சனி, 14 ஜூன், 2008

வஞ்சப் புகழ்ச்சி!

தமிழில் வஞ்சப் புகழ்ச்சி, வஞ்சப் புகழ்ச்சி அப்டின்னு (ரெண்டணி இல்லீங்க) ஒரு அணியிருக்கிறது. அது என்னான்னா மற்றவரைப் புகழ்வது போல் இகழ்ந்தும் இகழ்வதுபோல் புகழ்ந்தும் பாடுவது.

இம்முறையில் பாடப்படும் பாடல்கள் வஞ்சப் புகழ்ச்சியணி வகையைச் சார்ந்தவை.

பொதுவாக இம்முறையை மாந்தர்கள் மேலேற்றிப் பாடுவது வழக்கம். ஆனால் ஓர் குறும்புக்காரப் புலவன் இவ்வணியைக் கடவுள் மேலேற்றிப் பாடுகிறான்.

கடவுளைப் புகழ்ந்துப் பாடலாம். இகழ்வதுபோல் புகழ்ந்தும் புகழ்வதுபோல் இகழ்ந்தும் பாடுவதா? என்கிறீர்களா?

நாம், "அப்பனே! முருகா!" என விளித்து முருகனை வழிபடுகிறோம். இதில் அப்பனே! எனுஞ்சொல்லின் பொருளென்ன? தந்தையைத்தானே அப்பா என்றழைப்போம். இதில், "அப்ப" என்று முருகனைத் தந்தையாக உயர்த்தியும் னே-என்று ஏகாரமிட்டு சகத் தோழனைப் போல ஒருமையிட்டுத் தாழ்த்தியுமல்லவா அழைக்கிறோம்.

இப்படி நாம் உயர்த்தியும் ஒருமையில் தாழ்த்தியும் அழைப்பதன் காரணமென்ன? கடவுளின் மீது நாம்கொண்டுள்ள ஈடுபாடு, பற்று, இரண்டறக் கலந்த நிலை இதுவே கடவுளை நம்மை ஒருமையிட்டு அழைக்க வைக்கிறது.

அதே ஈடுபாட்டோடும் கடவுள் மீதுள்ள உரிமையிலும் தான் அப்புலவனும் வஞ்சப் புகழ்ச்சி செய்துவிட்டான். அப்படிப் பாடிய பக்தனைக் கடவுளே கோபித்துக்கொள்ள வில்லை. நாம் கோபித்துக் கொள்வானேன்? சற்றே பொருட்சுவையைத் துய்ப்போமே!

ஓர்நாள் அந்திப்போழ்தில் தன்வீட்டுத் திண்ணையில் அமந்திருந்த புலவனைப் பார்த்த அவ்வூரார் புலவனைக் கவிதை பாடச்சொல்லிக் கேட்டுமகிழலாம் எனநினைத்து அவனைச் சூழ்துகொள்கின்றனர்.

புலவனும் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்று அமரச்செய்து என்ன பாடுவது? யாரைப் பாடுவது? நீங்களே சொல்லுங்கள் என்று அவர்கள் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறான்.

கூட்டத்திலிருதோர் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு இறைவனை வழிபடுபவர்களாதலால் சிலர் "என் தெய்வமாகிய திருமாலைப் பாடுங்கள்!" "இல்லை, இல்லை எங்கள் தெய்வம் ஈசனைப் பாடுங்கள்!" ,"அதெல்லாம் முடியாது. எமது தெய்வம் கணபதியைப் பாடுங்கள்!" என்று அவரவர் விருப்பத்தை வெளியிடுகின்றனர்.

புலவன் பார்த்தான், "உங்கள் அனைவரின் விருப்பத்தையும் ஒரு பாடலிலேயே நிறைவேற்றுகிறேன்!" எனக்கூறிப் பாடலுற்றான்.

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்கப்பெண் டாயினாள் -கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானை யும்பெற்றாள்
கட்டிமணி சிற்றிடைச்சி காண்!

எனப் பாடி நிறுத்தினான் புலவன் கவி காலமேகம்.

குழுமியிருந்தோர், "அய்யா! நீவிர் பெரும் கல்விமானாக இருக்கலாம். நாடுபோற்றும் பெரும் புலவராயிருக்கலாம். அதற்காய் எங்கள் கடவுள்களை இப்படியா தரக்குறைவாகப் பாடுவது?" எனக் கொந்தளித்து விட்டனர்.

"நானெங்கே உங்கள் கடவுள்களைப் பழித்துப் பாடினேன்?" புகழ்ந்தல்லவா பாடியிருக்கிறேன் என்றான் புலவன்.

"ஏனய்யா பொய் கூறுகிறீர் நீர் எம் பானை வயிற்றோனை ஈற்ற மதுரை மீனாட்சியாகிய பார்வதியை பசுவின் கன்றுகளையும் ஆட்டுக்கடாக்களையும் மறித்து மேய்க்க கோட்டானைப் பெற்றாள் எனப்பாடி எம் கணபதியையும் அவன் தாயையும் பழிக்கவில்லையா?"

"நான் எப்பொழுதய்யா அப்படிப்பாடினேன்? நீங்கள் கணபதிக் கோயிலுக்குச் சென்று அவனை வணங்குகையில் இரு கைகளையும் பெருக்கல் குறிபோல் மறித்துத் தலையில் குட்டிக்கொள்கிறீர்கள் அல்லவா? அதைத்தானய்யா குட்டி மறித்து என்று கூறினேன்"

"அதிருக்கட்டுமையா கோட்டான் என்று இழிந்துப் பாடினீர்களா? இல்லையா? முதலில் அதற்கு விளக்கம் சொல்லும்"

"ஆமாம் சொன்னேன். நீங்களெல்லாம் குட்டி மறிக்க ஒரு கோட்டு ஆனை (ஒரு தந்தத்தை உடைய யானை) யைப் பெற்றாள் என்றல்லவா பாடினேன்"

"அதிருக்கட்டும். முதலில் நீர் எமக்கு விளக்கம் சொல்லும். எம்பெருமானை நீர் எப்படி மாடுமேய்ப்பவன் என்று பாடலாம்?"

"ஆமாம் சொன்னேன். உங்கள் பெருமாள் கண்ணன் அவதாரம் எடுத்து மாட்டிடையர்களோடு சேர்ந்துகொண்டு மாடுகளை மேய்ந்து ஆவுடையான் எனப் பெயரெடுக்கவில்லையா? அதைத்தான் மாடுகளின் அரசன் என்று கூறினேன்"

இப்பொழுது சிவ பக்தகோடிகள் எழுந்து "ஆம்! ஆம்! தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. மாட்டிடையன் தானே கண்ணன். ஆனால் எங்கள் இறைவன் எந்த ஆடுகளை மேய்த்தார்? அவரை எப்படி நீங்கள் ஆட்டிடையன் என்று சொல்லலாம்?" என்று பிடித்துக் கொண்டனர்.

"சிவபக்தர்களே! ஆட்டிடையன் என்றால் ஆடுகளை மேய்ப்பவன் என்பது மட்டும்தான் பொருளா? உங்கள் சிவன் தில்லையில் ஒற்றைக் காலைத்தூக்கிக் கொண்டு முக்காலமும் ஆடிக்கொண்டேயிருக்கிறானே! முத்திரை பிடிப்பவனுக்கு (அபினயம்) ஆட்டன் என்றல்லவா பெயர்.
அதனால்தான் ஆடும் இடையை உடையவன் என்று சொன்னேன்"

இத்துணை நேரம் கோபத்தணலில் வெந்துகொண்டிருந்த மக்கள் இப்பொழுது சற்றே தணிந்து எமது கடவுள்களையெல்லாம் தன் புலமைத்திறத்தால் ஒரே பாடலில் ஒன்றிணைத்துப் பாடிய புலவர் நாவுக்கரசர் "வாழ்க! வாழ்க!" என ஆராவாரம் எழுப்பிக்கொண்டே தங்கள் வீடுகளை நோக்கிச் செல்லத் துவங்கினர்.

பின்குறிப்பு:-

அய்யா சுப்பு ரத்தினம் அவர்களின் குரல் வளத்தைப் பாராட்டிக் குறள் வெண்பாப்பாடி அவரது வலையின் பின்னூட்டில் இட்டிருந்தேன்.

பாடல் இதுதான்:-

வேய்ங்குழலோ? கிள்ளை மொழிதானோ? சேய்றன்
குரலோ? விதுயாழோ? கூறு!

பல்லில்லாக் கிழவனை நீர் இப்படியா வஞ்சப் புகழ்ச்சி செய்வது? என்று மனிதர் பொங்கியெழுந்து விட்டார்.

இல்லையய்யா! உண்மையாகத்தான் வியந்துப் பாடினேன் என்றேன்.

அப்படியா? வஞ்சப் புகழ்ச்சி அணியைப் பற்றி என்போன்ற எளியோரும் அறியும் வன்னம் வெண்பாவில் தாரும் என்றார்.

சுப்பய்யா கேட்டமையால் வஞ்சப் புகழ்ச்சி என்றால் என்ன என்பது பற்றி நான் வடித்த வெண்பாக்கள்.

காணப் பொருளொன்றும் கண்ணுற் றுணருங்கால்
பேணுபொருள் வேறாப் பிறங்கிவரக் -காணுவதாய்
உள்ளொன்று வைத்துப் புறமொன் றுணர்த்துவதை
நல்வஞ்சம் என்பேன் நயந்து!

அஞ்சுவ தஞ்சிமற் றஞ்சாத வஞ்சாது
நெஞ்சிலெழும் செம்பொருளை நேர்நிறுத்திச் செய்கவியுள்
மிஞ்சும் இகழுமித மிஞ்சும் புகழ்மொழியும்
வஞ்சப் புகழுள் வரும்!

அகரம்.அமுதா

23 கருத்துகள்:

ஜீவா (Jeeva Venkataraman) சொன்னது…

சிலேடையினைக் கொண்டு அந்நாளில் புலவர்கள் எப்படி விளையாடி இருக்கிறார்கள் என்பதற்கு இஃது இன்னுமோர் சான்று! இந்த இலக்கிய இன்பத்தினை பருகிட அளித்த உங்களுக்கும் அதைக் கேட்டுக்கொண்ட சுப்புரத்தினம் அய்யாவுக்கும் நன்றிகள்!

அகரம்.அமுதா சொன்னது…

நன்றி! நன்றி! நன்றி! திரு ஜீவா அவர்களே!

கவிநயா சொன்னது…

வஞ்சப் புகழ்ச்சிக்கு நீங்கள் எடுத்துக் காட்டிய பாடல் மிக நன்று! இலக்கிய இன்பம் தொடரட்டும்!

sury சொன்னது…

நாவுக்கரசர் பாடியதா != நான்
நாவுக்கரசி பாடுகிறார் எனவோ
நினைத்தேன் ?

தொகச்சொல்லி, தூவாத நீக்கி, நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது என்பார் வள்ளுவர்.

எடுத்துச்சொல்ல முற்படும் கருத்துக்களை தொகுத்து,
தகாத (இடத்திற்குப் பொருந்தாத ) சொற்களை நீக்கி,
கேட்போர் மகிழும்படி சொல்வது மட்டுமன்றி,
கேட்கும் பொருளைக் கேட்டவர் ஒரு நன்மையும்
பெறவேண்டும். தூதுவர் கடமையாம்.

கலைவாணியின் மூத்த மகளோ நீவிர்
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியோ ! *
வலையுலகம் அள்ளிச்செல்ல தமிழ்
வாரி வழங்கும் பாரி வள்ளலோ !

"இல்லையா பின்னே ? " (துளசி மேடம் சொல்வாற் போல்)

நீ வாழி !

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
* இச்சொல்லில் சொற்குற்றமிருப்பின் மன்னிக்கவும்.

அகரம்.அமுதா சொன்னது…

மிக்க நன்றி கவிநயா!

அகரம்.அமுதா சொன்னது…

/// இச்சொல்லில் சொற்குற்றமிருப்பின் மன்னிக்கவும்///

அய்யா தாங்கள் என்னிடம் மன்னிப்புக் கெட்கலாமா? தங்கள் பாராட்டுக்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்!

அனுஜன்யா சொன்னது…

அமுதா,

உங்கள் வலைப்பூ பக்கம் வருவதை நிறுத்தி விடலாமா என்று யோசிக்கிறேன். நீங்கள் எட்டாத தூரத்தில் உள்ளதை எப்போதோ மனம் ஒப்புக்கொண்டு விட்டது. இங்கு பின்னூட்டம் எழுதும் அன்பர்களின் எழுத்துகளும் எனக்கு மிகுந்த தாழ்வு மனப்பான்மை தரும் வண்ணம் உள்ளது.

அனுஜன்யா

அகரம்.அமுதா சொன்னது…

அனுஜன்யா அவர்களுக்கு! இதில் தாழ்வு மனப்பான்மை கொள்வதற்கு என்ன இருக்கிறது? நீங்க எட்டாப்பு படிக்கிறீங்கன்னா நாங்க ஒன்பதாம்ப்பு படிக்கிறோம் அவ்வளவுதான். உங்களுக்கு ஓராண்டு சீனியர் நாங்க அவ்வளவே. தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும்? இந்த உலகிற்கு நாம் வரும்போது எதைத் தெரிந்துகொண்டு வந்தோம்? எல்லாமே இங்கு வந்து கற்றக்கொண்டதுதான். இப்போ பாத்தீங்கன்னா எனக்கு நன்றாக் வெண்பா எழுதும் திறமை இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். இது என் தனித்திறமை. தங்களுக்குக் குறுங்கவிதை மிக அழகாயும் ஆழமான போருட்செறிவுடனும் வருகிறது. அது உங்க தனித்திறமை. உங்களுக்குத்தெரியாததை நீங்களும் எனக்குத்தெரியாததை நானும் கற்றுக் கொள்வதுதானே அழகு!

இப்போ பாத்திங்கன்னா எனக்குக் கணினி மூன்று மாதங்களுக்கு முன் கையாளவே தெரியாது. இருப்பினும் சொந்த முயற்சியில் நானே சொந்தமாகக் கணினி வாங்கி சொந்தமா கற்றுக்கொண்டேன். நான் கற்றுக்கொண்டதற்கு எனக்குக் கணினி மீதிருந்த ஈடுபாடுதான் காரணம். உங்கள் ஈடுபாடு காட்டினால் எங்களையெல்லாம் மிஞ்சிவிடலாம்.

என்ன? சாத்தியமே இல்லை என்கிறீர்களா? இப்போ என்னை எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கு ஓராண்டுக்கு முன் இலக்கியம் என்றால் என்னன்னே தெரியாது. ஈடுபாட்டின் காரணமாக நாளும் ஒரு வெண்பாவீதம் படித்து இன்று எனக்கு பல இலக்கியப் பாடல்கள் குறைந்தது 400-500 பாடல்கள் தெரியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். காரணம் நான் காட்டிய ஈடுபாடு. முயலுங்கள் . முடியாதது கிடையாது.

ஜீவா (Jeeva Venkataraman) சொன்னது…

//இங்கு பின்னூட்டம் எழுதும் அன்பர்களின் எழுத்துகளும் எனக்கு மிகுந்த தாழ்வு மனப்பான்மை தரும் வண்ணம் உள்ளது.
//
அடக்கடவுளே!
வெண்பா எழுதக் கற்றுக்கொள்வது ஒண்றும் அப்படி கடினமானதே இல்லை. விதிகளை அறிந்தபின் அவற்றுக்கு ஏற்றாற்போல், சீர்களை அமைக்க வேண்டியதுதான். சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல், பழகப்பழக பழுக்கும் வெண்பா எழுதும் திறன்.
முதல் வெண்பா எழுத எனக்கு இரண்டு மணி நேரம் ஆனது. பின்னர் நான்காவது வெண்பா எழுத 10 நிமிடங்களே ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அகரம்.அமுதா சொன்னது…

அட! தேவலாமே! பத்து மணித்துளிகளில் வெண்பா எழுதிவிட முடிகிறதா? வியப்புத்தான். நான் வெண்பா எழுதத்துவங்கிய இந்த மூன்றாண்டுகளில் இப்பொழுதுதான் ஐந்து மணித்துளிகளில் எழுதமுடிகிறது. முன்பெல்லாம் கால் மணிநேரம் அரைமணிநேரம் ஆகும். துவக்கத்திலேயே இவ்வளவு விரைவாக வெண்பா பாடும் திறம் தங்களுக்குள்ளதைக் கண்டு எனக்குப் பொறாமையாக உள்ளது தோழர் ஜீவா அவர்களே!

ஜீவா (Jeeva Venkataraman) சொன்னது…

ஒரு சிலவற்றையே இதுவரை முயன்ற நானெல்லாம் இதுபற்றி பெரிதாக சொல்லிக்கொள்வது - சிட்டுக்குருவி பருந்தாக நினைத்து உயர உயர பறக்கப் பார்ப்பதுபோலாகும். முதலில் நிறைய எழுதிப்பழக வேண்டும் நான். இதுவரை சீர்கள் அமைப்பது, அடிமோனை அமைப்பது - இவ்வளவே அறிந்தது. இனிமேல்தான் சீர்மோனைகளை, தொடைகளை முயலவேண்டும். பின்னர் இன்னும் கூடுதல் நேரம் பிடிக்கும்!

அகரம்.அமுதா சொன்னது…

அப்படில்லாம் இல்ல ஜீவா! உங்க முதல் வெண்பாவைப் பார்த்ததுமே எனக்கு வியப்பு. முதற்கவிதையே பொருட்செறிவோட எழுதுகிற நீங்க இலக்கணத்தை முழுமையாத் தெரிந்து கொண்டால் நிச்சயம் ஒரு கலக்குக் கலக்கலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அடுத்த பாடத்தை இன்னும் இருநாட்களில் தந்துவிடுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும் நேரமில்லை.

ஜீவா (Jeeva Venkataraman) சொன்னது…

நல்லது மேடம், நிதானமாகத் தரவும்.

கவிநயா சொன்னது…

//உங்கள் வலைப்பூ பக்கம் வருவதை நிறுத்தி விடலாமா என்று யோசிக்கிறேன். நீங்கள் எட்டாத தூரத்தில் உள்ளதை எப்போதோ மனம் ஒப்புக்கொண்டு விட்டது. இங்கு பின்னூட்டம் எழுதும் அன்பர்களின் எழுத்துகளும் எனக்கு மிகுந்த தாழ்வு மனப்பான்மை தரும் வண்ணம் உள்ளது. //

அட, நீங்க வேற. என்னோட பின்னூட்டங்களை பார்த்துமா இப்படி சொல்றீங்க?! அப்ப நானுமில்ல வரக்கூடாது... :)

அகரம்.அமுதா சொன்னது…

அய்யய்யோ! அப்ப நான் ஒண்டியா ஒக்காந்து சிங்கியடிக்க வேண்டியது தானா? ஆத்தா கவிநயா அனுஜன்யா இப்படி எல்லோரும் கூடி பேசிவச்சிக்கிட்டு என்பக்கம் வராம இருந்தா ஒங்கமேல அறம் பாடியே உங்களையெல்லாம் சபிச்சிடுவேன். நியாபகம் இருக்கட்டும்.

கவிநயா சொன்னது…

அகரம்.அமுதா! நான் அவங்களுக்கு ஆறுதலா சொன்னதை, நீங்க வேற மாதிரி புரிஞ்சிக்கிட்டீங்க! :) வேற எந்த பக்கத்துக்கு வரலன்னாலும் இலக்கிய இன்பம் துய்க்க வந்துருவேன் :)

அகரம்.அமுதா சொன்னது…

அட சும்மா விளையாட்டுக்கு அப்படி எழுதினேன்.

///வேற எந்த பக்கத்துக்கு வரலன்னாலும் இலக்கிய இன்பம் துய்க்க வந்துருவேன்///

மிக்க நன்றிகள் கவிநயா!

அனுஜன்யா சொன்னது…

அமுதா, ஜீவா மற்றும் கவிநயா,

ஆறுதல் மொழிகளுக்கு நன்றி. சுலபமாக, சுமார் இருநூறு வார்த்தைகளில் மட்டுமே விளையாடி, வரிகளை வெட்டி அதற்கு கவிதை என்று நானே பெயர் சூடி மகிழ்ந்து கொண்டிருக்கையில், வெண்பா என்பது வேம்பாகத்தான் தெரியும். இலக்கண அறிவுடன், நல்ல மொழியறிவும் வெண்பா எழுத அவசியம் எனக் கருதுகிறேன்.

தாழ்வு மனப்பான்மை என்பது தவறான பிரயோகமாகப் படுகிறது தற்போது. ஒரு மாதிரி 'உயர்வு நவிற்சி அணி' என்று சொல்லித் தப்பித்திருப்பேன் என்போல இலக்கணம் அறியாத குழுமம் என்றால்.

தட்டுத் தடுமாறி வெண்பாக்களை முழுதும் புரிந்து கொள்ளும் திறனாவது எய்தும் வரை விடுவதாக இல்லை.

அன்புடன் அனுஜன்யா

அகரம்.அமுதா சொன்னது…

ஆஹா! இந்த துணிவிருந்தால் எதையும் எளிதில் வென்றுவிடலாம் அனு!

குமரன் (Kumaran) சொன்னது…

அகரம் அமுதா.

அவரது இன்னொரு பெயர் திருமால் என்பதால் பெருமாள் பெருமால் ஆகிவிட்டாரா? சொற்குற்றம் இருந்தாலும் பொருட்குற்றம் ஏற்படவில்லை. :-)

இந்த எல்லாக் கடவுளரையும் ஒருங்கே சொல்லும் பாடலை முன்பே படித்திருந்தாலும் மீண்டும் உங்கள் விளக்கங்களுடன் படிக்கச் சுவையாக இருக்கிறது.

சுப்பு ஐயா அவர்களுக்காக எழுதித் தந்த வஞ்சப்புகழ்ச்சியின் வரையறை கூறும் கவிகளும் அருமை. எளிமை.

நான் இப்பத் தான் இந்தப் பக்கம் வரத்தொடங்கியிருக்கேன். அறம் பாடுவேன்னு நீங்க எங்க அக்காவை மிரட்டுறதப் பாத்தா இனிமே வராம இருந்துரலாமான்னு நினைச்சேன். ஆனா விளையாட்டுக்குச் சொன்னேன்னு சொல்லித் தப்பிச்சீங்க. இல்லாட்டி நான் உங்க மேல அறம் பாடியிருப்பேன். :-) (ச்சும்மா. எனக்கெல்லாம் ஒழுங்காவே ஒரு வரி எழுத வராது. இதுல அறமாவது மறமாவது).

அகரம்.அமுதா சொன்னது…

வாருங்கள் குமரம்! அறம்பாடிவிடுவேன் என்று நான்சொன்னதையே எனக்குச் சொல்லி என்னைப் பயமுறுத்திவிட்டீர்களே! வாழ்த்துக்கள். மன்னிக்க! கவனக்குறைவாகச் சிலஇடங்களில் தவறுநேர்ந்துவிடுகிறது. சுட்டியதற்கு நன்றி. மீண்டும் வருக. உணர்ந்ததை பின்னூட்டத்தில் தருக!

கவிநயா சொன்னது…

//பாடுவேன்னு நீங்க எங்க அக்காவை மிரட்டுறதப் பாத்தா இனிமே வராம இருந்துரலாமான்னு நினைச்சேன்.//

ஆஹா! ச்சோ ச்வீட் :) தம்பின்னா தம்பி, சொக்கத் தங்கக் கம்பி! :))

அகரம்.அமுதா சொன்னது…

///// கவிநயா said...
//////பாடுவேன்னு நீங்க எங்க அக்காவை மிரட்டுறதப் பாத்தா இனிமே வராம இருந்துரலாமான்னு நினைச்சேன்.//

ஆஹா! ச்சோ ச்வீட் :) தம்பின்னா தம்பி, சொக்கத் தங்கக் கம்பி! :))///////

ஆஹாஹாஹாஹாஹாஹா! கிளம்பிட்டாங்கய்யா! கிளம்பிட்டாங்கய்ய்ய்ய்ய்யா!