திங்கள், 28 ஜூலை, 2008

இரவு!

பொதுவாக நம் கடைக்கழகப் புலவர்களைப் புலவர்கள் என்பதைவிட இரவலர்கள் என்பதே பொருத்தமாயிருக்கும். ஏனெனில் கடைக்கழகப் புலவர்கள் முதற்கொண்டு மாகவி பாரதி முடிய புரவலர்களைப் பாடிப் பரிசில் பெறுவதைத் தொழிலாக் கொண்டிருந்தனர் என்றால் அது மிகையாகாது.

கடைக்கழக நூல்களில் ஆற்றுப்படை புறநானூறு போன்ற நூல்களை அறிந்தவர்களுக்கு நான் கூறுவதில் சிறிதேனும் உண்மையிருப்பது புரியும்.

பொதுவாக இரப்பவன் மிகத் தண்மையாகவும் கொடுப்பவர் மிடுக்காகவும் இருத்தல் இயல்பு. ஆனால் நம் புலவர்கள் புரவலர்களிடம் இரந்துப்பெறும் போதும் மிகவே மிடுக்காக நடந்து கொள்பவர்களாயிருந்திருக்கிறார்கள். தான் யாரிடம் இரக்க வேண்டிச் செல்கிறானோ அவன் புரவலனாயிருப்பினும் பேரரசனாயிருப்பினும், குறுநில மன்னனாயிருப்பினும் அளவுக்கதிகமாகப் புகழ்வதோடு தேவைப்பட்டால் அவனுக்கு அறிவுரை நல்குவதோடு நில்லாமல் அவன் தீச்செயலை இடிந்து கூறவும் செய்திருக்கிறார்கள்.

இது எத்தகைய இரப்பு? நம் வாழ்வியல் நடைமுறைக்கு மாறான அதே வேளையில் புரவலர்களே கண்டு அஞ்சும் படியான இரவலர்களாக விளங்கியிருக்கிறார்களே!

கடைக்கழகப் புலவர்களின் நிகர்காலப் புலவர் வள்ளுவர் இரவலர்களைப் பற்றி கூறுகையில்:-

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரம்பிடும்பை
தானேயும் சாலும் கரி! -என்கிறார்.

(இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளக் கூடாது. அவன் அடைந்துள்ள வறுமையே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக உள்ளது.)

நிகர்காலப் புலவன் என்பதால் வள்ளுவரின் பொன்னுரைகள் பிற புலவர்களுக்குச் சென்றுசேறாமலும், தெரியாமலும் இருந்திருக்கலாம்.

இரவலராகச் சென்ற பெண்பாற் புலவரான அவ்வையை அதியமான் நெடுமான்அஞ்சி கண்டுகொள்ளா திருந்ததற்காய் அவன்மீது சினமுற்று, "எத்திசைச்செலினும் அத்திசைச் சோறே" என்று எடுத்தெறிந்துப் பேசுகிற இவ்விரவு எத்தகைய இரவு?

புறநானூற்றின் வேறோரிடத்தில் புரவலனிடம் இரந்து பெறச் சென்ற பெருஞ்சித்திரனாரிடம் தன் பணியாளைக் கொண்டு பரிசில் அளித்தமைக்காய்ச் சினந்து

யாங்கறிந்தனனோ தாங்கு அருங்காவலன்?
காணாது ஈந்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணி
தினையனைத் தாயினும் இனிது

-என்று புரவலனின் அத்தகைய பண்பை இகழ்ந்துரைப்பது புனைந்த பாடல்களை விற்று பரிசில் பெற நானொன்றும் வாணிகன் அல்ல என்பது எத்தகைய பண்பு?

தினையளவு கொடுப்பினும் இன்முகத்தோடு கொடுப்பதை ஏற்றுக்கொள்வதோடு மட்டும் நில்லாமல், "நீ வழங்கிய இச்சேலை நைந்து நூல்நூலாகப் போகக் கூடம் ஆனால் என் பாடல் அப்படியா?" என்று அதியமானைப் பார்த்து அரைகூவும் அவ்வையின் இறுமாப்பை என்னவென்பது?

ஒருவன்தானாக விரும்பிக் கொடுப்பதை எற்பது இகழ்ச்சி. எனக்குக்கொடு எனக் கேட்பது அதனினும் இகழ்ச்சி. இதில் கொடுத்ததைத் தரம் பார்ப்பது ஏற்புடையதா?

கல்போது பிச்சு ஐயர் என்போர் இரக்கக் கண்டு இல்லை எனும் புரவலனை பார்த்து:-

போடிநகர்ப் புரவலனே நின்மீது கவிபாடிப்
போந்த என்னை
வாடிமறுகிடச் செய்தாய் மனத்திலினிப் பொங்குசினம்
மனையாய் மீதில்
கோடிமடங் கானாலும் நின்னூரின் பெயர்தன்னைக்
குறிப்ப தாலே
போடியெனச் சொலமாட்டேன் வாடியென எக்காலும்
புகலு வேனே!

(உன்னைப் போற்றிப் பாடிப்பரிசில் பெறப்போந்த எனக்கு பரிசில் இல்லை எனச்சொல்லி எனை வாடச்செய்தவனே! போடி என்பது நின்ஊர்ப்பெயர் ஆகையால் நின்பெயரையோ நின் ஊர்ப்பெயரையோ இனி என்வாயால் சொல்லமாட்டேன் என்னும் கொள்கையால் என் மனைவியின் மீதில் எனக்கு அடங்காக் கோபம் ஏற்படினும் அவளை அவள்அப்பன் வீட்டிற்குப் போடி எனக்கூறமாட்டேன் பதிலாக வாடி வாடி எனச்சொல்வேனே!)

என அடங்காக் கோபமுறுவது எத்தகைய தன்மை?

இருப்பவன் வழங்குவது என்பது அவன் நற்குணத்தைக் காட்டுகிறது. இல்லையெனக் கூறுவது இடிந்துரைக்குமளவிற்கு அத்துணைப்பெரிய குற்றமா?

