திங்கள், 25 ஆகஸ்ட், 2008

ஆத்திசூடி "08"!

பொதுவாக நம்மில் பலர் நமக்கு என்ன தெரியும் என்றே தெரியாதவர்களாக இருக்கிறோம். தெரிந்தவற்றுள்ளும் எத்தனை விழுக்காடு கசடறக் கற்றுவைத்திருக்கிறோம் என்கிற தன்னறிவு இல்லாதவர்களாக இருக்கிறோம். கற்றது கைமண்ணளவாயினும் உலகளவு கற்றுவிட்டதாகவும் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

என்னிடம் பலர் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. என்வீட்டில் சிறுநூலகமே இருக்கிறது. பலராலும் அறியப்பட்ட நூல்கள் என்னவிலையாயிருப்பினும் வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன் என்பர். பிறர் அவர்களிடம் நூல்களைக் கடனாகக் கேட்டாலும் தரமாட்டார்கள். தானும் படித்தறிகிறார்களா என்பதும் வினாக்குறியே!

என்னிடம் இதுபோல் பெருமையடித்துக் கொள்பவர்களிடம் முகத்திலடித்தார்ப் போல் நான்கூறுவதுண்டு:-

புத்தகங்கள் சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்
உய்த்தவம் எல்லாம் நிறைத்திடினும் -மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்
தேற்றும் புலவரும் வேறு! -என்று!

நூல்களைச் சேகரிக்கும் அளவிற்கு நூல்களிலுள்ள செய்திகளைச் சேகரிக்க முனைவதில்லை என்பது வருந்தத்தக்க செய்தியே.

அறியாமையை நீக்காத எவருள்ளத்துள்ளும் செருக்கு அனுமதி கோராமல் உள்நுழைந்து அடைந்துகொள்கிறது. செருக்கு நீக்காத மாந்தர் காணும் இன்பமெல்லாம் தனக்கும் தன்னைச் சுற்றியிருப்போருக்கும் இன்னலைத் தருவதாகவே அமைந்துவிடுகிறது.

அறியாமைக் குருடையும் செருக்காம் மலத்தையும் அகற்றி அறிவொளி ஏற்றும் அறிவார்ந்த ஆசிரியரையாவது தேர்ந்தெடுத்துக் கொள்கிறோமா என்றால் அதுவுமில்லை. தவறித் தேர்ந்தெடுத்தாலும் குருடுங் குருடும் குருட்டாட்ட மாடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே! என்ற வரிகளுக்குக் காட்டாகவே விளங்குகிறோம்.

தேர்ந்தெடுத்த ஆசானிடம் தேரும் பொருளறிந்து தேருகிறோமா என்றால் அதுவுமில்லை. தெளிந்தான்கண் ஐயுறுவதே நம் அன்றாட செயலாயிருக்கிறது. இப்படிப்பட்ட அறிவுப் பஞ்சைகளாலும் கல்விக் குருடர்களாலும் ஈட்டப்படும் செல்வம் தேங்கியக் குட்டையைப்போல் தீநாற்றமுடையதாகிவிடுகிறது.

ஈட்டிய பொருளே இசையெனக் கருதும் இத்தகையோர்க்கு ஆறிடும் மேடு மடுவும் போலாம் செல்வ மாறிடு மேறிடும் என்பது மட்டும் விளங்குவதே யில்லை. பொதுவாக இத்தகையோர், ஈகை என்றால் என்னவிலை? எனவினவுபவராயிருக்கின்றனர். மாறாக ஈயத் துணிந்தாலும் திணையளவு ஈந்துவிட்டுப் பனையளவு எதிர்பார்க்கிறார்கள். கடுகளவு கொடுத்துக் கடலளவு திருப்பிக் கேட்கிறார்கள்.

பொதுவாக இத்தகையோருடைய ஈகை என்பது:-
கதிர்பெறு செந்நெல் வாடக்
கார்குலம் கண்டு சென்றே
கொதிதிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல் குவல யத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார்
நிலையிலார்க் கீய மாட்டார்! –என்னும் நிலையிலேயே உள்ளது. யாருக்கு இன்றியமையாத் தேவையோ இவருக்கீயப் பகுத்தறியும் அறிவின்றி எவனிடம் மிதமிஞ்சிக் கிடக்கிறதோ அவர்க்கே வழங்கிக் களிப்பது.

பட்டய அறிவுபடைத்தோர் முதல் பட்டறிவு படைத்தோர்வரை இன்று யாவரும் பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே தகாதவற்றையும் செய்யத் துணிகிறோம். யாராவது ஒருவர் தன்குற்றம் கண்டு உணர்த்திவிடின் திருத்திக்கொள்ளாது முகத்தளவில் நகைத்து அகத்தளவில் கற்பிளவோ டொக்கும் கயவராகவே வாழ்ந்துவருகிறோம். உள்ளிருந்தே கொள்ளும் நோய் பகை என்பதும் விளங்கமறுக்கிறது.

ஏற்றமுற வேண்டி எவர்தாளையும் பிடிக்க நாணுவதில்லை. வலிபொருந்தியோர் முன் வளைந்து கொடுக்க அஞ்சுவதுமில்லை. பிறரை ஏமாற்றுவதாகக் கருதிக்கொண்டு நாம் ஏமாந்துகொண்டிருப்பதை கவனிக்க மறந்ததும் நினைவுக்கு வருவதில்லை. சீரான வழிசெல்லாததால் யாரையும் எதையும் நம்பாது ஐயக்கண் கொண்டே காணவேண்டியுள்ளது.

ஆடியடங்கும் வாழ்க்கை-இதில் ஆறடி நிலமே நமக்கு உறவு என்பதையும் உணர மறுத்து ஒவ்வாப் பொருள்கொள்வதிலேயே வாழ்நாள்முழுவதையும் கழித்துக்கொண்டிருக்கிறோம்.

மேலுள்ள இப்பேருரையைத் தன்நுண்ணறிவால் ஆத்திசூடி 08 என்ற தலைப்பில் கன்னற் கவிவரிகளாக் கழறியருளியுள்ளார் பேராசான் சுப்புரத்தினம் அவர்கள். (கவிவரிகளை இங்குத்தட்டி அங்கு நோக்குக)

அகரம்.அமுதா

6 கருத்துகள்:

Kavinaya சொன்னது…

சுப்பு தாத்தாவின் ஆத்திசூடியையும் உங்கள் உரையையும் படித்து ரசித்தேன். நன்றி.

('செருக்கு' என்பதுதானே சரி?)

அகரம் அமுதா சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவி நயா!

/////('செருக்கு' என்பதுதானே சரி?) /////

ஆமாம்ல. மாற்றிவிடுகிறேன்.

sury siva சொன்னது…

பழஞ்சோறு தின்பவனுக்கு பட்டு வேட்டி கிடைத்த‌
மகிழ்ச்சி ஏற்பட்டது.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

சுப்பு ஐயாவின் ஆத்திசூடிக்குத் தாங்கள் சூட்டியிருக்கும் தமிழ்மாலை கவரும் வகையில் இருந்தது. படித்து அகம் மிக மகிழ்ந்தேன்.

அகரம் அமுதா சொன்னது…

மிக்க நன்றிகள் அய்யா!

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

வணக்கம்.

எனது 'திருமன்றில்' திரட்டியில் தங்களின் வலைப்பதிவை இணைத்துள்ளேன். பார்க்கவும்.

http://thirumandril.blogspot.com/

தாங்கள் விரும்பினால் திருமன்றிலுக்கு உங்கள் வலைப்பதிவில் தொடுப்பு கொடுக்கலாம்.

நன்றி.