"திருக்குறளில் மருத்துவம்!" என்ற தலைப்பில் தொழுதூரில் பாவலர், சித்தமருத்துவர் வரதராஜன் அவர்கள் நடத்தும் மருத்துவக்கூட்டத்தில் ( 28/06/2014) நான் ஆற்றிய உரைவடிவம்!
எல்லாப் பொருளும் இதன்பால் உளதிதன்பால்
இல்லா எப்பொருளும் இல்லையால்…
ஒரு பழம்பாடல் திருக்குறளைப் பற்றி இப்படிச் சுட்டுகிறது. மனிதகுல வாழ்விற்கு,
மேன்மைக்கு என்னவெல்லாம் தேவையோ அனைத்தும்
சொல்லப்பட்டிருக்கிற நூல் திருக்குறள் என்றால் அது மிகையாகாது.
இன்றைக்கு நகரங்களில் தோன்றிக்கொண்டிருக்கும்
பெரிய பெரிய வணிக வளாகங்கள் பற்றி நாமெல்லாம் நன்கறிவோம். உள்ளே போய்விட்டால் நமக்குத்
தேவையான எதுவும் இல்லை எனக் கைவிரித்துவிட்டு வந்துவிடமுடியாது. அனைத்தும் ஒரே இடத்தில்
கிடைத்துவிடுகிறது என்று வியந்து போகிறோம்.
அது வணிக வளாகம். அத்தகையதே திருக்குறள். இது
அறிவு வளாகம். அத்தகைய திருக்குறளில் மாந்தனுக்கு ஏற்படுகின்ற நோய், அந்நோய்க்கான தீர்வாகிய
மருந்துபற்றி எந்த அளவிற்குப் பேசப்பட்டிருக்கிறது? என்று பார்த்தோமானால், திருக்குறள்
முழுவதையுமே ஓர் மருத்துவ நூல் என்பேன் நான். அதற்குமுன் மருத்தை எத்தனை வகையாகப் பிரிக்கிறது
திருக்குறள் என்று பார்த்துவிடுவோம்.
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்(று)
அப்பால்நாற் கூற்றே மருந்து!
என மருந்து நால்வகைப்படும் என்கிறது திருக்குறள்.
இங்கு ஒரு கேள்வி எழுகிறது. நால்வகை மருந்துகளுள் ஒன்று ‘உற்றவன்’ என்கிறார் வள்ளுவர்.
அதாவது நோய்ப்பட்டவனே மருந்தும் ஆவான் என்கிறார். நோய்ப்பட்டவனே எப்படி மருந்தும் ஆக
முடியும். சிந்தித்துப்பார்க்க வேண்டும். நால்வகை மருந்துகளுள் ஒருவராகிய மருத்துவர்
சொல்லும் அறிவுரைகளை, நோய்தீரக் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை, செவ்வனே ஏற்றுக் கடைப்பிடித்துத்
தனக்கு வந்திருக்கிற நோய் அத்தனை கடுமையானதல்ல விரைவில் தீர்ந்துவிடும், தீர்த்து விடலாம்
என்கிற மன உறுதி இருக்கிறதல்லவா அதையே மருந்து எனக்கொள்ளுதல் வேண்டும்.
அடுத்த மருந்து ‘தீர்ப்பான்’. அதாவது மருத்துவன். மருத்துவன் கூறுகிற வழிமுறைகள்,
ஊட்டுகிற நம்பிக்கை, நோயைத் தீர்க்க அவன் கையாளும் முறை இவையே மருந்து எனக்கொள்ளல்
வேண்டும். மூன்றாவதாக ‘மருந்து’. இது மாத்திரை, ஊசிவழி ஏற்றக்கூடிய மருந்து, களிம்பு
போன்றவற்றைக் குறிக்கிறது.
நான்காவது மருந்தாக ‘உழைச்செல்வான்’ என்கிறார் திருவள்ளுவர். இச்சொல்லுக்கான
பொருளாக பணிவிடை செய்யுநன் அல்லது செவிலித்தாய் எனக்கொள்ளலாம். செவிலித்தாயை எப்படி
மருந்தாகக் கொள்ள முடியும்? அவர் செய்கிற பணிவிடை, காட்டுகிற ஈடுபாடு, செலுத்துகிற
அன்பு, கரிசனம் போன்றவையே விரைவாக நோய்நீங்கி நாம் மீண்டெழ சிறந்த வழியாக விளங்குவதால்
அதையே மருந்தும் ஆகும் என்கிறார் வள்ளுவர்.
வள்ளுவர் கூற்றுப்படி மருந்து நால்வகைப்படுமாயின் நோய் எத்தனை வகைப்படும்? இங்கு
எளிதாகப் புரிந்து கொள்ள மூன்று வகையாகப் பிரித்துக்கொள்வது சரியாக இருக்கும் எனக்கருதுகிறேன்.
1.உடலுக்கு ஏற்படும் நோய், 2.மனதிற்கு ஏற்படும்
நோய், 3.அறிவு அல்லது எண்ணத்தில் ஏற்படும் நோய். உடலுக்கு ஏற்படும் நோய்கள் தலைவலி,
காய்ச்சல், இரத்தக்கொதிப்பு, மூலம், சர்க்கரை போன்றவை. மனதிற்கு ஏற்படும் நோய்கள் சோர்வு,
அமைதியின்மை, குழப்பம், தூக்கமின்மை, அச்ச உணர்வு போன்றவற்றைச் சொல்லலாம். அறிவுக்கு
ஏற்படும் நோய்கள் செருக்கு, அகந்தை, வெகுளி, எனக்கொள்ளலாம். இப்படி மூன்று வகையாகப்
பகுத்துக் கொண்டு திருக்குறளை நோக்குவோமானால் திருக்குறள் முழுவதுமே மனதிற்கும் அறிவிற்கும்
உடலுக்குமான நோய் நீக்கி என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
இது உடல் சார்ந்த நோய்பற்றிய கூட்டம் என்பதால்
நான் உடல் சார்ந்த மருத்துவம் பற்றித் திருக்குறள் சுட்டுவதைத் தொட்டுக் காட்டுகிறேன்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று!
என்கிறது திருக்குறள். அது என்ன வளிமுதலா மூன்று? வாதம் பித்தம் கபம் என்பனவே
அம்மூன்று. இம்மூன்றில் எது ஒன்று மிகினும் குறையினும் நோய் உறுதி. இம்மூன்றையும் எப்படி
சரிவிகித அளவில் வைத்துக்கொள்வது? அப்படி வைத்துக்கொள்வதற்கு ஏதாவது ஒரு மருந்து இருக்குமல்லவா?
அது நமக்குக் தேவைப்படும் அல்லவா? ஒருவேளை அத்தகைய மருந்து அருமருந்தே ஆனாலும் அதெல்லாம்
தேவையில்லை என்கிறது திருக்குறள். மாற்றாக எளிய வழியொன்றை வகுத்துரைக்கிறது.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்!
இது திருக்குறள் கூறும் எளிய முறை. இவ்விடத்தில் அருந்தியது என்கிற சொல்லை நாம்
உற்று நோக்க வேண்டியுள்ளது. திரவ நிலையில் உள்ளவற்றை உட்கொள்ளும் போது அருந்துதல் என்கிறோம்.
மென்மை படுத்தப்பட்ட உணவை உட்கொள்ளுவதை உண்ணுதல் என்கிறோம். கடின உணவைத் தின்னுதல்
என்கிறோம். அப்படிப் பார்த்தால் உணவை உண்ணுதல் என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு வள்ளுவர்
அருந்துதல் என்கிறார். இது நுட்பமான சொல்லாடல். வாயிலிட்ட உணவை நன்றாக மென்று கூழ்நிலையை
அடைந்தபின்பு அதாவது திரவ நிலையை அடைந்தபின்பு உட்கொள்வதை அருந்துதல் என்றே சொல்ல முடியுமேயன்றி
உண்ணுதல் எனச்சொல்ல முடியாது. ஆக நாம் உணவை நன்றாக மென்று கூழாக்கியபின் அருந்துதல்
என்கிற சொல்லாடலே சரி.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? கையில்லாத ஒருவனை ஓவியப்போட்டியில் கலந்துகொள்ளச்
சொல்வது எப்படி அறிவுநிலை ஆகாதோ! காலில்லாத ஒருவனை ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ளச்
சொல்வது எப்படி அறிவு நிலை ஆகாதோ! அத்தகையதே, பற்கள் நிறைந்த வாயால் உணவை மென்று அருந்தாமல்
பற்களே இல்லாத வயிற்றிற்கு அவ்வேலையை செய்யக் கொடுப்பதும் ஆகும்.
