திங்கள், 4 ஆகஸ்ட், 2008

சீரொழுகு சான்றோர் சினம்!

கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே! –விற்பிடித்து
நீர்கிழிய வெய்த வடுபோல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்!

என்கிறார் ஒளவையார். சீர் என்கிற சொல்லுக்கு மட்டும், "பெருமை, தலைமை, இயல்பு, நேர்மை, செம்பொருள், பாட்டு, செய்யுளின் ஓருறுப்பு" என்றெல்லாம் பொருள்படுகிறது.

கல்வியிற் சிறந்தோன் சினம் நெடுநேரம் நீடிக்காது மறைந்துத் தணிந்துவிடும். இத்தோடு நில்லாமல் அம்பைக்கொண்டு நீர் கழித்தபின் நீரானது அம்புகிழித்த கோடுதெரியாமல் சேர்ந்துகொள்வது போல் சான்றோரும் சினம் மறந்து சேர்வர் என்கிறார் ஒளவையார்.

சீர் என்பதற்குப் பாட்டு என்றும் பொருள் படுவதால் சொல்லேருழவருக்கும் இதுபோருந்தும்.

ஆனால் நம் புலவர்கள் இடைக்காலத்தில் (புலமைக்காய்ச்சல் என்பது முற்கால இலக்கியத்தில் இல்லை. அது இடைக்காலத்தையதே என்பதை மனதில் இருத்தவும்.) புலமைச் செறுக்கின் கரணியமாய் ஒற்றுமையின்றி ஒருவர் பாவை ஒருவர் போற்றாது தூற்றவும் செய்வதோடு மட்டுமல்லாது அவரைக் கல்வியாளனாய் புலவனாய் ஏற்காது மறுதலிக்கவும் செய்திருக்கிறார்கள்.

இது சான்றோருக்கு எற்ற செயலா?

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கின்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு!

இறைக்கு-மன்னனுக்கு என்ற சொல்லை நீக்கி சான்றோர்க்கு என்ற சொல்லைப் பொருத்திப்பார்த்தல் சாலும் எனக்கருதுகிறேன்.

பாப்புனையும் பாவலன் தன்னிடம் எத்தனைப் புலமையிருக்கிறது என்பதை ஆராயாது மன்னனும் மக்களும் ஏற்றுப்போற்றுகிறார்கள் என்கிற கரணியத்தால் மற்ற புலவர்களை மதியாதும் ஏற்காதும் மறுதலித்தல் எவ்வகையில் சாலும்.

இன்றுநாம் பாப்பேரரசன் (கவிச்சக்கரவர்த்தி) எனப்போற்றும் கம்பனை அவைப்புலவர் எனும் தினவாலும் புலமைச்செறுக்காலும் ஏற்காது மறுதலித்த பண்பை சான்றோருக்குடைய குணமாகக் கருதமுடியுமா?

கம்பன் இறந்த பிறகுகூட அவன்மீதிருந்த சினம் தணியாது:-

இன்றல்லோ கம்பன் இறந்தநாள் இன்றல்லோ
என்கவிதை ராஜசபைக் கேறும்நாள் -இன்றல்லோ
பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருக்க
நாமடந்தை நூல்வாங்கும் நாள்!

ஒருவன் இறப்பெய்திய பின்னும் அவன்மீதிருக்கும் சினம் தணியாதவன் சான்றோனாயினும் அவனை சான்றோனாக எப்படிக்கருதுவது?

ஓர் பெண்தானே என்று ஏலனமாய் எள்ளி நாலுகாலடி நாலிதழ் பந்தலடி என்று ஒவையை ஒருமையில் அதுவும் அடியே என்று பலகற்றோர் கூடிய அவையில் இழிந்தழைக்கும் கம்பன் சினம் சான்றோருக்குறிய சிறப்பா?

