கம்ப காவியத்தில் ஓர் காட்சி. சீதையிருக்குமிடம் கண்டுவர அனுமனைப் பணிகிறான் காகுந்தன். இலங்கை மாநகர் சென்று சீதையிருக்குமிடம் அறிந்த அனுமன் நேராய் இராமனிடம் வருகிறான்.
எதிரில் இராமன். அவன் எதிரில் பணிவுடன் அனுமன். இராமன் இட்டப் பணியைச் செவ்வனே நிறைவேற்றிய அனுமன் தான் சீதையைக் கண்டதை உரைக்கவேண்டும். இது காட்சி.
எப்படித் துவங்குவது? "சீதை" என்று தன் பேச்சைத் துவங்குவானாயின் இராமனுக்கு அவ்வொரு மணித்துளியில் "சீதையை இவன்பார்த்தானா?" என்னும் வினா எழுந்து விடும். "இலங்கை மாநகர்" என்று அனுமன் துவங்குவானாயின் "அங்குச் சென்றாயா? அங்குதான் என்மனைவி சிறையிருக்கிறாளா?" என்னும் வினா ஓர் மணித்துளிகள் நிலவும். "இராவணன்" எனத்துவங்குவானாயின் "இராவணன்தான் தன் மனையைக் கடத்திச் சென்றானா?" என்னும் ஐயம் ஓர் மணித்துளிகள் நின்றுமறையும்.
எப்படித் துவங்குவது?. அனுமன் சற்றே எண்ணிப்பார்க்கிறான்.இங்குதான் கம்பன் தன் பாத் திறத்தை முழுமையாய்க் காட்டி மிளிர்கிறான் என்று கம்பநாட்டாரை அறிந்த ஆன்றோர்கள் உரைப்பர்.
இராமன் சீதையையல்லவா கண்டுவர அனுமனைப் பணிகிறான்? அவளைக் கண்டுவந்த அனுமன் "சீதையை" என்று மொழிவானாயின் இராமனுக்கு "சீதையை?" (கண்டாயா? இல்லையா?) என்கிற வினா எழுந்துவிடுமாம்.
இராமனுக்குச் சற்றும் தன்சொல்லில் ஐயம் எழக்கூடா தெனக்கருதியும். அவ்வொரு மணித்துளி மனவருத்தத்தையும் அவனுக்குத் தான் அளிக்கக்கூடா தெனக்கருதிய அனுமன் கண்டேன் சீதையை என்றானாம்.
இக்காட்சியைக் கம்பனின் பாத்திறத்திற்குக் காட்டாக ஆன்றோர்கள் கூறுவது வழக்கம்.
மேலும், "கற்பினுக் கணியையைக் கண்களால்" ( சீதை கற்புடன் தான் இருக்கிறாள் என்பதை அவள் கண்களால் பார்த்தேன்) என்று அனுமன் இராமனிடம் உரைத்ததற்குக் காரணம் சீதையைக் கடத்திய இராவணனின் சொல்லுக்குப் பணிந்து அவனோடிணங்கி விட்டிருப்பாளோ? என்கிற ஐயம் உள்ளுற இராமனுக்கு இருந்தது. அதனை அகற்றும் விதமாய் அனுமன் அவ்வாறுரைத்தான் என்பர்.
"கண்டெனன், கற்பினுக் கணியையைக் கண்களால்" என்னும் பாவடிக்கு ஆன்றோர்கள் கூறும் அக்கருத்தோடு அவ்வரியின் முழுபொருளும் முற்றுபெற்று விட்டதா? என்பதில் எனக்கு ஐயம் ஏற்பட்டது.
என் சிற்றறிவு அதனினும் நுன்னிய பொருட்செறிவை உள்ளொளித்தே கம்பன் அவ்வரிகளை இயற்றியிருக்க வேண்டும் எனச்சொல்லிற்று.
அவ்வுட்பொருள் யாதாயிருக்கும்? அதைப்பற்றி ஆராய்வோம்.
பொதுவாக இராமன் சீதை அனுமன் போன்ற பல பாத்திரங்களைக் கம்பன் வால்மிகியின் மூலக்கதையினின்றும் முரண்பட்டு கடவுள் நிலைக்கு உயர்த்திப் படைத்தமை மாநிலம் அறிந்த மர்மம்.
காட்டுக்கள் காட்டவெனில் ஆயிரம் காட்டலாம். நாம் இங்கு காணும் காட்சி அனுமனை முதன்மைப்படுத்தியே என்பதால் அனுமனைக் கம்பன் கடவுளாய் உருவகித்துப் பாடிய பாடலை மட்டும் காட்டாகப் பார்த்துவிட்டு காட்சிக்குச் சென்றுவிடலாம்.
அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றா றாக ஆரியற் காகஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக்காப்பான்.
அனுமன் இராமனின் அடியவனாயினும் அவனிடம் பேராற்றல் நிறைந்துள்ளமையைக் கம்பர் பலவிடங்களிற் காட்டத்தயங்கவில்லை.
முக்காலும் உணர்ந்தவனாகவே அனுமன் இருக்கிறான்.
இப்பொழுது நாம் காணவிருக்கும் காட்சிக்கு வந்துவிடுவோம்.
அனுமன் தென்னவன். தென்னவர்களிடம் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் ஒன்று இன்னாரிடம் இதைப்பேசலாம் இதைப்பேசக் கூடாதென்ற வரைமுறை அவற்றுள் ஒன்று.
இராமனோ (கம்பன் காவியப்படி) கடவுள். (அல்லது அந்நிலைக்கு உயர்த்தப் பட்டவன்.) அனுமன் இராமனுக்கு அடியவன்.
மனிதர்களுள் இன்னாரிடம் இதைஇதைப் பேசலாம் பேசக்கூடாது என்கிற வரைமுறையுள்ளது போல் கடவுளாக ஏற்றுக்கொண்ட இராமனிடம் அடியவனான அனுமன் இதையிதைப் பேசலாம் கூடாது என்கிற வரையரையுண்டல்லவா?
இராமன் அனுமனுக் கிட்ட பணி சீதையைக் கண்டுவா என்பதே. காணச் சென்றவனும் கண்டுவந்தவனுமான அனுமனுக்கு இராமன் சீதையை மீட்பான் என்பதும் அவள் கற்பில் ஐயுற்றுத் தீயில் தீய்ப்பான் என்பதும் முன்கூட்டியே அறிந்தவனாயுமிருக்கிறான்.
இராமன் சீதையின் கற்பில் ஐயுறவிருப்பதை முன்கூட்டியே சுட்டவும் குட்டவும் கருதிய அனுமன் அதை தான் ஆசானாய் எற்றவனிடம் நேர்முகமாய் உரைத்தல் மரபாகா எனக்கருதி இக்காட்சியைப் பயன் படுத்தி, "கண்டேன் சீதையை. மேலும் அவள் கற்புத்தன்மை குன்றாது விளங்குகிறாள் என்பதை அவள்கண்களால் பார்த்தேன்" என்கிறான்.
"அடே மடையா! நாளை உன் மனையை மீட்டுவந்தபின் அவள் கற்பில் ஊரார் ஐயுறினும் நீ ஐயுறாதிருப்பாய். ஊரோடு ஒப்புர ஒழுகி அவளைத் தீயில் இறக்கிவிடாதே!" என்பதை நேர்முகமாகச் சொல்லமுடியாத அனுமன் அதனை இக்குறிப்பால் உணர்த்தியதாகவே என் சிற்றறிவுக்குப் படுகிறது.
இல்லையெனில் "கண்டெனென்" என்றுமட்டும் கூறாமல் அனுமன் ஏன்? "கற்பினுக் கணியையைக் கண்களால்" என்று மிகைப்படுத்திக் கூறினான் என்பதை இவ்வரையைப் படிக்கும் ஆன்றோர்களே கூற வேண்டும்.
அப்பாடல் இதோ:-
கண்டெனன் கற்பினுக் கணியையைக் கண்களால்
தென்திரை அலைகடல் இலங்கைத் தென்னவ
அண்டர் நாயக இனிதுறத்தி ஐயமும்
கொண்டுள்ள துயரும் என்றனுமன் பண்ணுவான்.
அகரம். அமுதா
தமிழ்க் காப்புப் போராளி இறைவிழியனார்!
2 வாரங்கள் முன்பு
5 கருத்துகள்:
அழகான பாடலை வழக்கம் போல ரசனையுடன் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் விளக்கமும் பொருத்தமாகத்தான் தெரிகிறது. நன்றி அகரம்.அமுதா.
//அதனை அவற்றும் விதமாய் //
'அகற்றும்'?
//இராமன் சிதை அனுமன்//
'சீதை'
அன்றுதொட்டு இன்று வரை இலக்கியத்திலும் பாடல்களிலும், "கண்டேன்" என்ற சொல் தான் எவ்வளவு ஆளுமை பெற்றுவிட்டது!
அருணாசலக் கவியார், தன் இராம நாடக கீர்த்தனையில்,
"கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் இராகவா" என்றிசைத்திருப்பார்.
வாங்க கவிநயா மற்றும் ஜீவா அவர்களே!
பிழைகள் சுட்டியமைக்கு நன்றிகவிநயா! பெரிதும் இத்தவறுகள் நிகழ்வதற்குக் கரணியம் என்னவென்றால் எழுதிமுடித்தபின் மீண்டும் படித்துப்பார்ப்பதில்லை. அதனாலேயே ஒன்றிரண்டுத் தவறுகளைத் தவிர்க்க முடியவில்லை. கருத்துக்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்...
ஜீ! இரண்டு வாரங்களாகத் தங்களைக் காணவேயில்லை. என்னாயிற்று?
அற்புதமான விளக்கம் அமுதா!
My write-up on Hanuman as an exemplary emissary.
http://narada-therealmofreligion.blogspot.com/2012/02/emissary-and-credentialspart-3.html
கருத்துரையிடுக