நாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு செல்வத்தை வேண்டியும் பெற்றும் வருகிறோம். இளமையில் கல்விச்செல்வம் கேள்விச்செல்வம் இவ்விரண்டால் வாய்க்கும் அறிவுச்செல்வம் வாய்த்த அறிவால் ஈட்டும் பொருட்செல்வம் என ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற செல்வத்தைப் பெற்று வருகிறோம்.
அடுத்த நிலையாக நாம் அடையத்துடிக்கும் ஒப்பற்ற செல்வம் ஒன்றுண்டு.
அச்செல்வத்தை கற்றார், கல்லார், உள்ளார், இல்லார், நல்லார், பொல்லார் என்றில்லாது எல்லார்க்கும் வாலறிவன் வழங்கும் மழலைச்செல்வம்.
பிற செல்வங்களைப் பெறாவிடினும் இழுக்கில்லை. இச்செல்வத்தைப் பெறாவிடின் இழுக்கன்றி வேறில்லை. மழலை பெறாமுன் மலடி என வழங்குவோரும் சேயொன்றைச் சுமந்தீன்றால் தாயென்று சாற்றுவர்.
பிற செல்வங்கள் பெறாவிடின் பெறாஅவ்வொருவருக்கே இழுக்கும் தாழ்வும். மழலைச்செல்வம் பெறாவிடின் இழுக்கு இல்லாள் கணவன் என இருவர்க்கும் ஏற்புடைத்து.
பிற செல்வங்கள் அச்செல்வங்களின் தன்மைக்கேற்பப் பயன்படும் வேளைகளில் மட்டும் நம்மை மகிழ்விக்கிறது. மழலைச்செல்வம் ஒன்றே இவ்வவ் வேளையென்றில்லாது எவ்வேளையிலும் நம்மை இன்பத்தில் ஆத்துகிறது.
பாடறியாப் பெண்களும் ஓர் மழலை பூத்து மடிதவழும் போழ்து ஜானகியாகவும் சித்ராவாகவும் மாறிவிடுகிறார்கள்.
ஏத்துணை வெகுளிபடைத்த வீரனாயினும் தன் மழலையை வாரியணைக்கும் போழ்து தானும் மழலையாகி விடுகிறான்.
இத்துணை இன்பம் பயக்கும் இம்மழலைச் செல்வம் இல்லா இல்லம் எதற்கெல்லாம் ஒக்கும் என சூளாமணி நமக்கோர் பட்டியலே போட்டுக் காட்டுகிறது.
தொக்கின மலர்த்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் பிறைவிரி விலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே!
ஆயின் இச்செல்வம் பெறாக்கால் வேறு எச்செல்வம் உடையாராயினும் அவரெல்லாம் செல்வம் உடையாரா? எனக் கேள்வி எழுப்புகிறான் புகழேந்தி.
பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனும் உடையரோ? -இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்!
முடியில் தவழும் மழலையை அள்ளி முத்துப்பல் காட்டிச்சிரிக்கும் முழுநிலாவின் மாவடு கன்னத்தில் முத்தமொன்று வைக்க ஆனந்தம் காட்டி ஆர்ப்பரித்துக் குரலெழுப்புமே குழந்தை அம் மழலைமொழிக்கு மாற்றுளதோ?
இவ்வின் மொழியில் இன்புறா மாக்களன்றோ குழலும் யாழும் இனிதென்பர்!
குழலினிதி யாழினி தென்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!
பெறும் செல்வங்களுள் மக்கட்செல்வம் சிறப்பெனினும் அம்மக்கட் செல்வங்களுள் அறிவு நிரம்பிய மக்களைப் பெறுவதே பேரின்பமாகும்.
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற!
