திங்கள், 28 ஜூலை, 2008

இரவு!

பொதுவாக நம் கடைக்கழகப் புலவர்களைப் புலவர்கள் என்பதைவிட இரவலர்கள் என்பதே பொருத்தமாயிருக்கும். ஏனெனில் கடைக்கழகப் புலவர்கள் முதற்கொண்டு மாகவி பாரதி முடிய புரவலர்களைப் பாடிப் பரிசில் பெறுவதைத் தொழிலாக் கொண்டிருந்தனர் என்றால் அது மிகையாகாது.

கடைக்கழக நூல்களில் ஆற்றுப்படை புறநானூறு போன்ற நூல்களை அறிந்தவர்களுக்கு நான் கூறுவதில் சிறிதேனும் உண்மையிருப்பது புரியும்.

பொதுவாக இரப்பவன் மிகத் தண்மையாகவும் கொடுப்பவர் மிடுக்காகவும் இருத்தல் இயல்பு. ஆனால் நம் புலவர்கள் புரவலர்களிடம் இரந்துப்பெறும் போதும் மிகவே மிடுக்காக நடந்து கொள்பவர்களாயிருந்திருக்கிறார்கள். தான் யாரிடம் இரக்க வேண்டிச் செல்கிறானோ அவன் புரவலனாயிருப்பினும் பேரரசனாயிருப்பினும், குறுநில மன்னனாயிருப்பினும் அளவுக்கதிகமாகப் புகழ்வதோடு தேவைப்பட்டால் அவனுக்கு அறிவுரை நல்குவதோடு நில்லாமல் அவன் தீச்செயலை இடிந்து கூறவும் செய்திருக்கிறார்கள்.

இது எத்தகைய இரப்பு? நம் வாழ்வியல் நடைமுறைக்கு மாறான அதே வேளையில் புரவலர்களே கண்டு அஞ்சும் படியான இரவலர்களாக விளங்கியிருக்கிறார்களே!

கடைக்கழகப் புலவர்களின் நிகர்காலப் புலவர் வள்ளுவர் இரவலர்களைப் பற்றி கூறுகையில்:-

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரம்பிடும்பை
தானேயும் சாலும் கரி! -என்கிறார்.

(இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளக் கூடாது. அவன் அடைந்துள்ள வறுமையே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக உள்ளது.)

நிகர்காலப் புலவன் என்பதால் வள்ளுவரின் பொன்னுரைகள் பிற புலவர்களுக்குச் சென்றுசேறாமலும், தெரியாமலும் இருந்திருக்கலாம்.

இரவலராகச் சென்ற பெண்பாற் புலவரான அவ்வையை அதியமான் நெடுமான்அஞ்சி கண்டுகொள்ளா திருந்ததற்காய் அவன்மீது சினமுற்று, "எத்திசைச்செலினும் அத்திசைச் சோறே" என்று எடுத்தெறிந்துப் பேசுகிற இவ்விரவு எத்தகைய இரவு?

புறநானூற்றின் வேறோரிடத்தில் புரவலனிடம் இரந்து பெறச் சென்ற பெருஞ்சித்திரனாரிடம் தன் பணியாளைக் கொண்டு பரிசில் அளித்தமைக்காய்ச் சினந்து

யாங்கறிந்தனனோ தாங்கு அருங்காவலன்?
காணாது ஈந்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணி
தினையனைத் தாயினும் இனிது

-என்று புரவலனின் அத்தகைய பண்பை இகழ்ந்துரைப்பது புனைந்த பாடல்களை விற்று பரிசில் பெற நானொன்றும் வாணிகன் அல்ல என்பது எத்தகைய பண்பு?

தினையளவு கொடுப்பினும் இன்முகத்தோடு கொடுப்பதை ஏற்றுக்கொள்வதோடு மட்டும் நில்லாமல், "நீ வழங்கிய இச்சேலை நைந்து நூல்நூலாகப் போகக் கூடம் ஆனால் என் பாடல் அப்படியா?" என்று அதியமானைப் பார்த்து அரைகூவும் அவ்வையின் இறுமாப்பை என்னவென்பது?

ஒருவன்தானாக விரும்பிக் கொடுப்பதை எற்பது இகழ்ச்சி. எனக்குக்கொடு எனக் கேட்பது அதனினும் இகழ்ச்சி. இதில் கொடுத்ததைத் தரம் பார்ப்பது ஏற்புடையதா?

கல்போது பிச்சு ஐயர் என்போர் இரக்கக் கண்டு இல்லை எனும் புரவலனை பார்த்து:-

போடிநகர்ப் புரவலனே நின்மீது கவிபாடிப்
போந்த என்னை
வாடிமறுகிடச் செய்தாய் மனத்திலினிப் பொங்குசினம்
மனையாய் மீதில்
கோடிமடங் கானாலும் நின்னூரின் பெயர்தன்னைக்
குறிப்ப தாலே
போடியெனச் சொலமாட்டேன் வாடியென எக்காலும்
புகலு வேனே!

(உன்னைப் போற்றிப் பாடிப்பரிசில் பெறப்போந்த எனக்கு பரிசில் இல்லை எனச்சொல்லி எனை வாடச்செய்தவனே! போடி என்பது நின்ஊர்ப்பெயர் ஆகையால் நின்பெயரையோ நின் ஊர்ப்பெயரையோ இனி என்வாயால் சொல்லமாட்டேன் என்னும் கொள்கையால் என் மனைவியின் மீதில் எனக்கு அடங்காக் கோபம் ஏற்படினும் அவளை அவள்அப்பன் வீட்டிற்குப் போடி எனக்கூறமாட்டேன் பதிலாக வாடி வாடி எனச்சொல்வேனே!)

என அடங்காக் கோபமுறுவது எத்தகைய தன்மை?

இருப்பவன் வழங்குவது என்பது அவன் நற்குணத்தைக் காட்டுகிறது. இல்லையெனக் கூறுவது இடிந்துரைக்குமளவிற்கு அத்துணைப்பெரிய குற்றமா?

வஞ்சகர்பால் நடந்தலைந்த காலிற் புண்ணும்
வாச(ல்)தொறும் முட்டுண்ட தலையிற் புண்ணும்
செஞ்சொல்லை நினைத்துரூகு நெஞ்சிற் புண்ணும்
தீருமென்றே சங்கரன்பால் சேர்ந்தே னப்பா!
கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்
கொடுங்காலால் உதைத்தபுண்ணும் கோப மாகப்
பஞ்சமரில் ஒருவ(ன்)வில்லால் அடித்த புண்ணும்
பாரென்றே காட்டிநின்றான் பரமன் தானே!

என்று இராமச் சந்திர கவிராயர் புரவலனையும் நொந்து பரம்பொருளையும் நொந்து தன்னையும் நொந்துகொள்ளும் இச்செயல் எத்தகையது?
இல்லை எனச்சொல்வானிடம் இரக்கச் சென்றதே தவறு. இதில் இல்லை என்றவனை இகழ்ந்தரைத்தல் எத்தகைய மேன்மையது?

ராஜமாகா ராஜேந்த்ர ராஜகுல சேகரன்ஸ்ரீ
ராஜ ராஜன்
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க டேசரட்ட
சிங்கன் காண்க!
வாசமிகு துழாய்த்தாரான் கண்ணனடி மறவாத
மனத்தான் சக்தி
தாசனெனப் புகழ்விளங்கும் சுப்ரமண்ய பாரதிதாசன்
சமைத்த தூக்கு!

மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த மன்னரிலை
என்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம் புனைந்தபொழு
திருந்த தன்றே!
சோன்னலமும் பொருணலமும் சுவைகண்டு சுவைகண்டு
துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல் தமிழ்ச்சுவைநீ
களித்தாய் அன்றே!

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் தமிழ்மொழியைப்
புகழி லேற்றும்
கவியரசன் தமிழ்நாட்டிற் கில்லையெனும் வசையென்னாற்
கழிந்த தன்றே!
சுவைபுதிது! பொருள்புதிது! வளம்புதிது! சொற்புதிது!
சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை
என்று போற்றி

பிரான்ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர் புலவோரும்
பிறகு மாங்கே
விராவுபுகழ் ஆங்கிலத்தீங் கவியரசர் தாமுமிக
வியந்து கூறிப்
பராவியென்றன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப் போற்றுகின்றார்
பாரோ ரேத்துந்
தராதிபனே! இளசைவெங்க டேசரெட்டா! நின்பால்அத்
தமிழ்கொ ணர்ந்தேன்!

வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென் கவிதையினை
வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட நீகேட்டுநன்கு போற்றி
ஐயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் பொற்பைகள்
ஜதிபல் லக்கு
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப் பல்லூழி
வாழ்க நீயே!

என்று பாரதி புகழ்த்து கூறுமிடத்தில் மன்னனைப் புகழாது அவனுக்கு நிகராகத் தன்புகழைப் பரைசாற்றிக் கொள்வது என்பது எவ்வகையில் ஏற்புடையது? கொடுப்பதைக் கொடு எனஇராது தனக்குகந்ததைக் கேட்டுப்பெருதல் எத்தன்மையது?

கால்விழுந்து எம்மைக் கவிபாடச் சொன்னானோ?
மேல்விழுந்து யாமே விளம்பினோம் -நூலறிந்து
தந்தக்கால் தந்தான் தராக்கால் நமதுமனம்
நொந்தக்கால் என்னா குமோ?

(அப்பாடா! இந்த ஒரு புலவன்தாய்யா தன்னோட தவற்றை உணர்ந்து, "அவனா என்காலில் விழுந்து என்னைப் பாடு என்றான். நாமன்றோ அவன்பாலில் விழுந்துப் பாடினோம். நூலின் மேன்மையறிந்தவனாக இருந்தால் தந்திருப்பான். அவனோ அறியாதவன். இப்போழ்து அவனை நொந்து என்ன பயன். நம்மைநாமே நோந்துகொள்வதல்லவோ சரி?" எனத் தன்னை நொந்துகொண்டவன் இவன் ஒருவனாகத் தானிருக்கும்)

கொடுத்தால் புகழுரையும் கொடாக்கால் கொடுஞ்சொல்லும் புகலும் புலவர்களைப் புரவலர்கள் சும்மாவிட்டு வைத்ததும் ஏன்?

இரந்துப்பெறுவதையும் இறுமாப்போடு பெறும்குணத்தை இரவலர்களுக்கும் இறுமாப்போடு இரப்போர்முன் இன்முகம் காட்டி ஈயும் பண்பைப் புரவலர்களுக்கும் ஏற்படுத்தியது எதுவாயிருக்கும்?

ஆம். அதுதான் கல்வி. இக்கல்வி குடிகொண்டவன் முன் எத்துணை செல்வி தன் இல்லில் குடிகொண்டவனாயினும் மதிப்பதும் மரியாதை செய்வதும் பழமரபில் இன்றியமையாததாக இருந்திருத்தல் வேண்டும். அம்மரபே கற்காலத்தில் வேர்விட்டுத் தற்காலம் வரை கிளைவிட்டு வந்திருக்க வேண்டும்.

கற்கால முதலே கல்வியை செல்வம் போலவே கருதிப்பேணி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அத்தகைய அழியாச்செல்வத்தின் முன் பிற செல்வங்கள் மதிப்பில் தாழ்ந்ததாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆகையினால்தான் அவ்வழியாச்செல்வமும் மதிப்பிற்குறிய செல்வமுமாகிய கல்விச்செல்வத்தை உடையோர் இரத்தலையும் பெருமையின் கண்கொண்டே பார்க்கப்பட்டும் இல்லை எனாது ஈயப்பட்டும் வந்திருக்கிறது.

பண்டைய மன்னர்கள் கல்விச்செல்வத்தைத் தன் கண்ணெனக் காத்தும் கல்வியாளர்களைத் தன் இயதயத்துள் வைத்து இச்சித்தும் மழலை செய் பிழையை அன்னை பொறுத்தல் போல் கல்வியாளர்கள் செய்பிழையைக் காவலர்கள் பொறுத்திராவிட்டால்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன் -மன்னற்குத்
தன்றேச மல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு!

என்று மன்னனின் அவையின் கண்ணேபாடி அவனிடமே பரிசிலும் வாங்கிவர முடிந்திருக்குமா?

அகரம்.அமுதா

9 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

//தான் யாரிடம் இரக்க வேண்டிச் செல்கிறானோ அவன் புரவலனாயிருப்பினும் பேரரசனாயிருப்பினும், குறுநில மன்னனாயிருப்பினும் அளவுக்கதிகமாகப் புகழ்வதோடு தேவைப்பட்டால் அவனுக்கு அறிவுரை நல்குவதோடு நில்லாமல் அவன் தீச்செயலை இடிந்து கூறவும் செய்திருக்கிறார்கள்.//

அந்த மண்ணில்தான் நாம் இன்னும் வாழ்கிறோமா என ஐயமாக இருக்கிறது அமுதா. இரவலர்களாக அன்றி ஓட்டு என்ற ஒன்றைப் போட்ட உரிமையில் கூட வாய் திறக்க வழியில்லா காலமாக அல்லவா இருக்கிறது:)?

கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைச் சிறப்பாகக் கூறியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்.

அகரம் அமுதா சொன்னது…

வணக்கம் மகாலட்சுமி! கண்ணதாசனிடம் ஓர்முறை குறள்வெண்பா எழுதச்சொன்ன போது இப்படி எழுதினார்:-

கற்கால நோக்கிக்கற் றோரை விரட்டுதே
தற்கால நாகரீ கம்! -என்றெழுதினார்.

இன்று இந்த அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது அக்கால மன்னர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்திருக்கலாம் எனத்தோன்றுகிறது.

jeevagv சொன்னது…

இரவும் புரவும் இனித்தது, இலக்கிய இன்பம் நவின்றது.

கவிநயா சொன்னது…

"மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன்" என்பதை வித்தியாசமான கோணத்தில் அழகாய்த் தந்திருக்கிறீர்கள்.

//போடிநகர்ப் புரவலனே நின்மீது கவிபாடிப்
போந்த என்னை
வாடிமறுகிடச் செய்தாய் மனத்திலினிப் பொங்குசினம்
மனையாய் மீதில்
கோடிமடங் கானாலும் நின்னூரின் பெயர்தன்னைக்
குறிப்ப தாலே
போடியெனச் சொலமாட்டேன் வாடியென எக்காலும்
புகலு வேனே!//

இந்த பாடல் எனக்கு பிடிச்சுப் போச்சு :)

ஒளியவன் சொன்னது…

//
கால்விழுந்து எம்மைக் கவிபாடச் சொன்னானோ?
மேல்விழுந்து யாமே விளம்பினோம் -நூலறிந்து
தந்தக்கால் தந்தான் தராக்கால் நமதுமனம்
நொந்தக்கால் என்னா குமோ?
//

இது எந்தப் புலவர் பாடியது? தனது அரசவைக்கு வந்து ஒரு புலவர் பாடுவதையே பெரும் பாக்கியமாகக் கருதியவர்கள் பெரிய பெரிய மன்னர்கள். அதனால் மிகவும் கௌரவம் கொண்ட புலவர்கள் தன்னை அரசனை விட உயர்த்திக் கொள்வது இயல்பு. இருப்பினும் தலைக்கனம் கூடாது. வள்ளுவர் கூற்றே எனது எண்ணமும்

அகரம் அமுதா சொன்னது…

வணக்கம் ஜீவா, கவிநயா, ஒளியவன் அவர்களே! வருகைக்கும் பின்னூட்டிற்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.

===== ===== ===== ===== ===== ===== ===== ===== ===== =====

அப்பாடலை நான் எப்பொழுதோ படித்தது ஒளியவன். நினைவில் இருந்தவற்றைத் தொகுத்தெழுதினேன். அதனால் புலவரின் பெயர் தெரியவில்லை. தெரிந்தால் கட்டாயம் சொல்கிறேன். நன்றி.

அகரம் அமுதா சொன்னது…

Madam,
vanakkam.
Your blog is not accepting comments despite repeated attempts.
So i am sending this . You may attach this as a comment if you so wish.

thanks.
yours sincerely,
Subbu rathinam.


*********************************************************************************
புலவன் கையில் பாமாலை. அவர் நாடும்
புரவலன் கையிலே பொற் காசுமாலை.
நடப்பதோ அங்கே வணிகம் ! இதில்
நாடுவது ஏன் நாகரீகம்?

//நம் புலவர்கள் புரவலர்களிடம் இரந்துப்பெறும் போதும் மிகவே மிடுக்காக நடந்து கொள்பவர்களாயிருந்திருக்கிறார்கள். //

இருப்பவர் இறுமாப்பு கொள்வதும்
இல்லாதோர் மனம் நோக
இளிப்பதும் இகழ்வதும்
இவ்வுலக வாய்பாடு.

இவரிடம் இருப்பது புலமை
இன்னும் இருப்பது வறுமை.
இன்னிலையிலும் தாழா பெருமை.
இல்லாதது பொறுமை.

இல் என நினத்தாலன்றோ
அல்ல லெனை வந்தடையும் !
இல்லாதது எதானாலும்
புல்லெனவே கொண்டுவிடின்
புவிக்கரசன் யான் தானே !

//புலவர்கள் ....புரவலர்களைப் பாடிப் பரிசில் பெறுவதைத் தொழிலாக் கொண்டிருந்தனர்//

இத்தொழிலில் எழில் காணுதல் சாத்தியமா ?
இது ஓர் பண்டமாற்று வியாபாரம் தானே !


இன்னொரு கோணத்தில்
இவ்வுலகம் ஒரு சந்தை.
இருப்பதற்கு அதிக விலை கேட்பதும்
இல்லாததைக் குறைத்து மதிப்பிடுவதும்
இயற்கை.

விந்தைமிகு சந்தையிலே
தந்தையில்லை தனயனில்லை.
தன்னை நம்பி வருவோர்க்குத்
தயை புரியும் மனமுமில்லை.

புலி பசித்தாலும்
புல்லைத் தின்பதில்லை.
புலவன் பசித்திட்டால்
பத்தும் பறந்துபோம் என்பான்.
எல்லாம் மறந்துபோம் என்றும் சொல்வான்.

பத்தும் பறந்த பின்னே
பெரிது என் ? சிறிது என்?
நிற்பது என்? நிலைப்பது என்?
கரிப்பது என்? காய்வது என்?

//(இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளக் கூடாது. அவன் அடைந்துள்ள வறுமையே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக உள்ளது.)//

உண்மை பாகை போல.
கசக்கும்
உண்ணின் பயனளிக்கும்.


சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பின் குறிப்பு:
வாயார உண்டபேர் வாழ்த்துவதும் நொந்தபேர் வெய்வதும்
எங்கள் உலக வாய்பாடு என தாயுமானவர் சொல்லியது
நினைவுக்கு வந்ததை என்னால் மறைக்க இயலவில்லை.
புலவன் அதற்கு ஓர் விதிவிலக்கு என எனக்குத் தோன்றவுமில்லை. இந்நாள்
கல்வியாளர் பலர் தம் அறிவைக் காசாக்குவதைக் கண்டு நொந்த‌
ஆசிரியன் நான். சிறியன் நான்.


*****************************************************************************

udayan சொன்னது…

எனக்கொரு கேள்வி ,
ஏன் அவ்வை 'ஏற்பது இகழ்ச்சி ' என பாடிவிட்டு அடுத்த வரியிலே 'ஐயமிட்டு உண் ' என சொல்லிருக்கிறார் ?
துறவறம் பூண்டவர்கள் யசித்துதனே வாழ்ந்திருக்க வேண்டும் .இது குற்றமா? 'ஏற்பது இகழ்ச்சி என எதை சொல்லியிபர்கள் ,யாருக்கு சொல்லியிருப்பார்கள் ?பதில் தருக

agaramamuthan சொன்னது…

வணக்கம் உதயன்!

ஏற்பது இகழ்ச்சி -என்று அவ்வை சொன்னது சரியே!
அதன் பொருள் தன்னிடம் இருக்கின்ற ஒன்றைப் பயன்படுத்தாது அடுத்தவர் தருவார் என எதிர்பார்த்துக் கேட்டு ஏற்பதைத்தான் இகழ்ச்சி என்றார்.

ஐயமிடுவதும் அப்படியே!

கேட்பவருக்கெல்லாம் கொடுத்துவிட முடியாது. கொடுக்கவும் கூடாது. நாம் ஐயமிடும் பொருள் உரியவருக்குத் தக்க முறையில் பயன்படுமா என்று பார்த்தே ஐயமிடவேண்டும்.