ஞாயிறு, 13 ஜூலை, 2014

மரப்பாச்சிப் பொம்மைகள் தரம்மாறா உண்மைகள்!


கவிதையைப் பற்றிய என் புரிதல் அல்லது நான் வகுத்துக்கொண்ட இலக்கணம் மிக எளிமையானது. வெகு சிலரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகிறதே!, அவர்களோடு நட்பாட வேண்டுமென்று எண்ணுகிறோமே! அப்படி கவிதையைப் படித்தவுடன் உள்ளத்தைக் கவர வேண்டும். சில நாட்களாவது மனதைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு நல்ல நண்பன் நம் துன்பங்களைப் பகுதியாக்கி, இன்பங்களை இரட்டிப்பாக்குவதைப் போல கவிதை நம்மைப் பேச வேண்டும். நமக்காகப் பேச வேண்டும். ஒருவன் நேர்ச்சியுறுங்கால் முதலுதவியாக, தேர்ச்சியுறுங்கால் ஒழுகவேண்டிய பணிவாக வாய்க்கவேண்டும் என்பது நான் வரித்துக் கொண்ட எளிமையான இலக்கணம்.

இந்த இலக்கணச் சட்டையை, நான் கேட்கும், படிக்கும் - கவிதை, கவிதைத் தொகுப்புக்கு அணிவித்துப் பார்ப்பதுண்டு. நண்பர், கவிஞர் தியாக. ரமேஷ் அவர்களின் மரப்பாச்சிப் பொம்மைகளுக்கு இந்தச் சட்டையை அணிவித்துப் பார்க்கிறேன். பெரிதும் பொருந்திப் போகிறது. இவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள் மென் மலராகவும், இழையோடிய கருத்துக்கள் அம்மலரில் ஊறும் மதுவாகவும் விளங்குவதால் கவிதைகள் அறுவைக்கு அடம் பிடிக்காமல் அதுவாகப் பிறந்திருக்கிறது.

எனது கருத்தெல்லாம் கவிதையை முக்கிப் பெற்றாலும் முக்கியமறிந்து பெற்றெடுக்க வேண்டும் என்பது. இவர் முக்கிப் பெற்றாரா? என்பதை நான்றியேன். ஆனால் முக்கியமறிந்து பெற்றிருக்கிறார் என்றுமட்டும் துணிந்து முன்மொழிவேன்.

      ‘மரப்பாச்சிப் பொம்மைகள்’. தொகுப்பின் தலைப்பே நம்மை சொக்க வைக்கிறது.

      பாடப் புத்தகங்களையும் மரப்பாச்சிப் பொம்மைகளையும் குழந்தைகளின் முன் வைத்தால் குழந்தைகள் முதலும் முடிவுமாகத் தேர்ந்தெடுப்பது மரப்பாச்சிப் பொம்மைகளாகத்தான் இருக்கும். பாடப் புத்தகங்களைப் போல் மரப்பாச்சிப் பொம்மைகள் குழந்தைகளுக்குக் கற்றுத்தர முனைவதில்லை. பாடப் புத்தகங்களைப் போல் பாடாய்ப் படுத்துவதும் இல்லை. ஆதலால்தான் குழந்தைகளுக்கு மரப்பாச்சிப் பொம்மைகளையும், மரப்பாச்சிப் பொம்மைகளுக்குக் குழந்தைகளையும் பிடித்திருக்கிறது.

      குழந்தைகள், நாம் கிழித்த கோட்டைத் தாண்டலாம். குழந்தைகள் கிழித்த கோட்டைத் தாண்டுவதே இல்லை மரப்பாச்சிப் பொம்மைகள். குழந்தைகள் உறங்க – உறங்கி, குழந்தைகள் விழிக்க – விழித்து, குழந்தைகளோடு இரண்டறக் கலந்திருக்கும் மரப்பாச்சிப் பொம்மைகளின் இடத்தை, புத்தகங்களால் பிடிக்க முடியாது என்பதுதான் உண்மை.

      மரப்பாச்சிப் பொம்மைகள் குழந்தைகளுக்குச் சரி. வாலிபர்களுக்கும் வயோதிகர்களுக்கும் அவற்றை வழங்கியிருக்கிறார் கவிஞர் தியாக. ரமேஷ். அது சாலப் பொருத்தமே.