பெறுவனவற்றுள் தலைசிறந்ததாயும் பெற்றோர்க்குப் பேருவகை செய்யும் செல்வமாயும் திகழும் மக்களைப் பெறுவது இனிதென்றால் அம்மக்கள் கைவிட்டளாவும் கூழ் குடிக்கும் இன்பம் இருக்கிறதே அது அமிழ்தை அருந்தும் தேவருக்கும் கிட்டாத பேரின்பமாகும்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்!
பேறுடை மக்கட்செல்வமாயினும் அளவோடு பெறுதலே ஆனந்தமாகும்.
முன்பெல்லாம் நாமிருவர் நமக்கிருவர் என்னும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அரசியற்றி அறிவித்து வந்தது.
தற்காலத்தில் நாமிருவர் நமக்கொருவர் திட்டம் வலியுறுத்தப் படுகிறது.
காரணம் மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காய் மட்டுமல்ல. அளவில் மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சைப்போல அதிகம் மழலைகளைப் பெறுவதாலும் ஆனந்தம் கெட்டுவிடும் என்பதாலும் தான்.
இதனை நம் பழம்பாடல் உவமைச்செறுக்கோடு உரைப்பதைப் பாருங்கள்.
ஓர் மழலை ஈன்றால் அவ்வில்லத்திற்கு அம்மழலை கரும்பின் அடிபாகத்தைப் போல் செறிந்த இனிப்பை நல்குமாம்.
மேலொன்று பெறும் ஆசையால் இரண்டாய்ப் பெற்றால் அக்கரும்பின் நுனி பாகத்தைப்போல் (கொழுத்தடை) செறிவில்லாத இனிப்பையே ஈயுமாம்.
பிள்ளைகள் மூன்றாய்ப் பெறுவது வாயிலிட்ட புளியால் பல் கூசுதல் போன்ற புளிப்பைத் தந்து நம்மை அறுவறுக்கச் செய்துவிடுமாம்.
மூன்றிற்குப் பின்னும் ஒன்று பெற்றுக் கொள்வது கசப்பென்றுத் தெரிந்திருந்தும் வேம்பைக் கடித்துத் துன்புறுவதைப் போன்ற துன்பத்தையே நல்குமாம்.
ஆசையின் மிகுதியால் அதற்குமேம் பெறத்துடிப்போர்க்கு என்ன உவமை சொல்வது என்றே தோன்றவில்லை என்கிறது அப்பழம்பாடல்.
ஒன்று கரும்பினடி ஓங்குநுனி யேயிரண்டு
துன்றுபுளிப் பேமூன்று தோகாய்வேம் -பொன்றதன்மேல்
பின்னும் பலபிள்ளை பேறுடை யார்விருப்புக்
கென்னுவமை சொல்வேன் இனி?
அகரம்.அமுதா
தமிழ்க் காப்புப் போராளி இறைவிழியனார்!
1 வாரம் முன்பு
10 கருத்துகள்:
கன்னற் சிரிப் பாலே
உள்ளம் கொள்ளை கொள்ளும்
மின்னற் பூவைப் போல்
மனசைக் கவர்ந்து கொள்ளும்
மழலை எழிலதற்கு
ஈடிணை இல்லைதான்!
வாங்க கவிநயா! வணக்கம். கவிதையாகப் பின்னூட்டிட்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்
" பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வாய் " என இப்போது
ஆசி வழங்கினால், அய்யய்யோ ஒன்று, மிஞ்சினால் இரண்டு
போதுமெனக்கு தாத்தா ! என்கிறார்கள்.
பதினாறு செல்வத்தில் மக்கட்செல்வமும் ஒன்றுதான் எனினும்
பதினாறும் பெற்று என்றாலேயே ஒரு திகில் வருகிறது என்பதுதான்
உண்மை.
ஒன்று கரும்பினடி எனத்துவங்கும் நீங்கள் மேற்கோள் தந்த பாடல் கரும்பாய் இனிக்கிறது. கவி நயா அதற்கு அளித்த பதில் இன்னுமோர் அடிக்கரும்பு.
