நாம் எப்பொழுதுமே நாம் கொண்டுள்ள கொள்கையை கருத்தை சொல்லை செயலை நியாயப் படுத்தவே முனைகிறோம். அது எவ்வளவு சிறிய செய்தியாக இருப்பினும் சரி அதை நியாயப்படுத்த பற்பல உக்திகளையும் கையாள்கிறோம். இது பிறரைப் பாதிக்காத வரை தவறில்லை.
நம்போன்ற எழுத்தர்களிடையே கவிஞர்களிடையே இப்பண்பு வெகுவாய் ஒட்டிக்கொண்டிருத்தல் வியப்பில்லை. அப்பண்பு நல்லாக்கங்களுக்குத் துணைநிற்குமானால் ஏற்புடையதே.
நானும் என்கருத்துக்களை எழுத்துக்களை நியாயப் படுத்திப் பலமறை நண்பர்களோடு வாதிட்டிருப்பினும் மூன்றே சொற்களையுடைய ஒரு கவிதையை எழுதிவிட்டு அதற்காக அரைமணி நேர வாதங்கள் புரிந்த அந்நிகழ்வை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
ஓர்முறை ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில் நண்பர்கள் அனைவருமாகச் சேர்ந்து இரவு உணவு உண்டுவிட்டுச் செல்லலாம் என்று ஓர் உணவுவிடுதிக்குச் சென்றோம்.
வாயை ஆலையாக்கி உணவை அரைத்துக்கொண்டிருக்கையில் ஓர் நண்பர் என்வாயைக் கிண்ட ஆரம்பித்துவிட்டார்.
"அமுதா! சந்ததமும் சமுதாயத்தைப் பற்றியும் இயற்கையைப் பற்றியுமே அதிகம் கவிதை பாடுகிறீர்கள். காதலைப் பற்றியோ காதல் தோன்றக் காரணமாம் பெண்ணைப் பற்றியோ கவிதையே தீட்டமாட்டேன் என்றிருந்தால் எப்படி?. இன்று நீங்கள் பெண்ணை வருணித்துக் கவிதை பாடியே தீரவேண்டும்" என்றுகூறி செதுக்கிய சிலை உயிர்பெற்றது போல் அசைந்துவந்து எங்களுக்கு உணவு பரிமாறிய சீனத்துப் பைங்கிளியைக்காட்டி இவளை வருணித்து உணவு உண்டுமுடிப்பதற்குள் கவிதை பாடிவிடவேண்டும். பாடினால்தான் நீங்கள் கவிஞர் என்பதை ஏற்றுக்கொள்வேன் என்று முடிவாகக் கூறிவிட்டார்.
இப்பெண்ணைப் பற்றிக் கவிதை பாடினால்தான் கவிஞர் என்பதையே ஏற்றுக்கொள்வேன் என்று கூறிய பிறகு நம் தன்மானம் விட்டுக்கொடுக்குமா? சரி என்று பாடத்துணிந்தேன்.
உண்டுமுடிப்பதற்குள் பாடிவிட வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டாரே. என்னசெய்வதென்றே தெரியாமல் மிகுசிந்தனைக்குப் பிறகு ஒரே ஒருவரியில் கவிதையெழுதி அவர்கையில் தந்தேன். (அந்த சீன குள்ள கத்தரிக்காய்க்கு அதுபோதாதா?)
பெண் என்று தலைப்பிட்டு எழுதிய கவிதை இதுதான்:-
தளை தட்டிய வெண்பா!
கவிதையை வாங்கிப் பார்த்த நண்பர் "என்ன அமுதா! விளையாடுறீங்களா? இந்த பெண்ணை வெண்பாவோடு உவமைபடுத்துறீங்க என்பது தெரிகிறது. வெண்பாவில் தளை தட்டுவதா? தளை தட்டினால் அதற்குப் பேர்தான் வெண்பாவா? தளைதட்டிய வெண்பாவை எழுதியவனும் நல்மரபறிந்த கவிஞனாக இருக்க முடியுமா?" என்று வினாக்களால் என்னை வறுத்தெடுத்து விட்டார்.