மன்னன் இராணிக் கடுத்தபடியாய் பல்லக்கில் ஏறிச்செல்லும் உரிமையைப் பெற்றிருந்தது புலவர்கள் என்றால் அது மிகையாகா. முதல் இலக்கிய காலம் தொட்டே மன்னனிடம் புலமைத்திறத்தைக் காட்டிப் பரிசில்களோடு பல்லக்கும் பெற்று அதைச்சுமக்கும் ஆட்களையும் பெற்று அதிலேறிப் பயனிப்பது புலவர்களின் வழக்கமாயிருந்தது.

அச்சிறப்புகள் தனக்குச் செய்யப் படவில்லை என்பதற்காய் பல்லக்கில் ஏறிச்சென்ற அதிமதுர கவிராயர்மீது போறாமையுற்று அவரை மக்கள் "கவிராயர் வாழ்க! கவிராயர் வாழ்க!" என வாழ்த்துமுழங்கியதால் மேலும் சினமுற்று தன்வழியில் சென்றுகொண்டிருந்த புலவனைக் காலமேகம்:-

வாலெங்கே? நீண்டெழுந்த வல்லுகிரெங் கே?நாலு
காலெங்கே? உள்குழிந்த கண்ணெங்கே? –சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள்! நீவீர்
கவிராயர் என்றிருந்தக் கால்!

எனச்சொல்லி வம்புக்கிழுப்பதா சான்றோர்க்கழகு?

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளாது இடிந்துரைத்த காலமேகத்தின் மீது சினமுற்று அவனை எமகண்டம் பாடச்சொல்லிச் சரிக்குச் சரியாய் நின்று வம்புக்கிழுப்பது சான்றோருக்குறிய நற்பண்பா?

ஏதுமறியாது எங்கோ வானை நோக்கிக்கொண்டிருந்த புலவன் புகழேந்தியைக் கண்டுகொண்ட சோழன் ஒட்டக்கூத்தனிடம் அதோ உமக்கு நிகரான புலவர் நிற்கிறார் எனச்சொல்ல:-

மான்நிற்குமோ இந்த வாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
கான்நிற்குமோ இவ் எரியும் தணல்முன் கணைகடலின்
மீன்நிற்குமோ இந்த வெங்கண் சுறாமுன் வீசுபனி
தான்நிற்குமோ இக் கதிரவன் தோற்றத்தில் தார்மன்னனே?

என இடிந்துரைப்பதா சீரொழுகும் சான்றோர் பண்பு?

பொருட்பிழையோடும் தளைதட்டுமாறும் அவையின்கண் பாப்பாடினார்கள் என்பதற்காய் வறுமைப்பட்ட எளிய புலவர்களைச் சிறையிலடைக்குமாறு மன்னனை ஏவி அத்தகைய இழிசெயலைச்செய்யச் செய்த ஒட்டக்கூத்தனை எப்படி கல்வியாளன் எனக்கருதுவது?

சிறையில் அடைப்பட்ட புலவர்கள் தங்களுக்குப் பரிசில்கள் கிடைக்கவில்லையாயினும் குழப்பமில்லை. விடுதலையாவது பெறவேண்டுமென்று சிறையிலேயே முறையாய் இலக்கணம் பயின்று மன்னனிடம் முறையாடி இலக்கணம் மீறாது பாப்புனைகிறோம் எம்மை விடுதலைசெய்க என மன்றாடி கேட்டுக்கொண்டதற்கிணங்க அவையின்கண் அழைத்துவரப்பட்ட வறிய புலவர்களைப் பாடச்சொல்லாது:-

மோனை எதுகை மும்மத மும்மொழி
யானை முன்வந் தெதிர்த்தவன் யாரடா? என அடிமைபோல் கருதிப் புலமைத்திறத்தால் அவர்களை அச்சுறுத்தி பின்:-

கூனைக் குடமும் குண்டு சட்டியும்
பானையும் வனை அங்குசப் பயல்நான்? இருபொருளோடு கூடிய வசையை வாங்கிக் கட்டிக்கொள்வதா கல்வியறிவு?

ஒன்றுமட்டும் உறுதியாய் நமக்குப் புலப்படுகிறது. எளியதை வலியது அடித்துவீழ்த்தி வாழ்வது விலங்குகளின் குணம் மட்டுமல்ல. அது மனிதர்களுக்கும் உள்ள அடிப்படைக் குணமாகும்.

எத்துணைக் கற்ற சான்றோனாயினும் தன்புகழையும், தனக்கான இடத்தையும் தக்கவைத்துக்கொள்ள விலங்கினும் கீழான கொடிய செயல்களைச் செய்யத்தயங்குவதில்லை. இக்கீழ்க் குணம் கற்றோர் கல்லார் என்ற பாகுபாடெல்லாது எல்லோர்க்குள்ளும் இருந்துகொண்டு உறுமிக்கொண்டுதானிருக்கிறது.

அகரம்.அமுதா

4 கருத்துகள்:

sury சொன்னது…

//எத்துணைக் கற்ற சான்றோனாயினும் தன்புகழையும், தனக்கான இடத்தையும் தக்கவைத்துக்கொள்ள விலங்கினும் கீழான கொடிய செயல்களைச் செய்யத்தயங்குவதில்லை. இக்கீழ்க் குணம் கற்றோர் கல்லார் என்ற பாகுபாடெல்லாது எல்லோர்க்குள்ளும் இருந்துகொண்டு உறுமிக்கொண்டுதானிருக்கிறது.
//

உண்மையே.

தன்னிடத்து ஒரு கீழான குணம் இருப்பதை உணர இயலாதோர் ஒரு வகை.
அதை உணர்த்தியும் உணராதோர் அடுத்த வகை.

அறிவு நிலை முதிர்வடையும்போது முதல் வகைக்கு மருந்து கிடைக்கிறது.
ஆனால்,
ஆணவத்தின் ஆதிக்கத்திற்குட்பட்ட அறிஞனை சான்றோன் எனச்
சொல்லவும் கூடுமோ ?

இதை ஆங்கிலத்தில் perverted intelligence எனவும்
இன்னொரு பக்கம் intellectual arrogance எனவும்
கூறுவர். தமது ஆணவம் காரணமாக, இவர் சமூகத்தில் ஒரு தீவு போல் இருப்பர்.

இவர் கற்றோர் இல்லை.
கல் ஆர் ? எனின் இவர் தான். கல்லார்.

//இடிந்துரைப்பதா சீரொழுகும் சான்றோர் பண்பு?//

இல்லவே இல்லை.

அடித்துத் துவைத்தும் அழுக்குள்ள துணியும்
இடித்தும் திருந்தா நண்பனும்
கடித்தும் சுவை தரா கனியும்
வடித்தும் தெளியா நீரும்
படித்தும் படியா அறிஞனை ஒக்கும்.

சிறப்பான பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

அகரம்.அமுதா சொன்னது…

உங்களை வாழ்த்த அகவை எனக்குப்போதாது. ஆயினும் வாழ்க அய்யா! நான் வெறும் எடுப்பு மட்டுந்தான். எத்துணை ஆழம்பட்ட பொருட்செறிவோடு விளக்கங்களை வழங்கியுள்ளீர்கள். என் கட்டுரைகளுக்கு அழகிய நிரைவைத் தருவதே தங்களின் பின்னூட்டம் தான். என் கட்டுரை மங்கையென்றால் உங்கள் பின்னூட்டம் பொட்டையும் பூவையும் போன்றது. நன்றி நன்றி நன்றி

கவிநயா சொன்னது…

//என் கட்டுரைகளுக்கு அழகிய நிரைவைத் தருவதே தங்களின் பின்னூட்டம் தான்.//

உண்மைதான்; இருவரும் சேர்ந்து சிந்தையில் நிறுத்த வேண்டிய கருத்துகளை நிறையத் தருகிறீர்கள்; நிறைவாயும். கற்ற பின் தெளியாவிடில் கற்றதனால் பயன் ஏது?

அகரம்.அமுதா சொன்னது…

நன்றி கவிநயா!

நிரை நிறை சிலநேரங்களில் ரற ளல வேறுபாடு விளங்கவில்லை எனக்கு. மன்னிக்கவும். என்னைத் திருத்திக்கொள்கிறேன்.