ஞாயிறு, 9 மார்ச், 2014

படித்தவன் பேசுகிறேன்!



(வெண்பாவூர் செ. சுந்தரம் அவர்கள் எழுதிய வெண்பாவில் என்பா விருந்து என்ற நூலுக்கான விமர்சனம்.)

‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருக்கக் காய்கவர்ந் தற்று!’

என்பார் தெய்வப் புலவர். ஆம். கனியிருக்கக் காய் கவர்வாரும் உண்டா? ஆனால் நம் வெண்பாவூரார் கனியிருக்கக் காய் கவரலாம் என்கிறார். ‘அட! இது என்ன புதுக்கதையாக இருக்கிறது?’ என்று நாம் சற்றே துணுக்குற்று நோக்கினால், அமைதியாக ‘கனியகற்றி வெண்பாவில் காய்கவர்க’ என்கிறார்.

வெண்பாவில் என்பா விருந்தை ஓர் இரவுப் பொழுதில் கட்டிலில் சாய்ந்து படுத்தபடி படித்துக்கொண்டிருந்தேன். சாய்ந்து படுத்தவண்ணம் படித்துக் கொண்டிருந்த என்னை நிமிர்ந்தமரச் செய்த வரியே மேற்குறிப்பிட்டது. வெண்பாவில் இயற்சீரும் வெண்சீரும் பயின்றுவரும் என்பது மரபறிந்த யாரும் அறிந்ததே! கனிச்சீர் கண்டிப்பாகப் பயின்று வரா. அந்த நுட்பத்தை மிக அழகாகவும் நேர்ந்தியாகவும், பழமையான செய்தியைப் புதுமையான சொல்லாடலில், ‘கனியகற்றி வெண்பாவில் காய்கவர்க’ என்ற அவரது திறன் என்னை வெகுவாகக் கவர்கிறது.

தூது இலக்கியம் தமிழில் தனிப்பெரும் இலக்கியமாக உருவெடுக்கும் அளவிற்குப் பற்பல கவிஞர்களால் நிறையவே பாடப்பெற்றுள்ளது. எதையெதைத் தூது விடலாம் என்று ‘இரத்தினச் சுறுக்கம்’ அழகாகச் சுட்டுகிறது.

இயம்புகின்ற காலத் தெகின(ம்)மயில் கிள்ளை
பயன்பெறு மேக(ம்)பூவை பாங்கி –நயந்தகுயில்
பேதைநெஞ்சம் தென்றல் பிரமிரம் ஈரைந்தும்
தூதுரைத்து வாங்கும் தொடை!

‘இரத்தினச் சுறுக்கம்’ சுட்டாத பலவற்றையும் தூதுவிடும் போக்கு அன்றும் இன்றும் போற்றிப் புகழும் வண்ணம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. தூது என்றதும் நம் நினைவிற்கு வருவது தமிழ் விடு தூதே!

இங்கு வெண்பாவூரார் தன்னைக் காதலியாக வரித்துக் கொண்டு காதலனுக்குத் தெளிதமிழைத் தூது விடுகின்றார். வெண்பா எனும் ஒண்பாவின் காதலரான அவரின் வேட்கை, விழைவு அதில் நமக்கு விளங்குகிறது.

வெண்டளைகள் தப்பாமல் வெண்பா எழுதியிங்குக்
கொண்டுவர வேண்டுமென்று கூறிடுக!

– என்ற தன் விழைவை வெளிப்படுத்துகிறார். இற்றை இளையர், புதுக்கவிதை, ஹைக்கூ, நவீனம், பின்நவீனம், சென்றியூ என்று வேற்றிலக்கிய வடிவங்களின் மீது காமுற்றுத் தடம்மாறும் சூழலில் வெண்பாவூராரின் விருப்பம் நம்மை நெகிழ்த்துகிறது.

புதிதாகக் காதல் வயப்படும் எந்த ஒரு பெண்ணும் தன் காதலனிடம், ‘வெண்டளை தப்பாது வெண்பா எழுதிக் கொணர்க’ எனச்சுட்டுவாளேல் வெண்பா தழைக்கும், வெல்தமிழ் நிலைக்கும். ஆம். காதலியர் தம் காதலன்களிடன் ஏதேதோ விருப்பத்தை வெளிப்படுத்தவதைப்போல் இதையும் ஒரு விருப்பமாக வெளிப்படுத்தலாம்.

‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையு மோர்கடுகாம்’

–என்ற பாவேந்தரின் வரிகட்கிணங்க, இதனை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு வெண்பாப் புலிபிடிக்க விழையாரோ நம் காதற் குமரர்?

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்; -தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை!

இது அவ்வை வாக்கு. அவ்வையின் இந்த வாக்கில் மெய்யுண்டெனில் இன்றேன் மழை பொய்த்துப் போனது? நாட்டில் ஒருவர் கூடவா நல்லவர் இல்லை? இந்த நியாயமான கேள்வி,

நல்லார் ஒருவருமா நாட்டிலில்லை? இன்றுமழை
இல்லாமற் போனதுவும் ஏன்?

என்று வெண்பா வரிகளாய் வெடித்துக் கிளம்புகிறது. இன்று மழைவேண்டி, பூசைகள் வேள்விகள் செய்கிறார்கள். இனி மழைவேண்டி வழிபாடுகள் தேவையில்லை. நல்லார் ஒருவர் வேண்டி வழிபடலாம். அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என நம்பலாம்.

நான் ஏன் எழுதுகிறேன்? எனும் வினாவெழுப்பித் தன்னிலை விளக்கமாக பத்திற்கு மேற்பட்ட வெண்பாக்களைத் தருகிறார். அத்தனையும் நல் முத்துக்கள். 12-ம் வெண்பாவில் தான் எழுதுதற்கான காரணத்தைப் பிரகடனப் படுத்துகிறார்.

-எல்லையில்லா
வான்புகழை என்வெண்பா வையமதில் பெற்றிடத்தான்
நானிங் கெழுதுகி றேன்!

ஆம். இவரிடம்தான் எத்தனை தன்னம்பிக்கை. தன்மீதும் தன் எழுத்தின் மீதும் அசைக்க முடியா நம்பிக்கை வைத்திருக்கிறார். அது உண்மையே. இவரது சொற்றிறம் நம்மைச் சொக்க வைக்கிறது. ஆய்ந்தெடுத்த சொற்கள் கூறவரும் கருத்துக்கு அணிசேர்ப்பனவாக உள்ளன. வகையுளிக்கு இடந்தராமல் ஒவ்வொரு சீரையும் தனித்தனிச் சொல்லாக வடித்திருப்பது படிப்போர் காமுறும் வண்ணம் அமைந்துள்ளது.

அதே பகுதியில்,

காரிகையைக் கைவிடுத்(து) அந்தோ! புதுக்கவிதை
பேரிகையைக் கொட்டிப் பிழைப்பதுதான் –சீர்நெறியோ?

-என்று வினவுகிறார். என்னிடம், ‘மரபே மேல், புதுக்கவிதைப் புற்றீசல்’ என்பவர்களிடம் நான் சொல்வதுண்டு. புதுக்கவிதை வாதிகள் மரபுக்கவிஞர்களைப் பார்த்து அஞ்சுவதில்லை. அஃதேபோல் நாமும் அவர்களைப் பார்த்து அஞ்சத் தேவையில்லை. மரபுக்கவிதை திரும்பிப் பார்க்காத, தொட்டுப் பார்க்காத தளங்களையெல்லாம் அவர்கள் பாடுபொருள்களாகக் கொண்டு பாடிப் பரவியிருக்கிறார்கள். இன்றைய கால நிலைக்கேற்ப அரசியல், சமூகம், சாதியம், பெண்ணியம், பொதுவுடைமை, இயற்கை, அறிவியல், விஞ்ஞானம் என எந்தத் தளங்களையும் விட்டு வைக்கவில்லை.

காலச் சூழலுக்கேற்ப மரபுக் கவிதையும் தனக்கான பாடு பொருள்களைப் பல தளங்களுக்கும் விரிவுபடுத்தியாக வேண்டும். புதுக்கவிதையும் ஹைகூவும், நவீனமும் தொடுகின்ற எந்தத் தளத்தையும் மரபுக் கவியாலும் தொட முடியும் என்கிற நம்பிக்கை முதலில் மரபுக் கவிஞர்களுக்கு வேண்டும். அவர்களது எழுத்தாற்றலைக் கொண்டு அதைச் சாதித்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து அறம்பாடுவது, மறம்பாடுவது, காதற் சுவையைக் கண்முன் நிறுத்துவது, பழமை பேசுவது என்றிருந்தால், ‘என்பிலதனை வெயில் காய்தல்’போல காலம் மரபை மாய்த்துவிடும்.

பாம்பு தனது தோலைக் கூட சுமையாக நினைந்து சட்டை உரித்துத் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. அதுபோல மரபும் சூழலுக்கேற்ப தனக்கான பாடுபொருள்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதனைச் செய்வதில் புதுக்கவிதை நாலுகால் பாய்ச்சலிடுகிறது. மரபு ஒற்றைக் கால் பாய்ச்சலைக் கூட ஒழுங்காகச் செய்யவில்லையோ என்கிற ஏக்கம் எனக்குண்டு.

இங்கு நம் பாவலர், ‘பேணி மரபைப் பெருமையுறச் செய்வதற்கே பாடுகிறேன்’ என்கிறார். மரபு எப்பொழுது பெருமையுறும்? தன் மீது புதிய புதிய பாடுபொருள்கள் எனும் ஒளிக்கீற்றுக்கள் பாயும்போதே பெருமையுறும். இவர் இந்நூலில் பாடு பொருள்களாகக் கொண்ட பலவும் பல காலங்களாகப் பலராலும் பாடப் பட்டவையே.

மரபு, போதும் போதும் என்கிற அளவிற்குக் காதலையும், நீதிநெறியையும், பழமையையும், தற்பெருமையையும் பாடிச் சலிப்படைந்து விட்டது. அதன் நாளங்களில் புதிய ரத்தம் பாய்ச்சப் பட வேண்டும். இதனை இவர் கருத்திற் கொள்வாராயின் மரபு பெருமையுறும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

மாற்றுத் திறனாளி கல்வி மேம்பாட்டு மையம் என்கிற தலைப்பிலான வெண்பாக்களில் ஓர் வைர வரி மிளிர்கிறது.

மூலதனம் இல்லையென்று மூலையில்போய் ஏன்முடக்கம்?
மூளை தனமாய் இருந்துன்பால் –வாழவைக்கும்!

என்ற வரிகள் மாற்றுத் திறனாளிகளுக்கானவை மட்டுமல்ல, யாவர்க்குமானதே. உடலால் ஊனப்பட்டவர்கள் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் அல்ல. மனதால் ஊனப்பட்டவர்களும் மாற்றுத் திறனாளிகளே. என்னிடம் என்ன இருக்கிறது? எனச் சோம்பித் திரியும் எவரும் அறிவதில்லை, மூளையே தனமாக இருக்கிறது என்பதனை. அப்படிப் பட்டவர்க்கு இவ்வரிகள் சட்டையடியாகவும், காயம் ஆற்றக் களிம்பு பூசும் மயிலிறகாகவும் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை.

      இவரது ஊழல் குறள்கள் ஒவ்வொன்றும் அரசியலார் அலுவலகங்களில் குறிப்பாக அரசியலாரின் மேசைகளில் அவர்களின் பார்வையிற் படும்வண்ணம் கட்டாயம் எழுதிவைக்க வேண்டும். இன்று எதில்தான் ஊழலில்லை? பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாம் ஊழல் எதிலும் ஊழல். இவற்றைப் பார்க்கும் போது இவரது வரிகளையே இப்படி மாற்றிப் போடலாம் எனத் தோன்றுகிறது,

      ஒன்று படுவோம்நாம் ஊழல் ஒழிப்பதற்(கு)
      இன்றே மறவழியை ஏற்று!

      ஆசிரியர் அவர்கள் தன் ஊரின் பெயருக்கேற்ப இந்நூல் முழுக்க வெண்பாக்களாகப் பாடிப் பரவியிருக்கிறார். வெண்பாவின் மீது அவர்க்கிருக்கும் விழைவு நம்மை வியக்கச் செய்கிறது. பத்தாயிரம் வெண்பாக்கள் பாடுவது இவரது வாழ்நாள் இலக்கு என்றறிகிற போது வியப்பு மேலிடுகிறது. அதனைச் செம்மையுற செய்துமுடிக்கும் திறம் இவர்க்குண்டு என்பதற்கு இந்நூலே அரும்பெரும் சாட்சியாக விளங்குகிறது.

      கனியிருக்கக் காயைக் கவர்ந்தீரே! மெய்யாய்
      நனிசிறந்த வெண்பா நவில; -தனிவிருந்(து)
      உன்விருந்(து) அஃதில் உளம்நிறைந்தேன்; ஐயா!
      என்விருந்தும் கொள்ளேன் இனி!

     

கருத்துகள் இல்லை: