திங்கள், 11 ஆகஸ்ட், 2008

இந்திரன் தோட்டத்து முந்திரியே!

ஒருமுறை கவியரங்கொன்றில் கலந்துகொண்ட போழ்து அக்கவியரங்கிற்குச் சிறப்பு விருந்தினராய் வந்திருந்த எனது நண்பர் உரையாற்றும் போழ்து வைரமுத்துவின் அந்திமழை பொழிகிறது என்ற பாடலைச் சொல்லி அதில் வரும் ஒருவரியான இந்திரன் தோட்டத்து முந்திரியே! என்ற வரிகளைச் சொல்லி இப்பாடல் திரைப்படத்தில் தோன்றிய புதிதில் தமிழ் கூறும் நல்லுலகக் கவிஞர்களும் இலக்கிய ஆர்வளர்களும் முந்திரிக்குச் சற்றே காம உணர்வைத் தூண்டும் குணம் உண்டு என்பது தெரியும். அதென்னையா! இந்திரன் தோட்டத்து முந்திரி? என வினாயெழுப்பி வைரமுத்துவைக் கிழிகிழி எனக் கிழித்தார்கள் என்றும் அவ்வரிக்கு விளக்கம் கூற முற்பட்ட வைரமுத்து இந்திரன் எளிதில் காமவயப் படக்கூடியவன். அவன் தோட்டத்தில் விளையும் முந்திரியும் எளிதில் காமவயப்படுத்தும் குணமிருக்கும் என்பதால் இந்திரனின் தோட்டத்து முந்திரியைக் கதைநாயகிக்கு உவமையாகப் பாடினேன் என்று வைரமுத்து விளக்கியதாகவும் அதற்குத் தமிழ் கூறும் நல்லுலகத்தினர் இந்திரன் உயர்தினை முந்திரி அஃறினை. இந்திரனின் குணம் அவன்தோட்டத்து மரங்களுக்கும் இருக்கும் என்றெண்ணுவது என்னையா மடமை? என்று வைரமுத்துவை எள்ளி நகையாடிவிட்டார்கள் என்றும் கூறி அவரும் எள்ளி நகையாடினார்.

ஒருவாறாகக் கவியரங்கம் முடிந்து வெளியேறி நண்பர்கள் அனைவரும் ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்தோம். அப்பொழுது அந்நண்பர் எங்களையெல்லாம் பார்த்து நன்றாகப் பேசினேனா? என வினவினார்.

அனைவரும் அருமை நன்று என்று ஆர்ப்பரித்தனர். நான் சொன்னேன் தங்கள் உரையைக் குறை சொல்வதற்கில்லை. தாங்களோ முனைவர் பட்டம் பெற்றவர். அவ்வரிகளை உள்ளி மெய்பொருள் காணாது அடுத்தவர்கள் அன்று வைரமுத்துவைச் சாடினார்கள் என்பதற்காக நீங்களும் சேர்ந்துகொண்டு சாடுவதா? ஒரு கவிஞனுக்கு ஏற்படக் கூடாத துன்பமும் அவன் வாழ்நாளில் நடக்கக் கூடாத நிகழ்வும் என்ன தெரியுமா? என்றேன்.

சொல்லுங்கள் என்றார்.

ஒரு கவிஞன் எழுதிய கவிதை வரிகளுக்கு அவனே பொருள் சொல்லி விளக்குவது போல் துன்பம் தருவது வேறொன்றில்லை. அதுவே அவன் வாழ்வில் நிகழக் கூடாததுமாகும் என்றேன்.

மேலும் இந்திரன் தோட்டத்து முந்திரிக்கு நம் புவியில் விளையும் முந்திரியை விட அதிக காமத்தை அளிக்கும் தன்மை உண்டு. ஆக வைரமுத்து கையாண்ட உவமை நயமுடையதே. அதில் குறைகூறுமளவிற்கு ஒன்றுமில்லை என்றேன்.

அப்படியென்றால் முனைவர் பட்டம் பெற்ற என்னையும் என்போன்றே இந்திரன் தோட்டத்து முந்திரியே என்ற வரியைக் குறைகூறிய சான்றோர்களையும் அறிவுக் குறையுடையவர்கள் என்கிறீரா? என்றார்.

நான் அப்படிச் சொல்லவில்லை. அப்பாடல் வரிகளைக் குறைகூற உங்களுக்கு எந்த அளவு உரிமையுள்ளதோ அதே அளவு அவ்வரிகள் சரியானவையே என்று வாதிட எனக்கும் உரிமை உண்டல்லவா?

தேவர்கள் இம் மண்ணுலகிற்கு வந்து பாற்கடலை அசுரர்களின் துணைகொண்டுக் கடைந்த போழ்து உயர்ந்ததான அமுதத்தை தேவர்கள் எடுத்துக்கொண்டு நஞ்சை அசுரர்களுக்குக் கொடுத்துவிட்டதாக வேதகாலத்து ஆரியக்கதைகள் உண்டல்லவா?