இரண்டையும் ஒன்றிணைத்து இரு தோழிகள் பாடுவது போல
அமைத்திருக்கிறேன். ஒரு நல்ல குரலுக்காகக் காத்திருக்கிறேன்.
விரைவில் வெளிவரும் யூ ட்யூபில்.
நிற்க.
ஏன் பிறந்தாய் மகனே ! ஏன் பிறந்தாயோ ! என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
அது இக்கால சினிமா பாடல்.
அந்தக்கால 'குசேல வாக்கியானம் ' . அதில் ஒரு பாடல்:
மதலையைப் பெரு நாள் துன்பம்
வளர்த்திடு நாளும் துன்பம்
விரலை நோயடையில் துன்பம்
வியன் பருவத்துத் துன்பம்
கதமுறு காலர் வந்து கைப்பற்றில்
கணக்கில் துன்பம்.
இதமுறு பாலர் தம்மால் எந்நாளுந்துன்பமாமே !
( யோசித்துப்பார்த்ததில், குசேலர் வாழ்ந்த நாட்களில் இக்காலத்து மருத்துவ
வசதிகள், எச்சரிக்கையுடன் பிள்ளை பெறும் வழிகள், மதலை பிறந்த பின்
இம்மூய்னிடிக்காக போடும் இஞ்செக்ஷன்ஸ், க்ரீச், ப்ரீ கேஜீ, வகை வகையான
விளையாட்டுப் பொருள்கள் எல்லாம் இல்லை என்பது ஒன்று. )
ஒரு இன்பத்தின் இரு பக்கத்தினையும் அலசி இருக்கிறீர்கள்.
உண்மையின் யதார்த்தத்தைச் சுவாசித்திருக்கிறீர்கள்.
தென்றல் சுகத்தினை அனுபவிக்கச் சொல்லும் அதே நேரம்
புயல் வரின் நிலை என்ன எனவும் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள்.
திருமணம் ஆகும் எல்லோருக்கும் ஒரு நகலெடுத்துத் தரலாம் எனவும்
தோன்றுகிறது.
ஆமாம் .சரி. அதை அகரமே ஈ மெயிலில் சொல்லுவார்கள்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் அய்யா! தாங்கள் பின்னூட்டில் அளித்துள்ள துன்பப்பாடல் இன்பத்தை அளிக்கிறது.
//////திருமணம் ஆகும் எல்லோருக்கும் ஒரு நகலெடுத்துத் தரலாம் எனவும்
தோன்றுகிறது.//////
ஓ! செய்யலாமே! ஆனால் எற்பார்களா என்பது தெரியாது.
பின்னூட்டம் போட்டபின் இதைக் கவனித்தேன்
இது போல ஒரு மழலை
வீட்டில் இருந்தால் வேம்பாகவா இருக்கும் ?
என்ன ஒரு அழகான ஒடிஸி நாட்டியம் ?
அதைப் பார்த்தாலே
பல வெண்பா தானே வரும்.
http://ceebrospark.blogspot.com
சுப்புரத்தினம்.
சென்னை.
அக் குட்டி தேவதையை நாள்முழுதும் ஆடவைத்து மகிழலாம் போலிருக்கிறது. அரிய படக்காட்சியைப் பார்க்க அழைத்தமைக்கு நன்றிகள் அய்யா!
மனசெல்லாம் பூவாகும்
மழலை மொழி கேட்டாலே
கவலையெலாம் கலைந்தோடும்-அதன்
கண் நிறைந்த அழகாலே!
ஹா!ஹா! பாட்டாவே படிச்சிட்டீங்களா! வாழ்த்துகள் ராமலெட்சுமி!
கடைசி செய்யுள் அருமை.
ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதன் தொடர்பான செய்யுள்களை எல்லாம் கொட்டி நன்றாக எழுதுகிறீர்கள்.
மிக்க நன்றி குமரன் அவர்களே!
கருத்துரையிடுக