வஞ்சகர்பால் நடந்தலைந்த காலிற் புண்ணும்
வாச(ல்)தொறும் முட்டுண்ட தலையிற் புண்ணும்
செஞ்சொல்லை நினைத்துரூகு நெஞ்சிற் புண்ணும்
தீருமென்றே சங்கரன்பால் சேர்ந்தே னப்பா!
கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்
கொடுங்காலால் உதைத்தபுண்ணும் கோப மாகப்
பஞ்சமரில் ஒருவ(ன்)வில்லால் அடித்த புண்ணும்
பாரென்றே காட்டிநின்றான் பரமன் தானே!

என்று இராமச் சந்திர கவிராயர் புரவலனையும் நொந்து பரம்பொருளையும் நொந்து தன்னையும் நொந்துகொள்ளும் இச்செயல் எத்தகையது?
இல்லை எனச்சொல்வானிடம் இரக்கச் சென்றதே தவறு. இதில் இல்லை என்றவனை இகழ்ந்தரைத்தல் எத்தகைய மேன்மையது?

ராஜமாகா ராஜேந்த்ர ராஜகுல சேகரன்ஸ்ரீ
ராஜ ராஜன்
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க டேசரட்ட
சிங்கன் காண்க!
வாசமிகு துழாய்த்தாரான் கண்ணனடி மறவாத
மனத்தான் சக்தி
தாசனெனப் புகழ்விளங்கும் சுப்ரமண்ய பாரதிதாசன்
சமைத்த தூக்கு!

மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த மன்னரிலை
என்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம் புனைந்தபொழு
திருந்த தன்றே!
சோன்னலமும் பொருணலமும் சுவைகண்டு சுவைகண்டு
துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல் தமிழ்ச்சுவைநீ
களித்தாய் அன்றே!

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் தமிழ்மொழியைப்
புகழி லேற்றும்
கவியரசன் தமிழ்நாட்டிற் கில்லையெனும் வசையென்னாற்
கழிந்த தன்றே!
சுவைபுதிது! பொருள்புதிது! வளம்புதிது! சொற்புதிது!
சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை
என்று போற்றி

பிரான்ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர் புலவோரும்
பிறகு மாங்கே
விராவுபுகழ் ஆங்கிலத்தீங் கவியரசர் தாமுமிக
வியந்து கூறிப்
பராவியென்றன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப் போற்றுகின்றார்
பாரோ ரேத்துந்
தராதிபனே! இளசைவெங்க டேசரெட்டா! நின்பால்அத்
தமிழ்கொ ணர்ந்தேன்!

வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென் கவிதையினை
வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட நீகேட்டுநன்கு போற்றி
ஐயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் பொற்பைகள்
ஜதிபல் லக்கு
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப் பல்லூழி
வாழ்க நீயே!

என்று பாரதி புகழ்த்து கூறுமிடத்தில் மன்னனைப் புகழாது அவனுக்கு நிகராகத் தன்புகழைப் பரைசாற்றிக் கொள்வது என்பது எவ்வகையில் ஏற்புடையது? கொடுப்பதைக் கொடு எனஇராது தனக்குகந்ததைக் கேட்டுப்பெருதல் எத்தன்மையது?

கால்விழுந்து எம்மைக் கவிபாடச் சொன்னானோ?
மேல்விழுந்து யாமே விளம்பினோம் -நூலறிந்து
தந்தக்கால் தந்தான் தராக்கால் நமதுமனம்
நொந்தக்கால் என்னா குமோ?

(அப்பாடா! இந்த ஒரு புலவன்தாய்யா தன்னோட தவற்றை உணர்ந்து, "அவனா என்காலில் விழுந்து என்னைப் பாடு என்றான். நாமன்றோ அவன்பாலில் விழுந்துப் பாடினோம். நூலின் மேன்மையறிந்தவனாக இருந்தால் தந்திருப்பான். அவனோ அறியாதவன். இப்போழ்து அவனை நொந்து என்ன பயன். நம்மைநாமே நோந்துகொள்வதல்லவோ சரி?" எனத் தன்னை நொந்துகொண்டவன் இவன் ஒருவனாகத் தானிருக்கும்)

கொடுத்தால் புகழுரையும் கொடாக்கால் கொடுஞ்சொல்லும் புகலும் புலவர்களைப் புரவலர்கள் சும்மாவிட்டு வைத்ததும் ஏன்?

இரந்துப்பெறுவதையும் இறுமாப்போடு பெறும்குணத்தை இரவலர்களுக்கும் இறுமாப்போடு இரப்போர்முன் இன்முகம் காட்டி ஈயும் பண்பைப் புரவலர்களுக்கும் ஏற்படுத்தியது எதுவாயிருக்கும்?

ஆம். அதுதான் கல்வி. இக்கல்வி குடிகொண்டவன் முன் எத்துணை செல்வி தன் இல்லில் குடிகொண்டவனாயினும் மதிப்பதும் மரியாதை செய்வதும் பழமரபில் இன்றியமையாததாக இருந்திருத்தல் வேண்டும். அம்மரபே கற்காலத்தில் வேர்விட்டுத் தற்காலம் வரை கிளைவிட்டு வந்திருக்க வேண்டும்.

கற்கால முதலே கல்வியை செல்வம் போலவே கருதிப்பேணி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அத்தகைய அழியாச்செல்வத்தின் முன் பிற செல்வங்கள் மதிப்பில் தாழ்ந்ததாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆகையினால்தான் அவ்வழியாச்செல்வமும் மதிப்பிற்குறிய செல்வமுமாகிய கல்விச்செல்வத்தை உடையோர் இரத்தலையும் பெருமையின் கண்கொண்டே பார்க்கப்பட்டும் இல்லை எனாது ஈயப்பட்டும் வந்திருக்கிறது.

பண்டைய மன்னர்கள் கல்விச்செல்வத்தைத் தன் கண்ணெனக் காத்தும் கல்வியாளர்களைத் தன் இயதயத்துள் வைத்து இச்சித்தும் மழலை செய் பிழையை அன்னை பொறுத்தல் போல் கல்வியாளர்கள் செய்பிழையைக் காவலர்கள் பொறுத்திராவிட்டால்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன் -மன்னற்குத்
தன்றேச மல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு!

என்று மன்னனின் அவையின் கண்ணேபாடி அவனிடமே பரிசிலும் வாங்கிவர முடிந்திருக்குமா?

அகரம்.அமுதா

திங்கள், 21 ஜூலை, 2008

கண்டேன் சீதையை!

கம்ப காவியத்தில் ஓர் காட்சி. சீதையிருக்குமிடம் கண்டுவர அனுமனைப் பணிகிறான் காகுந்தன். இலங்கை மாநகர் சென்று சீதையிருக்குமிடம் அறிந்த அனுமன் நேராய் இராமனிடம் வருகிறான்.

எதிரில் இராமன். அவன் எதிரில் பணிவுடன் அனுமன். இராமன் இட்டப் பணியைச் செவ்வனே நிறைவேற்றிய அனுமன் தான் சீதையைக் கண்டதை உரைக்கவேண்டும். இது காட்சி.

எப்படித் துவங்குவது? "சீதை" என்று தன் பேச்சைத் துவங்குவானாயின் இராமனுக்கு அவ்வொரு மணித்துளியில் "சீதையை இவன்பார்த்தானா?" என்னும் வினா எழுந்து விடும். "இலங்கை மாநகர்" என்று அனுமன் துவங்குவானாயின் "அங்குச் சென்றாயா? அங்குதான் என்மனைவி சிறையிருக்கிறாளா?" என்னும் வினா ஓர் மணித்துளிகள் நிலவும். "இராவணன்" எனத்துவங்குவானாயின் "இராவணன்தான் தன் மனையைக் கடத்திச் சென்றானா?" என்னும் ஐயம் ஓர் மணித்துளிகள் நின்றுமறையும்.

எப்படித் துவங்குவது?. அனுமன் சற்றே எண்ணிப்பார்க்கிறான்.இங்குதான் கம்பன் தன் பாத் திறத்தை முழுமையாய்க் காட்டி மிளிர்கிறான் என்று கம்பநாட்டாரை அறிந்த ஆன்றோர்கள் உரைப்பர்.

இராமன் சீதையையல்லவா கண்டுவர அனுமனைப் பணிகிறான்? அவளைக் கண்டுவந்த அனுமன் "சீதையை" என்று மொழிவானாயின் இராமனுக்கு "சீதையை?" (கண்டாயா? இல்லையா?) என்கிற வினா எழுந்துவிடுமாம்.

இராமனுக்குச் சற்றும் தன்சொல்லில் ஐயம் எழக்கூடா தெனக்கருதியும். அவ்வொரு மணித்துளி மனவருத்தத்தையும் அவனுக்குத் தான் அளிக்கக்கூடா தெனக்கருதிய அனுமன் கண்டேன் சீதையை என்றானாம்.

இக்காட்சியைக் கம்பனின் பாத்திறத்திற்குக் காட்டாக ஆன்றோர்கள் கூறுவது வழக்கம்.

மேலும், "கற்பினுக் கணியையைக் கண்களால்" ( சீதை கற்புடன் தான் இருக்கிறாள் என்பதை அவள் கண்களால் பார்த்தேன்) என்று அனுமன் இராமனிடம் உரைத்ததற்குக் காரணம் சீதையைக் கடத்திய இராவணனின் சொல்லுக்குப் பணிந்து அவனோடிணங்கி விட்டிருப்பாளோ? என்கிற ஐயம் உள்ளுற இராமனுக்கு இருந்தது. அதனை அகற்றும் விதமாய் அனுமன் அவ்வாறுரைத்தான் என்பர்.

"கண்டெனன், கற்பினுக் கணியையைக் கண்களால்" என்னும் பாவடிக்கு ஆன்றோர்கள் கூறும் அக்கருத்தோடு அவ்வரியின் முழுபொருளும் முற்றுபெற்று விட்டதா? என்பதில் எனக்கு ஐயம் ஏற்பட்டது.

என் சிற்றறிவு அதனினும் நுன்னிய பொருட்செறிவை உள்ளொளித்தே கம்பன் அவ்வரிகளை இயற்றியிருக்க வேண்டும் எனச்சொல்லிற்று.

அவ்வுட்பொருள் யாதாயிருக்கும்? அதைப்பற்றி ஆராய்வோம்.

பொதுவாக இராமன் சீதை அனுமன் போன்ற பல பாத்திரங்களைக் கம்பன் வால்மிகியின் மூலக்கதையினின்றும் முரண்பட்டு கடவுள் நிலைக்கு உயர்த்திப் படைத்தமை மாநிலம் அறிந்த மர்மம்.

காட்டுக்கள் காட்டவெனில் ஆயிரம் காட்டலாம். நாம் இங்கு காணும் காட்சி அனுமனை முதன்மைப்படுத்தியே என்பதால் அனுமனைக் கம்பன் கடவுளாய் உருவகித்துப் பாடிய பாடலை மட்டும் காட்டாகப் பார்த்துவிட்டு காட்சிக்குச் சென்றுவிடலாம்.

அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றா றாக ஆரியற் காகஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக்காப்பான்.

அனுமன் இராமனின் அடியவனாயினும் அவனிடம் பேராற்றல் நிறைந்துள்ளமையைக் கம்பர் பலவிடங்களிற் காட்டத்தயங்கவில்லை.

முக்காலும் உணர்ந்தவனாகவே அனுமன் இருக்கிறான்.
இப்பொழுது நாம் காணவிருக்கும் காட்சிக்கு வந்துவிடுவோம்.

அனுமன் தென்னவன். தென்னவர்களிடம் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் ஒன்று இன்னாரிடம் இதைப்பேசலாம் இதைப்பேசக் கூடாதென்ற வரைமுறை அவற்றுள் ஒன்று.

இராமனோ (கம்பன் காவியப்படி) கடவுள். (அல்லது அந்நிலைக்கு உயர்த்தப் பட்டவன்.) அனுமன் இராமனுக்கு அடியவன்.

மனிதர்களுள் இன்னாரிடம் இதைஇதைப் பேசலாம் பேசக்கூடாது என்கிற வரைமுறையுள்ளது போல் கடவுளாக ஏற்றுக்கொண்ட இராமனிடம் அடியவனான அனுமன் இதையிதைப் பேசலாம் கூடாது என்கிற வரையரையுண்டல்லவா?

இராமன் அனுமனுக் கிட்ட பணி சீதையைக் கண்டுவா என்பதே. காணச் சென்றவனும் கண்டுவந்தவனுமான அனுமனுக்கு இராமன் சீதையை மீட்பான் என்பதும் அவள் கற்பில் ஐயுற்றுத் தீயில் தீய்ப்பான் என்பதும் முன்கூட்டியே அறிந்தவனாயுமிருக்கிறான்.

இராமன் சீதையின் கற்பில் ஐயுறவிருப்பதை முன்கூட்டியே சுட்டவும் குட்டவும் கருதிய அனுமன் அதை தான் ஆசானாய் எற்றவனிடம் நேர்முகமாய் உரைத்தல் மரபாகா எனக்கருதி இக்காட்சியைப் பயன் படுத்தி, "கண்டேன் சீதையை. மேலும் அவள் கற்புத்தன்மை குன்றாது விளங்குகிறாள் என்பதை அவள்கண்களால் பார்த்தேன்" என்கிறான்.

"அடே மடையா! நாளை உன் மனையை மீட்டுவந்தபின் அவள் கற்பில் ஊரார் ஐயுறினும் நீ ஐயுறாதிருப்பாய். ஊரோடு ஒப்புர ஒழுகி அவளைத் தீயில் இறக்கிவிடாதே!" என்பதை நேர்முகமாகச் சொல்லமுடியாத அனுமன் அதனை இக்குறிப்பால் உணர்த்தியதாகவே என் சிற்றறிவுக்குப் படுகிறது.

இல்லையெனில் "கண்டெனென்" என்றுமட்டும் கூறாமல் அனுமன் ஏன்? "கற்பினுக் கணியையைக் கண்களால்" என்று மிகைப்படுத்திக் கூறினான் என்பதை இவ்வரையைப் படிக்கும் ஆன்றோர்களே கூற வேண்டும்.

அப்பாடல் இதோ:-

கண்டெனன் கற்பினுக் கணியையைக் கண்களால்
தென்திரை அலைகடல் இலங்கைத் தென்னவ
அண்டர் நாயக இனிதுறத்தி ஐயமும்
கொண்டுள்ள துயரும் என்றனுமன் பண்ணுவான்.

அகரம். அமுதா

திங்கள், 14 ஜூலை, 2008

மழலைச்செல்வம்!

நாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு செல்வத்தை வேண்டியும் பெற்றும் வருகிறோம். இளமையில் கல்விச்செல்வம் கேள்விச்செல்வம் இவ்விரண்டால் வாய்க்கும் அறிவுச்செல்வம் வாய்த்த அறிவால் ஈட்டும் பொருட்செல்வம் என ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற செல்வத்தைப் பெற்று வருகிறோம்.

அடுத்த நிலையாக நாம் அடையத்துடிக்கும் ஒப்பற்ற செல்வம் ஒன்றுண்டு.

அச்செல்வத்தை கற்றார், கல்லார், உள்ளார், இல்லார், நல்லார், பொல்லார் என்றில்லாது எல்லார்க்கும் வாலறிவன் வழங்கும் மழலைச்செல்வம்.

பிற செல்வங்களைப் பெறாவிடினும் இழுக்கில்லை. இச்செல்வத்தைப் பெறாவிடின் இழுக்கன்றி வேறில்லை. மழலை பெறாமுன் மலடி என வழங்குவோரும் சேயொன்றைச் சுமந்தீன்றால் தாயென்று சாற்றுவர்.

பிற செல்வங்கள் பெறாவிடின் பெறாஅவ்வொருவருக்கே இழுக்கும் தாழ்வும். மழலைச்செல்வம் பெறாவிடின் இழுக்கு இல்லாள் கணவன் என இருவர்க்கும் ஏற்புடைத்து.

பிற செல்வங்கள் அச்செல்வங்களின் தன்மைக்கேற்பப் பயன்படும் வேளைகளில் மட்டும் நம்மை மகிழ்விக்கிறது. மழலைச்செல்வம் ஒன்றே இவ்வவ் வேளையென்றில்லாது எவ்வேளையிலும் நம்மை இன்பத்தில் ஆத்துகிறது.

பாடறியாப் பெண்களும் ஓர் மழலை பூத்து மடிதவழும் போழ்து ஜானகியாகவும் சித்ராவாகவும் மாறிவிடுகிறார்கள்.

ஏத்துணை வெகுளிபடைத்த வீரனாயினும் தன் மழலையை வாரியணைக்கும் போழ்து தானும் மழலையாகி விடுகிறான்.

இத்துணை இன்பம் பயக்கும் இம்மழலைச் செல்வம் இல்லா இல்லம் எதற்கெல்லாம் ஒக்கும் என சூளாமணி நமக்கோர் பட்டியலே போட்டுக் காட்டுகிறது.

தொக்கின மலர்த்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் பிறைவிரி விலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே!

ஆயின் இச்செல்வம் பெறாக்கால் வேறு எச்செல்வம் உடையாராயினும் அவரெல்லாம் செல்வம் உடையாரா? எனக் கேள்வி எழுப்புகிறான் புகழேந்தி.

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனும் உடையரோ? -இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்!

முடியில் தவழும் மழலையை அள்ளி முத்துப்பல் காட்டிச்சிரிக்கும் முழுநிலாவின் மாவடு கன்னத்தில் முத்தமொன்று வைக்க ஆனந்தம் காட்டி ஆர்ப்பரித்துக் குரலெழுப்புமே குழந்தை அம் மழலைமொழிக்கு மாற்றுளதோ?
இவ்வின் மொழியில் இன்புறா மாக்களன்றோ குழலும் யாழும் இனிதென்பர்!

குழலினிதி யாழினி தென்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!

பெறும் செல்வங்களுள் மக்கட்செல்வம் சிறப்பெனினும் அம்மக்கட் செல்வங்களுள் அறிவு நிரம்பிய மக்களைப் பெறுவதே பேரின்பமாகும்.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற!

பெறுவனவற்றுள் தலைசிறந்ததாயும் பெற்றோர்க்குப் பேருவகை செய்யும் செல்வமாயும் திகழும் மக்களைப் பெறுவது இனிதென்றால் அம்மக்கள் கைவிட்டளாவும் கூழ் குடிக்கும் இன்பம் இருக்கிறதே அது அமிழ்தை அருந்தும் தேவருக்கும் கிட்டாத பேரின்பமாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்!

பேறுடை மக்கட்செல்வமாயினும் அளவோடு பெறுதலே ஆனந்தமாகும்.

முன்பெல்லாம் நாமிருவர் நமக்கிருவர் என்னும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அரசியற்றி அறிவித்து வந்தது.

தற்காலத்தில் நாமிருவர் நமக்கொருவர் திட்டம் வலியுறுத்தப் படுகிறது.
காரணம் மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காய் மட்டுமல்ல. அளவில் மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சைப்போல அதிகம் மழலைகளைப் பெறுவதாலும் ஆனந்தம் கெட்டுவிடும் என்பதாலும் தான்.

இதனை நம் பழம்பாடல் உவமைச்செறுக்கோடு உரைப்பதைப் பாருங்கள்.

ஓர் மழலை ஈன்றால் அவ்வில்லத்திற்கு அம்மழலை கரும்பின் அடிபாகத்தைப் போல் செறிந்த இனிப்பை நல்குமாம்.

மேலொன்று பெறும் ஆசையால் இரண்டாய்ப் பெற்றால் அக்கரும்பின் நுனி பாகத்தைப்போல் (கொழுத்தடை) செறிவில்லாத இனிப்பையே ஈயுமாம்.

பிள்ளைகள் மூன்றாய்ப் பெறுவது வாயிலிட்ட புளியால் பல் கூசுதல் போன்ற புளிப்பைத் தந்து நம்மை அறுவறுக்கச் செய்துவிடுமாம்.

மூன்றிற்குப் பின்னும் ஒன்று பெற்றுக் கொள்வது கசப்பென்றுத் தெரிந்திருந்தும் வேம்பைக் கடித்துத் துன்புறுவதைப் போன்ற துன்பத்தையே நல்குமாம்.

ஆசையின் மிகுதியால் அதற்குமேம் பெறத்துடிப்போர்க்கு என்ன உவமை சொல்வது என்றே தோன்றவில்லை என்கிறது அப்பழம்பாடல்.

ஒன்று கரும்பினடி ஓங்குநுனி யேயிரண்டு
துன்றுபுளிப் பேமூன்று தோகாய்வேம் -பொன்றதன்மேல்
பின்னும் பலபிள்ளை பேறுடை யார்விருப்புக்
கென்னுவமை சொல்வேன் இனி?

அகரம்.அமுதா

வியாழன், 10 ஜூலை, 2008

தளை தட்டிய வெண்பா!

நாம் எப்பொழுதுமே நாம் கொண்டுள்ள கொள்கையை கருத்தை சொல்லை செயலை நியாயப் படுத்தவே முனைகிறோம். அது எவ்வளவு சிறிய செய்தியாக இருப்பினும் சரி அதை நியாயப்படுத்த பற்பல உக்திகளையும் கையாள்கிறோம். இது பிறரைப் பாதிக்காத வரை தவறில்லை.

நம்போன்ற எழுத்தர்களிடையே கவிஞர்களிடையே இப்பண்பு வெகுவாய் ஒட்டிக்கொண்டிருத்தல் வியப்பில்லை. அப்பண்பு நல்லாக்கங்களுக்குத் துணைநிற்குமானால் ஏற்புடையதே.

நானும் என்கருத்துக்களை எழுத்துக்களை நியாயப் படுத்திப் பலமறை நண்பர்களோடு வாதிட்டிருப்பினும் மூன்றே சொற்களையுடைய ஒரு கவிதையை எழுதிவிட்டு அதற்காக அரைமணி நேர வாதங்கள் புரிந்த அந்நிகழ்வை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

ஓர்முறை ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில் நண்பர்கள் அனைவருமாகச் சேர்ந்து இரவு உணவு உண்டுவிட்டுச் செல்லலாம் என்று ஓர் உணவுவிடுதிக்குச் சென்றோம்.

வாயை ஆலையாக்கி உணவை அரைத்துக்கொண்டிருக்கையில் ஓர் நண்பர் என்வாயைக் கிண்ட ஆரம்பித்துவிட்டார்.

"அமுதா! சந்ததமும் சமுதாயத்தைப் பற்றியும் இயற்கையைப் பற்றியுமே அதிகம் கவிதை பாடுகிறீர்கள். காதலைப் பற்றியோ காதல் தோன்றக் காரணமாம் பெண்ணைப் பற்றியோ கவிதையே தீட்டமாட்டேன் என்றிருந்தால் எப்படி?. இன்று நீங்கள் பெண்ணை வருணித்துக் கவிதை பாடியே தீரவேண்டும்" என்றுகூறி செதுக்கிய சிலை உயிர்பெற்றது போல் அசைந்துவந்து எங்களுக்கு உணவு பரிமாறிய சீனத்துப் பைங்கிளியைக்காட்டி இவளை வருணித்து உணவு உண்டுமுடிப்பதற்குள் கவிதை பாடிவிடவேண்டும். பாடினால்தான் நீங்கள் கவிஞர் என்பதை ஏற்றுக்கொள்வேன் என்று முடிவாகக் கூறிவிட்டார்.

இப்பெண்ணைப் பற்றிக் கவிதை பாடினால்தான் கவிஞர் என்பதையே ஏற்றுக்கொள்வேன் என்று கூறிய பிறகு நம் தன்மானம் விட்டுக்கொடுக்குமா? சரி என்று பாடத்துணிந்தேன்.

உண்டுமுடிப்பதற்குள் பாடிவிட வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டாரே. என்னசெய்வதென்றே தெரியாமல் மிகுசிந்தனைக்குப் பிறகு ஒரே ஒருவரியில் கவிதையெழுதி அவர்கையில் தந்தேன். (அந்த சீன குள்ள கத்தரிக்காய்க்கு அதுபோதாதா?)

பெண் என்று தலைப்பிட்டு எழுதிய கவிதை இதுதான்:-

தளை தட்டிய வெண்பா!

கவிதையை வாங்கிப் பார்த்த நண்பர் "என்ன அமுதா! விளையாடுறீங்களா? இந்த பெண்ணை வெண்பாவோடு உவமைபடுத்துறீங்க என்பது தெரிகிறது. வெண்பாவில் தளை தட்டுவதா? தளை தட்டினால் அதற்குப் பேர்தான் வெண்பாவா? தளைதட்டிய வெண்பாவை எழுதியவனும் நல்மரபறிந்த கவிஞனாக இருக்க முடியுமா?" என்று வினாக்களால் என்னை வறுத்தெடுத்து விட்டார்.

"அய்யா! கொஞ்சம் இரும். தளை தட்டிய வெண்பாவை எழுதியது நானல்லவே. அதை எழுதியவன் பிரம்மன். அவன் எழுதிய கவிதையின் வகையையும் தளைகளையும் ஆய்ந்து பார்த்து இது வெண்பாவகையைச் சார்ந்தது. தளை தட்டுகிற காரணத்தால் இது தளை தட்டிய வெண்பா என்று கண்டுபிடித்துச் சொன்னது மட்டும்தான் நான். நீங்கள் திட்டுவதாக இருந்தால் தளை தட்டுவது போல் வெண்பா வடித்த பிரம்மனைத் திட்டும்" என்றேன்.

"தளை தட்டுகிறது என்றீரே எங்கே தட்டுகிறது?" என்றார்.

"நன்றாக அந்த பெண்ணை உற்றுப் பாரும். முகம் தெரிகிறதா?"

"ஆம்".

"சங்குக் கழுத்துத் தெரிகிறதா?"

"ஆம்".

"மூங்கிற்றோள், முகிழ்தாமரை மார் தெரிகிறதா?"

"ஆம்".

"அம்மிக்கல் போன்ற இடுப்புத் தெரிகிறதா?"

"ஆம்".

"மாருக்கும் இடுப்புக்கும் இடையில் ஏதாவது தெரிகிறதா?"

"இல்லை".

"இப்பொழுது புரிகிறதா? அந்த பிரம்மன் எழுதிய இந்த வெண்பா தளைதட்டுகிறது என்று?" என்றேன்.

"வெண்பா என்றால் எதுகை மோனையெல்லாம் வேண்டுமே. இந்த வெண்பாவில் இருக்கிறதா?" என்றார்.

"என்னய்யா உம்மோடு பெரும் தொல்லையாய்ப் போய்விட்டது. வெண்பாவென்றால் எதுகை மோனையில்லாமலா? முன்நிற்பது மோனை பின்நிற்பது எதுகை அதுதானே மரபு? அவளை நன்றாய்க் கவனியும். மார் மோனையாகி முன்னும் இடுப்பின் பின்புறம் எதுகையாகி பின்னும் அழகுற அமைந்தது தெரியவில்லையா?" என்றேன்.

"வெண்பா வென்றால் தனிச்சீர் வேண்டுமே" என்றார்.

"அய்யா! இது இன்னிசை வெண்பா. இதில் தனிச்சீரெல்லாம் கிடையாது. ஆனால் கனிச்சீரும் பூச்சீரும் உண்டு" என்றேன்.

"வெண்பாவில் கனிச்சீரே வருதல் கூடாது. இதில் பூச்சீர்வேறு வருகிறதா? கனிச்சீரும் பூச்சீரும் வருவதை வெண்பாவென்றால் ஏற்றுக்கொள்ள நானென்ன காதில் பூசுற்றியிருக்கிறேனா?" என்றார்.

"அய்யா! கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள் தெய்வக்குற்றமாகி விடப் போகின்றது. இவ்வெண்பாவை எழுதியவன் பிரம்மன் என்றான பிறகு அதற்கு அப்பீலும் உண்டோ?" என்றேன்.

"கனிச்சீரும் பூச்சீரும் எங்கே வருகிறது? காட்டுங்கள்" என்றார்.

"என்னய்யா உமக்கு ஒன்றுமே விளங்க மாட்டேன் என்கிறது. விழியைப் பார்த்தீரா? குவளைப் பூச்சீர். மாரைப் பார்த்தீரா? கமலப் பூச்சீர். இதழைப்பார்த்தீரா? கொவ்வைக் கனிச்சீர். கன்னத்தைப் பார்த்தீரா? மாங்கனிச்சீர். போதுமா?" என்றேன்.

"வெண்பா வென்றால் நாள், மலர், காசு, பிறப்பு இவற்றிலொன்றைக் கொண்டு இற வேண்டுமே? இந்த வெண்பாவில் இதெல்லாம் உண்டா?" என்றார்.

"அதெல்லாம் இல்லாமலா? ஐயமிருப்பின் 'நாள்'தோறும் 'காசு'கொடுத்துப் 'மலர்'வாங்கி அப்பெண்ணுக்குச் சூடி அவளோடு மகிழ்ந்திருந்து பாரும். 'பிறப்பு' உறுதி" என்றேன்.

அகரம்.அமுதா

திங்கள், 7 ஜூலை, 2008

அடக்கமுடைமை!

கற்கவேண்டிய வற்றை நுட்பமாகக் கற்றாகி விட்டது. ஆய்ந்தறிந்துக் கற்றதனால் சொல்வளம் பெற்றாகி விட்டது. கற்றதாலும் சொல்வளத்தாலும் சிறந்தோர் முற்றிய நிலையை அடைந்து விடுகிறார். அடுத்ததாய் அவர் முற்றல் நிலையிலிருந்துக் கனியின் நிலையடைதல் வேண்டும். அதற்கென்ன வழி? அடக்கம்தான் அதற்கு வழி!

கற்றுச் சிறந்துப் பலரோடும் வாதிடும் வல்லமை பெற்ற நிலையில் நம்மையும் அறியாது ஓர் செருக்குத் தோன்றும். அச்செருக்கு என்னும் களை முளைவிடா வன்னம் களைந்தெடுப்பதே அடக்கமாகும்.

அடக்கமில்லார் கல்வி அக்கற்றோருக்கும் மற்றோருக்கும் எப்பயனும் நல்கா. பயன் செய்யாக் கல்வி நெல்லிடைப் புல்லே போன்றது. அவ்வடக்க மில்லாக் கல்வியைக் கற்றோனை கல்லாதவருள் வைத்துக்காண்பதே சாலும்.

எல்லாமும் கற்றபின்னும் நல்லடக்கம் இல்லாரைக்
கல்லாருள் வைத்தல் கடன்! -அகரம் அமுதா!

நெல்லிடைப் புல்லுக்கே நேராம்; அடக்கமில்லார்
கல்வியாலொன் றாவதில்லை காண்! -அகரம் அமுதா!

கற்றும் அடக்கமின்றிக் கல்லார்போல் தற்புகழ்வோரை அவ்வை:-

வான்குருவி யின்கூடு வல்லரக்கு தொல்கரையான்
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யறிதால் -யான்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது! -எனச் சாடுகிறார்.

பாரதிக்கு நிகழ்ந்த உண்மை நிகழ்வை முன்னெடுத்துச் சென்றால் உங்களுக்கு இலகவாய்ப் புரியும் எனநினைக்கிறேன்.

பாரதிக்கு அப்பொழுது 11 அல்லது 12 வயதிருக்கும். அவரின் கவித்திறத்தைக் கண்ணுற்ற ஆன்றோர்கள் சுப்ரமணியம் என்ற இயற்பெயரால் விளிக்கப் பட்ட அவருக்கு பாரதி என்னும் பட்டத்தை வழங்கினார்கள்.

இது பலசான்றோர்களுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிலருக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக எட்டையபுர அரசவைத் தலைமைப் புலவர் காந்திமதி நாதருக்கு இச்சம்பவம் பாரதிமேல் கடுஞ்சினத்தை ஏற்படுத்திவிட்டது.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த விடத்து! -என்பதைப் போல பாரதிக்கு இழுக்கிழைக்கும் வேளைபார்த்துக் காத்திருந்தார்.
அவ்வேளையும் வந்தது.

இடம்:- எட்டையபுர அரசவை
நேரம்:- ஆன்றோரும் சான்றோரும் குழுமித் தங்கள் கவித்திறத்தை அரங்கேற்றும் பொன்னந்திப் போழ்து.

அரசவைத் தலைமைப் புலவரான காந்திமதி நாதர் பாரதியை அவமானப் படுத்த இதுவே தக்க வேளை எனக்கருதி பாரதியை நோக்கி “உன்னை எல்லோரும் பாரதி (பாரதி-பண்டிதன்) என்றழைக்கிறார்களே! நான் வழங்கும் ஈற்றடிக்கு உன்னால் பாடலியற்ற முடியுமா?” என்கிறார்.

இளமை பயமறியா என்பதைப்போல் பாரதியும் இசைகிறான்.

“பாரதி சின்னப் பயல்!” இதுதான் அவர் அளித்த ஈற்றடி. 5மணித்துளிகளில் பாடலியற்றிவிட வேண்டும்.

அவைக்கண் குழுமிய ஆன்றோர் யாவருக்கும் பேரதிர்ச்சி. பாரதியால் இவ் ஈற்றடிக்கு நிச்சயமாக வெண்பா பாடமுடியாது. அப்படியே பாடிடினும் தன்னைத்தானே சிறுவன் என்று பாடிக்கொள்வதால் காந்திமதி நாதரின் எண்ணமும் நிறைவேறிவிடும். பாரதிக்கும் அதுவே இழுக்காகவும் அமைந்துவிடும்.

பாடிடினும் இழுக்கு. பாடாவிடினும் இழுக்கு. என்ன செய்யப் போகிறான் பாரதி என்று அனைவரும் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர்.

சற்றும் சலைக்காத பாரதி பாடிமுடித்தான். பாடலைக்கேட்டவுடன் அவைத் தலைமைப் புலவர் பெரும் கல்வியாளர் காந்திமதி நாதர் தன் தலையைக் கவிழ்த்துக்கொண்டார்.

பாரதி சின்னப் பயல்! என்று வெண்பா பாடினால் இவருக்கென்ன இழுக்கு என்கிறீரா? இழுக்கு நேர்ந்துதானே விட்டது.

அப்பாடலைப் பார்ப்போமா?

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் -மாண்பற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்!

தன்னைச் சிறுவனாக்கிவிட நினைத்த காந்திமதி நாதனையே சிறுவனாக்கப் பரிகசித்துவிட்டான் பாரதி.

அடக்கமொழுகாத, சொல்லும் சொல்லை ஓர்ந்துரைக்காத, கல்வியாளனுக்கு அவனினும் சிறியோரால் இழுக்கு நேரிடும். இதனை அறநெறிச்சாரம் படம்பிடித்துக்காட்டுகிறது.

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையுங் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் -பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்!

அகரம்.அமுதா

புதன், 2 ஜூலை, 2008

பேச்சுக்கலை!

பொதுவாக உயிர்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். ஒன்று உயர்திணை மற்றொன்று அஃறிணை.

உயர்திணை அஃறிணை என்ற இரு பகுதியின் பாகுபாடு யாது? வாய்திறந்து பேசுகிற உயிர்கள் உயர்திணை. வாய் பேச இயலாதவை அஃறிணை.
வாய் திறந்து பேசுகிற ஆற்றலை மனிதன் பெற்றதால்தான் அவன் உயர்திணை.

மனிதனை உயர்திணையாக்கிய இப்பேச்சை (சொல்லை) நாம் எப்படிப் பயன் படுத்துகிறோம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பேசுவதெல்லாம் பேச்சல்ல. அது ஓர்கலை. சொல்லைப் பொதுவாக நாம் செல்வம் போல்தான் பார்க்கிறோம். ஆகையால்தான் சொல்வல்லாரைச் சொல்லின் செல்வர் என்கிறோம்.

சொல்லுக்குள்ள ஆற்றல் வில்லுக்கும் கிடையாது. ஆகையால் தான் வள்ளுவர்:-

“வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை”- என்கிறார்.

காற்றினும் கடிய வேகமுடையது சொல். ஆகையால்தான் கம்பர்:- “சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்” என்கிறார்.

மணிக்கணக்காய்ப் பெசிக்கொண்டிருப்பது பேச்சல்ல. ஆகையால்தான் நன்னூலார் “சுருங்கச் சொல்” என்கிறார்.


சொல் வல்லாரால் சாதிக்க முடியாத தொன்றில்லை. அடக்குமுறையால் சாதிக்க முடியாததையும் அன்பான சொல்லால் சாதித்து விடலாம். ஆகையால்தான் அவ்வை:-

“வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்திற்
பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது -நெட்டிரும்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்” -என்கிறார்.

என்னலத்திலும் உயர்ந்தது சொன்னலம். இச்சொன்னலம் பன்னலமும் பயக்கும்.ஆகையால்தான் வள்ளுவர் சொல்வன்மை என்னும் அதிகாரத்தில் சொன்னலத்தை முதலில் வைக்கிறார்.

“நாநலம் என்னும் நலமுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று” என்கிறார்.

பயிருக்கு முள் வேலி. உயிருக்கு உண்மை வேலி. சொல் உண்மையுடைத்தாக இருக்கவேண்டும். கொடுத்த வாக்கை உண்மையாகக் காப்பாற்றியதால் உயிரை இழந்தான் தயரதன். உண்மையாய் அச்சொல்லைக் காப்பாற்றியதால் தான் இன்றும் அவன் புகழ்நிற்கிறது. காணா முடியைக் கண்டேன் என்ற பிரம்மனுக்கு ஆலயம் இல்லாத குறை ஏற்பட்டது.

எத்தனைதான் உண்மை பேசினும் அப்பேச்சு நன்மை பயக்கவேண்டும். நன்மையில்லா உண்மையால் (பொய்யைப் போல்) எப்பயனும் இல்லை.

ஒருவன் இன்னொருவன் மீது கடுஞ்சினங்கொண்டு அரிவாளால் வெட்டவருகிறான். வெட்டுப்பட விருப்பவன் நம்வீட்டில் வந்து ஒளிந்து கொள்கிறான். சினங்கொண்டவன் வந்து நம்மிடம் முன்னவனைப் பார்த்தீர்களா என்றால் அவ்விடத்தில் உண்மைபேசுவதால் எப்பயனும் இல்லை. மாறாக இல்லை என்ற பொய் சொல்வதால் அங்கு ஓர் கொலை தடுக்கப் படுகிறது. ஆகையால்தான் வள்ளுவர்:-

“வாய்மை எனப்படுவ (தி)யாதெனில் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்” என்கிறார்.

உண்மையுடையதாகவும் நன்மையுடையதாகவும் சொல்லும் சொல்லில் இயல்பாக அன்பும் குடிகொண்டிருக்கும். அன்பு கலவாத கனிவில்லாத பேச்சால் நன்மை விளைந்துவிடாது.யாரிடமும் அன்புகலந்து இனிமையாகப் பேசவேண்டும். அன்புகலந்த பேச்சு செவியைக் குளிர்விக்கும். சிந்தையைக் குளிர்விக்கும். ஊன் உடல் உணர்வு உயிர் வரைக் குளிர்விக்கும். ஆகையால்தான்

“இன்சொலால் ஈரம்அளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்”
என்கிறார்.

அன்புகலந்த சொல் நிதானமுடைத்தாகவும் அமையும். மெல்ல நிதானமாகப் பேசி கேட்பார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிதல் வேண்டும். இதனையே நாவடக்கம் என்கிறார் வள்ளுவர்.

"எல்லாம் உணர்ந்தும் வியாதன் விளம்பியவச்
சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா! -வல்லமையால்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு!"

நிதானத்துடன் கூடிய பேச்சு இனிமை பொருந்தியதாகவும் இருப்பது வழக்கம். பேச்சுக்கு உயிர்நாடி இனிமை. ஆகையால்தான் இனியவை கூறல் என்ற அதிகாரத்தைப் படைத்தார் வள்ளுவர்.

இனிமை பொருந்திய சொல் பணிவுடையதாகவும் ஆகிவிடுகிறது. இதுபோல் சிறந்த ஆபரணம் வேறில்லை என்கிறார் வள்ளுவர்.

“பண்புடையான் இன்சொலன் ஆதல் ஒருவர்க்
கணியல்ல மற்றப் பிற” என்கிறார்.

அன்பும் இனிமையும் கலந்த பேச்சு எப்பொழுதும் ஆழமுடைத்தாதலைக் காணலாம். ஆழமுடையதாக அமையும் பேச்சு சமயமறிந்து பேசும் பேச்சாகவும் விளங்கும். சமயமறிந்து சொல்லாத சொல் சினத்தை மூட்டுவதாகவும் அமைந்து விடும்.

இப்பேச்சிலெல்லாம் முற்றிய நிலை முழுமைபெற்ற நிலை அவையறிந்து பேசுதல். கற்றோர் கூடிய அவையுள் இதைப் பேசல்வேண்டும் இதைப்பேசல் கூடா என்கிற சிந்தனையோடு பெசவேண்டும். இதைத்தான் வள்ளுவர்:-

“அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்து தூய்மை யவர்” என்கிறார்.

அவையறிந்து பேசுதல் மட்டும் போதுமா? என்றால் அதுதான் இல்லை. அவையோர்தம் முகக் குறிப்பறிந்து பேசவேண்டும். குறிப்பறியாமற் பேசுபவனை மரம் என்கிறார் அவ்வை.

"கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் -சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவனன் மரம்.
"

சொல்வல்லார் அவையுள் சொல்லாடுவார் சொல்வல்லாராக இருத்தல் வேண்டும். சொல்லில்லார் அவைநடுவில் சொல்லாடுவதை முந்திரிக் கொட்டை என்கிறார் தா.ம.வெள்ளை வாரணம்.

“எந்தப் பழத்திற்கும் ஏன்வைத்தான் உள்விதையை
முந்திரிக்கு மாத்திரம் முன்வைத்து? -சிந்திக்கின்
நல்லவையுள் கற்றோர்தாம் நாவடக்கி வீற்றிருக்கச்
சொல்லுதலால் பேதைநாச் சோர்ந்து!” என்கிறார்.

எனவே உண்மையாகவும் நன்மையாகவும் அன்பாகவும் நிதானமாகவும் இனிமையாகவும் ஆழமாகவும் சமயமறிந்த பேச்சாகவும் அமைதல் வேண்டும். இல்லையேல் பேசாதிருத்தல் நலம். இதைத்தான் வள்ளுவர்:-

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று" என்கிறார்.

இச்சொல்வன்மை அமையப்பெற்றோர்க்கே வினைத்தூய்மை அமையும். ஆகையால்தான் சொல்வன்மை அதிகாரத்தை முதலில் வைத்து வினைத்தூய்மையை அடுத்து வைத்தார் வள்ளுவர்.

அகரம்.அமுதா