திங்கள், 14 ஜூலை, 2014

மெய்ப்பொருள் காண்ப தறிவு!


ஒரு கூட்டத்திற் பேசிய தமிழறிஞர்

பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்னோய்க்குத் தேனே மருந்து!

என்ற குறளுக்கு விளக்கங்கூற வந்தவர், ‘பிணி வேறு, நோய் வேறு. ஏனெனில் பிணிக்கு மருந்தாவது பிறவே அன்றி அப்பிணியை ஏற்படுத்திய பொருளே மருந்தாவதில்லை. நோய் என்பது அப்படி அல்ல, எது நோயை ஏற்படுத்தியதோ அதுவே மருந்தாகவும் இருந்து குணப்படுத்தி விடுகிறது எனக்கூறி, பிணி உடலுக்குள் உண்டாவது. நோய் உள்ளத்திற்குள் உண்டாவது’ என்பதாகப் பொருள் சொன்னார்.

பிணி என்பதும் நோய் என்பதும் சொல்லளவில் வேறுவேறே யன்றிப் பொருளளவில் வேறில்லை. ஒரு சொல்லுக்குப் பல பொருள் குறிப்பதும், ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருப்பதும் தமிழின் சிறப்பு, தமிழின் இயல்பு. பிணி, நோய் என்ற இரு சொற்களையும் அந்த அடிப்படையில்தான் நாம் அனுகவேண்டி உள்ளது. அகர முதலியைப் புரட்டினோமாயின் அது விளங்கும்.

பிணி என்பதற்குப் பொருளாக – நோய், கட்டுகை, பற்று, பின்னல், துன்பம் எனப்பொருள் விரிகிறது.

நோய் என்பதற்குப் பொருளாக – துன்பம், வருத்தம்,  குற்றம், அச்சம் எனப்பொருள் விரிகிறது.

நோயும் பிணியும் ஒரு பொருள் உணர்த்தும் சொற்களே என்பதற்கு வேறெங்கும் சான்றுகள் தேடி அலையத்தேவையில்லை. திருக்குறளில் மருந்து என்ற தலைப்பிலான அதிகாரத்தில் அவ்விரு சொற்களையும் அடுத்தடுத்த குறள்களில் பயன்படுத்தி, இரு சொற்களும் வெவ்வேறு பொருள் குறிப்பனவல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லியிருப்பார் வள்ளுவர். அவையாவன…

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்!

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்!

இவ்விரு குறள்களையும் நன்கு உற்றுநோக்கினால் இரு சொற்களுக்குமான பொருள் ஒன்றே என்பது விளங்கிவிடும்.

இப்பொழுது இயல்பாகவே நமக்கொரு கேள்வி எழலாம். இவ்விரு சொற்களுக்கும் பொருள் ஒன்றென்றால் பின்பேன் திருவள்ளுவர்…

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து!

எனப் பிணியென்று ஓரிடத்திலும் நோயென்று ஓரிடத்திலும் வேறுபடுத்திக் காட்டுகிறார்? ‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்பிணிக்குத் தானே மருந்து’ என்றே எழுதி இருக்கலாமே? எனக்கேட்கலாம்.

எழுதி இருக்கலாம்தான். ‘தன்பிணிக்கு’ என எழுதியிருந்தாலும் தளைகொள்ளுகிறவிடத்து எந்த சிக்கலும் இல்லைதான். தளை சரியாகவே உள்ளது. செய்யுளில் சொற்பொருட் பின்வரு நிலையணி என்றொன்றுண்டு. அதாவது ஒரு சொல் ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட விடத்து வருகிறபோது அச்செய்யுள் சொற்பொருட் பின்வரு நிலையணியின் பாற்பட்டதாகி விடுகிறது. அந்த வகையிற்பார்த்தாலும் ‘தன்பிணிக்கு’ என்றெழுதியிருப்பின் பொருந்திப் போகும்தான். இருப்பினும் கவிதைக்கு, கவிஞனுக்கு அழகு என்பது முடிந்தவரை வெவ்வேறு சொற்களை அழகுற அடுக்கிப் பொருள் சிதையாமற் சொல்லும் நுட்பம்  கைவரப்பெறுவது. அத்திறமை வள்ளுவருக்கு மிகவே உண்டு.

மேலும்,

இக்கூட்டத்திற்கு வந்திருந்த சித்த மருத்துவர் ஒருவரிடம் நான், ‘பேச்சாளர் இச்சொற்களுக்குத் தவறான பொருளுரைக்கிறாரே!’ என வினவிய போது, அவர் இன்னும் கொஞ்சம் மேலேபோய் அதீத கற்பனைக்குரிய பொருளுரைத்தார்.

அதாவது பிணி எனுஞ்சொல் பிணித்தல் எனும் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியது. அதுபோல் நோய் எனுஞ்சொல் நொய்து, நொய்தல் என்பதிலிருந்து கிளைத்தது என்றார். அவர் கூற்று முற்றும் சரியே. அதற்குப் பிறகு அவர் கொடுத்த விளக்கம் இருக்கிறதே அதுதான் அதீத கற்பனை எனச் சொல்லத் தூண்டுகிறது.

அதாவது…

பரம்பரை பரம்பரையாக, நாட்பட்ட, தீரா வியாதியையே பிணி எனச்சொல்லுதல் வேண்டும். அது வந்தால் போகாதது. கட்டுப்படுத்த முடியுமே யொழிய குணப்படுத்த இயலாதது. நோய் அப்படி அல்ல. வரும், போகும். எளிதாகக் குணப்படுத்தி விடலாம் என்றார்.

மேலும் சிலப்பதிகாரத்திலிருந்தும் ஓர் விளக்கத்தை எடுத்துரைத்தார்…

‘ஊழ்வினை உறுத்துவந் தூட்டும்’ எனும் வரியைக் காட்டி முற்பிறப்பிற் செய்த தீமைகளுக்கும் பாவங்களுக்கும் தண்டனையாக இப்பிறப்பில் அனுபவிப்பதே பிணி. அது வந்தால் தீர்க்க முடியாதது. கட்டுப்படுத்த மட்டுமே மருந்து வழங்கலாமேயொழிய தீர்க்கவியலாதது என்றார்.

இவர் கூற்றுப் படி இக்கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள குறளுக்குப் பொருள் காண்போமாயின் குறளும் பொருளும் முற்றாகச் சிதைந்துபோகும்.

திருக்குறளோ, ‘பிணிக்கு மருந்து பிறமன்’ என்கிறது. மருந்து பிறவிடத்தில் இருக்கிறது என்றால் என்ன பொருள்? அம்மருந்தை உண்டால் பிணி நீங்கிவிடும் என்றுதானே பொருள்.! மாறாக, பிணியைக் கட்டுப்படுத்தும் என்று பொருளாகாதே!

மேலும்

இம்மருத்துவர் கூற்றுப்படி பரம்பரை பரம்பரையாக, நாட்பட்ட, தீராத பிணியுடையவனிடம் கேட்டீர்களாயின் வாழவே ஆசைப்படுவதாக உரைப்பானன்றி மாள விரும்புவதாக உரைக்க மாட்டான். எத்தனை கொடிய நோயிருந்தபோதும் அவன் விருப்பம் அதுவாகத்தான் இருக்கும். ஆனால் காதலில் தோற்றவன் அல்லது காதலியால் கைவிடப்பட்டவனிடம் சென்று கேளுங்கள். தான் சாகவிரும்புவதாகவே சூலுரைப்பானேயன்றி வாழ விரும்புவதாக உரைக்கமாட்டான்.

இம்மருத்துவர் சொற்படி அவ்வப்பொது வந்து போகக்கூடியது, மருந்து கொடுத்தால் நீங்கிவிடக்கூடியது நோய் என்றால் ‘ அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து’ என்றானே வள்ளுவன்! அவளால் ஏற்பட்ட நோய்க்கு அவளே மருந்தாக அமையாதபோது அவளால் காதல் நோய்ப்பட்டவன் (இம்மருத்துவர் கூற்றுப்படி நோய் குணப்படுத்திவிடக் கூடியதாக இருந்தும்) வாழ விரும்புவதைக் காட்டிலும் சாகவே விரும்புகிறானே!


ஆக இம்மருத்துவர் கூற்றுப் படியும் பிணி, நோய் இவ்விரு சொற்களுக்குமான பொருள் தவறானவையே யாதலாலும், பிணி என்பதும் நோய் என்பதும் ஒருபொருள் குறித்த இருசொல்லே எனக்கொள்ளுதலே சாலும்.

1 கருத்து:

சுப்பிரமணி சேகர் சொன்னது…

அருமையான ஆய்வு நண்பரே