"அய்யா! கொஞ்சம் இரும். தளை தட்டிய வெண்பாவை எழுதியது நானல்லவே. அதை எழுதியவன் பிரம்மன். அவன் எழுதிய கவிதையின் வகையையும் தளைகளையும் ஆய்ந்து பார்த்து இது வெண்பாவகையைச் சார்ந்தது. தளை தட்டுகிற காரணத்தால் இது தளை தட்டிய வெண்பா என்று கண்டுபிடித்துச் சொன்னது மட்டும்தான் நான். நீங்கள் திட்டுவதாக இருந்தால் தளை தட்டுவது போல் வெண்பா வடித்த பிரம்மனைத் திட்டும்" என்றேன்.
"தளை தட்டுகிறது என்றீரே எங்கே தட்டுகிறது?" என்றார்.
"நன்றாக அந்த பெண்ணை உற்றுப் பாரும். முகம் தெரிகிறதா?"
"ஆம்".
"சங்குக் கழுத்துத் தெரிகிறதா?"
"ஆம்".
"மூங்கிற்றோள், முகிழ்தாமரை மார் தெரிகிறதா?"
"ஆம்".
"அம்மிக்கல் போன்ற இடுப்புத் தெரிகிறதா?"
"ஆம்".
"மாருக்கும் இடுப்புக்கும் இடையில் ஏதாவது தெரிகிறதா?"
"இல்லை".
"இப்பொழுது புரிகிறதா? அந்த பிரம்மன் எழுதிய இந்த வெண்பா தளைதட்டுகிறது என்று?" என்றேன்.
"வெண்பா என்றால் எதுகை மோனையெல்லாம் வேண்டுமே. இந்த வெண்பாவில் இருக்கிறதா?" என்றார்.
"என்னய்யா உம்மோடு பெரும் தொல்லையாய்ப் போய்விட்டது. வெண்பாவென்றால் எதுகை மோனையில்லாமலா? முன்நிற்பது மோனை பின்நிற்பது எதுகை அதுதானே மரபு? அவளை நன்றாய்க் கவனியும். மார் மோனையாகி முன்னும் இடுப்பின் பின்புறம் எதுகையாகி பின்னும் அழகுற அமைந்தது தெரியவில்லையா?" என்றேன்.
"வெண்பா வென்றால் தனிச்சீர் வேண்டுமே" என்றார்.
"அய்யா! இது இன்னிசை வெண்பா. இதில் தனிச்சீரெல்லாம் கிடையாது. ஆனால் கனிச்சீரும் பூச்சீரும் உண்டு" என்றேன்.
"வெண்பாவில் கனிச்சீரே வருதல் கூடாது. இதில் பூச்சீர்வேறு வருகிறதா? கனிச்சீரும் பூச்சீரும் வருவதை வெண்பாவென்றால் ஏற்றுக்கொள்ள நானென்ன காதில் பூசுற்றியிருக்கிறேனா?" என்றார்.
"அய்யா! கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள் தெய்வக்குற்றமாகி விடப் போகின்றது. இவ்வெண்பாவை எழுதியவன் பிரம்மன் என்றான பிறகு அதற்கு அப்பீலும் உண்டோ?" என்றேன்.
"கனிச்சீரும் பூச்சீரும் எங்கே வருகிறது? காட்டுங்கள்" என்றார்.
"என்னய்யா உமக்கு ஒன்றுமே விளங்க மாட்டேன் என்கிறது. விழியைப் பார்த்தீரா? குவளைப் பூச்சீர். மாரைப் பார்த்தீரா? கமலப் பூச்சீர். இதழைப்பார்த்தீரா? கொவ்வைக் கனிச்சீர். கன்னத்தைப் பார்த்தீரா? மாங்கனிச்சீர். போதுமா?" என்றேன்.
"வெண்பா வென்றால் நாள், மலர், காசு, பிறப்பு இவற்றிலொன்றைக் கொண்டு இற வேண்டுமே? இந்த வெண்பாவில் இதெல்லாம் உண்டா?" என்றார்.
"அதெல்லாம் இல்லாமலா? ஐயமிருப்பின் 'நாள்'தோறும் 'காசு'கொடுத்துப் 'மலர்'வாங்கி அப்பெண்ணுக்குச் சூடி அவளோடு மகிழ்ந்திருந்து பாரும். 'பிறப்பு' உறுதி" என்றேன்.
அகரம்.அமுதா
தமிழ்க் காப்புப் போராளி இறைவிழியனார்!
1 வாரம் முன்பு
7 கருத்துகள்:
சரிதான். நீங்க கவிஞர்னு ஒத்துக்கறேன் :)
வாங்க கவிநயா! இப்பவும் முழுமனதோடு ஒத்துக் கொண்டதுபோல் தெரியவில்லையே!
//தளை தட்டிய வெண்பா!//
இறைவன் படைப்பும்
இயற்கையின் மாட்சியும்
இயல்பே.
குயிலும் மயிலும்
கூவும் காகமும்
நெளிந்தே செல்லும்
நீண்டதொரு பூரானும்
அதுவதன் உலகிலே
அழகோ அழகு.
தளையும் பிழையும்
இயற்கையில் இல்லை.
இறையின் இலக்கணம்
பிறைமதி இல்லை.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
ஆம் அய்யா! இறைவனின் படைப்புகள் அனைத்தும் முழுமைபெற்றவையே! அதில் குறையும் நிறையும் காணுவது நாமே.
சுவையான உரையாடல் தான். வெண்பா இலக்கணம் தெரிந்திருந்தால் இன்னும் நன்கு இரசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். :-)
பெண்ணவள் வெண்பாதான் பேணும் அழகாலே
மண்ணினில் ஈர்ப்பாள் மதியோரை - கண்ணதன்
வாசிப்பில் காணலாம் வாய்க்கும் தளையினை
நேசித்(து) உணர்வதாம் நெஞ்சம்! :-))
(முந்தைய பின்னூட்டை எடுத்துவிடுங்கள் 'தளை தட்டிய வெண்பாவாகிவிட்டது)
முந்தைய வெண்பாவில் மட்டுமல்ல இவ்வெண்பாவிலும் சிறு பிழையுள்ளது.
பெண்ணவள் வெண்பாதான் பேணும் அழகாலே
மண்ணினில் ஈர்ப்பாள் மதியோரை - கண்ணதன்
வாசிப்பில் காணலாம் வாய்க்கும் தளையினை
நேசித்(து) உணர்வதாம் நெஞ்சம்!
நேசித் துணர்வதாம் நெஞ்சம் என்பதற்குப்பதில் நேசித் துணர்வதாம் நெஞ்சு! என வரின் காசு வாய்பாட்டில் சரியாக இறும். நெஞ்சம் என அமைப்பதால் இச்சீர் தேமா. வெண்பாவின் இறுதியில் தேமா வரா. நாள்மலர் காசுபிறப்பு இவற்றிலொன்றைக் கொண்டே இறவேண்டும் என்பதுவரையறை.
இவ்வரையறை பொருந்தா சில இடங்களில் மீறலாம்.
காட்டு:-
சின்னஞ் சிறுவயதில் தேர்ந்த உணர்வினுக்கே
என்ன பொருளென்றே இன்றுணர்ந்தேன் -அந்நாளில்
முத்தென்று சொல்லுதிர்த்த மோகக் கவிதையெழில்
சித்திரத்தாள் பாராமல் சென்றாள்
என்று கண்ணதாசன் வெண்பா வரையறையை மீறியிருப்பார். சென்று என்று முடித்தால் பொருள் முற்றுப்பெறாதாதலால் சென்றாள் என முடித்தார்.
பல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழின்
சொல்லாண்டுப் பாடுகிறேன் தூயவரே! -இல்லாண்டு
செய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!
பிறரை வாழ்த்தும்போது வாழ்க என்று வாழ்த்துவதே தமிழர்தம் பண்பாடு. மாறாக இலக்கண வரையறைக்காய் வாழ் என முடித்தால் பண்பாட்டை மீறும் செயலாகும். ஆதலால் வாழ்க என வெண்பாவை இட்டுநிரப்பினேன்.
ஆனால் தங்கள் வெண்பாவில் நெஞ்சு என் முடித்தால் பொருள் மாறுபடாதென்பதால் நெஞ்சம் என்பதைத் தவிர்த்து நெஞ்சு என்றே இட்டு நிரப்பலாம் என்பது என் தாழ்வான வேண்டுகோள்.
பெண்ணவள் வெண்பாதான் பேணும் அழகாலே
மண்ணினில் ஈர்ப்பாள் மதியோரை - கண்ணதன்
வாசிப்பில் காணலாம் வாய்க்கும் தளையினை
நேசித்(து) உணர்வதாம் நெஞ்சு.
வாழ்க. அழகிய வெண்பா. உம் ஆற்றலைக்கண்டு வியக்கிறேன்.
அகரம்.அமுதா
கருத்துரையிடுக