வெள்ளி, 5 டிசம்பர், 2008

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!

தீவிர வாதிகள் இந்தியத் தாயின் இதயப் பகுதியுள் ஊடுருவி தன்வலி காட்டி இந்தியர் யாவரையும் திகைப்புக் குள்ளாக்கிய பிறகே கண்ணோட்டம் இல்லாத காங்கிரசு கண்விழித்துக் கொண்டுள்ளது.

மக்களாலும், எதிர்க்கழகத்தாராலும், 'உளவுப்படையும், உள்துறை அமைச்சும் சரிவரச் செயல்படவில்லை எனக் குற்றம்சாற்றப் பட்டும் மெத்தனமாய் இருந்த அரசு விழிகெட்ட பின்பு வைகறை வணக்கம் புரியத்தொடங்கியுள்ளது.

அண்டை நாடுகளோடு நண்பு பாராட்டத்தான் வேண்டும். அதற்காய் வெளுத்ததெல்லாம் பால் எனக்கருதி அவரை உளவுகொள்ளாமல் இருப்பதென்பது வேந்தர் தொழிலுக்கு ஏற்புடையதன்றே.

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்
-என்கிறார் எம் பொய்யாமொழிப் புலவர்.
ஆயின் நம் நாட்டிலோ ஒற்றுத்துறை வெறும் வெற்றுத்துறை என்ற அளவிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒற்றறிதல் என்பதே ஒப்புக்கு என்றானபின் ஒற்றீந்த செய்தியை வேறோர் ஒற்றைக் கொண்டு மெய்காண்பதென்பதும் ஆமோ?

எல்லை தாண்டிய அச்சுறுத்தலைப் பாகிசுதான் தீவிரவாதம் என்னும் முகமூடியை அணிந்துகொண்டு ஆற்றிவருவதை ஐம்பதாண்டுகால வரலாற்றில் அகிலமறிந்த உண்மை. இம்முறையும் பாகிசுதான் அதைத்தான் அரங்கேற்றியுள்ளது.

நேற்று இன்று என்றல்லாது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்திய நாட்டிற்குள் குண்டுகள் வெடிப்பதும் தீவிரவாதிகளின் துமுக்கிகளுக்கு மக்கள் இரையாவதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மக்களால் ஓர்அரசு அமைக்கப்படுவது என்பது முதலில் அமைதியான சூழலை ஏற்பத்துதற்கும் உயிர்ப்பயம் இன்றி வாழவகை செய்வதற்குமே. இரண்டாம் கட்டமாகவே நாட்டின் வளர்ச்சிநலன்கள்.

இன்றைய இந்திய அரசு வளந்துவரும் பொருளியல் மீது செலுத்துங் கருத்தை சற்றேனும் நாட்டின் காவல்மீது காட்டாதது நகைப்புக்குறியதே.

எல்லை தாண்டிய தீவிரவாதம் என்பது நிலப்போக்குவரத்தின் வழியாக மட்டுமே அரங்கேறுவதன்று. அதை கடல்வழியாகவும் வான்;வழியாகவும் அரங்கேற்றலாம் எனச் சாதித்துக் காட்டியிருக்கின்றது தீவிரவாதம் என்னும் பொர்வையில் பாகிசுதான் அரசு.

தேன்கூட்டில் கைவைத்தால் என்னவாகும் எனத்தெரிந்திருந்தும் பாகிசுதான் தீவிரவாத இயக்கங்கள் இத்துணிவுமிகு செயலைச் செய்துமுடித்திருக்கிறது என்றால் அவற்றின் பின்புலன்களை பின்ஊக்கிகளை நாம் ஆய்தறிய வேண்டும்.

மெலியார் வலிய விரவலரை அஞ்சார்
வலியார் தமைத்தான் மருவில் -பலிஏல்
கடவுள் அவிர்சடைமேல் கட்செவிஅஞ் சாதே
படர்சிறைஅப் புள்ளரசைப் பார்த்து!


(பருந்தின் பார்வை பட்டாலே அச்சத்தில் சாக்காடெய்தும் கட்செவியானது ஈசனின் கழுத்தில் மாலையாக் கிடக்குங்கால் புள்ளரசின் நலங்கேட்டு நகைக்கும். அதுபோல ஆற்றலிற் சிறியோன் தன்னைவிட ஆற்றலிற் பண்மடங்கு மேலோனை எப்பொழுது எதிர்ப்பானென்றால் அவ்வாற்றல்வல்லானுக்கு நேரான ஆற்றல் வல்லானைத் துணையாக் கொண்டுள்ள போது.)

ஆயிரம் ஈராயிரம் உறுப்பினரைக் கொண்ட சிற்றியக்கங்கள் நேர்வழி நடவும் துணிவற்ற கீழ்மைக் குழுக்கள் ஓர் நாட்டின் பேரரசை அணுவாற்றல் கண்ட வல்லரசை வம்பிற்கழைக்குமென்றால் அவ்வியக்கங்களை இயக்கும் பேராற்றல்கள் எவை என்பதை உன்னித்தெளிய வேண்டும்.

சோற்றிலே கல்கிடந்தால் சுவைக்குமோ உண்டி? நெல்லின்
நாற்றிலே புல்வளர்ந்தால் நன்மையோ? பெருகியோடும்
ஊற்றிலே நஞ்சிருந்தால் உண்ணுதற்காமோ? நம்மில்
கூற்றெனக் கலந்துபட்ட கொடியரைக் களையவேண்டும்.


அதே வேளையில் உள்நாட்டின் சில புல்லறிவாளர்களின் துணைகொண்டே இவ்வன்செயல்கள் அரங்கேறியிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. அவர்கள் யாவர் என்பதை நம் உள்துறை விழியில் விளக்குநெய் ஊற்றிக்கொண்டு கண்டறிந்து துடைத்தொழிக்க வேண்டும். எரியைப் பிடிக்கினாலொழிய கொதியங்காதென்பதை அரசுணர வேண்டும்.

பாகிசுதானைப் பொருத்தவரை எண்ணித்துணிந்திருக்கிறார்கள். இந்திய அரசு எவ்வகை நடவடிக்கையில் இறங்கினும் கவலையோ பயமோ கொள்ளப் போவதில்லை. பாகிசுதான் மற்றும் அவர்களால் வளர்க்கப்படும் தீவிரவாத இயக்கங்களைப் பொருத்தவரை கானமுயல் தைத்த அம்பினும் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது என்னும் கொள்கையுடையவர்கள்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான்வலியும் துணைவலியும் தேர்ந்துகொண்டு இத்துணை வன்செயல்களுக்கும் முழுமுதற் கரணியமாய்த் திகழும் பாகிசுதான் அரசுக்குப் பாடம்புகட்ட இதுவே தக்க வேளை என்பதை உற்றுணவேண்டும். ஓடுமீன் ஓட வாடியிருந்த கொக்கு உருமீனைக் கண்டவுடன் கொத்துவதைப் போல இதுநாள்வரை அரங்கேறிய வன்செயல்களுக்கும் சேர்த்து இவ்வேளையை நன்குப் பயன்படுத்திப் படைத்தீர்வே உற்றதீர்வென்பதைப் பகுத்துணரவேண்டும்.

பகையென்னும் பண்பில் அதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றற்று!


பகையென்று சொல்லப்படுகின்ற பண்பற்ற தீமையை ஒருவன் நகைத்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகக் கூட கருதக்கூடாது என்பதனை பாகிசுதானுக்குத் தெ ள்ளத்தெளிவாக உணர்த்துவதொன்றே இந்திய நாட்டுள் தீவிரவாத தீஞ்செயல்கள் முற்றழிய உற்ற முடிபாக இருக்கமுடியும்.

அகரம்.அமுதா

4 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சிறப்பான கட்டுரை ஐயா...

ஒரு சமுதாய பிரச்சனையை இலக்கிய ரசனையோடு சமர்ப்பித்துள்ளீர்கள்... ஆயுதத்திற்கு ஆயுதமே பதில் சொல்லும் நோக்கில் போவோமானால் அது மென்மேலும் பிரச்சனையை வளர்த்துவிடும் இல்லையா?

அது போக ஒரு தனிபட்ட நாட்டின் ஏழ்மையை பணக்கார நாடுகள் பணத்தின் வழி தூண்டுதல் செய்தும் இவ்வாறு பகைமையை வளர்க்கலாம் இல்லையா?

அகரம் அமுதா சொன்னது…

////ஆயுதத்திற்கு ஆயுதமே பதில் சொல்லும் நோக்கில் போவோமானால் அது மென்மேலும் பிரச்சனையை வளர்த்துவிடும் இல்லையா? ////


முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதுதானே பழமொழி!? இங்கு (சிங்கையில்) கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்தினாலே மரணதண்டனை ஒன்றுதான் தீர்ப்பு. மரணதண்டனைக்குப் பயந்து கொண்டே இங்கு இதுபோன்ற தவறுகளை யாரும் புரிய முன்வருவதில்லை. அதுபோல் இந்தியாவில் தீவிர வாதிஎன அறத்துறையால் முடிவுசெய்யப்பட்டால் மறுமொழியின்றித் தூக்கிலிடுவதே பின்வருவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். வன்முறையை வன்முறை கொண்டு அடக்குவது தகாதென்பது தனிமனிதனுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அரசு என்று வருகிறபோது இவ் அறம் நேர்மை என்பதெல்லாம் பொருந்தாது.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்! என்கிறார் வள்ளுவர்.

நாட்டின் நலன் கருதிக் கொடியவர்களைக் கொலைசெய்வதன் மூலம் தண்டித்தல் என்பது பயிர்களுக்கிடையில் தோன்றி முகம் காட்டும் புற்களைக் களைதலொக்கும்.


பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

நல்லாரது தொடர்பைக் கைவிடுதல் பலருடன் பகைகொள்வதைவிடப் பத்துமடங்கு தீமையுடைத் தென்பதைப் பாகிசுதானுக்கு உணர்த்தல் வேண்டும்.

வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்!

தீவிர வாதத்தின் தாக்குதலுக்கு அஞ்சி உலகநாடுகள் பலவும் கடுமையான சட்டங்களும் நடவடிக்கைகளும் எடுத்துவரும் வேளையில் இந்தியா மெத்தனப் பொக்கைக் கடைபிடிப்பதாலேயே எரிமுன்னர் வைத்த வைக்கோல் போரே போல் எம்மக்கள் மாண்டுமடிகிறார்கள்.

////அது போக ஒரு தனிபட்ட நாட்டின் ஏழ்மையை பணக்கார நாடுகள் பணத்தின் வழி தூண்டுதல் செய்தும் இவ்வாறு பகைமையை வளர்க்கலாம் இல்லையா?////

ஆம் வாய்ப்பிருக்கிறது. மறுப்பதற்கில்லை. அரசு என்று வருகிறபோழ்து அவ்வரசைக் கவிழ்க்க அல்லது சீர்குலைக்க பலவாரான சூழ்ச்சிகளும் அரங்கேறத்தான் சேய்யும். சூழ்ச்சிகளின்றி அரசில்லை. அதைத்தான் வடமொழியில் ராச தந்திரம் என்கிறார்கள்.

எது எப்படியோ

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்!

போர்வருமுன் தனக்கும் தன் நாட்டிற்கும் காப்பாக அரண் செய்து கொள்ளாத அரசு போர்வந்தக்கால் அஞ்சிக் கெடும். இங்கு போர் எனக்குறிப்பிட்டது ஓர் நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையில் தோன்றுவதை மட்டும் குறிப்பிடுவதன்று. தீவிர வாதிகளால் புனிதப் போர் எனும் பெயரில் நடாத்தப்படும் முதுகெலும்பில்லாச் செயலையும் குறிப்பதாகும்.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

நீண்ட காலத்திற்குப் பின்னர் மீண்டும் தங்கள் கைவண்ணத்தில் இலக்கியம் பருகியதில் பெரும் இன்பம்!

நிகழ்கால நடப்பை இலக்கிய நயத்தோடு தங்களுக்கே உரிய பாணியில் மிக அருமையாக வழங்கியுள்ளீர்கள்.

எந்த ஒரு போராகட்டும்.. போராட்டமாகட்டும்.. தீவிரவாதமாகட்டும்.. அததற்கு ஒரு நியாயவாதத்தைக் கற்பித்துக்கொள்கின்றனர்.

இதனால், எது போராட்டம்; எது தீவிரவாதம் என்று கண்டுபிடிப்பதற்குள் நமது ஆயுளே முடிந்துவிடும் போலிருக்கிறது.

//கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்! //

வள்ளுவர் வாய்மொழி இன்றைக்கும் பொய்யாமொழியாக நிலைபெற்று நிற்கிறது.

இனி, தொடர்ந்து இலக்கிய இன்பம் பரிமாறப்படும் தானே..!

அகரம் அமுதா சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அய்யா! என்னால் முடிந்தவரைத் தொடர்ந்து இலக்கிய இன்பம் தரமுயல்கிறேன். அது இன்பமா துன்பமா என்பதைத் தங்களைப் போன்றவர்கள் தான் சொல்லவேண்டும்.