கவிஞன். சிற்பி. முன்னவன் சொல்லைச் செதுக்குபவன். பின்னவன் கல்லைச் செதுக்குபவன். கல்லின் தேவையற்ற பகுதிகளை நீக்கினால் சிற்பம் கிடைக்கும். கவிதையும் அப்படியே. ஒரு லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சி நூறு மில்லியாக்கும் போது அதன் சுவை கூடிவிடுகிறதே அதுபோல. அந்த சூட்சுமம் கைவரப் பெற்றால் போதும். உளறலும் கவிதையாவது உறுதி.
இங்கு சிலம்புச் செல்வி சிந்தனைப் பூக்களைத் தொடுத்திருக்கிறார். நம் சிந்தனையைத் தூண்டும் விதமாக.
அதிலொரு கவிதை
கடவுள் கைதுசெய்யப் படுவாரா?
கோயில் உண்டியலில்
கள்ள நோட்டு
இது ஐக்கு. சொல்லை எப்படிச் செதுக்குவது என்பதற்கு இக்கவிதை
ஓர் எடுத்துக்காட்டு. கவிதையைப் படித்தவுடன் அதன் தொடர்ச்சியாக எண்ண அலைகள் சில கணங்களாவது
ஓயாமல் ஒலிக்க வேண்டும். இக்கவிதை அதைச் செய்கிறது. ஆனால் ஒரு வரையறைக்கு உட்பட்டு.
ஐக்குவிற்கு இப்படிப்பட்ட வரையறைகள் தேவையில்லை.
அப்படி என்ன வரையறைக்கு உட்பட்டு விட்டது இக்கவிதை? கோயில்
உண்டியல் கடவுளுடையது. அதாவது கடவுளின் பர்ஸ் அல்லது பாக்கெட் என்று வைத்துக்கொள்வோம்.
அதில் கள்ள நோட்டு ஒன்றுள்ளது. கள்ள நோட்டு வைத்திருப்பது குற்றம். ஆனால் கடவுள் வைத்திருக்கிறார்.
ஆக அவர் சட்டப்படி கைது செய்யப் படுவாரா? என்கிற ஒரு பக்கத்தையே நமக்குக் காட்டுகிறது.
புகைப்படத்தைப் போல. நாம் விரும்புவது முப்பரிமானத்தையே. நம் சொற்செதுக்கல் விதிப்படி
இக்கவிதையின் முதல் வரி முழுவதையும் நீக்கினோமானால் இக்கவிதை உணர்த்தவரும் கருத்தின்
வாமனத் தோற்றம் விளங்கி விடும்.
உயரத்தில் பறக்கும் பருந்து ஒரு பரந்த பார்வையை எப்படி பூமியின்
மீது செலுத்த முடிகிறதோ அப்படி பின்னிரண்டு வரிகள் நமக்கு பரந்து விரிந்த எண்ண அலைகளை
எழுப்புகின்றன.
பொருள் 1- கோயில் புனிதம். கள்ள நோட்டு அதற்கு மாறானது. நிலவில்
கறைபோல நல்ல நோட்டுக்களின் நடுவில் ஒரு கள்ள நோட்டு. ஒருபிடி கடலையில் ஒரு சொத்தை கடலை
நம் வாயைக் கசக்கச் செய்து விடுவதைப் போல இந்த ஒரு கள்ள நோட்டு படிப்போரின் மனதையும்
கசக்கச் செய்து விடுகிறது.
பொருள் 2- கோயிலுக்குப் போவது எதற்கு? அமைதி வேண்டி. அமைதியைக்
கொடுக்கும் கடவுளின் அமைதியைக் கெடுத்தவன் யாராக இருக்கும்? ஒருவேளை அவன் தன்னால் கடவுளையும்
ஏமாற்ற முடியும் எனச் சவால் விடுகிறானோ? அல்லது தூணிலும் துரும்பிலும் கடவுளைக் கண்ட
எவனோ கள்ள நோட்டிலும் கடவுளைக் கண்டிருப்பானோ?
பொருள் 3- தன் உண்டியலிலேயே கள்ள நோட்டிடும் பக்தனின் செயல்
கண்டும் காணாது இருந்து விடுகின்றாரே கடவுள்! அவன் என் பக்தன் என்னிடம் என்ன சேட்டை
வேண்டுமானாலும் செய்யும் உரிமை அவனுக்குண்டு அவனைக் காத்தருள நானிருக்கிறேன் என்பதுபோல்
அமைதியாக இருக்கிறாரா? அல்லது பின்னாட்களில் தான் செய்யப்போகும் மோசடிகளுக்குப் பயிற்சிக்
களமாக கடவுளையும் உண்டியலையும் பயன்படுத்திக் கொண்டானோ ஒரு பக்தன்?
பொருள் 4-தன் உண்டியலில் கிடப்பது கள்ள நோட்டு எனத் தெரிந்தும்
கடவுள் ஏன் மௌனமாய் இருக்கின்றார்? அவரது மௌனம் கள்ள நோட்டின் மீது அவருக்கிருக்கும்
காதலைக் காட்டுகிறதோ? அல்லது கள்ள நோட்டாக இருந்தால் என்ன? நம்மை ஒருவன் ஏமாற்றியதுபோல
நாமும் ஒருவனை ஏமாற்றி அவன் தலையில் கட்டிவிடலாம் எனக்கருதியிருப்பாரா? சட்டமும் தன்னை
எதுவும் செய்துவிட முடியாது என்ற மமதையா? இந்தக் காவலர்களும் ஏன் இன்னும் அவரைக் கைது
செய்யவில்லை?
இன்னும் பொருள் விரிக்கலாம். இத்துடன் நிறுத்துகிறேன். பனைமரத்தின்
நிழலில் இளைப்பாறுவதற்கில்லை. ஆலின் நிழலில் ஊரே இளைப்பாறலாம். ஆலின் கிளைபோல் விழுதுபோல்
இக்கவிதை எண்ண அதிர்வுகளை விரிவடையச் செய்கிறது. நான் முன்பு சொன்ன சொற்செதுக்கலை நிகழ்த்தினால்
இது நிகழும்.
அம்பு எப்படி இலக்கைத் தவிர வேறெதைப் பற்றியும் அலட்டிக்
கொள்வதில்லையோ அப்படி கவிதை எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தான் உரைக்கப் புகுந்த
கருத்தைச் சுருக்கமாகவும் சுவையாகவும் அதே வேளையில் அழுத்தமாகவும் முன் வைக்க வேண்டும்.
எழுத்தாளன் வள்ளல். அவன் சொற்கோட்டை கட்டுகிறான். கவிஞன்
கருமி. அவனிடம் சொற்கள் நிறைந்து கிடப்பினும் அவற்றையெல்லாம் பயன்படுத்திவிட முடியாது.
பயன் படுத்தவும் கூடாது. சீப் அண்டு பெஸ்ட் என்பார்களே அப்படி குறைந்த எளிய சொற்களைக்
கொண்டு நிறைந்த வளமான கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டும்.
அப்படி ஒரு கவிதை சிலம்புச் செல்வியுடையது. ஞெகிழி பற்றியது.
என்னைத் தயாரித்து
ஏன் சுருக்குகிறீர்
உங்கள் வாழ்வை?
அவ்வளவுதான். இங்கு இலக்கை அடைந்தாகிவிட்டது. நமக்கென்ன ஆயிற்று?
இதன் அதிர்வுகளை எதிர்கொள்ளப் போகிறவன் வாசகன் தானே.
இதுபோதும். ஒரு பானை சோற்றில் ஒன்றிற்கிரண்டாய்ப் பதம் பார்த்தாகி
விட்டது. சில பழங்களை அப்படியே சாப்பிடலாம். சிலவற்றை தோல்நீக்கி, விதைநீக்கிச் சாப்பிட
வேண்டும். அப்படி இவர் கவிதைகளில் நாம் நீக்கியும் சேர்த்தும் ஏற்றுக்கொள்ள வேண்டியவை
நிறைய உள்ளன. நெல்லை அடித்துப் பதர் நீக்கக் காற்றின் திசையில் தூற்றுவர். அக்காற்றின்
வேலையை இந்நூல் நூலாவதற்குமுன் எவரேனும் செய்திருக்கலாம். இன்னும் மெருகேறி இருக்கும்.
இருப்பினும் இது முதன்னூல். கன்னிமுயற்சி என்பதால் ஏற்றுக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக