திங்கள், 18 ஆகஸ்ட், 2008

உழவு!

உலகில் முதன்முதலில் மனிதன் புரியத்தொடங்கிய தொழில் உழவுத்தொழிலே. மனிதன் உழவுசெய்யத் துவங்கிய போதே அவன் பேசிவந்த மொழியில் வளமும் நாகரீக வளர்ச்சியும் கண்டான் என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்.

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடுமுற்றோன்றி மூத்த குடி -தமிழ்க்குடி என்பதுபோல செய்தொழிலால் உலகின் மூத்தகுடி உழவர்குடி என்றால் அது மிகையாகா.

ஓர்நாட்டில் அறம் இறைவேட்கை நல்லாட்சி நற்குடி விருந்தோம்பல் அமையவேண்டின் அடிப்படையிற் பசிப்பிணி போக்கும் உழவுத்தொழில் இன்றியமையாதது. இவ்வுழவின் வழியே பிறதொழில்களெல்லாம் பிறந்து பிரிந்து சென்றிருக்கின்றன. உலகத்தார் பிறதொழில்கள் செய்து திரிந்தாலும் சிறப்புற்று வாழ்ந்தாலும் உணவுக்காய் உழவனின் கையையே எதிர்பார்த்தாக வேண்டியுள்ளது.

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே -ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு மற்றோர் பணிக்கு! என்கிறது நன்நெறி விளக்கம்.

உழவன் ஏர் நடத்தாவிடின் நாட்டின் வளம்குன்றும் அறம்பிழையும் மன்னன் முறைசெயத் தவறுவான். வள்ளுவன் ஒருபடி மேலேபோய்:-

உழவினார் கைமடக்கின் இல்லை விழைவதூவும்
விட்டேம்என் பார்க்கும் நிலை!உழவர் உழாது கையை மடக்கி இருப்பார்களேயானால் விருப்பப்படும் உணவையும் துறந்தோம் என்பார்க்குத் துறவு நிலையும் இல்லை என்கிறார்.

ஒருவனுக்கு எவ்வளவு செல்வமிருப்பினும் உழவுத்தொழிலே இனியது என உணர்த்தவரும் அவ்வை:-

ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
நீரருகே சேர்ந்த நிலமுளதாய் - ஊரருகே
சென்று வரவெளிதாய்ச் செய்வாரும் சொற்கேட்கில்
என்றும் உழவே இனிது! -என்கிறார்.

இத்துணைத் தகைசால் உழவின் இன்றைய நிலையென்ன? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழனுக்கு நீர்தர உடன்பிறந்தவனே மறுக்கிறான். தஞ்சை நிலங்களெல்லாம் தார்ப்பாலைகளாய் மாறிவருவது கண்டு மகிழ்கிறான்.

நீர்கேட்டெவரும் நேரில் வந்தால்மோர்
கொடுத்தவன் வாடுகிறான் -இவன்
ஏர்பிடித்துழுதிட தண்ணீர் கொஞ்சம்
ஈயென்றா லவன் சாடுகிறான்.

உழவன் உறுந்துயர்கண்ட எம்கவி பாடுகிறான்:-என்ன உழுதவன் நிலைமை? -இவனோசிறகை விற்கும் பறவை!
இவன் வாழ்வில் மட்டும் வருஷத்திற்கோர் திவசம் மாதிரி பொங்கள் வைப்பது வழக்கமாகிவிட்டது.

கொஞ்சமும் நீரைக் கொடார்கரு நாடகத்தார்
தஞ்சை நிலமெல்லாம் தரிசாகிப் -பஞ்சம்
எழுந்தாடக் கண்டபின்னும் ஏமாந் திருக்கும் நிலையே நீடிக்கிறது.

வீசமஞ்சு நாத்துநட்டு வேண்டாக் களையெடுத்துக்
காசை உரமாக் கழனியிட்டுப் -பாசனநீர்
தேக்கி விளைந்ததைச் சேர்த்தடிச்சுப் பாத்தாக்கா
சாக்கில் பதரேமிச் சம்! ஆகிறது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவரா? -அழுதுண்டே
ஏக்கருக்கு நூத்தியஞ்சி எண்ணிப்பாத் தாத்தெரியும்
ட்ராக்டருக்கு வள்ளுவனா ரே! -என்று வள்ளுவனைப் பார்த்து வினவும் நிலைக்கு உழவு கையாலாகாத் தொழலாக்கப்பட்டு விட்டது.

மாடிலான் வாழ்வு வீழும் என்கிறாள் அவ்வை. இன்றைக்கு மாடிருந்தும் நீரின்றி வீழ்ந்துகொண்டிருக்கிறான் உழவன்.

தமதுகையால் உழுகிறவன் பிறரை இரக்கமாட்டான். இரப்பவர்க்கு வேண்டியவற்றை மறைக்காமல் வழங்குவான் என்கிறான் வள்ளுவன். இன்றந்த உழவனின் நிலையே இரந்துண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலகின் முதற்றொழிற் குடியாய்த் தோன்றிப் பின்னாளில் தோன்றிவளர்ந்த தொழிற்குடிகளால் தாழ்த்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கடைநிலையை அடையும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது உழவுத் தொழில் புரியும் உழவர்குடி. பிற தொழிலார் முன் கைகட்டி வாய்பொத்தி நிற்பதே அந்நாள் தொட்டு இந்நாள்வரை வழக்காகி விட்டது. இந்நிலையைப் பார்த்துக் கொதித்தெழுந்த கம்பன்:-

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி
எழுங்கலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே! என்று ஏற்றுகிறான். போற்றுகிறான்.

வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவணிகர் தங்குலமும்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிகர் உண்டாகிற் கூறீரே! என்ற வினாவையும் எழுப்புகிறான்.

மாரி வழங்கிட மன்னன் குடிநடத்த
வாரி வழங்குகையார் வந்தீய -ஊரில்
இழவின்றி யாவரும் ஏற்றமுற் றாலும்
உழவின்றி உய்யா துலகு என்ற நிலையை இன்றடைந்தபின்னும் உழவன் நிலையை உயர்த்தவும் உழவு செழித்தோங்கத் தக்கவழியையும் செய்யாது மெத்தனம் காட்டிவரும் அரசு உழவன் சிந்திய வியர்வைக்குமட்டும் அரசே விலைவைக்கும் அவலப்பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறது.

உலகில் எந்தஓரினத்திற்கு அவலமென்றாலும் துன்பமென்றாலும் வரிந்து கட்டிக்கொண்டுப் போராடும் மனிதன் உழவனின் கண்ணீரைமட்டும் எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறான்.

ஓர்நாள் செறித்துப் புறந்தள்ளியதைத் தின்னும் நிலைவருங்கால்தான் உழவனுக்காகப் போராடுவானோ என்னவோ?

அகரம்.அமுதா

10 கருத்துகள்:

Thangamani சொன்னது…

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே -ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில் கண்டீர்
பழுதுண்டு மற்றோர் பணிக்கு! என்கிறது நன்நெறி விளக்கம்

அன்புள்ள அமுதா,
இந்த வெண்பாவில் "வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்"
காய் முன் நேர்வரின் வெண்சீர்வெண்டளை.
ஒரு"லை"விடுபட்டது.உங்கள் வலைப்பூ
சிறப்பாக இருக்கின்றது!வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி.

அகரம் அமுதா சொன்னது…

மிக்க நன்றி பாட்டி! (வருகைக்கும் ,கருத்துக்கும்)

கவிநயா சொன்னது…

உழவில்லையேல் உணவேது? நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் பாடல்கள் அனைத்தும் அருமை.

sury siva சொன்னது…

// ஓர்நாள் செறித்துப் புறந்தள்ளியதைத் தின்னும் நிலைவருங்கால்தான் உழவனுக்காகப் போராடுவானோ என்னவோ? //

உழவர்கள் பிரச்னைகளும் உழவர்களும் அரசியலில் பகடைக்காய்களாகத்தான்
பயன்படுத்தப்படுகின்றனர். அத்தகைய சூழ்னிலையில் உங்களது
கோபம் ( சற்று அதிகமாக இருந்தாலும் ) நியாயமாகத்தான் இருக்கிறது.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

அகரம் அமுதா சொன்னது…

நன்றி கவிநயா அவர்களே!

அகரம் அமுதா சொன்னது…

உழவர்கள் பிரச்னைகளும் உழவர்களும் அரசியலில் பகடைக்காய்களாகத்தான்
பயன்படுத்தப்படுகின்றனர். அத்தகைய சூழ்னிலையில் உங்களது
கோபம்

//////( சற்று அதிகமாக இருந்தாலும் )/////

நியாயமாகத்தான் இருக்கிறது.

============================
============================
மன்னிக்க வேண்டும் அய்யா! தஞ்சை உழவர்களின் நிலையைப் பற்றி வருந்தத்தக்க கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதன் வெளிப்பாடாய் கீழ்வரும் இக்கவிதையையும் படைத்தேன். அதன் விளைவுதான் சற்றே கடுமையாகக் கட்டுரை எழுதிவிட்டேன். பிழையிருக்கின் மன்னிக்கவும்.

கருநாடகமே!

தஞ்சை உழவனவன் சிந்தும் விழிநீரால்
நஞ்;சைநிலம் ஆனதவன் கன்னங்கள் -விந்தையில்லை
கன்னத் தரும்புகின்ற தாடிநெல் நாற்றானால்
பண்ணலாம்முப் போகம் பயிர்!

வேறு

கருநா டகமே! கருநா டகமே!
காவிரி நீரைத் தாராயா?
ஒருதாய் மக்கள் நாமென் பதனை
ஓர்கண முணர்ந்து பாராயா?

நம்மிரு வர்க்கும் காவிரி அன்னை@
நம்மில் பேதம் பார்ப்பாளா? –நீ
நம்மில் பேதம் பார்ப்பது கண்டால்
நற்றாய் அவளும் ஏற்பாளா?

கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டுக்
கழனி உழுது நடுகின்றான் -அக்
கண்ணீர் வற்றிக் கண்ணீர் வற்றிக்
காய்ந்த நிலம்கண் டழுகின்றான்!

ஊருக் கெல்லாம் சோறு போட்டவன்
ஒருபிடி சோறின்றி வாடுகிறான் -அட
நீருக் கன்றோ கைகள் ஏந்தி
நிம்மதி கெட்டு வாழுகிறான்!

நீர்கேட் டெவரும் நேரில் வந்தால்
மோர்கொ டுத்தவன் வாடுவதா? –அவன்
ஏர்பிடித் துழுதிட தண்ணீர் கொஞ்சம்
ஈயென் றால்நீ சாடுவதா?

பாருக் கெல்லாம் சமமழை என்றே
பார்த்து வழங்கும் கார்குலமே! –தண்
நீருக் கிங்கே கைகள் ஏந்தி
நிற்பதோ எங்கள் தமிழினமே?


மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென
மத்தியில் ஆளும் காங்கிரசே! –தமிழ்
மக்கள் படுந்துயர் தீர்க்க ஒணாவிடில்
மரித்தால் என்ன அவ்வரசே?

கருநா டகமே! கருநா டகமே!
காவிரி நீரைத் தாராயா?
ஒருதாய் மக்கள் நாமென் பதனை
ஓர்கண முணர்ந்து பாராயா?

அகரம்.அமுதா

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

'உழவு'இடுகை பெரும் பயன்மிக்கதாய் இருக்கிறது. அரிய செய்திகளை அள்ளித் தந்திருக்கிறீர்கள்.

'கருநாடகமே'கவிதை கண்களின் ஓரத்தில் ஈரத்தை விதைத்துவிட்டது!

//கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டுக்
கழனி உழுது நடுகின்றான் -அக்
கண்ணீர் வற்றிக் கண்ணீர் வற்றிக்
காய்ந்த நிலம்கண் டழுகின்றான்!//
உள்ளத்தைத் தொட்ட வரிகள்.

அகரம் அமுதா சொன்னது…

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள் அய்யா

anujanya சொன்னது…

//என்ன உழுதவன் நிலைமை? -இவனோசிறகை விற்கும் பறவை//

//வீசமஞ்சு நாத்துநட்டு வேண்டாக் களையெடுத்துக்
காசை உரமாக் கழனியிட்டுப் -பாசனநீர்
தேக்கி விளைந்ததைச் சேர்த்தடிச்சுப் பாத்தாக்கா
சாக்கில் பதரேமிச் சம்! ஆகிறது.//

என்ன அருமையான வரிகள். வலிக்கும் வரிகள். வாழ்த்துக்கள் அமுதா.

அனுஜன்யா

அகரம் அமுதா சொன்னது…

நன்றி அனுஜன்யா என்ன? சிலநாட்களாக ஆளையே காணவில்லை?