திங்கள், 7 ஜூலை, 2008

அடக்கமுடைமை!

கற்கவேண்டிய வற்றை நுட்பமாகக் கற்றாகி விட்டது. ஆய்ந்தறிந்துக் கற்றதனால் சொல்வளம் பெற்றாகி விட்டது. கற்றதாலும் சொல்வளத்தாலும் சிறந்தோர் முற்றிய நிலையை அடைந்து விடுகிறார். அடுத்ததாய் அவர் முற்றல் நிலையிலிருந்துக் கனியின் நிலையடைதல் வேண்டும். அதற்கென்ன வழி? அடக்கம்தான் அதற்கு வழி!

கற்றுச் சிறந்துப் பலரோடும் வாதிடும் வல்லமை பெற்ற நிலையில் நம்மையும் அறியாது ஓர் செருக்குத் தோன்றும். அச்செருக்கு என்னும் களை முளைவிடா வன்னம் களைந்தெடுப்பதே அடக்கமாகும்.

அடக்கமில்லார் கல்வி அக்கற்றோருக்கும் மற்றோருக்கும் எப்பயனும் நல்கா. பயன் செய்யாக் கல்வி நெல்லிடைப் புல்லே போன்றது. அவ்வடக்க மில்லாக் கல்வியைக் கற்றோனை கல்லாதவருள் வைத்துக்காண்பதே சாலும்.

எல்லாமும் கற்றபின்னும் நல்லடக்கம் இல்லாரைக்
கல்லாருள் வைத்தல் கடன்! -அகரம் அமுதா!

நெல்லிடைப் புல்லுக்கே நேராம்; அடக்கமில்லார்
கல்வியாலொன் றாவதில்லை காண்! -அகரம் அமுதா!

கற்றும் அடக்கமின்றிக் கல்லார்போல் தற்புகழ்வோரை அவ்வை:-

வான்குருவி யின்கூடு வல்லரக்கு தொல்கரையான்
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யறிதால் -யான்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது! -எனச் சாடுகிறார்.

பாரதிக்கு நிகழ்ந்த உண்மை நிகழ்வை முன்னெடுத்துச் சென்றால் உங்களுக்கு இலகவாய்ப் புரியும் எனநினைக்கிறேன்.

பாரதிக்கு அப்பொழுது 11 அல்லது 12 வயதிருக்கும். அவரின் கவித்திறத்தைக் கண்ணுற்ற ஆன்றோர்கள் சுப்ரமணியம் என்ற இயற்பெயரால் விளிக்கப் பட்ட அவருக்கு பாரதி என்னும் பட்டத்தை வழங்கினார்கள்.

இது பலசான்றோர்களுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிலருக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக எட்டையபுர அரசவைத் தலைமைப் புலவர் காந்திமதி நாதருக்கு இச்சம்பவம் பாரதிமேல் கடுஞ்சினத்தை ஏற்படுத்திவிட்டது.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த விடத்து! -என்பதைப் போல பாரதிக்கு இழுக்கிழைக்கும் வேளைபார்த்துக் காத்திருந்தார்.
அவ்வேளையும் வந்தது.

இடம்:- எட்டையபுர அரசவை
நேரம்:- ஆன்றோரும் சான்றோரும் குழுமித் தங்கள் கவித்திறத்தை அரங்கேற்றும் பொன்னந்திப் போழ்து.

அரசவைத் தலைமைப் புலவரான காந்திமதி நாதர் பாரதியை அவமானப் படுத்த இதுவே தக்க வேளை எனக்கருதி பாரதியை நோக்கி “உன்னை எல்லோரும் பாரதி (பாரதி-பண்டிதன்) என்றழைக்கிறார்களே! நான் வழங்கும் ஈற்றடிக்கு உன்னால் பாடலியற்ற முடியுமா?” என்கிறார்.

இளமை பயமறியா என்பதைப்போல் பாரதியும் இசைகிறான்.

“பாரதி சின்னப் பயல்!” இதுதான் அவர் அளித்த ஈற்றடி. 5மணித்துளிகளில் பாடலியற்றிவிட வேண்டும்.

அவைக்கண் குழுமிய ஆன்றோர் யாவருக்கும் பேரதிர்ச்சி. பாரதியால் இவ் ஈற்றடிக்கு நிச்சயமாக வெண்பா பாடமுடியாது. அப்படியே பாடிடினும் தன்னைத்தானே சிறுவன் என்று பாடிக்கொள்வதால் காந்திமதி நாதரின் எண்ணமும் நிறைவேறிவிடும். பாரதிக்கும் அதுவே இழுக்காகவும் அமைந்துவிடும்.

பாடிடினும் இழுக்கு. பாடாவிடினும் இழுக்கு. என்ன செய்யப் போகிறான் பாரதி என்று அனைவரும் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர்.

சற்றும் சலைக்காத பாரதி பாடிமுடித்தான். பாடலைக்கேட்டவுடன் அவைத் தலைமைப் புலவர் பெரும் கல்வியாளர் காந்திமதி நாதர் தன் தலையைக் கவிழ்த்துக்கொண்டார்.

பாரதி சின்னப் பயல்! என்று வெண்பா பாடினால் இவருக்கென்ன இழுக்கு என்கிறீரா? இழுக்கு நேர்ந்துதானே விட்டது.

அப்பாடலைப் பார்ப்போமா?

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் -மாண்பற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்!

தன்னைச் சிறுவனாக்கிவிட நினைத்த காந்திமதி நாதனையே சிறுவனாக்கப் பரிகசித்துவிட்டான் பாரதி.

அடக்கமொழுகாத, சொல்லும் சொல்லை ஓர்ந்துரைக்காத, கல்வியாளனுக்கு அவனினும் சிறியோரால் இழுக்கு நேரிடும். இதனை அறநெறிச்சாரம் படம்பிடித்துக்காட்டுகிறது.

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையுங் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் -பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்!

அகரம்.அமுதா

9 கருத்துகள்:

Kavinaya சொன்னது…

அழகான வரிசையிலே பதிவுகளை அளித்து வருகிறீர்கள், அகரம்.அமுதா. அடக்கமுடைமை பற்றி நன்கு சொன்னீர்கள். "கற்றது கைமண்ணளவு" என்பதை எப்போதும் நினைவில் நிறுத்திக் கொள்ளுதல் நன்று.

அகரம் அமுதா சொன்னது…

நன்றி கவிநயா அவர்களே!

Unknown சொன்னது…

"பாரதி சின்னப் பயல்" என்ற ஈற்றடியில் பாரதி இரண்டு வெண்பாக்கள் பாடினார்.
அந்த இரண்டாவது வெண்பா:

ஆண்டி லிளையவனென் றைய, அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் - மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சினைப் பயல்.

இதுவே மகாகவி பாரதியின் சிறப்பு.
இதை பதிவு செய்யாமல் விட்டுவிடீர்களே.
- இராஜகுரு

அகரம் அமுதா சொன்னது…

ஆம் ராஜா! அந்த இரண்டாவது வெண்பாவையும் நானறிவேன். காந்திமதி நாதர் வருந்தியதற்கிணங்கி முதல் வெண்பாவை சற்றே மாற்றிப் பாடினான் பாரதி. வாழ்த்துக்கள்

sury siva சொன்னது…

// நெல்லிடைப் புல்லுக்கே நேராம்; அடக்கமில்லார்
கல்வியாலொன் றாவதில்லை காண்! -அகரம் அமுதா!//

நெல்லிடைப்புல்லையாவது ஒரு மாடு திங்கும். ஆனால், அடக்கமில்லாதார்
கல்வியினால் ஆவது ஒன்றுமில்லை. யாருக்குமெந்தப் பயனுமில்லை.
மிகவும் அழகாக, அகரத்திற்கே உரிய பாணியில் எடுத்துரைத்திருக்கிறீர்கள்.
சபாஷ் !

நிற்க. அடக்கமுடைமை என்ற தலைப்பிலே தான் பல கற்றும்
அடக்கம் வேண்டி, அவையிலிருப்போர் தமைவிட அதிகம் படித்தவரென்
அஞ்சி, பேசாமலே செல்பவரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது ?
அதையும் நீங்களே சொன்னால்தான் அழகு.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://menakasury.blogspot.com
இங்கு கவினயா மேடத்தின் கனவு ப்பாட்டு உள்ளது. நான் பாடவில்லை.
உடல் நலிவுற்றதிருந்ததால் தாமதமாக வந்தேன்.
அதற்குள் ரயில் அடுத்த ஸ்டேஷணை அடைந்து விட்டது போலும்.

அகரம் அமுதா சொன்னது…

/////அடக்கமுடைமை என்ற தலைப்பிலே தான் பல கற்றும்
அடக்கம் வேண்டி, அவையிலிருப்போர் தமைவிட அதிகம் படித்தவரென்
அஞ்சி, பேசாமலே செல்பவரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது ?
அதையும் நீங்களே சொன்னால்தான் அழகு./////


நிச்சயமாகப் பின்வரும் இடுகைகளில் அதுபற்றி எழுதுகிறேன் அய்யா! தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி! உடல் நலிவு சரியாகிவிட்டதா? தங்களுக்கு உடல் நலிவென்றவுடன் பதறிவிட்டேன். உடலை ஓம்புங்கள்.

குமரன் (Kumaran) சொன்னது…

எல்லோர்க்கும் ஒவ்வொன்றெளிது - எத்தனை உண்மை. அருமையாகச் சொல்லியிருக்கிறார் பாட்டியார்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த விடத்து! என்றால் பொருள் என்ன?

வான் குருவியின் கூடு, வல்லரக்கு தொல்கரையான் புரிகிறது. தேன்சிலம்பி என்றால்? தேனீயா?

அச்சாணி அன்னதோர் சொல் என் ஐந்து வயது மகளிடமும் இருக்கிறது - பலமுறை கண்டிருக்கிறேன். :-)

இப்படி முதலில் எழுதியதை மாற்றிப் பாடுவது இந்தப் புலவர்களுக்கு பெரும் பொழுதுபோக்கு போலும். திருமழிசையாரும் காளமேகத்தாரும் அப்படி செய்தார்கள் என்று படித்திருக்கிறேன்.

அகரம் அமுதா சொன்னது…

வாங்க குமரன் வணக்கம்!

/////கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த விடத்து! என்றால் பொருள் என்ன?/////

ஒரு செயலைச் செய்யாதிருக்க வேண்டியபோது கொக்குப்போல் அடங்கியிருக்கவேண்டும். ஏற்றகாலம்
வாய்த்தபோது அதன் குத்தொக்க அச்செயலைத் தவறாது செய்து முடிக்கவேண்டும்.

/////வான் குருவியின் கூடுஇ வல்லரக்கு தொல்கரையான் புரிகிறது. தேன்சிலம்பி என்றால்? தேனீயா?/////

ஆம்.

குமரன் (Kumaran) சொன்னது…

தெளிவுறுத்தல்களுக்கு நன்றி அமுதா.