புதன், 2 ஜூலை, 2008

பேச்சுக்கலை!

பொதுவாக உயிர்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். ஒன்று உயர்திணை மற்றொன்று அஃறிணை.

உயர்திணை அஃறிணை என்ற இரு பகுதியின் பாகுபாடு யாது? வாய்திறந்து பேசுகிற உயிர்கள் உயர்திணை. வாய் பேச இயலாதவை அஃறிணை.
வாய் திறந்து பேசுகிற ஆற்றலை மனிதன் பெற்றதால்தான் அவன் உயர்திணை.

மனிதனை உயர்திணையாக்கிய இப்பேச்சை (சொல்லை) நாம் எப்படிப் பயன் படுத்துகிறோம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பேசுவதெல்லாம் பேச்சல்ல. அது ஓர்கலை. சொல்லைப் பொதுவாக நாம் செல்வம் போல்தான் பார்க்கிறோம். ஆகையால்தான் சொல்வல்லாரைச் சொல்லின் செல்வர் என்கிறோம்.

சொல்லுக்குள்ள ஆற்றல் வில்லுக்கும் கிடையாது. ஆகையால் தான் வள்ளுவர்:-

“வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை”- என்கிறார்.

காற்றினும் கடிய வேகமுடையது சொல். ஆகையால்தான் கம்பர்:- “சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்” என்கிறார்.

மணிக்கணக்காய்ப் பெசிக்கொண்டிருப்பது பேச்சல்ல. ஆகையால்தான் நன்னூலார் “சுருங்கச் சொல்” என்கிறார்.


சொல் வல்லாரால் சாதிக்க முடியாத தொன்றில்லை. அடக்குமுறையால் சாதிக்க முடியாததையும் அன்பான சொல்லால் சாதித்து விடலாம். ஆகையால்தான் அவ்வை:-

“வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்திற்
பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது -நெட்டிரும்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்” -என்கிறார்.

என்னலத்திலும் உயர்ந்தது சொன்னலம். இச்சொன்னலம் பன்னலமும் பயக்கும்.ஆகையால்தான் வள்ளுவர் சொல்வன்மை என்னும் அதிகாரத்தில் சொன்னலத்தை முதலில் வைக்கிறார்.

“நாநலம் என்னும் நலமுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று” என்கிறார்.

பயிருக்கு முள் வேலி. உயிருக்கு உண்மை வேலி. சொல் உண்மையுடைத்தாக இருக்கவேண்டும். கொடுத்த வாக்கை உண்மையாகக் காப்பாற்றியதால் உயிரை இழந்தான் தயரதன். உண்மையாய் அச்சொல்லைக் காப்பாற்றியதால் தான் இன்றும் அவன் புகழ்நிற்கிறது. காணா முடியைக் கண்டேன் என்ற பிரம்மனுக்கு ஆலயம் இல்லாத குறை ஏற்பட்டது.

எத்தனைதான் உண்மை பேசினும் அப்பேச்சு நன்மை பயக்கவேண்டும். நன்மையில்லா உண்மையால் (பொய்யைப் போல்) எப்பயனும் இல்லை.

ஒருவன் இன்னொருவன் மீது கடுஞ்சினங்கொண்டு அரிவாளால் வெட்டவருகிறான். வெட்டுப்பட விருப்பவன் நம்வீட்டில் வந்து ஒளிந்து கொள்கிறான். சினங்கொண்டவன் வந்து நம்மிடம் முன்னவனைப் பார்த்தீர்களா என்றால் அவ்விடத்தில் உண்மைபேசுவதால் எப்பயனும் இல்லை. மாறாக இல்லை என்ற பொய் சொல்வதால் அங்கு ஓர் கொலை தடுக்கப் படுகிறது. ஆகையால்தான் வள்ளுவர்:-

“வாய்மை எனப்படுவ (தி)யாதெனில் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்” என்கிறார்.

உண்மையுடையதாகவும் நன்மையுடையதாகவும் சொல்லும் சொல்லில் இயல்பாக அன்பும் குடிகொண்டிருக்கும். அன்பு கலவாத கனிவில்லாத பேச்சால் நன்மை விளைந்துவிடாது.யாரிடமும் அன்புகலந்து இனிமையாகப் பேசவேண்டும். அன்புகலந்த பேச்சு செவியைக் குளிர்விக்கும். சிந்தையைக் குளிர்விக்கும். ஊன் உடல் உணர்வு உயிர் வரைக் குளிர்விக்கும். ஆகையால்தான்

“இன்சொலால் ஈரம்அளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்”
என்கிறார்.

அன்புகலந்த சொல் நிதானமுடைத்தாகவும் அமையும். மெல்ல நிதானமாகப் பேசி கேட்பார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிதல் வேண்டும். இதனையே நாவடக்கம் என்கிறார் வள்ளுவர்.

"எல்லாம் உணர்ந்தும் வியாதன் விளம்பியவச்
சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா! -வல்லமையால்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு!"

நிதானத்துடன் கூடிய பேச்சு இனிமை பொருந்தியதாகவும் இருப்பது வழக்கம். பேச்சுக்கு உயிர்நாடி இனிமை. ஆகையால்தான் இனியவை கூறல் என்ற அதிகாரத்தைப் படைத்தார் வள்ளுவர்.

இனிமை பொருந்திய சொல் பணிவுடையதாகவும் ஆகிவிடுகிறது. இதுபோல் சிறந்த ஆபரணம் வேறில்லை என்கிறார் வள்ளுவர்.

“பண்புடையான் இன்சொலன் ஆதல் ஒருவர்க்
கணியல்ல மற்றப் பிற” என்கிறார்.

அன்பும் இனிமையும் கலந்த பேச்சு எப்பொழுதும் ஆழமுடைத்தாதலைக் காணலாம். ஆழமுடையதாக அமையும் பேச்சு சமயமறிந்து பேசும் பேச்சாகவும் விளங்கும். சமயமறிந்து சொல்லாத சொல் சினத்தை மூட்டுவதாகவும் அமைந்து விடும்.

இப்பேச்சிலெல்லாம் முற்றிய நிலை முழுமைபெற்ற நிலை அவையறிந்து பேசுதல். கற்றோர் கூடிய அவையுள் இதைப் பேசல்வேண்டும் இதைப்பேசல் கூடா என்கிற சிந்தனையோடு பெசவேண்டும். இதைத்தான் வள்ளுவர்:-

“அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்து தூய்மை யவர்” என்கிறார்.

அவையறிந்து பேசுதல் மட்டும் போதுமா? என்றால் அதுதான் இல்லை. அவையோர்தம் முகக் குறிப்பறிந்து பேசவேண்டும். குறிப்பறியாமற் பேசுபவனை மரம் என்கிறார் அவ்வை.

"கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் -சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவனன் மரம்.
"

சொல்வல்லார் அவையுள் சொல்லாடுவார் சொல்வல்லாராக இருத்தல் வேண்டும். சொல்லில்லார் அவைநடுவில் சொல்லாடுவதை முந்திரிக் கொட்டை என்கிறார் தா.ம.வெள்ளை வாரணம்.

“எந்தப் பழத்திற்கும் ஏன்வைத்தான் உள்விதையை
முந்திரிக்கு மாத்திரம் முன்வைத்து? -சிந்திக்கின்
நல்லவையுள் கற்றோர்தாம் நாவடக்கி வீற்றிருக்கச்
சொல்லுதலால் பேதைநாச் சோர்ந்து!” என்கிறார்.

எனவே உண்மையாகவும் நன்மையாகவும் அன்பாகவும் நிதானமாகவும் இனிமையாகவும் ஆழமாகவும் சமயமறிந்த பேச்சாகவும் அமைதல் வேண்டும். இல்லையேல் பேசாதிருத்தல் நலம். இதைத்தான் வள்ளுவர்:-

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று" என்கிறார்.

இச்சொல்வன்மை அமையப்பெற்றோர்க்கே வினைத்தூய்மை அமையும். ஆகையால்தான் சொல்வன்மை அதிகாரத்தை முதலில் வைத்து வினைத்தூய்மையை அடுத்து வைத்தார் வள்ளுவர்.

அகரம்.அமுதா

16 கருத்துகள்:

Kavinaya சொன்னது…

ஆஹா, பேச்சுக்கலைக்கு இத்தனை பாடல்கள் தந்து அடுக்கியிருக்கீங்க. "கனியிருப்பக் காய்கவர்ந்தற்று" எல்லாருக்கும் தெரிஞ்சதுதானேன்னு விட்டுட்டீங்களா :)

sury siva சொன்னது…

(என்னைப்போல் பொறுமை யாருக்குமில்லை எனப் பறை சாற்றுபவர்களுக்காகவே
இந்தப் பின்னோட்டம் ஒரு பரீட்சை. )

திண்ணையைப்பற்றிப் பேசிவிட்டு இப்போதுதான் வந்தேன்.
திணையை ப்பற்றி இங்கே பேசுகிறோம்..
" வாய் திறந்து பேசுவதால் உயர்திணை.
வாய் பேசாதவை அ:றிணை "என்கிறீர்கள்.

இது பற்றி மட்டும் எனது கருத்துக்களைச் சொல்வேன்.

தொல்காப்பியம் சொல்லதிகாரம்
2.1 கிளவியாக்கம்
சொல்வது இதுவே:
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவர் அல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே. 1
மற்ற செய்யுட்கள் பின்வருமாறு:
ஆடூஉ அறி சொல் மகடூஉ அறி சொல்
பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி
அம் முப் பாற்சொல் உயர்திணையவ்வே. 2
ஒன்று அறி சொல்லே பல அறி சொல் என்று
ஆயிரு பாற்சொல் அஃறிணையவ்வே. 3

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்
இவ் என அறியும் அந்தம் தமக்கு இலவே
உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும். 4 "

நிற்க.

பேசுபவை உயர்திணை எனவும் பேச இயலாதவை அ:றிணை எனவும்
உறுதியாகக் கூற இயலுமா எனத் தெரியவில்லை. பேசுதல் என்பதே ஒரு கருத்தைத்
தெளிவாக்குதல், அடுத்தவர் புரிந்து கொள்ளுமாறு நம் எண்ணங்களை எடுத்துரைத்தல்
என எடுத்துக் கொண்டால், இன்னமும் பேச்சு வராத மழலைச் சிறார் கூட தனது
குரலினால், தனக்கு இது வேண்டும் அல்லது வேண்டாம் எனச் சொல்லிவிடுகிறார்கள்.
இன்னமும் பேச்சு வராத குழந்தையை நாம் அ:றிணை என்கிறோமா !
அதே சமயம் ஒரு மாடோ, ஆடோ, நாயோ (அது நாம் வளர்ப்பதாக இருப்பின் ) தனக்கு
அவ்வப்போது இது வேண்டும், வேண்டாம் எனத் தன் எஜமானனிடம் தெரிவித்துவிடுகிறது.
ஒரு கிளி நாம் என்ன சொல்கிறோமோ அதைத் திருப்பிச் சொல்லும் திறன் கொள்கிறது.
இவைகளை நாம் உயர்திணை எனச் சொல்லமுடியுமா ?

இன்னொரு கருத்தும். ஒரு மாடோ, ஆடோ, மானோ அல்லது மயிலோ பேசவில்லை என்று
எப்படிச் சொல்ல முடியும் ? அவை பேசும் மொழி நமக்குப் புரியவில்லை. அவைகளுள் ஒரு
கருத்துப் பரிமாற்றம் இருக்கத்தான் செய்கிறது.
http://tribes.tribe.net/ecomatrix/thread/c5733043-1e67-4480-bf73-d2a37b54276c
நிற்க.
"பேசுவது கிளியா ! பெண்ணரசி மொழியா !" என்று பாடும்போது அக்கிளியின் மொழி பெண்ணரசியின்
மொழியைவிட இனிமையாக இருக்கிறது என்றல்லவா கவிஞன் பாடுகிறான். அப்பொழுது கிளி
உயர்திணை ஆகிவிடுகிறது !!!!

பின் உயர்திணை யாவை ? அ:றிணை யாவை ?ஆறறிவு படைத்த மாந்தர் அ:றிணை. மாந்தர்
கொண்டுள்ள ஆறாவது அறிவு இல்லாத உயிரினங்கள் உயிரற்றனவைகள் அ:றிணை.
தொல்காப்பியத்தில் உள்ள செய்யுட்களை
விளக்கிச்சொல்லிய பல இலக்கண வல்லுனர்களின் கருத்து:
"உலகத்து உயிர்களுள் விலங்கு, பறவை, நீர்வாழ்வன, ஊர்வன என்றும் உயிர்களைவிட மனிதன் பேராற்றல் படைத்தவனாக இருக்கின்றான். எனவே, மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாகின்றான். இவ்வாறே நம் கண்ணுக்குத் தெரியாத தேவரும் நரகரும் உயர்ந்தவர் என்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். இப்பிரிப்பு இன்றளவும் இலக்கணத்தில் கூறப்படுகிறது."

மக்கள், தேவர், நரகர் - உயர்திணை.
பிற உயிர் உள்ளனவும் இல்லனவும் - அஃறிணை."

ஆக, மனிதனை உயர்திணையாக்கியது சொல் எனச் சொல்வதை விட நாம் நமக்காக, மனிதருக்காக,வகுத்த இலக்கணம் என்பது எனது நிலை. இருப்பினும் ஒரு அன்றாடைய வாழ்க்கைக்கு உகந்த வகையில் வேண்டுமானால், பேசுவது உயர்திணை எனவும், பேசாதது அ:றிணை எனவும் கொள்ளலாம்.
For practical convenience, however, this interpretation appears to be OK.

அடுத்து, பேச்சு என்பது சொற்களின் கூட்டமா ? சொற்களின் சதிராட்டமா ?

பேச்சு என்பது சொற்களின் கூட்டம் என்று சொல்லிவிட்டால், ஒரு வாக்கியத்தில் இருக்கும்
எல்லாச் சொற்களுக்கும் இருக்கும் பொருட்களின் மொத்த மதிப்பீடு தான் வாக்கியத்தின் பொருளாக‌
இருக்க இயலும். சொற்களுக்கான பொருளும் அவை பேசப்படும்போது கொள்ளப்படும் பொருளும்
பல நேரங்களில் வித்தியாசப்படுகின்றன. ஒரு சொல் எப்படி உச்சரிக்கப்படுகின்றது என்பதைப்
பொருத்து அதன் பொருள் வேறுபடுகின்றது என்பது வெள்ளிடைமலை. பல சமயம் சொல்லைச்
சொல்லாமலே அதைச் சொல்வதையும் கண்டிருக்கிறோம்.

பேச்சில் சொற்கள் அடக்கம். ஆயினும் அந்தப் பேச்சு அடக்கமா இல்லையா என்பதற்கு
அந்தச் சொற்கள் பொறுப்பேற்கா. இன்னமும் சொல்லப்போனால், சொற்களின் பொருளையும்
விஞ்சி ஒரு பேச்சின் பொருள் அமையும். சொற்கள் தனித்தனியே மெய்யாக இருந்தபோதிலும்
அவைகள் ஒன்று கூடி ஒரு வாக்கியமாகவே அல்லது வாக்கியத்தொடராகவோ அமையும்போது
சொற்கள் தமது பொருளை இழந்துவிடுகின்றன.

ஒரு உதாரணம். சூழ்னிலை: ஒருவன் தன் வயதான தாயைப் பார்க்க பல மாதங்கள் கழித்து வருகிறான்.
அவள் கேட்கிறாள் :" உன்னைப் பார்க்கவே முடியல்லையே !"
மகன் பதில் சொல்கிறான்:
அம்மா ! காலையிலே பழைய பேப்பரையெல்லாம் போட்டேன்.
பணம் வாங்கினேன்.
பெட்ரோல் பங்குக்கு சென்றேன்.
பணத்தைக் கொடுத்து பெட்ரோல் வாங்கினேன்.
இங்கு வந்தேன்."
இங்கு மகன் சொல்கிற எல்லா வாக்கியங்களும் உண்மை.
ஆனால், மொத்தமாக அதன் பொருள் என்ன ? என்னிடம் பணம் இல்லை. ஆகவே வரவில்லை.
ஒன்று இது பொய். அல்லது இதை நேரிடையாகச் சொல்ல மனம் வரவில்லை.
இது பேச்சு வன்மை. ( இது பேச்சில் வன்மையும் கூட ).

சொற்களில் சதிராடுபவன், சித்துவேலை செய்பவன் தனது திறனால், தான் சொல்வதெல்லாம்
உண்மை என நம்ப வைத்துவிடுவர். வாய்மையின் திருவுருவமே தானே என நினைக்கவும்
தூண்டுவர். அப்போதுதான், வாய்மை என்பது என்ன என்ற வினா வருகிறது.

“வாய்மை எனப்படுவ (தி)யாதெனில் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்” என்கிறார். வள்ளுவர்.

(இறைவன் எது என்ற கேள்விக்கு இது இல்லை இது இல்லை என்று சொல்லிக்கொண்டே
போனால், எது மிஞ்சுமோ அந்த உண்மை இறைவன்.) அது போல, எது யாதொன்றும்
தீமை இலாத ஒன்றோ அது வாய்மை. யாதொன்றும் என்றால் என்ன ? அழுக்காறு, அவா, வெகுளி,
இன்னாச்சொல் இவை கலந்த செயல்.

வாய்மை எனும் சொல்லுக்கு இன்னொரு நிலையிலிருந்து ஒரு புலவர் பொருள் சொல்லுவார்:

திருகடுகம்எனும் கீழ்கணக்கு நூல் விளக்குகின்றது.

37. குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல்இனிய
சால்பினில் தோன்றும், குடிமையும்; பால்போலும்
தூய்மையில் தோன்றும் பிரமாணம்:--- இம்மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com

அகரம் அமுதா சொன்னது…

/////இன்னமும் பேச்சு வராத குழந்தையை நாம் அ:றிணை என்கிறோமா !/////

ஆம்! அஃறினை போல்தான் கருதுகிறோம். இதனை இலக்கிய மரபுப்படி வழுவமைதி எனக்கொள்ளலாம். குழந்தை அழுகிறான், குழந்தை அழுகிறாள் என்றா கூறுகிறோம்? மாறாக குழந்தை அழுதது குழந்தை சிரித்தது என்றல்லவா கூறுகிறோம். காரணம் குழந்தை என்பது பொதுப்பெயர். உயர்தினையாம் குழந்தையை நாம் அஃறினையாக் கருதவில்லையாயினும் அஃறினையை போல்தான் குறிப்பிடுகிறோம்.

/////அதே சமயம் ஒரு மாடோ ஆடோ நாயோ (அது நாம் வளர்ப்பதாக இருப்பின் ) தனக்கு
அவ்வப்போது இது வேண்டும் வேண்டாம் எனத் தன் எஜமானனிடம் தெரிவித்துவிடுகிறது.
ஒரு கிளி நாம் என்ன சொல்கிறோமோ அதைத் திருப்பிச் சொல்லும் திறன் கொள்கிறது.
இவைகளை நாம் உயர்திணை எனச் சொல்லமுடியுமா ?//////

முடியாதுதான். காரணம் பேசும் திறத்தைக் கிளி பெற்றிருப்பினும் அவை ஆறறிவு படைத்தவையில்லையே!

முதலில் தன்னிலைவிளக்கம் அளித்துவிடுகிறேன். ஓர் நகைச்சுவையாளன் மேடையில் பலரையும் மகிழ்வு செய்யும் போது ஆறறிவுபடைத்த மனிதனுக்குக் கடவுள் அளித்த ஓர் மகத்தான கொடையாகும் சிரிப்பு. சிரிக்கிறபோதே ஓர் மனிதன் மிருக நிலையிலிருந்து மனித நிலையை அடைகிறான் என்றெல்லாம் ஏற்றிச் சிரிப்பை உயர்த்திச் சொல்வதில்லையா? ("அப்படியென்றால் இதுவரை சிரித்தறியாத முன்னால் பிரதமர் நரசிம்மராவ்வை விலங்கு என்கிறீரா?" என்கிறிர்களா?)

நாம் எதைப்பற்றிப் பேசுகிறோமோ அதைச் சற்றே உயர்த்திக் கூறுவது இயல்புதானே! அம்முறையைத் தான் நானும் கையாண்டுவிட்டேன்.

//////பின் உயர்திணை யாவை ? அ:றிணை யாவை ?ஆறறிவு படைத்த மாந்தர் அ:றிணை. மாந்தர்
கொண்டுள்ள ஆறாவது அறிவு இல்லாத உயிரினங்கள் உயிரற்றனவைகள் அ:றிணை.
தொல்காப்பியத்தில் உள்ள செய்யுட்களை
விளக்கிச்சொல்லிய பல இலக்கண வல்லுனர்களின் கருத்து:
"உலகத்து உயிர்களுள் விலங்கு, பறவை, நீர்வாழ்வன, ஊர்வன என்றும் உயிர்களைவிட மனிதன் பேராற்றல் படைத்தவனாக இருக்கின்றான். எனவே, மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாகின்றான். இவ்வாறே நம் கண்ணுக்குத் தெரியாத தேவரும் நரகரும் உயர்ந்தவர் என்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். இப்பிரிப்பு இன்றளவும் இலக்கணத்தில் கூறப்படுகிறது."//////

அய்யா தாங்கள் கூறுவது நாகரீகமடைந்து விட்ட தற்காலத்திற்குப் ஏற்புடையதாக இருக்கலாம். எனது கேள்வியெல்லாம் ஒன்றுதான். மனிதன் பேச எழுதக் கற்குமுன் ஒழுக்கமுடன்தான் இருந்தானா?

அவன் பேசக் கற்றுக்கொண்ட பிறகே ஒழுக்கத்தைப் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும். ஆகவே மனிதனின் ஒழுக்கம் மேலோங்க அவன் எண்ணுவதை, பார்த்ததை, பிறருக்கு உரைக்க ஓசை எழுப்புவதால் வெளிப்படுத்தினான். பின் அவ்வோசைக்கு ஓர் ஒழுங்கை ஏற்படுத்தியபின் (இவ்விடத்தில் அக்காலமனிதனுக்கும் விலங்கிற்கும் இப்பேச்சு அதாவது ஓசை ஒழுங்குதானே வேறுபடுத்திக் காட்டுவதாக இருந்திருக்க முடியும்.) ஒழுக்கம் போன்ற வற்றைக் கற்பித்துக்கொண்டான்.

தொல்காப்பியரும் தாங்களும் கூறுவதைப் பார்த்தால் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஒழுக்கம் என்பதில்லை என்பதுபோலல்லவாயிருக்கிறது.

பறவைகளில் புறா கற்புடையதில்லையா?விலங்குகளில் கவரிமான் மானமுடையதில்லையா. வண்டுகளில் மாம்பழத்து வண்டு கற்புடையதில்லையா? ஆகையால்தானே ஒருத்தியோடு இன்புற்று அவள் இறந்தபின்பும்அவள் நினைவாகவே இருந்து (வேறொருத்தியை நினையாது) உயிர்விடும் ஆணை மாம்பழந்து வண்டோடு ஒப்பிட்டு உவமை கூறுகிறோம்.

தங்களது பின்வரும் கருத்துக்களுடன் நாம் ஒத்துப்போகிறோம்.

(((((வாங்க கவிநயா! அய்யாகிட்ட வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கப் போறேன்னு நினைக்கிறேன்.)))))

sury siva சொன்னது…

பேசும் திறன் உயர்திணை, அ:றிணை எனப்பாகுப்பாட்டிற்கு
நடைமுறைக்கு உகந்ததாக இருக்கலாம் எனினும் அச்சொற்கள்
எக்கருத்தினைக் கூற வந்தன என்பதை முன்னைய மறுமொழியில்
சொல்லியிருந்தேன். முதலில் மேற்கோள் காட்டியது தொல்காப்பியம்.
இரண்டாவது நன்னூலிலிருந்து.
இரண்டின் இலக்கணத்தையுமே தாங்கள் ஒப்புக்கொள்ளாத
நிலையில் என்ன சொல்வது ?

"ஒழுக்கம்" என்ற சொல்லுக்கு திருக்குறளில் ஒரு அதிகாரமே இருக்கிறது.
ஒழுக்கம் என்பதே நாம் நமக்குள்ளே ஏற்படுத்திக்கொள்ளும்
எல்லோராலும் ஒப்புக்கொள்ளத்தக்கதாகவும் இருக்கக்கூடிய‌
கட்டுப்பாடு தானே. இந்த ஒழுக்கம் மொழி, இனம், மதம்,
தேச சீதோஷ்ண நிலைகளுக்கேற்ப வேறுபாடு அடைகிறது.
ஒழுக்கம் பற்றி வள்ளலார் கூறும் நிலை என்ன ?
http://www.vallalarspace.com/Urainadai/Articles/87
சைவ சமய சித்தாந்தம் ஒழுக்கத்தைப் பற்றி என்ன கூறுகிறது ?
http://www.thevaaram.org/thirumurai_1/ani/aa085.htm
அகஒழுக்கமும் புறஒழுக்கமும்:

பழம்பெரும் நாகரிகப் பண்பாடு வாய்ந்த நாடு நம் பாரத நாடு.

அதனிலும் தென்தமிழ்நாடு பல்லாற்றானும் பண்பாடுடையது.

வாழ்வியலை அகவாழ்வு, புறவாழ்வு என இருதிறப்படுத்தி, அகவாழ்வை

அக ஒழுக்கம் என்றும், புறவாழ்வைப் புற ஒழுக்கம் என்றும்

நெறிப்படுத்தினர். அக ஒழுக்கத்தை அகத்திணை என்றும்,

புறஒழுக்கத்தைப் புறத்திணை என்றும் அமைத்தனர்.

திணை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும் சொல். "

ஒழுக்கம் எனும் சொல் அது சொல்லப்படும் இடத்தினைப்பொருத்தும்
அமையும். ஒரு பள்ளியில் அதற்கு என்ன பொருள் ? ஒரு மருத்துவர் தொழிலில்
ஒழுக்கம் என்றால் என்ன ? போர் நடக்கும் இடத்தில் ஒழுக்கம் என்றால்
என்ன ? வணிகத்தில் ஒழுக்கம் என்றால் என்ன ? இறைவனை எக்காலமும்
ஓதுவார் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கம் என்ன ? இல்வாழ்வோரது
ஒழுக்கம் என்ன ? துறவியரின் ஒழுக்கம் என்ன ?

எல்லாவற்றிற்குமே ஒரு கட்டுப்பாடு தான் அடிப்படை.
ஒழுக்க நெறி என்பது ஒரு omni சொல். கற்பு நெறியும் அதில் அடங்கும்.
ஒழுக்க நெறிதனைக் கடைப்பிடித்தோர் உயர்திணையாவர். இல்லாதோர்
அ:றிணை ஆவர். புலால் மறுத்தல் என்பது ஒரு உயரிய சிந்தனை. வள்ளுவர்
கண்ணோட்டத்தில் இதுவும் ஒரு ஒழுக்கமே. நடை முறையில் சாத்தியமா
என்பது அவரவர் இல்லங்களின் மரபு வழி ஒக்கும். அவ்வளவே இதில்
சொல்ல இயலும்.
உங்களது கேள்வி:
"மனிதன் பேச எழுதக் கற்குமுன் ஒழுக்கமுடன்தான் இருந்தானா?"
அக்காலத்தே எது ஒழுக்கம் எனக் கருதப்பட்டதோ அந்த நிலையில்
இருந்தான் என மட்டும் தான் சொல்ல இயலும்.
*********** *****************************************
இதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் எடுத்துக்கொண்ட பொருள்

சொல், சொற்களமைந்த பேச்சு .
சொல், சொல்லின் இன்மை, வலிமை.
பேச்சு, பேச்சின் வலிமை
சொல்லின் வலிமைக்கும் பேச்சின் வலிமைக்கும் இடையே
உள்ள தொடர்பு நிலை.

" சொல் " என்ற சொல்லுக்கும் ஒரு கட்டுப்பாடு
உள்ளது. சொல்லின் இலக்கணமும் அதைச் சொல்கையில் ஏற்படும்
பத்துக் குற்றமும் பத்தழகும் நன்னூலில் நன்றாகவே விவரித்துள்ளதை
நான் தங்களுக்கு எடுத்துக் கூறத்தேவையில்லை.

ஒரு சொல்லைக் கொண்டே ஒரு பத்து எண்ணங்களை வெளிப்படுத்த‌
இயலும்.
http://www.youtube.com/watch?v=VWYFo6ywZF0
சொல்லின் இயற்பொருள் பேச்சில் திரிந்து போயின், அது
சொல்லின் குற்றமா அல்லது சொல்லைக் கையாளுபவரின் குற்றமா ?

சொல் தாய்ப்பால். பேச்சு புட்டிப்பால்.
இது இரண்டும் எப்படி ஒன்றாகும் ?

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
எனக் கவி நயா சொன்னது மிகப்பொருத்தம்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

அகரம் அமுதா சொன்னது…

நன்றி அய்யா! அரிய விளக்கங்களைக் கொடுத்தீர். நன்னூலிலோ தொல்காப்பியத்திலோ எனக்கு ஆழ்ந்த அறிவெல்லாம் கிடையாது. குறிபாக எழுத்ததிகாரத்தை ஓரளவிற்குக் கரைத்துக் குடித்திருக்கிறேன். நன்றி

anujanya சொன்னது…

அமுதா,

நீங்களும் சுப்பு அய்யாவும் விவாதங்களை மிக்க உயர்தளத்துக்கு கொண்டு சென்று விட்டபடியால், வெறும் பார்வையாளர் அந்தஸ்துடன் ரசித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

குமரன் (Kumaran) சொன்னது…

எனக்குத் தெரிந்து இரு சொல்லேருழவர் இருக்கிறார்கள். அவர்களை உங்களுக்குத் தெரியுமா? கவிக்காவிற்குத் தெரியும் அவர்களை.

ஏன் அவ்வை என்றீர்கள்? ஒளவை என்றால் என்ன? இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டுவிட்டு ஒரு சொல்லேருழவர் சொன்னது என்ன தெரியுமா? ஒளவைப்பாட்டி என்று எழுதும் போது அவ்வைப்பாட்டி என்று எழுதிவிட்டால்? அப்படித் தவறியும் எழுத வேண்டாம் என்பதால் தான் அவ்வை என்னாது ஒளவை என்று சொல்லச் சொல்கிறேன் என்றார். :-)

“வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்திற்
பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது -நெட்டிரும்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்”

இந்தப் பாட்டிற்கு பொருள் சொல்லுங்கள். நெட்டிரும்புப்பாரை என்றால் கடப்பாரை என்று புரிகிறது ஆனால் முதல் அடி புரியவில்லை.

"எல்லாம் உணர்ந்தும் வியாதன் விளம்பியவச்
சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா! -வல்லமையால்

இந்தப் பாட்டின் இரு அடிகள் உணர்த்தும் கதையைச் சொல்லுங்கள்.

ஓ. இது தான் முந்திரிக்கொட்டை என்று சொல்வதன் பொருளோ? இது நாள் வரை சிந்திக்கவே இல்லை. :-)

அகரம் அமுதா சொன்னது…

வணக்கம் உயர்திரு குமரன் அவர்களே!

ஒளவைப் பாட்டி என்பதை அவ்வைப்பாட்டி என்று எழுதுவதில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக அவ் வைப்பாட்டி என்று பிரித்தெழுதினாலே பொருள் மாறுபடும்.

காட்டு:-

சான்றோர்கள் குடிக்குமிடம் என்பதில் தவறில்லை. இதையே பிரித்து சான்றோர் கள் குடிக்குமிடம் என்று எழுதினால் பொருள் மாறிவிடும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒள-விற்கு அவ்- என்று எழுதிப் புரட்சி செய்திருக்கிறானே திருவள்ளுவன்!

காட்டு:-
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் -169

இதுபோல் அதிக காட்டுக்களைக் காட்டமுடியும்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழில் எதற்கு 247 எழுத்துகள்? உயிரெழுத்துகளில் ஐ ஒள ஆகிய இரண்டு எழுத்துகளையும் அகற்றினால் என்ன?

ஐ-க்கு அய் என்றும்
ஒள-க்கு அவ் என்றும் எழுதுவதால் என்ன வேறுபாடு உள்ளது.? இப்படி எழுத்துக் குறைப்புச் செய்தால் கணினியில் மிக இலகுவாக தமிழைப் பயன்படுத்தலாமே!

//////“வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்திற்
பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது -நெட்டிரும்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்”////

கடினத் தன்மை கொண்ட கூரிய கத்தியும் மென்மையான சில பொருள்களை வெட்டமுடியாது. யானையைத் துளைத்துச்செல்லம் அம்பு பஞ்சுமூட்டையைத் துளைத்துவிட முடிவதில்லையே!
ஆனால் கடப்பாரையால் துளைக்க முடியாத பாறையைக் கூட பசுமையான மரத்தின் வேர் துளைத்துவிடுகிறது. ஆதலால் வன்மையால் சாதிக்க முடியாததைக் கூட மென்னையைக் கையாண்டால் சாதித்துவிடலாம் என்பதாம்.

/////"எல்லாம் உணர்ந்தும் வியாதன் விளம்பியவச்
சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா! -வல்லமையால்

இந்தப் பாட்டின் இரு அடிகள் உணர்த்தும் கதையைச் சொல்லுங்கள்.//////

எனக்குப் புராணக் கதைகளின் மீது ஈடுபாடில்லாததால் அதுபற்றி எனக்கு அதிகம் தெரியாது.

Kavinaya சொன்னது…

//“வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்திற்
பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது -நெட்டிரும்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்”//

இந்தப் பாடலும் அதன் பொருளும் மிக அருமை.

என்னைப் பொறுத்த வரை 'ஐ'யும் 'ஔ'வும் அழகான எழுத்துகள். 'ழ' வைப் போலவே! அவற்றைப் பயன்படுத்த எனக்குப் பிடிக்கும். அத்துடன் கணினியில் அவற்றை எழுத முடிகையில், அப்படியே எழுதுவதில் சிரமமில்லை என்றே நினைக்கிறேன். மற்றபடி தமிழில் இரண்டு எழுத்துகளைக் குறைப்பது பற்றியெல்லாம் கருத்துச் சொல்ல எனக்குத் தகுதியில்லை :)

அகரம் அமுதா சொன்னது…

தகுதியில்லை எனக்கூறி ஒதுங்குவது சரியில்லை எனக் கருதுகிறேன் கவிநயா! நிச்சயம் இதுபற்றி ஆராயவேண்டும்.

தமிழ் எழுத்துகளைக் குறைக்கத்தான் வேண்டும் என நான் சொல்லமாட்டேன். ஆனால் ஒன்றை நாம் சிந்திக்கவேண்டும். இது விரைவு உலகமாக இருக்கிறது. மரபை முழுமையாகப் படித்துக் கவிதை எழுத முடியாது என்று புதுக்கவிதைகளையும் வேற்று நாட்டவரின் வடிவமாகிய ஹைக்கூவையும் விரும்பி எழுதுகிறான் நம் மடத்தமிழன்.

வேற்றுவடிவம் தமிழில் நுழைவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இவன் வடிவத்தை வேற்றுநாட்டவர் எடுத்துக் கையாளத் துணியாதபோது ஏன் அவர்களின் வடிவத்தை நாம் மட்டும் கையாள வேண்டும் என்பதே என் வினா?

இந்த மடத்தமிழன் தமிழின் கடினத்தன்மையைப் பார்த்துப் பயப்படுகிறான்.

உமக்கொண்டு தெரியுமா?

சிங்கைப்பூரில் கவியரங்கம் ஒன்றில் ஒரு நாத்தழும் பேறியவன் தமிழின் இலக்கணங்கள் இனி தேவையில்லை மரபு சற்றேறக் குறைய செத்தே விட்டது என்றெல்லாம் பேசினான்.

தமிழில் நாங்களெல்லாம் சிங்கங்கள் என்று பீற்றிக்கொண்டுத் திரிகிற சிங்கைப்பெரும் கவிஞர்கள் ஆவென்று அவன் வாயைப் பார்த்தார்களே ஒழிய மறுப்பேதும் சொல்லவில்லை. அவன் பேசி முடித்துவிட்டு அமர்ந்ததுதான் தாமதம்.

நான் எழுந்தேன். ஒலிவாங்கியைப் பிடித்தேன்.

உலக மூமையா வுள்ளவக் காலையே
பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே
இலகி யின்றுநா னென்னு மொழிக்கெலாம்
தலைமை யாந்தமிழிலுள்ள இலக்கணத்தையா வேண்டாம் என்கிறாய்?

பின்னர் வந்து பிறந்து செருக்கொடு
முன்னர் வந்த மொழிபல வீயவும்
இன்னு மன்ன விளமைய ளாயுள
தன்னி கர்தமிழில் உள்ள இலக்கணத்தையா வேண்டாம் என்கிறாய்?

கன்ன டந்தெலுங் கந்துளு வம்புயல்
மன்னி மேவு மணிமலை யாளமாம்
பொன்னின் மேனி திரிந்து பொலிவுறு
தன்னை நேர்தமிழில் உள்ள இலக்கணத்தையா வேண்டாம் என்கிறாய்?

மூவர் மன்னர் முறையொடு முன்புதன்
ஆவி யென்ன அருமையிற் போற்றிய
நாவின் மேவி நடம்பயில் நாணயத்
தாவில் நற்றமிழில் உள்ள இலக்கணத்தையா வேண்டாம் என்கிறாய்?

மன்னை நேர்தரு வள்ளலும் மற்றரும்
பொன்னை யீந்தும்பொன் போன்றதம் இன்னுயிர்
தன்னை யீந்துந் தகவுட னோம்பிய
அன்னை நேர்தமிழில் உள்ள இலக்கணத்தையா வேண்டாம் என்கிறாய்?

எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தினும்
பழுத்த வாய்மொழிப் பாவலர் பண்புற
இழைத்த பாத்தொகை எண்ணில வாய்வளந்
தழைத்த முத்தமிழில் உள்ள இலக்கணத்தையா வேண்டாம் என்கிறாய்?

முதலில் இலக்கணம் என்ற சொல்லுக்கு உனக்குப் பொருள் தெரியுமா? அணம் என்றால் வழி. இலக்கை அடைவதற்கு நம் முன்னோர் அழகான வழியமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வழி உனக்கு வேண்டாம் என்றால் வேறு எதில் பயணம் போவீர்கள்?

என்று பலகூறிக் குடைசல் பண்ணிவிட்டேன். அப்பொழுதே அந்நபர் எழுந்துத் தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

சோம்பல் வாதிகள் புதுமை விரும்பிகள் என்ற பெயரில் தமிழைச் சீரழிக்கும் சிறுமதியாளர்கள் நிறையவே தமிழ்நாட்டில் உள்ளார்கள்.

இவர்களிடம் இருந்தெல்லாம் தமிழை எப்படிக் காப்பது? சிந்திக்கவேண்டும்.

நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் “னை” போன்ற எழுத்துகளுக்கு ன-வின் மேல் கொம்பு சுழித்துவிடுவார்கள். அம்முறையை மாற்றி “னை” என்று எழுத வைப்பதற்குச் பலர் போராடியே வெற்றி பெற வேண்டியிருந்தது. (குறிப்பாய் பெரியார் தன் விடுதலை தாளிகையில் கொம்புசுழிக்காமல் புதிய முறையில் எழுதிவந்தார்.)

அதுபோல் மாற்றத்தை எதிர்ப்பதற்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. நான் ஏன் எழுத்துகளைக் குறைக்கலாம் என்கிறேன்.? கரணியம் தமிழனுக்குத் தமிழ்மீது பற்று குறைந்து வருகிறது. பக்கத்து நாடான சீனாவின் சீனமொழியில் எழுத்துகள் மட்டும் 5000க்கும் மேல் என்று என்னாசான் பாத்தென்றலார் கூறுவார். அவர்களுக்கு அவர்கள் மொழியின் மீது மிகுந்த பற்றிருக்கிறது. ஆதலால் அவர்களுக்கு அவ்வெண்ணிக்கை யொன்னும் பெரிதில்லை.

ஆனால் தமிழன்?

உமக்கொன்று தெரியுமா கவிநயா? ங-கர வரிசை எழுத்துகளில் “ங் “மற்றும்” ங” இவ்விரு எழுத்துகளையும் தவிர மற்ற ஙா ஙி ஙீ பொன்றவை பயன் பாட்டில் இல்லை. பயன் பாட்டில் இல்லாதவை தமிழ் எழுத்துகள் என ஏன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்.? மாறாக ங-கர வரிசையையே மொத்தமாகத் தூக்கி வீசுவதே மேல். அப்படியென்றால் தங்கம், திங்கள், சங்கு, கங்குல் போன்ற சொற்களை எப்படி எழுதுவது என்று வினா எழுப்புகிறீர்களா? ங்-கைப் பயன்படுத்தி வரும் சொற்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்கிறேன். தப்பில்லை. தமிழில் சொற்களுக்கா பஞ்சம்?

தமிழன் நெஞ்சில் ஓர் எழுச்சி பிறக்கவேண்டும் கவிநயா! இல்லையென்றால் சமற்கிருதம் பிராகிருதம் போன்று தமிழும் ஏட்டளவில் என்றாகி ஆராய்ச்சிக் குறிய மொழியாகிவிடும். ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்றார்போல் தமிழ் எழுத்துகள் வடிவம் மாறியே வந்துள்ளன. முன்பு உரைநடை வடிவமோ சிறுகதை நாவல் வடிவமோ தமிழில் கிடையாது. அவையெல்லாம் புகுந்தபோது தமிழ் இலக்கணத்தில் சிறிய மாற்றம் ஏற்படவில்லையா? அதுபோல் சில எழுத்துகளைக் குறைப்பதால் தமிழ் அழிந்துவிடாது. அல்லது ங ஙா ஙி ஙீ போன்ற இன்னும் பல பயன்படாத எழுத்துகளும் பயன்படும்படி புதிய சொற்களை உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் அவை இருந்தென்ன இறந்தென்ன? அருட்கொலை (கருணைக்கொலை) செய்வதே சாலச்சிறந்தது.

ஐ மற்றும் ஒளை-வைப் பொருத்தவரை அந்த வரிசை எழுத்துகளைத் தான் எடுக்கப்போகிறோம். ஆனால் அதனால் தமிழின் மதிப்பு குறைந்துவிடும் என நினைப்பது தவறாகும்.

நாம் ஐயா என்பதை அய்யா என எழுதுவில்லையா? பொருள் மாறிவிட்டதா என்ன? எழுத்துகளைக் குறைத்தால் கற்கவும் பயன்படுத்தவும் எளிமையாயிருக்கும் என்றுதான் சொல்கிறேன்.

குமரன் (Kumaran) சொன்னது…

//எனக்குப் புராணக் கதைகளின் மீது ஈடுபாடில்லாததால் அதுபற்றி எனக்கு அதிகம் தெரியாது.
//

ஓ. இது புராணக் கதையா?

நீங்கள் ஒரு தனி இடுகையாய் போட வேண்டியதை பின்னூட்டமாய் போட்டிருக்கிறீர்கள். தனி இடுகையாய் போட்டால் இன்னும் நிறைய பேர் படிப்பார்கள்.

Kavinaya சொன்னது…

அடடா, அகரம்.அமுதா. ரொம்ப உணர்ச்சிவசப் பட்டுட்டீங்க போலருக்கு :) எனக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும் ஒத்தே வராது; அதற்கு வேண்டிய அறிவும் திறமையும் எனக்கு இல்லை. அதனால ஒதுங்கிக்கிறேன் :) என் விருப்பத்தை மட்டுமே சொல்ல வந்தேன்.

உங்க சிங்கப்பூர் பேச்சு அருமை. அத்தனையும் தயார் பண்ணாம அந்த நிமிடத்திலேயே பேசியிருக்கீங்கன்னா நீங்க சாதாரண ஆளில்லை. உங்க தமிழார்வத்துக்கு தலை வணங்குகிறேன்.

அகரம் அமுதா சொன்னது…

உணர்ச்சிவயப்படவில்லை கவிநயா! உண்மையைச் சொன்னேன். என்னிடம் உள்ள குறையாதெனில் என்கருத்தை நிலைநாட்ட முற்படுவது. மற்றபடி பிறரையும் பிறர்கருத்தையும் எக்காலத்திலும் மதிப்பதுண்டு.

கவியரங்கத்தில் நடந்த நிகழ்வில் தமிழைப்பற்றி எடுத்துரைத்த அத்தனைப் பாடல்களும் புலவர் குழந்தையுடையது. புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் ஈடுபாடு உண்டென்பதால் அவர் இராவண காவியத்தில் தீட்டியுள்ள தமிழ்த்தாய் வாழ்த்துகள் பத்தும் எனக்கு மனனம். அவ்வளவே.

குமரன் (Kumaran) சொன்னது…

இராவண காவியத்தைப் படிக்கும் ஆவல் வெகுநாட்களாக உண்டு. இணையத்தில் கிடைக்குமா?

அகரம் அமுதா சொன்னது…

இணையத்தில் கிடைக்குமா என்பது தெரியவில்லை குமரன். நான் நூல்வாங்கித்தான் படித்தேன். நூல்கிடைத்தால் வாங்கிப் படித்துப்பாருங்களேன். நல்லதமிழில் வியக்கும் வன்னம் காவியத்தை வடித்துள்ளார்.

இப்னு ஹம்துன் சொன்னது…

//நாம் ஐயா என்பதை அய்யா என எழுதுவில்லையா? பொருள் மாறிவிட்டதா என்ன?//

நண்பரே!
நாக. இளங்கோவன் ஐயா 'ஐ'யின் பயன்பாடு பற்றி தன் கருத்தினைச் சொல்லியிருக்கிறார். மறக்காமல் படியுங்கள்.
http://nayanam.blogspot.com/2008/05/blog-post.html