      குழந்தையாக இருந்தவறையில் வாழ்க்கை உளியாகச் செதுக்கிறது. வாலிபத்தை எட்டியவுடன் கத்திமுனையாய்க் குத்திக் கிழிக்கிறது. அது ஏற்படுத்தும் காயங்களைக் கடக்க, வலிகளை மறக்க நாமும் குழந்தைகளாவதைத் தவிர வேறு வழியில்லை. அப்போது விளையாட இந்த மரப்பாச்சிப் பொம்மைகள் தேவைப்படும்.

      தலைப்புக்குத் தலைவணங்கி உள்ளே கொஞ்சம் உலாப்போகிறேன்.

      கண்ணிரைத்தான் கவிதையாக்கி இருக்கிறார். இருப்பினும் இன்னும் கொஞ்சம் எனக் கேட்கத் தூண்டுகிறது ‘இன்னும் கொஞ்சம்’ கவிதை. நான் முன்பு தைத்த இலக்கணச் சட்டைக்குள் சரியாகப் பொருந்தும் கவிதைகளுள் தலையாய கவிதை ‘இன்னும் கொஞ்சம்’. ‘இன்னும் கொஞ்சம்’ என்னை வெகுவாகக் கவர்ந்ததற்கு முன்பு கொஞ்ச காலம் நான் வெளிநாடுகளில் வாழ்ந்தது காரணமாக இருக்கலாம்.

அகிம்சை முகம்
கிம்சை விழி
அவளுக்கு…!

      முன்பொருமுறை ஒருத்தியைப் பற்றி நான் உதிர்த்ததாக நினைவு. கவிதைக்கும் இது பொருந்தும். சொற்கள் கனமற்றிருப்பதுபோல் தோன்றும். ஆனால் கருத்திருக்கிறதே அதன் கனம் சுமக்கமுடியாததாக இருக்கும்.

      வாய்மூடிக் கிடப்பதன்று
      மனம்மூடிக் கிடப்பதே
      மௌனம்…!
      = = =
      உள்ளே இருக்கும் வார்த்தை நமதாகும்
      வெளியே வந்த வார்த்தை எதுவுமாகும்!

      இவை அம்பின் பணியைப் பண்ணும் ஈர்க்குகள். முள்ளின் வேலையை முடிக்கும் மொட்டுக்கள்.

      தோழி மனைவியானால் வாழ்க்கை இதம்
      மனைவி தோழியானால் வாழ்க்கை சங்கீதம்

      இவை வானவில் வரிகள். இயைபை இப்படி மாற்றலாம்.

      தோழி மனைவியானால் வாழ்க்கை சாரீரம்
      மனைவி தோழியானால் வாழ்க்கை சங்கீதம்

      இயைபை இப்படியும் மாற்றலாம் இதம், ரிதம் என்று. ரிதம் வேற்றுமொழி ஆயிற்றே என்கிறீர்களா? சங்கீதம் என்பதும் நாம் புறக்கணிக்கத் துணியாத வேற்றுமொழி தானே!

      ‘தங்கத் தட்டில்’ ஓர் உயர்வான உவமை.

நாம்
நம்மாழ்வாராக இருந்தால்
மண் வளமாகும்..

நாம்
நம்மை ஆள்பவராக இருந்தால்
மனம் வளமாகும்..

மண் வளமாவதும், மனம் வளமாவதும் இன்றையக் கட்டத்தில் இன்றியமையாதது. உயர்ந்த ஒன்றைச் சுட்ட உயர்ந்த ஒன்றை உவமையாக்குவதே தமிழ் மரபு. வாணாள் முழுதும் இயற்கை வேளாண்மைக்கு வித்திட்டவர் நம்மாழ்வார். ‘வானகம்’ அமைப்பைத் தொடங்கி மண்ணகம் காத்தவர். இயற்கை அரணாக விளங்கிய ஈடிணையற்ற நம்மாழ்வாரை உவமையாக்கிய வகையில் என் மனதில் உயர்ந்து நிற்கிறார் கவிஞர் தியாக. ரமேஷ் அவர்கள்.

‘அண்ணாவின் ஆட்சி’ என்றோர் கவிதை. அது ‘தம்பியின் ஆட்சி’ என்றிருக்க வேண்டும். உலகத் தமிழர்க்கெல்லாம் வீரம் ஊட்டிய அந்த ஒப்பற்ற தலைவனை, தமிழனை எல்லோரும் ‘தம்பி’ என்றழைப்பதே வரலாறு. நாமும் அப்படியே அழைப்பதுதான் சரியாகும். ‘அப்பனே! முருகா!’ என்று கடவுளைக் கூட நாம் ஒருமையில்தான் அழைக்கிறோம். நாம் ஒருமையில் அழைக்கும் அளவிற்கு அவனென்ன சின்னவனா? ஆயினும் அழைக்கிறோம். அப்படி ‘தம்பி’ என்பதில் தப்பில்லை.

அல்லது ‘அண்ணனின் ஆட்சி’ என்றாவது இட்டிருக்கலாம். ஏனெனில் இங்கு எந்த ‘அண்ணாவின் ஆட்சி’யும் அருந்தமிழுக்கு அரியணை தரவில்லை. ஆங்கிலத்திற்கே அந்த இடத்தை அளித்துச் சென்றிருக்கிறது என்பதை நாம் மறக்கலாகாது. (ஒருவேளை செந்தமிழ் செருப்பாகப் பிறந்திருந்தால் என்றோ அரியணை கிட்டியிருக்கும் போலும்).

‘ஒருவழிப் பயணம்’ கொஞ்சம் உருக்கமானது. அதனாலேயே என் நெஞ்சிற்கு நெருக்கமானது. விண்ணைத் தொடும் விழைவோடு மரம் கிளை விரிப்பினும் வேர் என்னவோ மண்ணை அல்லவா பிண்ணிக் கிடக்கிறது! தான் எங்கிருப்பினும் எண்ணம் இங்கேயே வட்டமிடும் என்பதை அழகுறச் சொல்லியிருக்கிறார்.

ஈழம் மலரும் என்று
நாம் மட்டுமல்ல
சிட்டுக்களும் மொட்டுக்களும்
நம்பிக்கையோடு காத்திருக்கிறதே! -என்கிறார்.

அந்த அச்சம் சிங்களனுக்குக் கூட உண்டு. ஆகையால்தான் 2009 –ல் விழுதுகளை வீழ்த்தி வேர்களையே வீழ்த்தி வித்ததாக விளம்பி இருமாந்து கொண்டிருக்கிறான் இழிபிறப்புச் சிங்களன்.

அதே கவிதையின் இறுதியில்,

என் பயணம் ஒருவழிப் பாதையல்ல
இருவழிப் பாதை –என்கிறார்.

இரைதேடப் பறவை எத்தனை உயரம் சென்றாலும் இறுதியில் இளைப்பார மண்ணகமன்றோ மடி கொடுக்கிறது! இவரது தாய்போல் எத்தனை எத்தனை தாய்கள்? இவரது தாய்க்குப் போல் எத்தனைப்பேர் நம்பிக்கைச் சொற்களை நடுகிறார்கள்.

‘கன்னத்தில் முத்தமிட்டால்…’ கவிதையில்

மகளுக்கோ மகனுக்கோ
தரும் முத்தம்
கன்னத்தில் விழுவதில்லை
காதில்…

எத்தனை அடர்த்தியான உருக்க வரிகள். சிறு கல்லை அமைதியான குளத்தில் போட, அக்கல்லினும் ஆயிரம் மடங்கு பெரிதாய் விரியும் நீர் வட்டங்கள் போல் என்னுள் ஆயிரம் ஆயிரம் சலனங்கள். ‘நான் தரும் முத்தம் என் மகளின் கன்னத்தில் விழுகிற அந்த ஒற்றை மகிழ்ச்சி போதும் எனக்கு’ என்று அறைகூவத் தோன்றுகிறது.

மரபை நான் மணந்து கொண்டவன். புதுக்கவிதை, நான் கைகழுவிய காதலி அல்ல. என் கை நழுவிய காதலி. அந்தப் பழைய காதல் உணர்வோடு மரப்பாச்சிப் பொம்மைகளைக் கண்ணுற்ற போது என் எண்ணுற்றவற்றை இயம்பினேன்.

இறுதியாக இவருக்கு இயம்புவதற்கு ஒன்றுண்டு. கவிதை முத்தத்தைப்போல் சட்டென்று முடிந்து போகட்டும். அதுதரும் ஈரமும் சுவையுமே நீண்டுகொண்டிருக்கட்டும்.

தோழமையுடன்
அகரம் அமுதன்.

06.06.2014

கருத்துகள் இல்லை: