திங்கள், 29 டிசம்பர், 2008

புகை!

புதுமைகள் பலநிறைந்த இன்றைய நானிலத்தில், ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைப் பெருமையெனக் கருதிப் புண்பட்ட மனதைப் புகைவிட்டு ஆற்றிக் கொண்டிருகிறார்கள். இன்றையநாளில் புகைக்கும் பழக்கம் சிறியோர், பெரியோர் என்றன்றி எல்லாரிடத்தும் பரவலாகக் காணமுடிகிறது. பத்தகவை நிறையாத பொடியனும் வட்டவட்டமாகப் புகைவிடப் பழகிவைத்திருக்கிறான்.

பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பதின்ம அகவையினர் புகைப்பதென்றால் மறைந்தொளிந்து கொண்டு குடிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் (என் அண்ணனும் அப்படியே). புகைப்போரும் வெகுசிலரே. ஆனால் இன்றைய திரைப்படங்களின் தாக்கத்தால் (குறிப்பாகப் பரட்டைத்தலை நடிகர்) நிறைய இளையர்கள் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

புகைப்பதற்கு ஆண்பெண், பெரியோர், சிறியோர் என்ற வேறுபாடற்று இன்று யாவரும் ஊதும் ஒப்பற்ற பொருளாகத் திகழ்கிறது வெண்சுருட்டு. பெரியோர், சிறியோர் என்ற வேறுபாடற்றதுபோல் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடும் கிடையாது. “பொருளுடையார்க்கு இவ்வுலகம், அருளுடையார்க்கு அவ்வுலகம்” என்பதைப்போல ஏழைக்குப் பீடி, பணம்படைத்தோர்க்கு வெண்சுருட்டு அவ்வளவே.

முதலில் இப்பழக்கம் இளையர்களிடையே “ஸ்டைல்-பாவனை” என்கிற அளவிலேயே தொடங்குகிறது. போகப்போக அப்பழக்கத்திற்கு அவர்களையும் அறியாது அடிமையாகி விடுகின்றனர்.

புதுமைஎன எண்ணிப் புகைப்பார்பிந் நாளில்
அடிமையென ஆவார் அதற்கு!

இப்பழக்கமுடைய பலரிடத்தும் இப்பழக்கத்தை ஏன் தொடர்கிறீர்கள்? என வினவினால், "சும்மா விளையாட்டிற்குத் தொடங்கினேன். பின்பு அதுவே பழகிவிட்டது. விடமுடியவில்லை" என்பர். சிலருக்கு, காலை எழுந்தவுடன் இதைப்பிடித்தால்தான் காலைக்கடன் வரும். இல்லை என்றால் அன்று முழுவதும் மலச்சிக்கல்தான். சிலருக்கோ புகைப்பிடித்தால்தான் சிறப்பாகச் சிந்திக்கமுடிவதாக நினைப்பு. அப்படிப்பார்த்தால் நாட்டில் கோடி அப்துல் கலாம்கள் தோன்றியிருக்க வேண்டும்.

வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை
நம்புகையில் வீழும் நலம்!


புகைப்பதால் உண்டாகும் நோய்கள் பற்றிய போதிய அறிவிருந்தும் அதனை விரும்பிப் பற்றுவது என்பது மனிதனின் பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடாகும். இயற்கையின் படைப்பில் மனித உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒப்பற்றவை. அவற்றைப் பேணுவதை விடுத்து எவ்வழியில் சீரழிக்க ஒண்ணுமோ அவ்வழியிலெல்லாம் முயல்கிறான் மனிதன்.

வாய் என்பது நகைப்பதற்கும், சுவைப்பதற்கும், உரைப்பதற்கும் என்பதை மறந்து புகைத்தவன்னம் உள்ளான். பலருக்கோ வாயானது ஆலையின் புகைக்கூண்டைப் போன்று எந்நேரமும் புகைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இவர்களிடம் புகைவண்டி தோற்றுவிடும்.

என்னைக் கேட்டால்
நகைக்கிடங் கான நறுவாய் நகைபோய்ப்
புகைக்கிடங் காதல் புதிர்!-
எனச்சொல்வேன்.

புகைப்பது இழுக்குள் ஒன்று என்பதையும் அறியாது அதனை பெருமதிப்பாகக் கருதிப் பின்பற்றி வருகிறான். புகைப்பதைத் தடைசெய்ய வேண்டிய அரசும் அத்தொழிலை முடக்கவோ, கட்டுப்படுத்தவோ நெஞ்சுரமற்று நிற்கிறது.

நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காணல்
தகையில்லை; வேண்டும் தடை!

கள்ளைப் பொருத்தவரைக் குடிப்பவனையும் அவன் குடித்தனத்தையும் மட்டுமே பாதிக்கும். ஆனால் புகை குடிப்பவனையும் அவனைச் சுற்றி இருக்கும் அனைவரையும் வறுத்தி அழிக்கிறது. காற்றை மாசுபடுத்துகிறது. அக்காற்றை உண்ணும் யாவரையும் நோயின் பிடியுள் ஆழ்த்துகிறது.

காற்றிற்கும் மாசாகும்; கைப்பிடித்தார் வாழ்வடைக்கும்
கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்!

"கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் சாவு" என்பதுபோல புகையை ஏற்ற துணையெனக் கொண்டவனுக்கு அப்புகையே ஓர்நாள் கூற்றாக மாறி அழிகிறது. வெண்சுருட்டு நிறுவனங்கள் தங்கள் சிந்தையெல்லாம் ஒன்றுதிரட்டி எத்தனை வண்ணங்களில் எத்தனை வகைகளில் வெண்சுருள் தயாரிக்க முடியுமோ அத்தனை வகைகளிலும் முயன்றுவருகிறது. மனிதனுக்குப் புகையிலையால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க, பஞ்சுவைத்த வெண்சுருள்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுத்திகழ்கின்றன. நஞ்சினைப் பஞ்சினால் வடிகட்டினால் நஞ்சு அமிழ்தாகி விடுமோ?

பஞ்சுண் டெனினும் பரிந்து புகைக்குங்கால்
நஞ்சுண்டு; சாவாய் நலிந்து!



ஓர் செயலைச் செய்வதற்கு முன்பே அச்செயல் தீமை விளைவிக்கும் எனத்தெரிந்தும் அச்செயலைச் செய்து, துன்புறும் அறிவிலிகளாய் மாந்தர் இருத்தலால், உரைப்பதால் உணர்வதைவிட துய்ப்பதால் உணர்வதே சரியான பாடமாக இருக்கமுடியும்.

புகைப்பான் இடன்நாடிப் பூம்பழுதைக் காட்டி
நகைப்பான் எமனும் நயந்து!
–எனத்தெரிந்தும் புகைப்போருக்கு நமனின் வருகையே நல்லதோர் பாடமாக விளங்கமுடியும்.

அகரம்.அமுதா

11 கருத்துகள்:

sury siva சொன்னது…

புகை பகை எனத்தெரிந்தும் பல்
வகையாய் புகைபிடிக்கும் மாந்தரைக் கண்டு
நகைப்பது நாமா அவர்தம் விதியா ?

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

புகையதைப் பற்றி வகையதாய் ஆய்ந்து
தொகையாய்த் தந்தீர் நன்று!

அகரம் அமுதா சொன்னது…

நன்றி நன்றி நன்றி திரு சுப. நற்குணன் அய்யா மற்றும் சுப்பு ரத்தினம் அய்யா அவர்களுக்கு.

Iyappan Krishnan சொன்னது…

***
ஜொலிக்கும் நெருப்பிருக்கும் ஓர்திசையில் வாயால்
விளிக்கையிலே நெஞ்சம் மயங்கும் - பளிச்செனும்
வெண்மையாய் காணும் குழலதால் வாழ்வும்
துன்ப மயமாகும் பார்

(sari panninathukku nanRi :D )
***

அகரம் அமுதா சொன்னது…

வருக வருக என வரவேற்கிறேன் ஜீவ்ஸ் அவர்களே! வெண்பா வடித்துக் கலக்கிவிட்டீர்கள். வாழ்த்துகள்

அகரம் அமுதா சொன்னது…

வாங்க திமிழ் மிளிர் அவர்களே! தங்களைப் பற்றி அறிய முடியவில்லையே. தங்களைப்பற்றி அறியத்தாருங்களேன்.

இப்னு ஹம்துன் சொன்னது…

சிந்திக்கப் புகைப்பாரும் சிந்தித்தால் புகைப்பாரா? என்று முன்னர் எழுதிய ஒரு கவிதையில் கேட்டிருந்தேன்.

இப்பதிவு அதை நினைவூட்டியது.

ஆறாம் விரலென ஆகியே வெண்சுருட்டு
தீராப் பழக்கம் தொடர்ந்திடுமே - நாறிடும்
வாயால்; நலியும் உடலால்; காசத்தின்
நோயாளி போலாக்கும் நோக்கு!

அகரம் அமுதா சொன்னது…

வணக்கம் ராஜ லட்சுமி அவர்களே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். மீண்டும் வருக உறுதுணை தருக!

அகரம் அமுதா சொன்னது…

புகைபற்றி வெண்பாவில் அழகிய கவிதை புனைந்தளித்தீர் வாழ்த்துகள் இப்னு அவர்களே

உமா சொன்னது…

நோயாகும் நெஞ்சில் புகைநமக்கென் றேயொரு
தாயாகச் சொன்னாய் தடுத்து.


நன்று.

அகரம் அமுதா சொன்னது…

/////நோயாகும் நெஞ்சில் புகைநமக்கென் றேயொரு
தாயாகச் சொன்னாய் தடுத்து.////


நோயாகும் நெஞ்சுள் நுழைபுகையென் றேயன்றோ
தாயாகிச் சொன்னேன் தவித்து!