அத்தோடு தேவர்களுக்கு வேர்க்காதென்றும் வியர்க்காதென்றும் அவர்களின் தாள்கள் மண்ணில் படாதென்றெல்லாம் கதைகளில் காணுகிறோமல்லவா?

ஆக எப்படிப் பார்த்தாலும் மனிதரினும் உயர்ந்தவர்களாக தேவர்கள் இருத்தல் இயல்புதானே? உயர்ந்தவர்களாகிய தேவர்களுக்கு இறைவன் உயர்தரமிக்க நிலத்தையும் (உலகம்) பிறவற்றையும் வழங்கியிருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா?

மனிதனுக்காகக் கடவுள் வழங்கியுள்ள இந்த பூமியிலும் எத்தனை வேறுபாடுகள்? ஓரிடத்தில் உள்ளதுபோல் தட்பவெட்பம் வேறிடத்தில் இருப்பதில்லை. ஓரிடத்தில் மண்குவிந்து மலையாகிக் கிடக்க மற்றோரிடத்தில் பெருங்குழிவிழுந்துக் கடலாகக் காட்சிதருகிறது. மற்றோரிடம் நீரற்று பாலையாகக் கிடக்கிறது. காஷ்மீரில் விளைகின்ற ஆப்பிளைப்போல் வேறிடத்தில் விளையும் ஆப்பிள் சுவைப்பதில்லை. சேலத்தில் விளையும் மாம்பழம் போல் பிற மாவட்டங்களில் விளையும் மாங்கனிகள் சுவைப்பதில்லை.

இத்தனை வேறுபாடுகளைக் கொண்ட இப்பூமியில் விளையும் முந்திரியைத் தின்றாலே காம உணர்வு தோன்றுமென்றால் மனிதர்களினும் சிறந்த ஒழுக்கமுடைய அமுதத்தை உண்டு வாழ்நாளை நீட்டித்துக்கொள்கிற இமைகள் இமைக்காத உடல் வேர்க்காத இன்பம் துன்பம் எதுவாயினும் கடவுளை நேராய் சென்று பார்த்து வரங்களைப் பெற்று வருகிற தேவர்களுக்காகக் கடவுள் அளித்த நிலம்(பூமி) எத்துணைச் சிறப்பு வாய்ந்ததாயிருக்கும்? அத்துணைச் சிறப்பு வாய்ந்த நிலத்தில் விளையும் முந்திரிக்கு நம் முந்திரியினும் மிகுதியான காமத்தைத் தூண்டும் ஆற்றல் இருக்குமல்லவா?

குறிப்பாக தேவர்களின் தலைவனாகிய இந்திரன் தன்தோட்டத்தில் (நாம் உயர்தர விதைகளை விதைத்துப் பயிர் செய்வதுபோல்) உயர்தர கனிவகைகளைப் பயிரிடுவான்தானே!

நாம் அப்பயிர் வளர்ந்து நமக்கு நன்மை தரவேண்டித் தழைச்சத்து சாம்பல்சத்து அடியுரம் மேலுரம் என்றெல்லாம் பலவாறாய் இட்டு வளர்க்கிறோமல்லவா? அதுபோல் இந்திரன் அவன் செல்வச்செழிப்பிற் கேற்றார்ப் போல் எத்துணை சிறப்பான ஊட்டச்சத்திட்டு அவற்றை வளர்ப்பான்?

உயர்ந்த நிலத்தில் முளைத்து சிறப்பான ஊட்டச்சத்துகளால் செழித்தோங்கிக் கனிதரும் அவ் இந்திரனின் தோட்டத்து முந்திரி மிகுதியான காம உணர்வைத் தூண்டுமா? தூண்டாதா? என்றேன்.

பிறகென்ன? தேநீர் தண்ணென்றாவதற்குள் குடித்துவிட்டு அவரவர் வீடுகளுக்குக் கிளம்பிவிட்டோம்.

அகரம்.அமுதா

5 கருத்துகள்:

Kavinaya சொன்னது…

உண்மைதான். ஒவ்வொரு மண்ணுக்கும் அதற்கென்ற குணம் இருக்கத்தான் இருக்கிறது, மனிதனைப் போலவே. நல்ல அலசல்.

sury siva சொன்னது…

// அவ்வரிகளை உள்ளி மெய்பொருள் காணாது அடுத்தவர்கள் அன்று வைரமுத்துவைச் சாடினார்கள்

என்பதற்காக நீங்களும் சேர்ந்துகொண்டு சாடுவதா? ஒரு கவிஞனுக்கு ஏற்படக் கூடாத துன்பமும் அவன்

வாழ்நாளில் நடக்கக் கூடாத நிகழ்வும் என்ன தெரியுமா?//
//ஒரு கவிஞன் எழுதிய கவிதை வரிகளுக்கு அவனே பொருள் சொல்லி விளக்குவது போல் துன்பம்

தருவது வேறொன்றில்லை//

ஒரு பாடல் எந்த ஒரு சூழ்னிலையில் பாடப்படுகிறது என்பது அதனைப்
பொருள் கூற முனையும்போது கருத்தில் கொள்வது அவசியம் .

எனக்குத் தெரிந்தவரை, சினிமாவுக்காக இயற்றப்படும் பாடல்கள்,
கதை வசன ஆசிரியர்கள், பாடல் இயற்றுபவரிடம், ஒரு பாடல் வரும்
காட்சியை விளக்குகிறார்கள். இசை வல்லுனர் ஒரு மெட்டமைக்கிறார்.
இதற்குட்பட்டு பாடலாசிரியர் பாட்டு எழுதுகிறார். இங்கே கவிஞனின்
சுதந்திரம் ஓரளவுக்குக் கட்டுப்பட்டுப்போவது இயற்கையே.
இதுபோன்ற சூழ்னிலைகளில் இசைக்கும் எதுகை மோனைக்கும்
அதிக கவனம் செலுத்தப்படுவது மட்டுமன்றி, எந்த வார்த்தைகள் பார்ப்போரைக்
கவர்ந்திருக்க வலிமை படைத்தவை என்பதிலும் கவனம் அதிகம் இருக்கும்.
இது ஒரு புறம் இருக்க,
என்னைப் பொருத்த அளவில், சினிமா பாடல்களை, அதுவும் ஒரு பாடலை, அடிக்கோலாகக் கொண்டு
ஒரு கவிஞனை எடை போடுவது அவ்வளவு சரியில்லை என நினைக்கிறேன்.
இலக்கிய நயம் கவிஞனின் பொது கவிதைகளில் காணப்படவேண்டிய ஒன்று.
அவ்வப்போது சினிமாப் பாடல்களிலும் வெளிப்படும். மறுப்பதற்கில்லை.
"என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை " என்ற சொற்தொடரைக்கண்டு வியந்தேன் நான்.
கீட்ஸ், வொர்ட்ஸ்வொர்த் ஆகியவர்களையும் விஞ்சிய ஒரு திறனைக் கண்டேன்.

கவிஞனை அவர்தம் நூல்களில் பாருங்கள். உணருங்கள். அனுபவியுங்கள்.
ஆய்வு செய்யுங்கள்.

ஆகவே உங்கள் நிலை சரியானதே.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

அகரம் அமுதா சொன்னது…

நன்றி கவிநயா!

வணக்கம் அய்யா! தங்களின் கூற்றில் எனக்கு ஐயமற உடன்பாடுண்டு. பொதுவாக நான் திரைப்படப் பாடலாசிரியர்களை அரைகுறைக் கவிஞர்கள் என்ற அளவிலேயே பார்ப்பது உண்டு. ஆயினும் சில நேரங்களில் இலக்கியத்தரத்துடன் பாடல்கள் வெளிவரும் போது அவர்களை மனதாறப் பாராட்டவும்செய்திருக்கிறேன்.

////////கவிஞனை அவர்தம் நூல்களில் பாருங்கள். உணருங்கள். அனுபவியுங்கள்.
ஆய்வு செய்யுங்கள்.//////////

என் கொள்கையும் இதுதான். நண்பர்களுடன் ஏற்பட்ட வாதத்தின் கரணியமாகத்தான் அப்படிப்பேசவேண்டியதாயிற்று. அதையே இங்கும் பதிவுசெய்தேன் அவ்வளவே!

அகரம்.அமுதா

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//ஒரு கவிஞன் எழுதிய கவிதை வரிகளுக்கு அவனே பொருள் சொல்லி விளக்குவது போல் துன்பம் தருவது வேறொன்றில்லை//

ஏன் இப்படி சொல்கிறீர்கள்? பொருள் புரியாதவர்கள் கேட்டு தெரிந்துக் கொள்வதில் என்ன தவறு?

அகரம் அமுதா சொன்னது…

வணக்கம் விக்னேஸ்வரன் அவர்களே! பொருள் புரியாதவர்கள் கேட்டுத்தெரிந்து கொள்வது பற்றித் தவறில்லை. நான் குறிப்பிட்டது கவிஞனைக் குறைகூற வேண்டும் என்பதற்காகவே சிலர் பொருள் தெரியாதது போல் கூறிக்கொண்டு பொருள் உரைக்கக் கூறுவர். அப்படிப்பட்டோருக்கு பொருளுரைப்பதைவிட துன்பம் தரும் வேறொன்றில்லை என்பதே என் கருத்து.