வாதம் பித்தம் கபம் இம்மூன்றையும் சமநிலைப்படுத்த இன்னொரு எளிய முறையையும் நம்
முன்னோர் கடைபிடித்து வந்துள்ளனர். அது வெற்றிலை பாக்குப் போதுவது. பாக்கில் துவர்ப்பு
அதிகம். அது வாதத்தைக் கட்டுப்படுத்த வல்லது. பாக்கை காலை வேளையில் சிறிது கூடுதலாகச்
சேர்த்துக் கொள்ள வேண்டும். பகல் வேளையில் வெப்பம் மிகுதியாக இருக்கும். வெப்பம் பித்தத்தைக்
கூட்டும். சுண்ணாம்பில் சுண்ணாம்புச் சத்து அதிகம். அது பித்தத்தைக் குறைக்கக் கூடியது.
ஆக நன்பகலில் சிறிது கூடுதலாக சுண்ணாம்பைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிலையில்
காரம் அதிகம். அது கபத்தைக் கட்டுப்படுத்தும். ஆக இரவில் வெற்றிலையைக் கொஞ்சம் கூடுதலாகச்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாதம், பித்தம் கபம் இம்மூன்றின் சமநிலையைக் குலைக்கவும் ஓர் எளிவ வழி உள்ளது.
அது பால், தேநீர், குளம்பி குடிப்பது. பால் கபத்தைக் கூட்டும், தேநீர், குளம்பி பித்தத்தைப்
பெருக்கும்.
முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இடம் சார்ந்து, காலம் சார்ந்து
விளைகிற காய்கறிகளை அந்தந்த காலக்கட்டத்தில் உண்டு வந்தாலே போதுமானது. எடுத்துக்காட்டுக்கு
கோடையில் - வெள்ளரிக்காய், கத்தரிக்காய், முருங்கை, மா, பலா போன்றவை அதிகம் விளையும்
கிடைக்கும். அவற்றை நம் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதே சிறப்பு. உடலில் அரிப்புடையவர்கள்
மட்டும் கத்தரிக்காயைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதுபோல பலாச்சுளையைத் தேனில் தொட்டுச்
சாப்பிடுவதே சிறப்பு என்கிறது சித்தமருத்துவம்.
பால், தேநீர், குளம்பி போன்றவை தமிழகம் போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு ஏற்றதா
என்றால் இல்லை. இங்குள்ள நாட்டு மாடுகளுக்கு மடி சிறிதாகவே இருக்கும். குறைந்த அளவு
பாலையே கறக்கும். குளிர் மண்டலங்களில் உள்ள மாடுகளின் மடி பெருதாக இருக்கும். பாலும்
அதிகம் கறக்கும். அங்குப் பாலின் தேவை அதிகம் அதனால் மடி பெரிதான மாடுகளை இயற்கை அங்குத்
தகவமைத்து வைத்திருக்கிறது. இங்குப் பாலின் தேவை குறைவும். மடி சிறிய மாடுகளை இங்குத்
தகவமைத்துக் கொடுத்திருக்கிறது இயற்கை.
தமிழகத்தைப் பொருத்தவரை நாட்டு மாடுகள் மொத்தம் 42 வகைகள் உள்ளன. கீகரை மாடு
மட்டுமே நாட்டு மாட்டு வகைகளிலேயே அதிகம் பால் தரக்கூடிய தமிழ்நாட்டு பசு.
ஆனால் இன்றைய தமிழகத்தின் நிலையென்ன? பாலின் தேவை அதிக அளவில் உள்ளது. காரணம்
கோடையோ குளிரோ எக்காலத்திலும் காலை மாலை மட்டுமன்றி எவ்வேளையிலும் நமக்கு தேநீர் குளம்பி
தேவையாக இருக்கிறது. சரி குடிக்கிறதுதான் குடிக்கிறோம். நம் மண்சார்ந்த மாடுகளின் பாலைக்
குடிக்கிறோமா என்றால் அதுவுமில்லை. இன்று உலகெங்கும் கலப்பின மாடுகளில் பாலே வியாபார
நோக்கில் எங்கும் வியாபித்திருக்கிறது.
இக்கலப்பின மாடுகளின் பால் பற்றி சிந்திக்கத் தகுந்த கருத்தொன்றை உங்களோடு பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன்.
கலப்பின மாட்டுப் பாலில் நோய் மூலக்கூறு உடைய ஏ1 புரதம் இருக்கிறது. நாட்டு
மாட்டுப் பாலிலோ அது இல்லை மாறாக மிகவும் சத்துடைய ஏ2 புரதம் உடையவை நாட்டு மாடுகள்.
கலப்பின மாட்டுப் பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன்- மரபினக் கோளாறு உட்பட பல்வேறு பிரச்சினைகள்
உள்ளன. பால் அதிகமாகக் கறக்கும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு
பெண்மை ஹார்மோன் அதன் மரபனுவிலேயே அதிகமாக உள்ளது. கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல்
செயற்பாடு உடையவை. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குறியது. இவற்றின் காரணமாக ஆண்களுக்கு
மந்தமான பாலியல் ஹார்மோனும் – செயற்பாடும், வீரிய குறையும், பெண்போன்ற செயற்பாடும்
ஏற்படுகின்றன. பெண்களுக்கு சீரான ஹார்மோன் சுரப்பி, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சிப்
பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது.
இதற்கு என்னால் ஓர் எடுத்துக்காட்டைக் கூற முடியும். நாட்டு முட்டை மருத்துவ
குணம் மிக்கது. உடலுக்கும் வலுவூட்டும். கடைகளில் விற்கப்படும் பண்ணை முட்டைகளுக்கு
இத்தகைய குணம் எதுவுமில்லை. அவை உணவுத்தேவைக்காக வணிக நோக்கிற்காக மட்டுமே உற்பத்திச்
செய்யப்படுகின்றன. அதே வேறுபாடுதான் நாட்டு மாட்டுப் பாலுக்கும் வணிக நோக்கில் உற்பத்தி
செய்யப்படும் கலப்பின மாட்டுப் பாலுக்குமான வேறுபாடும்.
நம் தமிழிலக்கியங்களில் கூட நீங்கள் காணலாம். மோரின் சிறப்பைப் பேசும் அளவிற்குப்
பாலின் சிற்றைப் பேசவில்லை. சித்தமருத்துவத்தின் முன்னோடிகளாகிய சித்தர்கள் கூட நாம்
பாலைப் பருக வேண்டும் என்று கூறியதாக ஓரிடத்திலும் குறிப்புகள் இல்லை. ஆக இன்றைக்கு
நாம் பருகும் பால் முழுதும் கலப்பினப் பாலாகவே இருப்பதால் முற்றாகத் தவிர்ப்பதே சாலச்சிறந்தது.
இன்றைக்கு நாம் சமச்சீர் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே சமச்சீர் உணவு பற்றிப் பேசுகிறது திருக்குறள்.
அற்றால் அளவறிந் துண்க அகுதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு!
ஒருவன் தனது உடலுக்கு உழைப்புக்கு இவ்வளவு உணவு போதும் என்கிற அளவறிந்து உண்பானானால்
அவன் பெற்ற அந்த உடம்பானது நீண்ட நெடுங்காலம் இன்ப நலங்களைத் துய்த்தும் உய்தும் வாழலாம்.
அதற்கு அளவறிந்து உண்பதே வழி என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
நாம் அளவாகத்தான் உண்கிறோம் என்பதை எப்படி அறிந்து கொள்வது? உண்டபின் ஏப்பம்
வராமலிருந்தால் அது அளவுணவு உண்டதாகக் கொள்ளலாம். ஏப்பம் ஏன் வருகிறது? உண்ணும் போது
உணவுடம் கலக்கும் காற்றானது உண்டபின் ஏப்பமாக வருகிறது. அறைவயிறு உணவு, கால் வயிறு
நீர், கால் வயிறு காற்று என்கிற விகித்ததைக் கடைப்பிடித்தால் ஏப்பம் வராது. மாறாக கால்
வயிறு காற்று இருக்க வேண்டிய இடத்தில் உணவை நிறப்பிவிட்டால் பின்பு காற்று இருக்க இடமேது?
ஆகவே காற்று ஏப்பமாக வெளிப்படுகிறது.
திருக்குறள் இன்னொன்றும் சொல்கிறது.
மாறுபா டில்லாத உண்டி மறுத்துணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு!
தன் உடலுக்கு ஏற்புடைய, தன் உடல் ஏற்றுக் கொள்கின்ற எளிய, மெல்லிய உணவை அளவில்
மிகாமல் ஒருவன் உண்டு வருவானேல் நோய் அவனை அண்டி ஊறு விளைவிக்காதாம் என்கிறது. மாறுபாடில்லாத
உணவு என்பதால் அதனை அளவுக்கு அதிகமாக உண்டால் என்னாகும்?
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்!
செறித்தபின் உண்பது, மாறுபாடற்ற உணவை உண்பது, நன்கு பசித்தபின் உண்பது, பசியின்
அளவறிந்து உண்பது என்கிற நால்வகை முறையையும் கடைபிடிக்கிற ஒருவனுக்கு நோயைப் பற்றிய
கவலை தேவையில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக