதிலேயே களவியலும் அடங்கியிருக்கிற போது ஏன் தனியாகக் களவும் கற்று மற என்றுவேறு பிரித்தெழுத வேண்டும் என்பதுதான் என்வினா.

"கலவுக்கும் களவுக்கும் உள்ள லள வேறுபாடுகூடவா அறியாதவர் நீர்?" என்கிறீரா?

அறிந்ததன் காரணமாகத் தான் கலவு என்ற ஒற்றைச் சொல்லில் களவியலைக் குறிக்கும் களவும் அடங்கியிருக்கிறது என்கிறேன்.

கலவு என்றால் கலத்தல் என்கிற ஒரு பொருளும் இருக்கிறதல்லவா?

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இரண்டறக் கலத்தலையல்லவா களவியல் என்கிறோம்!

கண்ணொடு கண்ணினை நோக்கி இதயங்கள் இரண்டும் இடம் மாறிக் கலத்தலே களவியல். ஆகவேதான் வள்ளுவர் "பெரிதாற்றிப் பேட்பக் கலத்தல்" என்கிறார்.

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்!

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு!

போன்ற குறள்களிலும் கலத்தல் நிலையை (களவியல்) தாங்கியே வருகின்றன.

ஆக கலவும் கற்று மற இதில் களவும் ஒளிந்துள்ளதால் கலவும் கற்றுமற என்றே இருக்கட்டுமே!

அய்யா! உடன்படுவீரா?

அவ்வை சொல்லுவார் "கற்றது கைமண் அள"வென்று. அது நூறு விழுக்காடு உண்மையே எனினும் நாம் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் கற்றவற்றையாவது முழுமையாகக் கற்று வைத்துள்ளோமா? என்று.

அய்யாவின் பின்னூட்டத்திற்குப் பின் என்னுள் "நாம் இன்னும் கற்கவேண்டியது கிடக்கட்டும். நாம் கற்றவற்றையாவது முழுமையாய்க் கற்றுவைத்திருக்கிறோமா?" என்கிற ஏக்கமே தோன்றியது.

அவ்வேக்கம் ஓர் வெண்பாவாக உருவெடுத்தது. அவ்வெண்பாவை மட்டுமல்ல நான் கற்றவற்றையும் இனிவரும் இடுகைகளில் இடுகிறேன். நான் கற்றவற்றை நீங்களும் கற்றிருப்பீர்கள் அல்லவா நீங்கள் கற்றுணர்ந்ததைத் தாருங்கள் நான் உணர்ந்து கொள்கிறேன் என்பதே என்வேண்டுகோள்!

வெண்பா இதோ:-

அறிந்த அவற்றுள் அறியா தனவும்
இருத்தலும் ஏலுமே என்பதனால் யானும்
அறிந்த தளிக்கின்றேன் யானவற்றுள் யாதும்
அறியாத உண்டேல் அளி!

அகரம்.அமுதா!

புதன், 18 ஜூன், 2008

கலவும் கற்று மற!

"கலவும் கற்று மற" -இது நம் பூந்தமிழில் வழங்கப் பெறும் பழமொழி.

இப்பழமொழியைப் பற்றிக் காலங்காலமாக நம்மவருள் ஓர் வாதம் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. கல்லளவும் கற்று மற என்றுக் கூறும் ஒருசாராரும் உளர். களவும் கற்று மற என்பது தான் சரி என வாதிடும் ஒரு சாராரும் உளர்.

"கல்லளவும் கற்று மற" -இப்பழமொழி எதனை உணர்த்த விழைகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

1-கற்றவேண்டியவை எல்லாவற்றையும் கற்றுமுடித்தபின் இனி கற்பதற்கு ஒன்றுமில்லை எனும் நிலை எழும் போழ்து கற்பதையே மறந்துவிடு (விட்டுவிடு) என்கிறதா?

2-கற்க முடிந்தவற்றைக் கற்றபின் நீ கற்றவற்றை மறந்துவிடு என்கிறதா?

3-கற்க வேண்டிய வற்றைக் கற்றபின் எல்லாம் கற்றுவிட்டோம் எனும் செருக்குத் தொன்றுமே அச்செருக்கை மறந்துவிடு என்கிறதா?

4-அச்செருக்கை எப்படி மறப்பது? ஆக எல்லாம் கற்றபின் கற்றவன் என்னும் செருக்குத் தோன்றுமே அச்செருக்குத் தோன்றாமலிருக்கக் கற்றவன் என்பதையே மறந்துவிடு என்கிறதா?

மேற்கூறிய வற்றுள் நான்காவதாகிய “எல்லாம் கற்றானபின் எல்லாம் கற்றுவிட்டோம் என்னும் செருக்குத் தோன்றாதிருக்கக் கற்றவன் என்பதையே மறந்துவிடு. கற்றவன் என்பதையே மறந்துவிடுவாயானால் உன்னுள் செருக்குத் தோன்றாதிருக்கும்” என்னும் கருத்தை இப்பழமொழி வலியுறுத்துமே யாகின் இப்பழமொழி வழங்கப் பெறுவது சரியே.

மற்ற மூன்று கருத்தைத் தாங்கிவருமேயாகில்? (என்ன விடையளிப்பதென்றே தெரியவில்லையே!)

இப்பழமொழி வேறுஏதேனும் கருத்தைத் தாங்கிவருமே யாகில் தோழதோழிகள் பின்னூட்டில் கண்டிப்பாகக் குறிப்பிடவும்.

குறிப்பாக சுப்பு ரத்தின அய்யாவிடமிருந்து அப்பழமொழி உணர்த்தும் செம்பொருளை எதிர்பார்க்கிறேன். ஏன் என்றால்:-

மிஞ்சு மழகால் மிளிரும் மலர்கண்டேன்;
பிஞ்சுமிளங் காயும் பெருமுற்ற -லுங்கண்டேன்;
ஆர்த்தவலை அத்தனையுள் அய்யசுப்பு வின்வலைநான்
பார்த்தவற்றுள் ஞானப் பழம்!

"களவும் கற்று மற" இப்பழமொழி எதனை உணர்த்துகிறது? அதனையும் பார்த்துவிடுவோம்.

ஓர் நாடாளும் மன்னனுக்கு இருக்க வேண்டிய அத்துணைக் குணங்களும் ஓர் திருடனுக்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவனால் பிடி படாமல் திருடமுடியும். ஓர் திருடனுக்கு இருக்கும் அத்தனைக் குணங்களும் நாடாலும் மன்னனுக்கு இருக்க வேண்டும் அப்பொழுது தான் அவனால் நல்லாட்சி செலுத்த முடியும்.

“அதென்ன திருடனுக்கும் நாடாளும் மன்னனுக்கும் இருக்க வேண்டிய குணங்கள்?” என்கிறீர்களா? அதையும் பார்த்துவிடுவோம்.

1-கண்ணோட்டம்:-ஓரிடத்தில் திருடநினைக்கும் திருடன் முதலில் யாரும் அறியாத வாறு அவ்விடத்தைக் கண்ணோட்டம் இடவேண்டும். இது அவன் இரவில் செய்யவிருக்கும் காரியத்தைச் சுலபத்தில் முடித்துக்கொண்டுத் தப்பித்துச் செல்ல ஏதுவாயிருக்கும்.

இக்குணம் நாடாலும் மன்னனுக்கும் இருக்கவேண்டும். தன்செயல் கெடாத வகையில் கண்ணோட்டம் செய்யவல்ல அரசனுக்கு இவ்வுலகம் உரியதாகிறது.

கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு!

2-வலியறிதல்:-தான் திருடவந்த இடத்தில் தன் ஒருவனால் இக்காரியம் முடியுமா என்பதை நன்கறிந்து அச்செயலை எப்படி முடிப்பது என்பதைக் கருத்தூன்றி ஆராய்ந்துச் செயல்படவேண்டும்.

இக்குணமும் நாடாளும் மன்னனுக்கு இருக்க வேண்டும். தம்மால் முடிக்கக் கூடிய செயலையும் அதற்கு அறிய வேண்டிய வற்றையும் அறிந்து அச்செயலின் மீது மனத்தையூன்றிப் பகைமேற்கொள்ள வேண்டும் அரசன்.

ஒவ்வா தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்!

3-காலமறிதல்:-திருடவிழையும் திருடன் இரவாகும் வரைக் காத்திருத்தல் கடன். பிறர் உறங்கிய பின்னும் தான் விழித்திருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் தான் எடுத்த காரியம் கைகூடும்.

மன்னனும் காலமறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின் அவனால் உலகம் முழுவதையும் தானே ஆளக்கருதினாலும் அது நிறைவேறும்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி யிடத்தாற் செயின்!

4-இடமறிதல்:-தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையறியாது தான் திருடவந்த இடத்தில் எத்தனைபேர் உள்ளார்கள் அவர்களின் வலிமையென்ன? என்னும் தொகையறியாது தன்திருட்டைத் துவங்கமாட்டான் திருடன்.

பகைவரை வளைப்பதற்கு ஏற்ற இடம் வாய்ப்பதற்குமுன் அவரிடம் எச்செயலையும் தொடங்காதிருக்க வேண்டும் அரசன். பகைவரின் வலியைச் சிறியதாகக் கருதாது இருத்தலும் வேண்டும்.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது!

இத்தோடு மட்டுமா?

இருளிலும் கூரிய பார்வை.

ஓசையெழாது தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுந் தன்மை.

தான் வந்த சுவடு தெரியாதவன்னம் தடையங்களை விட்டுச்செல்லாமை.

இப்படித் திருடனுக்கு இன்றியமையாதிருக்க வேண்டிய பலவற்றைக் கூறிக்கொண்டே போகலாம். இக்குணங்களெல்லாம் நாடாளும் மன்னனுங்கும் இருத்தல் அவசியமாகிறது. (அதற்காக மன்னன் திருடனாக இருக்க வேண்டும் என்பதில்லை)

ஓர் திருடனுக்கு இருக்க வேண்டிய அத்துணை அறிவும் யாவருக்கும் இருத்தல் வேண்டும். அவ்வறிவு எத்துறையில் கால்பதிப்பினும் வெற்றியடையச் செய்துவிடும்.

“களவும் கற்று மற” என்ற வரிகளே சரியெனக் கொள்வோமே யானால் களவுத்தொழிலையும் கற்று அதிலுள்ள நுண்ணறிவை எடுத்துக்கொண்டு களவை மறந்துவிடு என்ற பொருளில் இவ்வரிகள் கையாளப் படுமானால் “களவும் கற்று மற” என்பது சரியே!

சரி அதென்ன? பந்திக்கு முந்து படைக்குப் பிந்து? உணர்ந்த பொருளைப் பின்னூட்டிலிடுங்களேன்!

குறிப்பு:-

தோழி கவிநயா தன் வலைப்பக்கத்தில் "ஜிலேபி" (விழியால் உண்ணக்) கொடுத்திருந்தார். சரி நாம அல்வா குடுப்போமே என்று தோன்றியது.

இளவயது ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள். இதையறிந்த பெண்ணின் தந்தை பெண்ணை வீட்டில் சிறை வைத்து விடுகிறான். காதலனுக்கோ காதலியிடம் யாரைத்தூதனுப்புவது என்றே தெரிய வில்லை. இறுதியாக ஓர் சிறு காகிதத்தில் அல்வா என்று மட்டும் எழுதி காதலியின் வீட்டு வாசலில் வீசியெறிந்து விட்டுச் சென்றுவிடுகிறான்.

மாலையில் வீடுதிரும்பிய பெண்ணின் தந்தை அச்சிறு காகிதத்தை எடுத்துப் பார்த்தவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மகளிடம் கொடுத்து உனக்குப் புரிகிறதா? என்கிறான். அவளுக்குப் புரிந்து விட்டது.

இது தன் காதலனின் வேலைதான் எனத்தெரிந்து கொண்டவள் “அப்பா! உங்களுக்கு யாரோ அல்வா கொடுப்பேன் என்று எழுதியிருக்கிறார்கள் அப்பா! பதிலுக்கு நாமும் எதாவது கொடுக்க வேண்டுமல்லவா?” என்றவள் துண்டுக் காகிதமெடுத்து குலோப்சாண் என்று எழுதி கண்டெடுத்தக் காகிதம் கிடந்த இடத்திலேயே இதைப் பொட்டுவிடச் சொல்கிறாள்.

காதலன் கொடுத்த அல்வாவிற்குக் காதலியேன் குலோப்சாண் கொடுத்தாள்? யாருக்காவது தெரிந்தால் எழுதுங்களேன்.

அகரம்.அமுதா