திங்கள், 5 ஜனவரி, 2009

கல்விக் கடைகள்!

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்க வேண்டிய கல்வியை, இன்று நாம் மூளைக்கு மூளை தெருவிற்குத் தெரு கூறுகட்டி விற்கப்படுவதைப் பார்க்கலாம். கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கும், மனிதகுல உயர்வுக்கும் என்பது போய் இன்று முதலீடு செய்து ஈட்டங்காணும் தொழிலாய் மாறிவிட்டது.

கல்வி நிறுவனங்கள் என்பவை பெருமளவில் பணம்புழங்கும் தொழிற்சந்தைபோல் ஆகிவிட்டன. பதின்ம நிலைப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கவும் "பெரிய" மனிதர்களின் சிபாரிசு (சிபாரிசுக்கு நல்ல தமிழ்ச்சொல் அறிந்தோர் தெரிவிக்கலாம்) தேவைப்படுகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவன்,
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக" -என்றுரைத்தானென்றால் இன்றைய படித்தவர்கள் (கல்விநிறுவன முதலாளிகள் மட்டும்)
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
விற்க அதற்குத் தக!
-என மாற்றிப் பொருள் புரிந்துகொண்டார்களோ என ஐயுற வேண்டியுள்ளது.

ஒரு மனிதனுக்கு முழுமுதல் உரிமையான கல்வியை, "யாவும் பொதுவுடைமை", "எல்லோரும் ஓர்நிறை" என்னும் இக்காலத்திலும் காசுடையாருக்கே கல்வி என்ற நிலையாகுமென்றால் இன்றைய வாழ்க்கை முறையை, அரசியல் அமைப்பை என்னவென்று சொல்வது?

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு!
-எனக்கருதிப் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்கப் போனால்,
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டைப்
பண்ணென்ப விற்றுப் பணம்!
-என்பதே கல்வி நிறுவனங்களின் முழுமுதற் கொள்கையாக இருகிறது.

ஆங்கு புகட்டப் படுகின்ற கல்வியாவது தாய்மொழிவழிக் கல்வியா என்றால் அதுவுமில்லை. வெள்ளையரிடமிருந்து நம்முடைய முந்தைய தலைமுறை விடுதலை பெற்றிருப்பினும் நம் தலைமுறை வெள்ளையனின் மொழிக்கு அடிமையாகி, அப்படி அடிமையாயிருப்பதையே பெருமகிழ்வாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியனும், வள்ளுவனும், கம்பன், அவ்வை போன்ற கல்வியிற் பெரியோரும் ஆங்கிலம் படித்தா இன்றும் வாழும் புகழை எய்தினார்கள்?

நானறிந்த வரை நானிலத்தில் எந்தஓர் இனமும் தாய்மொழிக் கல்வியை மறுத்து வேற்றுமொழிக் கல்வியைக் கற்றதாக, கற்பதாக அறிந்திருக்கவில்லை. இதில் விதிவிலக்கு "தமிழன்", ''தமிழினம்''.

உலக மொழிகளில் மிகக் கடினமான மொழி அதிக எழுத்துக்களைக் கொண்டி மொழி எனப் பேரெடுத்த சீன மொழியைக்(மேன்டரின் -திட்டத்தட்ட ஐயாயிரம் எழுத்துகளுக்கு மேல்) கற்க மறுக்கும் ஒரு சீனனைக்கூட பார்க்க முடியாது.

நானறிந்தவரை, சீனாவிலிருந்து சிங்கை (சிங்கப்பூர்) வந்து பணிபுரியும் 90விழுக்காட்டு சீனர்களுக்கு முழுக்கமுழுக்க ஆங்கிலமே தெரியாது. ஓரிருவருக்குத் தெரிந்திருக்கும் என்றால் அவர்கள் உயர்கல்வி பெற்றவர்களாகவே இருப்பர்.

இன்று நம் தமிழினம் ஓர் தவறான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது. ஆங்கிலம் கற்கவில்லையென்றால் நல்ல பணியிலமர்வது இயலாது எனக் கருதிக் கொண்டிருக்கிறது. அதைவிட மிகக்கொடுமை என்ன வென்றால் தமிழ்வழிக் கல்வி பெற்றால் தெருவில்தான் நிற்கவேண்டிவரும் எனக் கருதிக்கொண்டிருக்கிறது.

இதைவிட பெருங்கொடுமை ஒன்றுண்டு. தமிழ்வழிக் கல்வி வருவாய்க்கு ஏற்பற்ற மொழி என்பதைவிட அறிவுக்கு உகந்த மொழியும் அன்று என்கிற தவறான கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறது.

ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆங்கிலேயனுக்கே தெரிந்த பேருண்மை அம்மொழியைக் கற்கத் துடிக்கும் தமிழனுக்குத் தெரியாமற் போனது வியப்பாயுள்ளது. ஓர் பரத்தை மொழியைப் படிக்க இவன் காட்டும் விருப்பமிகுதியிற் கொஞ்சமும் தமிழ்படிக்கக் காட்டுவதில்லை.

இன்றைக்கு ஆங்கிலத்தை முதற்கல்வியாகக் கொண்டு படித்துப் பட்டம் பெற்ற பன்னாடை ஒவ்வொருவனையும் நான்குவரி பிழைபடாமல் தமிழில் எழுதச்சொன்னால் விழி பிதிங்கிவிடும். தாய்மொழியில் பிழைபடாமல் எழுதப்படிக்கத் தெரியாத எவனையும் சிறந்த கல்வியாளன் எனச்சொல்வதைவிட பேதைமை வேறில்லை.

ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை உள்ளத்தே
அற்றைத் தமிழ்தாயிங் காட்சிபுரி யும்வரை

எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் மண்டியிட்டால்
பெற்றவர்மேல் ஐயம் பிறப்பின்மேல் ஐயமெனச்
சற்றும் தயக்கமின்றிச் சாற்று!
என்றார் பெருஞ்சித்திரனார்.

இன்றுபிறக்கும் பிள்ளைகளை நாம் தமிழ்ப்போலிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். நம் பிறப்பை ஐயுறத்தான் வேண்டியுள்ளது. தன்மொழியைத் தானே அழிக்கத் துடிக்கும் ஓர் இனம் பாரில் உண்டென்றால் அது தமிழினத்தைத் தவிர வேறில்லை.

பேசும் பேச்சிலும் எழுதும் எழுத்திலும் ஆங்கிலமும் வடமொழியும் கொடிகட்டிப் பறக்கிறது. அப்படியிருந்தும் நாணாமல் சொல்லிக் கொள்கிறான் தான் தமிழில் பேசஎழுதச் செய்வதாக. எங்கே போய் முட்டிக் கொள்வது எனத்தெரியவில்லை.

நண்டெனப் பற்றி நயப்பதேன் ஆங்கிலத்தை?
வண்டமிழால் வாராதோ வாழ்வு!
-என வினவினால் கண்டிப்பாகத் தமிழால் வாழ்வு வாராது எனச் சொல்லத்துணியும் தமிழர்கள் மிகுதியாகவே இருக்கச் செய்கிறார்கள்.

ஆரியம் என்னும் பசுத்தோல் போர்த்திய புலியை அடையாளம் காட்டிய திராவிட கழகங்கள் போல, ஆங்கிலம் மற்றும் சமற்கிருதம் என்னும் பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் காட்டவும் அடித்துவிரட்டவும் புதிய வீரியம் மிகுந்த கழகங்கள் தற்பொழுது தேவைப்படுகின்றன.

பார்ப்போம். யாவற்றிற்கும் காலம் தக்கதோர் விடையை அணியமாகவே வைத்துள்ளது.

அகரம்.அமுதா

13 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

எண்ணத்தில்
எடுத்துக்கொள்ளவேண்டியவை
மட்டுமல்ல
மறுப்பதற்கு இயலாத
உண்மைகள்

(சிபாரிசுக்கு நல்ல தமிழ்ச்சொல் அறிந்தோர் தெரிவிக்கலாம்)

recommendation - பரிந்துரை

proposal - கருத்துரு

அகரம் அமுதா சொன்னது…

வருக! வருக! திமிழ்மிளிர் அவர்களே! பின்னூட்டத்தில் தமிழ்ச்சொல் அளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். வாழ்க!

சவுக்கடி சொன்னது…

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடலின் விடுபட்ட மூன்றாம் வரி -

எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும்

-என்பதாகும்.

அகரம் அமுதா சொன்னது…

விடுபட்ட மூன்றாம் வரியைச் சுட்டியமைக்கு மிக்க நன்றிகள்.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

//ஆரியம் என்னும் பசுத்தோல் போர்த்திய புலியை அடையாளம் காட்டிய திராவிட கழகங்கள் போல, ஆங்கிலம் மற்றும் சமற்கிருதம் என்னும் பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் காட்டவும் அடித்துவிரட்டவும் புதிய வீரியம் மிகுந்த கழகங்கள் தற்பொழுது தேவைப்படுகின்றன.//

முற்றிலும் உண்மை.

அன்னியர் தமிழுக்குச் செய்யும் கேடு எள்முனை அளவுதான். ஆனால், தமிழனே தமிழுக்குச் செய்யும் கேடுகள் பரங்கி அளவினது என்று பாவாணர் சொன்ன சொல் எவ்வளவு உண்மை.

பல நூற்றாண்டுகள் அன்னியர் ஆட்சிக்கு ஆட்பட்டு அடிமைப்பட்ட தமிழினம் எழுவதற்கான தருணங்கள் கனிந்துகொண்டிருக்கின்றன.

தமிழுக்கு எழுச்சிக் காலம் மீண்டும் வரும் என்று நம்புவோமாக!

அகரம் அமுதா சொன்னது…

நன்றிகள் அய்யா! அந்த எதிர்பார்ப்போடுதான் நான் இணையத்தில் எழுதப்போந்தேன்.

அகரம் அமுதா சொன்னது…

கண்டிப்பாக வர முயல்கின்றேன் அய்யா!

தேவன் மாயம் சொன்னது…

ஆரியம் என்னும் பசுத்தோல் போர்த்திய புலியை அடையாளம் காட்டிய திராவிட கழகங்கள் போல, ஆங்கிலம் மற்றும் சமற்கிருதம் என்னும் பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் காட்டவும் அடித்துவிரட்டவும் புதிய வீரியம் மிகுந்த கழகங்கள் தற்பொழுது தேவைப்படுகின்றன///

அருமையான கட்டுரை நண்பரே!!

அகரம் அமுதா சொன்னது…

மிக்க நன்றிகள் தேவன் அவர்களே!

அகரம் அமுதா சொன்னது…

மிக்க நன்றிகள் தேவன் அவர்களே!

கபீரன்பன் சொன்னது…

நல்ல கட்டுரை. முன்பு நான் எழுதிய ஒரு கட்டுரையையும் நினைவூட்டியது.

// ஆங்கிலம் மற்றும் சமற்கிருதம் என்னும் பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் காட்டவும் அடித்துவிரட்டவும் புதிய வீரியம் மிகுந்த கழகங்கள் தற்பொழுது தேவைப்படுகின்றன. //

உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகள் சற்று அழுத்தமாகவே-வெறுப்பு என்னும் எல்லையை தொடுவதாக வந்துள்ளன.

ஒன்றை வெறுப்பதால் இன்னொன்றை வாழ வைக்க முடியாது. இன்றும் தமிழ்நாட்டை விட பிற நாடுகளில் இருப்பவர்கள் தமிழை நன்கு பராமரித்து போற்றி வருகிறார்கள். நீங்கள் சுட்டிக்காட்டியது போல் இங்குள்ளவர்களுக்கு எல்லாமே வியாபார கண்ணோட்டம் தான்.

என்னுடைய முள்ளை முள்ளால் எடு என்கிற கட்டுரையை படித்தால் நான் சொல்ல விழைவது புரியும்.

அகரம் அமுதா சொன்னது…

கண்டிப்பாகப் படித்துவிட்டுக் கருத்துரைக்கிறேன் நண்பரே! நன்றிகள்

Visu Pakkam சொன்னது…

அன்புள்ள அகரம் அமுதா அவர்களே:

1. Recommendation என்ற சொல்லுக்கு “அடுத்துரை” “அடுத்துரைத்தல்” எனக்கொள்ளலாமா?
2. தமிழின் தற்காலத்திய தாழ் நிலை பற்றிய தங்கள் ஆதங்கம் விளங்கினாலும் ஒரு சிறிய கருத்து வேறுபாடு: பெரும்பாலும் தென்னிந்தியாவிலேயே (கேரள மாநிலம் நீங்கலாக) இந்த ஆங்கில மோகம் தலை விரித்தாடிக்கொண்டுதான் இருக்கிறது. நான் 30 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசிக்கும் தமிழன் என்ற முறையில் கன்னடியரின் ஆங்கில மோகம் தமிழனின் ஆங்கில மோகத்திற்கு எவ்விதத்திலும் குறைந்தது இல்லை என்பதை நேரிடையாகக் கண்டுள்ளேன். இது இந்திய மக்களுக்கே உரித்தான தாழ்வு மனப்பான்மை, அடிமை உணர்வு போலும்.
3. தமிழ் மொழி அடியோடு சிதைந்து போகாமல் இருக்க உங்கள் போன்றோரின் ஆர்வமும் முயற்சியும்தான் காரணம். தொடரட்டும் உங்கள் பணி.
அன்புடன்
கே.வி